என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 11,445 கனஅடி தண்ணீர் வருகிறது
- பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
- அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இதையடுத்து கடந்த மாதம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
மழையின் காரணமாக நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று காலை அது 10 ஆயிரத்து 514 கனஅடியாக அதிகரித்தது. மாலையில் அது 14 ஆயிரத்து 971 கனஅடியாக அதிகரித்தது.
இன்று காலை 8மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 57.18 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 445 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






