என் மலர்
சேலம்
- கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
- இந்த நிலையில் நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு எற்பட்டது. அப்போது தற்கொலை செய்து கொள்ள போவதாக வெங்கடாஜலபதி மிரட்டினார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் சரஸ்வதி (வயது 40). இவரது கணவர் வெங்கடாஜலபதி. கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
சரஸ்வதியிடம் வெங்கடாஜலபதி அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு எற்பட்டது. அப்போது தற்கொலை செய்து கொள்ள போவதாக வெங்கடாஜலபதி மிரட்டினார்.
இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வெங்கடாஜலபதி உடலில் மண்எண்ணைணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசுார் அவரை மீட்டு விசாரணை நடத்தி வருகுறார்கள்.
இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- செல்லதுரை என்பவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
- செல்லதுரையின் சித்தப்பா மகன் பொன்னையன் என்கின்ற துரைசாமி உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல், சின்னவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.
சேலம்:
சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி காலனி பகுதியை சேர்ந்த பூமாலை மகன் சின்னவர். இவர் செல்லதுரை என்பவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் ஓமலூரில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.
கும்பல் தாக்குதல்
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி, எஸ்.எம்.சி. காலனிக்கு வந்த சின்னவர், அன்றிரவு உணவு வாங்குவதற்காக வெளியே சென்றார். அப்போது, செல்லதுரையின் சித்தப்பா மகன் பொன்னையன் என்கின்ற துரைசாமி உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல், சின்னவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த சின்னவர், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு ஒரு சிலரை கைது செய்தனர்.
10 பேர் தீக்குளிக்க முயற்சி
இந்நிலையில், பூமாலையின் 3-வது மகன் மணி என்பவரை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மணி எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தெரியாத நிலையில், மணியின் தாய், அவரது மருமகள், 3 குழந்தைகள் உட்பட 10 பேர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்னையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்த னர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
தர்ணா
ஆனாலும் அவர்கள் கேட்காமல், கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி, சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து மணியின் தாய் கூறும்போது, எனது 2-வது மகனை, செல்லத்துரை ஆதரவாளர்கள் கொடூரமாக தாக்கியதில் தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் எனது 3-வது மகனை எந்த காரணமும் இல்லாமல் கைது செய்து வைத்துள்ள னர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என்றார்.
3 குழந்தைகள் உள்பட 10 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.
- தாரமங்கலம் பகுதியில் செம்மண் கடத்துவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில், உரிய சீட்டு இல்லாமல் செம்மண் ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் செம்மண் கடத்துவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சேலம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை தனி தாசில்தார் செல்வகுமார் தலைமையில் தாரமங்கலம்-சங்ககிரி நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில், உரிய சீட்டு இல்லாமல் செம்மண் ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த நங்கவள்ளி எல்லகுட்டையூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 48) மற்றும் அதன் உரிமையாளர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.
- இங்கு லட்சுமி நரசிம்மர் சாமி மற்றும் சோமேஸ்வரர் சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் நங்க வள்ளியில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு லட்சுமி நரசிம்மர் சாமி மற்றும் சோமேஸ்வரர் சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 31-ந் தேதி இரவு சிம்ம வாகனத்தில் சாமி திருவீதி உலா, 2-ந்தேதி சேஷ வாகனம், 2-ந் தேதி அனுமந்த வாகனம், 3-ந் தேதி யானை வாகனம், 4-ந் தேதி திருக்கருட வாகனம் வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. அன்று இரவு சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சாமிக்கு பல்வேறு அபிஷே கங்கள் நடைபெற்றது. இத னைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார்.
இதன் தொடர்ச்சியாக சாமி தேரில் எழுந்தருளல் நடந்தது. மேளதாளம் முழங்க கோவிலில் இருந்து அழைத்துவரப்பட்ட விநாயகர், லட்சுமி நரசிம்மர், சோமேஸ்வரர் 3 தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இன்று(வியாழக்கிழமை) மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. விநாயகர் தேர், சோமேஸ்வரர் சாமி தேர், லட்சுமி நரசிம்மர் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கபப்டுகிறது. முன்னாள் அமைச்சர் டி. எம். செல்வகணபதி வடம் பிடித்து தேரை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து 5 நாட்கள் இந்த தேரோட்டம் நடைபெறும். 3 தேர்களும் 10-ந் தேதி நிலை சேரும். 11-ந் தேதி சத்தாபரணம், 12-ந் வசந்த உற்சவம், 13-ந்தேதி 7 சுற்று உற்சவத்துடன் விழா நிறைவடையும்.
இதில் மாவட்ட அறநிலை குழு தலைவர் முருகன், மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர்கள் தவமணி, கார்த்திக், செல்வம் உட்பட பலர் கலந்து கொள்கி றார்கள். இதற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தி னர் செய்துள்ளார்கள்.
- அரக்கோணம்- ஜோலார்பேட்டை தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது.
- நாளை (வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்து உள்ளது.
சேலம்:
அரக்கோணம்- ஜோலார்பேட்டை தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது. ஈரோட்டில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் ஈரோடு - ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் (வண்டி எண் 06846) 6, 7, 8-ந் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் ஜோலார் பேட்டையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் ஜோலார் பேட்டை- ஈரோடு ரெயில் (வண்டி எண் 06845) இன்று (வியாழக்கிழமை) மற்றும் 7, 8, 9 ஆகிய 4 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் ஈரோடு- ஜோலார்பேட்டை பாசஞ்சர் ெரயில் (வண்டி எண் 06412) நாளை (வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் ஜோலார் பேட்டையில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் ஜோலார் பேட்டை- ஈரோடு ரெயில் (06411) நாளை (வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- 10-ந் தேதி நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், UAN எண், டெலிபோன் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை சம்பந்தப்பட்ட மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
சேலம்:
சேலம் தளவாய்பட்டியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர்-I சிவக்குமார் தலைமையில் வருகிற 10-ந் தேதி நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் ஹிமான்ஷு தலைமை யிலும், ஈரோடு கருங்கல்பா ளையத்தில் உள்ள அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் வீரேஷ் தலைமையிலும் குறைதீர் கூட்டம் நடக்கிறது. காலை 11.30 முதல் 1 மணி வரை சந்தாதாரர்களும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தொழில் அதிபர்களும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட நிறுவனங்க ளும் கலந்து கொள்ளலாம்.
இந்த கூட்டத்தில், வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அது குறித்த விவரங்களுடன், தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், UAN எண், டெலிபோன் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை சம்பந்தப்பட்ட மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதேசமயம் ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் அல்லது ro.salem@epfindia.gov.in. ro.krishnagiri@epfindia.gov.in, do.erode@epfindia.gov.in. என்ற இணையதளத்தின் முகவரியில் பதிவு செய்யலாம் என்று சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சிவக்குமார் தெரி வித்துள்ளார்.
- பழனியப்பன் (வயது 48). இவர் ஒரு லாரி வைத்து, அவரே டிரைவராக பணிபுரிந்து, சுயமாக தொழில் செய்து வந்தார்.
- கனமழை பெய்ததால் அங்கு சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றுள்ளார். மழை நின்ற பிறகு, திடீரென லாரி தீப்பற்றி எரிய தொடங்கியது.
சேலம்:
சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, வேலம்மாவலசில் வசிப்பவர் பழனியப்பன் (வயது 48). இவர் ஒரு லாரி வைத்து, அவரே டிரைவராக பணிபுரிந்து, சுயமாக தொழில் செய்து வந்தார். அந்த லாரிக்கு, இன்சூரன்ஸ் கம்பெனியில் பிரீமியம் செலுத்தி பாலிசி பெற்றுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு, மே மாதம் திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு நகரில் இருந்து நூல் பண்டல் சரக்குகளை ஏற்றிக் கொண்டு, ராஜஸ்தான் செல்வதற்காக பழனியப்பன் லாரியை ஓட்டிச் சென்றார்.
லாரி தீ பிடித்தது
அரவக்குறிச்சி சுங்கச்சாவடி அருகே சென்றபோது கனமழை பெய்ததால் அங்கு சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றுள்ளார். மழை நின்ற பிறகு, திடீரென லாரி தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வருவதற்குள் லாரியில் இருந்த நூல் பண்டல்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. மேலும் லாரியும் தீயில் எரிந்து சேதமானது.
வாகனத்தில் தீ பிடித்ததால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு ரூ. 12 லட்சம் கேட்டு அவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முறைப்படி விண்ணப்பித்தார். இன்சூரன்ஸ் சர்வேயர் சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னரும் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கப்படவில்லை.
நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு
இதனைத் தொடர்ந்து அவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், இன்சூரன்ஸ் கம்பெனி மீது வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு, கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கிய தீர்ப்பில், இன்சூரன்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளருக்கு ரூ.9 லட்சத்து 28 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என உத்தரவிட்டது.
பின்னர் மேல்முறை யீட்டில் இந்த தொகை செலுத்தப்படும் வரை 7.5 சதவீதம் வட்டியும் சேர்ர்த்து வழங்க வேண்டும் என்று மாநில நுகர்வோர் கோர்ட்டு உத்திரவிட்டது.
இன்சூரன்ஸ் கம்பெனி இழப்பீடு தராமல் இழுத்தடிப்பு செய்ததால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் இன்சூரன்ஸ் கம்பெனி மீது நடவடிக்கை எடுத்து தொகையை வசூலித்து தர வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில், கடந்த ஜனவரி மாதத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்தார்.
சமரச பேச்சுவார்த்தை
வழக்கு தாக்கல் செய்து 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பிரச்சனையை தீர்க்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, சமரச பேச்சுவார்த்தைக்காக வக்கீல் பாலசுப்பிரமணியம் என்பவரை கடந்த வாரம் நியமனம் செய்தது. சமரச பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்ட நுகர்வோர் பழனியப்பனுக்கு ரூ.14 லட்சத்து 41 ஆயிரத்து 132 வழங்க இன்சூரன்ஸ் கம்பெனி சம்மதம் தெரிவித்தது. இதையொட்டி, இழப்பீட்டு தொகைக்கான காசோலையை, நுகர்வோர் கோர்ட்டு உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில், நீதிபதி டாக்டர் ராமராஜ் பாதிக்கப்பட்ட பழனியப்பனிடம் வழங்கினார்.
- தங்க நகைக்கு பாலிஷ் போட்டு புதுப்பித்து தருவதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி, அவர் வைத்திருந்த தங்க நகைகளை பறித்து சென்றனர்.
- இது குறித்து பெருமாயி காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி கக்கன்காலனி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாயி (வயது 75). கடந்த 31-ந் தேதி, மூதாட்டியின் வீட்டிற்கு வந்த இரு வாலிபர்கள், தங்க நகைக்கு பாலிஷ் போட்டு புதுப்பித்து தருவதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி, அவர் வைத்திருந்த தங்க நகைகளை பறித்து சென்றனர்.
இது குறித்து பெருமாயி காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காரிப்பட்டி போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இருவர், இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, அயோத்தியாப்பட்டணம் பகுதியில் முகாமிட்டிருந்த, பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர்லால் (34). பூரணி மாவட்டத்தைச் சேர்ந்த பிபின்குமார் (30) ஆகிய இருவரையும் காரிப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
நூதன மோசடியில் ஈடுபட்ட பீகார் வாலிபர்களை 5 நாட்களில் கைது செய்த காரிப்பட்டி போலீசாருக்கு, வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
- இ.எஸ்.ஐ ஊழியர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- செவ்வாய்ப்பேட்டை போலீசார் கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் கந்தம்பட்டி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா (வயது 40). இவர் இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இவர் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு சாவியை வராண்டாவில் உள்ள வாசிங்மெஷினில் வைத்து விட்டு சென்றார். மதியம் அவரது மகன் வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்த நிலையிலும், அதிலிருந்த பொருட்கள் சிதறியும் கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தாய் கவிதாவுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கவிதா அங்கு ஓடோடி வந்து பீரோவுக்குள் பார்த்தபோது, அதிலிருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. மர்மநபர்கள் வீட்டின் கதவை திறந்து கைவரிசை காட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார், நகைகளை திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே, அங்கு வந்த கைரேகை நிபுணர்களும், வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
இ.எஸ்.ஐ ஊழியர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
- இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் குறை வாய்ப்பு உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று விநாடிக்கு 1,572 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் சரிந்து விநாடிக்கு 1,561 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரியில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,561 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
நேற்று 102.73 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 102.71 அடியானது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் குறை வாய்ப்பு உள்ளது.
- ஒரேநேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தொண்டர்கள் மேடையில் ஏறியதால், மேடை பின்பக்கமாக சரிந்தது.
- மேடையில் நின்று கொண்டிருந்த அன்புமணி ராமதாஸ் தடுமாறினாலும் உடனே சுதாரித்துக்கொண்டு, மேடையின் முன்பக்கமாக குதித்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலைய பகுதியில் பா.ம.க. கொடியேற்று விழா நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டார்.
விழாவில் அன்புமணி ராமதாஸ், அங்குள்ள கொடிகம்பத்தில் கட்சி கொடி ஏற்றினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த விழா மேடையில் பேசுவதற்காக ஏறினார். அவருக்கு தொண்டர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரேநேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தொண்டர்கள் மேடையில் ஏறியதால், மேடை பின்பக்கமாக சரிந்தது. உடனே மேடையில் இருந்தவர்கள் ஆங்காங்கே குதித்தனர். மேடையில் நின்று கொண்டிருந்த அன்புமணி ராமதாஸ் தடுமாறினாலும் உடனே சுதாரித்துக்கொண்டு, மேடையின் முன்பக்கமாக குதித்தார். மேடை சரிந்து விழுந்தும் அவர் காயமின்றி தப்பினார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த இடம் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பிறகு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் பா.ம.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
- தோழிகளான சக பெண் காவலர்கள் சந்தனம், குங்குமம் இட்டு, கைநிறைய வளையல் போட்டு, சீர்வரிசை தட்டு, தாம்பூலம் கொடுத்தனர்.
- வளைகாப்பு நிகழ்ச்சியில், வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோரும் பங்கேற்று மோகனாவை வாழ்த்தினர்.
வாழப்பாடி:
சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் அடுத்த பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகனா (வயது 27). இவர் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
கர்ப்பிணியான இவரை மகிழ்விக்க, வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் ஒன்றிணைந்து வளைகாப்பு நடத்திட திட்டமிட்டனர்.
அதன்படி, நேற்று காவலர் மோகனாவை வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். பின்பு அவருக்கு தோழிகளான சக பெண் காவலர்கள் சந்தனம், குங்குமம் இட்டு, கைநிறைய வளையல் போட்டு, சீர்வரிசை தட்டு, தாம்பூலம் கொடுத்தனர். இதையடுத்து மோகனாவுக்கு அறுசுவை விருந்து கொடுத்து மகிழ்ந்தனர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த மோகனா சக போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோரும் பங்கேற்று மோகனாவை வாழ்த்தினர்.
பெண் காவலருக்கு போலீஸ் நிலையத்திலேயே, சக பெண் போலீசார் வளைகாப்பு நடத்திய நிகழ்வு, பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






