search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி அருகே கொட்டவாடி ஏரியில் பாக்குத் தோல் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு
    X

    பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் கொட்டவாடி ஏரியில் கொட்டப்பட்டுள்ள பாக்குத்தோல் குவியல்கள்.

    வாழப்பாடி அருகே கொட்டவாடி ஏரியில் பாக்குத் தோல் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் விளையும் பாக்குக்காய்களை பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ‘கொட்டைப்பாக்கு’ தமிழகத்தில் வாசனை பாக்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.
    • எஞ்சிய பாக்குத்தோலை சாலையோரம், மயானம், ஏரிகள், ஆறு, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், பொது இடங்களில் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் விளையும் பாக்குக்காய்களை பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் 'கொட்டைப்பாக்கு' தமிழகத்தில் வாசனை பாக்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பான்பராக், பான் மாசாலா, குட்கா போன்ற பாக்கு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

    வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம், கொட்டவாடி, குறிச்சி, பொன்னாரம்பட்டி பகுதியில் பாக்குக்காய்களின் இருந்து கொட்டைப்பாக்கு பிரித்தெடுத்த பிறகு எஞ்சிய பாக்குத்தோலை சாலையோரம், மயானம், ஏரிகள், ஆறு, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், பொது இடங்களில் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது. இதுமட்டுமின்றி இந்த பாக்குத்தோலை சிலர் தீ வைத்து எரிக்கவும் செய்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மழை காலத்தில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    எனவே பொது இடங்களில் பாக்குத்தோல் கொட்டுவதை தடுத்து இவற்றை பதப்படுத்தி ஊதுபத்தி, சாம்பிராணி, கொசுவிரட்டிகள், கலப்பு உரம் தயாரிக்கவும், நாரை பிரித்தெடுத்து இன்னும் பிற மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதற்கும் தோட்டக்கலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து வழிவகை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பாக்குத் தோலை பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்கவும், முதற்கட்டமாக இதனை பதப்படுத்தி எரிபொருளாக பயன்படுத்துவதற்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களும், ஊராட்சி மன்றமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சேலம் கலெக்டர் கார்மேகம் கடந்தாண்டு உத்தரவிட்டார். ஆனால் இத்திட்டம் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை.

    குறிப்பாக பெத்த நாயக்கன்பாளையம் ஒன்றியம் கொட்டவாடி மற்றும் பேளூர் கரடிப்பட்டி ஊராட்சி எல்லையில் உள்ள வசிஷ்ட நதியால் நீர்வரத்து வரும் கொட்டவாடி ஏரியிலும் பாக்குத் தோல் குவியல்கள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

    எனவே கொட்டவாடி ஏரியில் கொட்டப்பட்டுள்ள பாக்குத்தோல் குவியல்களை அகற்றவும், இனிவரும் காலங்களில் பாக்குத்தோல் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வாழப்பாடி கோபிநாத் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×