என் மலர்
சேலம்
- மோகன் (வயது 54). இவரை கடந்த 2009-ம் ஆண்டு, அம்மாபேட்டை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர்.
- இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி 3 நாள் பரோலில் வெளியே வந்த மோகன், மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.
சேலம்:
சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் சித்தாகவுண்டனூர் தெரு, டி.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 54).
இவரை கடந்த 2009-ம் ஆண்டு, அம்மாபேட்டை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு கோவை சிங்காநல்லூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி 3 நாள் பரோலில் வெளியே வந்த மோகன், மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.
இதையடுத்து சிங்காநல்லூர் ஜெயில் சூப்பிரண்டு ஊர்மிளா, நேற்று இதுகுறித்து அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து, மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- தமிழகத்தில் தட்ப வெப்ப மாற்றம் ஏற்பட்டு, வானில் மேகக் கூட்டம் அதிகரித்துள்ளது.
- இரவிலும் பனி நிலவுகிறது. இதனால் மக்கள் குளிரை தாங்க முடியாமல் திணறுகின்றனர்.
சேலம்:
தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் தட்ப வெப்ப மாற்றம் ஏற்பட்டு, வானில் மேகக் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் சேலம் மாவட்டத்தில் பகலில் வெயில் தாக்கம் குறைவா–கவும், குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.
இரவிலும் பனி நிலவுகிறது. இதனால் மக்கள் குளிரை தாங்க முடியாமல் திணறுகின்றனர். நேற்று மாலையில் சேலத்தின் சில இடங்களில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.
கடும் குளிர்
இன்று காலையிலும் பனி மூட்டம் நிலவியது. குறிப்பாக சுற்றுலா தலங்க–ளான ஏற்காடு படகு இல்லம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயிண்ட், கிளியூர் நீர்வீழ்ச்சி, தாவரவியல் பூங்கா, ஏற்காடு அடிவாரம், சேர்வ ராயன் மலை, வாழப்பாடி அருகே அருநூற்றுமலை அடிவாரம், புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, ஆத்தூர் அருகே கல்வராயன்மலை தொடர்ச்சியில் உள்ள முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி, மேட்டூர், ெகாளத்தூர் மலைபகுதிகளில் அதிக அளவில் பனி நிலவியது.
இங்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலா பயனாளிகள் இந்த குளிரை தாங்க முடியாமல் அவதிப்பட்டனர். எனினும் நடுங்க வைக்கும் குளிரில் மலையில் படர்ந்திருந்த மேக கூட்டத்தை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த பனி மூட்டதால், மலை பகுதிகளில் உள்ள சாலைகள் தெளிவாக காண முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினர்.
- பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட அசோக சக்கரம், கருப்பு நிறுத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
- புதிய வகை மாற்றம் தமிழகம் முழுவதும் விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
நாடு முழுவதும் வாகன ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று ஆகியவை ஒரே மாதிரியாக வழங்கப்படும் என இந்திய அரசு 2019-ல் அறிவித்தது. அதன்படி 12 சரகங்களாக செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ.), 54 பகுதி அலுவலகங்களில் புதிய வகை ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சென்னை, சோழிங்கநல்லூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சேலம், வேலூர் சரகத்தை அடுத்து திருப்பூர் சரகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் சரகத்தில் கடந்த 11-ந்தேதி தொடங்கி, 23-ந்தேதி வரை 11 அலுவலகங்களில் மொத்தம் 2,063 புதிய வகை ஸ்மார்ட் கார்டு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது, இந்த உரிமத்தில், தமிழ்நாடு அரசு என்பதை டி.என் என ஒரு வட்டத்துக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட அசோக சக்கரம், கருப்பு நிறுத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
யூனியன் ஆப் இந்தியா என்பதை மாற்றி இந்தியன் யூனியன் டிரைவிங் லைசென்ஸ் என்றும், இஸ்யூடு பை கவர்மெண்ட் ஆப் தமிழ்நாடு என தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பமா? இல்லையா? என்பதும், அவசர கால தொடர்பு எண் , உரிமம் பெற்றவரின் கையெழுத்து என 16 வகை மாற்றம் இடம்பெற்றுள்ளது.
அதுபோல் பதிவுச்சான்றிதழில் (ஆர்.சி) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை மாற்றம் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும்,பகுதி அலுவலகங்களில் விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
- டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் மரக்காணம் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடும் பொழுது கைது செய்யப்பட்டனர்.
- இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
சேலம்:
2013 -ம் ஆண்டு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் மரக்காணம் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடும் பொழுது கைது செய்யப்பட்டனர்.
அதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் புதிய பஸ் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முக்கிய நிர்வாகிகள் அருள் எம்.எல்.ஏ, கதிர் ராசரத்தினம், சத்ரியசேகர், ஏ.கே.ஆறுமுகம், பகுதி செயலாளர் அண்ணாமலை, ராசமாணிக்கம் உள்பட 45 பேர் மறியலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் மீதான இந்த வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந் நீதிமன்றம் ஜெ.எம்-2 ல் நடந்து வருகிறது.வழக்கு விசாரணை ெதாடர்பாக கோர்ட்டில் இன்று 45 பேரும் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிடப்படது.
இதனை தொடர்ந்து இன்று அருள் எம்.எல்.ஏ. உள்பட 45 பேரும் வக்கீல் குலசேகரன் தலைமையில் ஆஜரானார்கள். இன்று நீதிபதி விடுமுறையில் உள்ளதால் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஆஜர் ஆக உத்தரவிட்டப்பட்டது.
- கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் வெங்கடாசலத்தை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்யும் முயற்சியில் பிரபு ஈடுபட்டார்.
- பிரபுவை கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் பிரபு (வயது 33).
மேட்டூர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன் என மேட்டூர் ஆர்.டி.ஓ.விடம் 3 ஆண்டுகளுக்கு பிணை பத்திரம் எழுதி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் வெங்கடாசலத்தை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் பிரபுவை கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
நன்னடத்தைக்கான பிணை பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்டதால், விதிமீறல் தொடர்பாக, மேட்டூர் ஆர்.டி.ஓ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மேட்டூர் ஆர்.டி.ஓ.தணிகாசலம், 2 ஆண்டுகள் 3 மாதத்திற்கு, பிரபுவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
- 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று சில்மிஷம் செய்துள்ளார்.
- இந்த வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
சேலம்:
சேலம் மல்லூரை சேர்ந்த 16 வயது சிறுமியை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கந்தசாமி மகன் வேலு(வயது25) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 25-ல் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று சில்மிஷம் செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் படி மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுவை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, வாலிபர் வேலுக்கு 10ஆண்டு சிறை தண்டனையுடன் 6000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
- சேலம் கோட்டத்தில் இருந்து பழனி, வடலூர், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
- சிறப்பு பஸ்கள் வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில் பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, வருகிற 5-ந் தேதி தைப்பூசம் மற்றும் பவுர்ணமி கொண்டாடப்படுகிறது.
தைப்பூசம், பவுர்ணமியையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்து கழக கோட்டங்களிலும் பழனி, திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதுபோல், சேலம் கோட்டத்தில் இருந்து பழனி, வடலூர், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வருகிற 5-ந் தேதி தைப்பூசம், பவுர்ணமியை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து பழனி, வடலூர், திருவண்ணாமலை, கபிலர்மலை, காளிப்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு பஸ்கள் 4-ந் தேதி முதல் இயக்கப்படவுள்ளது என்றனர்.
- பாதிக்கப்பட்ட இளைஞர், சேலம் இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
- திருமலைகிரி கிராமத்தை சேர்ந்த மக்கள் காவல் நிலையம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு செந்தமான மாரியம்மன் கோவிலில், பட்டியலினத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் குடிபோதையில் நுழைந்ததாக கூறி, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் ஊர் மக்கள் முன்னிலையில் ஆபாசமாக திட்டினார். இது தொடர்பான வீடியோ பரவிய நிலையில் அவரது செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை கழகம் நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட நபர், சேலம் இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மாணிக்கத்தை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது, திருமலைகிரி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல் நிலையம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். மாணிக்கத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லவிடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர். கைது நடவடிக்கை எடுக்கக்கூடது என வலியுறுத்தினர். சிலர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் மாணிக்கத்தை காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அழகாபுரம் காட்டூர் பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் சிக்கன் கடையில் தகராறு நடப்பதாக வந்த தகவலை அடுத்து விசாரணை நடத்த சென்றார்.
- அப்போது அந்த கடையில் 2 வாலிபர்கள் குடிபோதையில் சிக்கன் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
சேலம்:
சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பரமசிவம் இவர் நேற்று இரவு அழகாபுரம் காட்டூர் பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் சிக்கன் கடையில் தகராறு நடப்பதாக வந்த தகவலை அடுத்து விசாரணை நடத்த சென்றார்.
அப்போது அந்த கடையில் 2 வாலிபர்கள் குடிபோதையில் சிக்கன் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த வாலிபர்களை சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் எச்சரித்து வீட்டுக்கு போகும் படி கூறினார்,
இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் அங்கு கீழே கடந்த உருட்டு கட்டையால் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவத்தை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரமசிவத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரமசிவத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது..போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பரமசிவத்தை தாக்கியவர்கள் சேலம் அழகாபுரம் சிவாயநகர் 5-வது கிராஸ் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன்கள் சீனிவாசன்(27), பன்னீர்செல்வம்(25) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- கிச்சிப்பாளையம் பகுதியை சேர்த்த 2 பேர் கடந்த 10 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். இவரிடத்தில், கிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் சீட்டு என சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் கட்டியுள்ளோம்.
- இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சீட்டு பணம் தருவதாக கூறியதால், அவர்களை சந்திக்க சென்றபோது, அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வந்து, கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கிச்சிப்பாளையம் பகுதியை சேர்த்த 2 பேர் கடந்த 10 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். இவரிடத்தில், கிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் சீட்டு என சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் கட்டியுள்ளோம்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சீட்டு பணம் தருவதாக கூறியதால், அவர்களை சந்திக்க சென்றபோது, அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், இதுகுறித்து கிச்சிபாளையம் மற்றும் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, கூலி வேலை செய்து நாங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஓமலூர் வரை டிராலி மூலம் அகல ரெயில் பாதையை ஆய்வு செய்தார்.
- அப்போது புதிதாக அமைக்கப்பட்ட ரெயில் பாதையில் பாதையின் தண்டவாள அமைப்பு எவ்வாறு உள்ளது? மேலும் பாலங்கள், சிக்னல்கள், சண்டிங் பகுதிகள், ஆகியவற்றை டிராலியில் இருந்து இறங்கி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம்:
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முதல் ஓமலூர் ரெயில் நிலையம் வரை உள்ள 12 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு வழி ரெயில் பாதை பாதையாக இருந்தது. இதனை அடுத்து சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முதல் ஓமலூர் வரை உள்ள ஏற்கனவே கடந்த 20 வருடமாக கிடப்பில் இருந்த மீட்டர் கேஜ் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் சுமார் ரூ 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து அந்த ரெயில் பாதையை ஆய்வு செய்யவும் மேலும் அந்த பாதையில் அதிவிரைவு ரெயில் சோதனை ஓட்ட நடத்தவும் திட்டமிடப்பட்டது.
அதன்படி அந்தப் பாதையில் ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் இன்று காலை சிறப்பு ரெயிலில் சேலம் வந்தார், இதனை அடுத்து இன்று காலை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஓமலூர் வரை டிராலி மூலம் அகல ரெயில் பாதையை ஆய்வு செய்தார்.
அப்போது புதிதாக அமைக்கப்பட்ட ரெயில் பாதையில் பாதையின் தண்டவாள அமைப்பு எவ்வாறு உள்ளது? மேலும் பாலங்கள், சிக்னல்கள், சண்டிங் பகுதிகள், ஆகியவற்றை டிராலியில் இருந்து இறங்கி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது தலைமை கட்டுமான நிர்வாக அதிகாரி சி. கே .குப்தா, சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ்,கோட்ட தலைமை பொறியாளர் ராம் கிஷோர், ஒப்பந்ததாரர்கள் கவுதமன், அன்பு அரசு,கட்டுமான துணை முதன்மை அதிகாரி கமல்ராஜ் உள்ளிட்ட ரெயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்,
- சேலத்தில் இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து இருவரும் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
- எங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எனது மாமாவும், தி.மு.க பிரமுகரும் சேர்ந்து அபகரித்துக் கொண்டு தர மறுக்கின்றனர்.
சேலம்:
சேலம் வீராணம் மெயின் ரோடு டி.எம்.செட் பகுதியை சேர்ந்த மோகனா மற்றும் அவரது மகன் கோவிந்தராஜ் ஆகியோர் இன்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது, அவர்கள் நுழைவு வாயில் முன்பு திடீரென மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து இருவரும் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதை பார்த்த கலெக்டர் அலுவலக பாதுகாப்பில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவிந்தராஜ் கூறும்போது:-
எங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எனது மாமாவும், தி.மு.க பிரமுகரும் சேர்ந்து அபகரித்துக் கொண்டு தர மறுக்கின்றனர். மேலும் நிலத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அம்மா பேட்டை போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வாழ வழியில்லாமல் இருக்கும் நாங்கள் இறப்பதே மேல் என நினைத்து, தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, எங்கள் நிலத்தை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்றார்.






