என் மலர்
சேலம்
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
- ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாகவே உள்ளதால் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
குறிப்பாக சங்ககிரி, எடப்பாடி பகுதிகளில் கன மைழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே பெய்த மழையால் ஆத்தூர் வசிஷ்ட நதியில் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆத்தூர் முதல் தலைவாசல் வரை அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பொது மக்கள் அதிக அளவில் திரண்டு பார்வையிட்டு செல்கிறார்கள்.
சேலம் மாநகரில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு வரை விட்டு விட்டு பெய்த படியே இருந்தது. மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. இதனால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிப்பட்டனர். மழையை தொடர்ந்து இரவில் கடும் குளிர் நிலவியது.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் தொடங்கிய மழை இன்று அதிகாலை விடிய விடிய சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து பனி மூட்டமும் நிலவுகிறது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் அவதிப்பட்டு வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
இதனால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாகவே உள்ளதால் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கடைகளிலும் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 36.2 மி.மீ. மழை பெய்துள்ளது. எடப்பாடி 16.2, சேலம் 8.2, தலைவாசல் 7, வீரகனூர் 7, காடையாம்பட்டி 7,ஏற்காடு 4.4, ஓமலூர் 4, கரியகோவில் 4, ஆனைமடுவு 4, மேட்டூர் 3.4, கெங்கவல்லி 2, தம்மம்பட்டி 1, ஆத்தூர் 1, பெத்தநாயக்கன்பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 106.8 மி.மீ. மழை பெய்துள்ளது.
- பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
- அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இதையடுத்து கடந்த மாதம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
மழையின் காரணமாக நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று காலை அது 10 ஆயிரத்து 514 கனஅடியாக அதிகரித்தது. மாலையில் அது 14 ஆயிரத்து 971 கனஅடியாக அதிகரித்தது.
இன்று காலை 8மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 57.18 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 445 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- இந்த நிலையில் தீபாவளி பட்டாசு தற்காலிக கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பழைய பஸ் நிலையத்தில் 25 பட்டாசு கடைகளுக்கும், புதிய பஸ் நிலையத்தில் 48 தற்காலிக கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சேலம்:
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பட்டாசு, இனிப்பு மற்றும் ஜவுளிகள் வாங்கி பண்டிகையை உற்சாகமுடன் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
அனுமதி
இந்த நிலையில் தீபாவளி பட்டாசு தற்காலிக கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பழைய பஸ் நிலையத்தில் 25 பட்டாசு கடைகளுக்கும், புதிய பஸ் நிலையத்தில் 48 தற்காலிக கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. தற்போது கடைகள் அமைக்கும் பணி நிறைவு பெற்று கடைகளில் பட்டாசுகள் வியாபாரத்திற்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் சிவகாசியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரக பட்டாசுகள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ஆர்வம்
பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு ஆர்வமாக பட்டாசுகளை வாங்கி வருகிறார்கள். சிறுவர்களும், பெரியவர்களும் பட்டாசு கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். நாளையும், நாளை மறுநாளும் பட்டாசு கடைகளில் மேலும் கூட்டம் குவியும் என்பதால் புதிய ரக பட்டாசுகளை வாங்கி விற்பனைக்கு குவிப்பதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
- 55-வது வார்டுக்கு உட்பட்ட தாகூர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார்கள் கூறி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி 55-வது வார்டுக்கு உட்பட்ட தாகூர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு மாநகராட்சி சார்பில் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார்கள் கூறி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் மற்றும் அந்த வார்டு கவுன்சிலரிடமும் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் சுமார் 30 பேர் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் திரண்டு வந்தனர். கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு முன்பு போல 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரப்பரப்பு நிலவியது.
- தங்கம் (51). கூலித் தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
- நேற்று மதுபோதையில் இருந்த தங்கம் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை மது என நினைத்து குடித்துள்ளார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பொத்தியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கம் (51). கூலித் தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த தங்கம் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை மது என நினைத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த தங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தங்கம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது பற்றி தங்கத்தின் மகன் கோகுல்நாத் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது.
- நேற்று இரவும் சாரல்மழையாக தொடங்கி இன்று காலை வரை விடாமல் பெய்தது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் சாரல்மழையாக தொடங்கி இன்று காலை வரை விடாமல் பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகள், மக்கள் செல்லும் பாதைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
குள்போல் தேங்கிய வெள்ளம்
மேலும் ஓமலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இதனால் மனுக்களை கொடுக்க வந்த மக்கள் மழை நீரிலேயே நடந்து சென்று அதிகாரிகளை சந்தித்தனர். இங்கு தண்ணீர் வெளியேறும் வகையில் மழைநீர் கால்வாய் இல்லாததால் எப்போது மழைபெய்தாலும் தண்ணீர் தேங்கி பொதுமக்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல ஓமலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்திலும் மழைநீர் குளம்போல தேங்கி யுள்ளது. அலுவலகத்தின் முன்பாக உள்ள பாதையில் அதிகளவில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கு வரும் அதிகாரிகளும், மக்களும் மழைநீரிலேயே நடந்து சென்று வருகின்றனர். எனவே தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்த ஆண்டு ஆத்தூர் நகரில் எந்த பட்டாசு கடைக்கும் அனுமதி வழங்கப்பட வில்லை.
- ஆத்தூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள உப்பு ஓடை பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் பட்டாசு கடை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் கடைவீதி பஸ் நிலையம் பகுதிகளில் தங்களுக்கு சொந்தமான இடங்களிலேயே பட்டாசு கடைகள் நடத்தப்பட்டு வந்தது.
ஆனால் இந்த ஆண்டு ஆத்தூர் நகரில் எந்த பட்டாசு கடைக்கும் அனுமதி வழங்கப்பட வில்லை. ஆத்தூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள உப்பு ஓடை பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் பட்டாசு கடை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
முற்றுகை
இந்த இடத்தை பார்வையிட தாசில்தார் வெங்கடேசன் வந்தார். அப்போது பழைய பட்டாசு கடை உரிமையாளர்கள் இந்த இடம் சரியானதாக இல்லை. நாங்கள் ஏற்கனவே வைத்திருந்த இடத்திலேயே பட்டாசு கடை வைக்க எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டனர். மேலும் பட்டாசு கடை வியாபாரிகள் தாசில்தாரை முற்றுகையிட்டனர்.
அப்போது அங்கு வந்த ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ. தாசில்தாரிடம் இந்த இடம் போதுமானதாக இல்லை. வியாபாரிகள் கொண்டு வந்த பட்டாசுகளை பாதுகாக்கவும் முடியாது. மழை நேரம் என்பதால் இந்த இடத்தில் விற்பனை செய்ய இயலாது. வேறு இடம் வழங்க வேண்டும் என கூறினார். இது பற்றி கலெக்டரிடம் தெரிவிக்கப்படும் என தாசில்தார் வெங்கடேசன் தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
கோரிக்கை
இது குறித்து ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
தற்போது 3 கிலோ மீட்டர் தூரம் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும், வெளியூர் பயணிகள் யாரும் வாங்க முடியாத அளவிற்கு வாகன வசதி இல்லாத இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பட்டாசு கடைகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பட்டாசு கடைகாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பட்டாசுகள் வாங்குவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும். மாவட்ட கலெக்டர் இந்த இடத்தை மாற்றி பழைய இடத்திற்கே வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தற்போது நிலக்கடலை மற்றும் தேங்காய் கொப்பரை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமார் 100 குவிண்டால் தேங்காய் கொப்பரை ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 188-க்கு விற்பனையானது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்துள்ள கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தற்போது நிலக்கடலை மற்றும் தேங்காய் கொப்பரை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமார் 100 குவிண்டால் தேங்காய் கொப்பரை ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 188-க்கு விற்பனையானது. இதில் முதல் தர தேங்காய் கொப்பரை குவிண்டால் ஒன்று ரூ.8,348 முதல் ரூ.8,900 வரை விலை போனது. இதே போல் 2-ம் தர தேங்காய் கொப்பரை குவிண்டால் ஒன்று ரூ.5,055 முதல் ரூ.8,010 வரை விற்பனையானது. தொடர்ந்து இம்மையத்தில் பொது ஏலத்தில் சுற்றுப்புற விவசாயிகள் எந்த கட்டணமும் இன்றி தங்கள் விலை பொருள்களை விற்பனை செய்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த மாதம் 10-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
- நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரத்து 514 கனஅடியாக அதிகரிப்பு.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதே போல் தென் மேற்கு பருவ மழை சரிவர பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் நீர்வரத்தும் குறைந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 10-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதே போல் இந்த மாதம் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரும் கர்நாடக அணைகளில் இருந்து இன்று வரை திறந்து விடப்படவில்லை.
இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது. மேலும் அணைக்கு வரும் நீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 10ஆயிரத்து 514 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
இதே போல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.82 அடியாக உயர்ந்தது. கடந்த மாதம் 10-ந் தேதி அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்ட போது 30 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 25 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அது 250 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அைடந்து உள்ளனர்.
- சூரமங்கலம் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தது.
- சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள் சூரமங்கலம் உழவர் சந்தை முன்பாக காலை 6 மணி முதல் 8 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தது.
போராட்டம்
இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாகவும், முறைகேடுகளில் ஈடுபடும் வேளாண் துறை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள் சூரமங்கலம் உழவர் சந்தை முன்பாக காலை 6 மணி முதல் 8 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் சேலம் மாவட்ட வேளாண் அதிகாரி இ-நாம் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகளுக்கு வெளி மார்க்கெட்டுகளை விட கூடுதல் விலை நிர்ணயிப்பதாகவும், விவசாயிகள் அல்லாத நபர்களிடம் இருந்து கமிஷன் பெற்றுக்கொண்டு தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து உழவர் சந்தை மூலம் விற்பனை செய்வதாகவும், பல்வேறு முறைகேடுகள் மூலம் மாதத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்வதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இந்த நிலையில் அவரையும், அவருக்கு துணை நிற்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 மாதத்தில் அவரை மாற்றவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று அருள் எம்.எல்.ஏ கூறினார்.
- பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
- உடல் தகுதி தேர்வு சேலம் குமார சாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. 316 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 250 பேர் மட்டுமே பங்கேற்று இருந்தனர்.
சேலம்:
தமிழகத்தில் காலியாக உள்ள பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் சேலம் மாவட்டத்தில் 316 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு சேலம் குமார சாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. 316 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 250 பேர் மட்டுமே பங்கேற்று இருந்தனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், எடை, உயரம் அளவு மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடத்தப்பட்டது.
2-வது நாள்
நேற்று நடந்த உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த வர்களுக்கு இன்று 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஒட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அனைத்து போட்டி களையும் காவல்துறை சார்பில் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு
இந்த போட்டியினை சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
தேர்வாளர்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளையும் காவல்துறை சார்பில் மைதானத்தில் செய்யப்பட்டிருந்தது. உடல் தகுதி தேர்வினை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- நாகராஜ் அவரது உறவினர்கள்மற்றும் உதவியாளர் ஒருவர் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டிற்காக 1200 பேரிடம் ரூ.3 கோடி வரை வசூலித்துள்ளார்.
- கடந்த மாதம் 10-ந் தேதி தீபாவளி சீட்டு பணத்தை பரிசுடன் வழங்குவதாக கூறிய நாகராஜ் குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார்.
சேலம்:
சேலம் மெய்யனூரை சேர்ந்தவர் நாகராஜ் (32), இவர் சர்க்கார் கொல்லப்பட்டி முனியப்பன் கோவில் அருகில் கம்மங்கூழ் கடை நடத்தி வந்தார்.
தீபாவளி சீட்டு
அப்போது அந்த பகுதி மக்கள் பழக்கமானதால் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். அதை நம்பி அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அவரிடம் சீட்டு சேர்ந்து தீபாவளி பண்டிகையின் போது பணத்துடன் பரிசுகளையும் பெற்று வந்தனர்.
நடப்பாண்டில் நாகராஜ் அவரது உறவினர்கள்மற்றும் உதவியாளர் ஒருவர் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டிற்காக 1200 பேரிடம் ரூ.3 கோடி வரை வசூலித்துள்ளார். கடந்த மாதம் 10-ந் தேதி தீபாவளி சீட்டு பணத்தை பரிசுடன் வழங்குவதாக கூறிய நாகராஜ் குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார். பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 20-ந் தேதி புகார் கொடுத்தனர்.
தொடர்ந்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் பாதிக்கப் பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆவணங்கள் பெறப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
வழக்கு பதிவு செய்து தலைமறைவான நாகராஜை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் கார்மேகம், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளிடமும் புகார் அளித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.






