என் மலர்
சேலம்
- கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
- மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை கைதிகள் மூலம் லட்டு, மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து, கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் சிறை உள்ளதால், மெயின் ரோட்டோரம் சிறைக்கு சொந்தமான ஒரு அறையில் வைத்து பொதுமக்களுக்கும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் (வயது 34) என்பவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்குரிய பணத்தை சிறை கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஆனால் அந்த பணம் சிறை கணக்கிற்கு சரியாக வரவில்லை. இதனால் சுப்பிரமணியம் மீது சிறை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பொருட்கள் வாங்கியதற்கு 'ஜி.பே.' மூலம் பணம் அனுப்பி வருகிறோம் என்று கூறினர். இதையடுத்து அந்த 'ஜி.பே.' அக்கவுண்ட் யாருடையது என்று அவர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த செல்போன் எண் சிறை வார்டன் சுப்பிரமணியத்தின் மாமியாரின் செல்போன் எண் என்பது தெரிந்தது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அவருடைய மாமியாரின் செல்போன் எண் மூலமாக 'ஜி.பே.' அக்கவுண்டுக்கு சென்றிருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து சிறை வார்டன் சுப்பிரமணியத்திடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணம் மோசடி செய்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து சேலம் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத், சிறை வார்டன் சுப்பிரமணியத்தை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- பழைய சூரமங்கலம், சோழம்பள்ளம், அரியாகவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் மேற்கு கோட்டத்திறகுட்பட்ட கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் போடிநாயக்கன்பட்டி மின்பாதையில் நாளை (14-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ரெயில் நகர், பெரியார் நகர், ஜங்சன், ஆண்டிப்பட்டி, கபிலர் தெரு, பழைய சூரமங்கலம், சோழம்பள்ளம், அரியாகவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் மல்லமூப்பம்பட்டி மின்பாதையில் நாளை மறுநாள் (15-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாய்க்கன்பட்டி, ராமகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்தார்.
- வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- சந்தோசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் எட்டி குட்டை தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது70), இவரது மனைவி வித்யா (65), பாஸ்கரன்-வித்யா தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளாக வீட்டின் முன் பகுதியிலேயே மளிகை கடை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ராமநாதன் என்ற தினேஷ், வாசுதேவன் என்ற ஆனந்த் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வீட்டில் வித்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது அருகில் பாஸ்கரன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி கிடந்தார். இதனை பார்த்த அவர்களது மகன் வாசுதேவன் கதறினார்.
தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை பார்த்த அவர்களது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி துடித்தனர்.
சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் கடப்பாறை, சம்மட்டி உள்பட பயங்கர ஆயுதங்களால் தம்பதியை தலையில் அடித்து கொலை செய்து விட்டு பாஸ்கரன் மற்றும் வித்யா அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

கொலையாளி சந்தோஷ்
அப்போது வட மாநில வாலிபர் ஒருவர் அந்த வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடியதுடன் விசாரித்த போது கொலை செய்யப்பட்ட தம்பதியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் குடும்பத்துடன் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் (32) என்பது தெரிய வந்தது.
அவரை சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களிலும் முகாமிட்டு தனிப்படை போலீசார் தேடினர். தொடர்ந்து வீட்டையும் கண்காணித்தனர். அப்போது வெளியல் சுற்றி விட்டு ரத்தக்கரை படிந்த உடையை மாற்றுவதற்காக இரவு 7.30 மணியளவில் வீட்டிற்கு வந்த போது சந்தோசை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-
டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த சந்தோஷ் கடந்த 15 ஆண்டுகளாக சேலத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது உடன் வேலை செய்பவர்கள் மற்றும் பழகியவர்கள் உள்பட பலரிடம் கடன் வாங்கி உள்ளார். பின்னர் அந்த கடனை கட்ட முடியாததால் கடனை கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் சந்தோஷ் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.
அப்போது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று வந்த போது அங்கு பாஸ்கரன் தம்பதியினர் அணிந்திருந்த நகைகளை பார்த்து அந்த நகைகளை கொள்ளையடித்து கடனை அடைக்க சந்தோஷ் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி நேற்று மதியம் இந்த தம்பதி தனியாக இருப்பதை அறிந்த சந்தோஷ் கடப்பாறை மற்றும் சம்மட்டியுடன் வீட்டிற்குள் புகுந்துள்ளார். தொடர்ந்து அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த வித்யாவை சம்பட்டியாலும் கடப்பாறையிலும் முதலில் தலையில் தாக்கினார்.
அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த பாஸ்கரனையும் தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த நகையுடன் தப்பி சென்ற சந்தோஷ் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார்.
இரவாகி விட்ட நிலையில் குளித்து விட்டு உடையை மாற்றுவதற்காக வீட்டிற்கு வந்த போது சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர். இன்று சந்தோசை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த இரட்டை கொலை சம்பவத்தில் கொலை நடந்து 4 மணி நேரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதால் போலீஸ் கமிஷனர் அதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் போலீசாரை வெகுவாக பாராட்டினார். இந்த கொலையில் கொலையாளியை கைது செய்ய கேமரா பதிவுகள் உதவியதாகவும், ஏற்கனவே செவ்வாய்ப்பேட்டை மற்றும் கிச்சிப்பாளையத்தில் நகை பறிப்பு சம்பவத்தில் கேமரா பதிவால் குற்றவாளியையும் இதே போல 4 மணி நேரத்தில் கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
- பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அண்ணா பூங்கா, மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், படகு குழாம், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், கிளியூர் நீர் வீழ்ச்சி உள்பட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் கன மழை பெய்த நிலையில் ரம்மியமான சூழல் நிலவியது. அதனை தொடர்ந்து நேற்றும் ஏற்காட்டில் சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு மேலும் குளிர்ச்சி அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவுகிறது. நேற்று சாரல் மழையிலும் படகு குழாமில் குடும்பத்துடன் ஆனந்தமாக சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
இதே போல சேலம் மாவட்டம் சங்ககிரியில் நேற்று கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி என மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களுக்காக சேவை செய்கின்ற கட்சி. மக்களுக்காக உழைக்கின்ற கட்சி.
- தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அமைந்துள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்றைய தினம் ஊடகத்தில் பார்த்தபோது அமைச்சர் ரகுபதி எடப்பாடி பழனிசாமி தூங்கிக்கொண்டு இருப்பது போல பேட்டி அளித்துள்ளார் என்று கூறி உள்ளார். நான் விழித்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால்தான் பொறுத்துக் கொள்ள முடியாத ரகுபதி ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார். ரகுபதி பொருத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொடுத்தடிமையாக செயல்பட்டு வருகிறார். ரகுபதியை நாட்டிற்கு அடையாளம் காட்டியது அ.தி.மு.க. இன்று நன்றியை மறந்து அடிமை குரல் கொடுத்து கொண்டு வருகிறார்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களுக்காக சேவை செய்கின்ற கட்சி. மக்களுக்காக உழைக்கின்ற கட்சி. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாமலும் மக்கள் பணிகளை முதன்மையாக செய்கின்ற கட்சி என்றால் அ.தி.மு.க. தான்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலமாக விளங்கி கொண்டிருக்கின்றது என சொல்லுகிறார்.
போலீஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனம் திருட்டு போனது குறித்து புகார் அளிக்க சென்ற பெண்ணிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடு, நான் அந்த இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருகிறேன் என போலீசார் ஒருவர் கூறுகிறார். அதற்கு அந்த பெண் தன்னிடம் பணம் இல்லை என்றார். உடனே காவலர் அந்த பெண்ணை அவதூறாக பேசுகிறார். இதையாவது பார்த்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆகவே இந்த ஆட்சியின் லட்சணத்தை மக்கள் பார்க்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
நான் ஏற்கனவே டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தபோது தமிழகத்திற்கு தேவையான நிதி பல துறைகளுக்கு வராமல் நிலுவையில் இருக்கின்றது. இந்த நிதியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தேன். அதன் விளைவாக 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான தேவையான நிதியை விடுவித்து இருக்கிறார். அதோடு மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-க்கான நிலுவை நிதி வழங்க வேண்டும் என்றோம். அதையும் ஒதுக்கீடு செய்திருக்கிறார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அதையும் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு தேவையான நிதி பெற்று தருவதிலும், தமிழ்நாடு வளர்வதற்கு எப்போதும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
அ.தி.மு.க. ஆட்சியில் எல்லா துறைகளும் சிறப்பாக செயல்பட்டது. இன்றைக்கு ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்களுடைய பிரச்சனை கவனிப்பதில்லை. இனியாவது இந்த அரசு விழித்து கொண்டு இந்த குறைபாடுகளை நீக்க வேண்டும்.
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி முதலில் பா.ஜனதாவுடன் எங்கள் கூட்டணி அமைந்திருக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் 9 மாதம் காலம் இருக்கின்றன. இன்னும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும்.
தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளில் அரசு பணியிடங்கள் சுமார் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதுபோல் அரசு துறை சார்ந்த பணியிடங்கள் 28 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆட்சி நிறைவடைந்து 4 ஆண்டுகள் ஆகி 5-ம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளது. ஆனால் தேர்தல் அறிக்கையின்போது அறிவித்த 5½ லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பவில்லை.
பொது விநியோகத் திட்டம் என்பது முக்கியமான திட்டம் ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அத்தியாவசிய பொருட்களை பெறுகின்றனர். இதில் பணியாளர்கள் அவ்வப்போது காலியாகும் போது நிரப்பப்பட வேண்டும் புதிய ரேஷன் கடை திறக்கும் போது அதற்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும் இதைப் பற்றி இந்த அரசு கவலைப்படுவதில்லை. மக்களை பற்றி கவலைப்படாத ஒரே அரச தி.மு.க. ஆட்சி. ஆனால் வெளியில் மட்டும் தி.மு.க. ஆட்சியில் தான் மிக சிறப்பாக செயல்பட்டதாக வெளிப்படுத்துவார்கள் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற தோற்றத்தை வெளியிட்டு வருவது திமுக அரசாங்கம்.
சட்டமன்றத்தில் தி.மு.க. ஆட்சி வந்தவுடன் சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலை ஒளிபரப்பவும் எனக் கூறினார்கள். ஆனால் நாங்கள் பேசுவது அவர்கள் வெளியிடுவதே இல்லை. நீதிமன்றம் சென்றோம் அங்கும் நியாயம் கிடைக்கவில்லை முதலமைச்சர் அமைச்சர்கள் பேசுவதை காட்டுகிறார்கள் எதிர்க்கட்சியினர் பேசுவதை காட்டுவதில்லை. அந்த அளவுக்கு மக்கள் பிரச்சனைகளை நாங்கள் எடுத்து பேசி இருக்கிறோம் அதை காட்ட மறுக்கிறார்கள் அதற்கான பதிலை மட்டும்தான் ஒளிபரப்புவார்கள். அங்கேயே அதற்கு நீதி கிடையாது.
பஹல்காமில் நடைபெற்ற சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவின் மக்களை நிலைகுலைய செய்தது. அனைத்து மக்களிடத்திலும் வேதனையான சம்பவம் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம். அதற்கு இந்திய அரசு உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் பயங்கரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் வேரோடு அழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்திய அரசாங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு நமது முப்படைகளும் ஒன்றாக இணைத்து அதற்கு முழு அதிகாரம் வழங்கி அதனடிப்படையிலேயே பயங்கரவாதம், பயங்கரவாத முகாம்களை அண்டை நாட்டில் இருந்தாலும் முழுமையாக செயல்பட்டு அளித்துள்ளனர். முற்றிலும் ஒலிக்கும் விதமாக முதல் கட்ட பணியை தொடங்கியுள்ளனர் அதற்காக அ.தி.மு.க. வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் நம்ம ராணுவத்திற்கு முப்படைகளுக்கும் மிகத் திறமையாக துல்லியமாக தீவிரமாக போரிட்டு வெற்றி கண்டதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அணையின் நீர்மட்டம் 107.95 அடியாக உயர்ந்து உள்ளது.
- தற்போது அணையில் 75.52 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
மேட்டூர்:
கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 2323 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 3619 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 107.95 அடியாக உயர்ந்து உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 75.52 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
- ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்று வருகின்றன.
- ஓட்டல்களில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம்:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்பட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று மே தின விடுமுறையையொட்டி, ஏற்காட்டில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன.
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள முக்கிய பகுதிகளான அண்ணா பூங்கா, மான் பூங்கா, சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், படகு இல்லம், சேர்வராயன் கோவில், கிளீயூர் நீர் வீழ்ச்சி, காட்சி கோபுரம் உள்பட பகுதிகளுக்கு சென்று இயற்கை அழகை பார்த்து ரசித்தனர். மேலும் ஏற்காடு படகு குழாமில் குடும்பத்தினருடன் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி சென்று மகிழ்ந்தனர்.
மாலை நேரத்தில் ஏற்காட்டில் மழை பெய்ததால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதுடன் படகு இல்லத்தில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பின்பு விசைப்படகு துடுப்பு படகு மட்டுமே இயக்கப்பட்டது. படகு சவாரி மழையால் தடைபட்டதால் படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகிற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.
மேலும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் நிரம்பி காணப்பட்டன. அதேபோல் உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் ஓட்டல்களில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெள்ளிக்கிழமையான இன்றும் காலை முதலே ஏற்காட்டில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்று வருகின்றன. மேலும் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவுவதால் ஏற்காட்டில் இயற்கை சூழலை ரசித்த படி குடும்பத்துடன் பொது மக்கள் வலம் வருகிறார்கள். இதனால் அங்குள்ள முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- கடும் வெயிலால் பொதுமக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள்.
- நீண்டதூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே முடங்குகின்றனர்.
சேலம்:
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அக்னி நட்சத்திர காலத்திற்கு இணையாக வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் வெயில் சதம் அடிக்கிறது. குறிப்பாக நேற்று 102.2 டிகிரி வெயில் பதிவானது.
இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் வெயில் கொளுத்துகிறது. கடும் வெயிலால் பொதுமக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள்.
காலையில் இருந்தே அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் உஷ்ணத்தால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், அதிகளவில் வியர்வை வெளியேறுகிறது. இதனால் சீக்கிரத்திலேயே களைப்பும் ஏற்படுகிறது.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெப்ப அலையில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள நுங்கு, இளநீர், கம்பங்கூழ், தர்பூசணி பழம், பழச்சாறு, கரும்புச்சாறு, செயற்கை குளிர்பானங்களை நாடுகின்றனர்.
மேலும் நீண்டதூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே முடங்குகின்றனர். பெரும்பாலும் மாலை நேர பயணத்தையே விரும்புகின்றனர். இரவு நேரத்தில் வீடுகளில் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கின்றன. இதனால் உடல் முழுவதும் வியர்வை வியர்த்து கொட்டுகிறது. தூங்க முடியாமல் அவதிபடுகின்றனர்
இதனிடையே தமிழகத்தில் இன்று காலை முதல் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும், கடலோர பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கில் நிலவும் காற்று குவிதல் காரணமாக இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
- மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1363 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.
மேலும் அணையின் நீர்மட்டம் 107.75 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்து கணிசமாக இருப்பதால் கோடையிலும் மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
- பெயர், முகவரி தெரியாத ஆண் நபர் ஒருவர் 8 மாத ஆண் குழந்தையை கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாக கூறி சென்றுவிட்டார்.
- குழந்தையின் பெற்றோர் யார்? என கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்:
நாகர்கோவில்- பெங்களூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 17236) மதுரை, கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக நாகர்கோவிலுக்கு இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு 7.15 மணி அளவில் நாகர்கோவில் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து இந்த ரெயில் புறப்பட்டு பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது. இதில் உள்ள கடைசி பொது பெட்டியில் பயணம் செய்து வந்த வீரமணி (வயது 29) என்பவரிடம் மதுரை ரெயில் நிலைய நடைமேடையில் வண்டி நிற்கும்போது பெயர், முகவரி தெரியாத ஆண் நபர் ஒருவர் 8 மாத ஆண் குழந்தையை கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாக கூறி சென்றுவிட்டார்.
அதற்குள் ரெயில் புறப்பட்டு சென்றது. அடுத்த ரெயில் நிலையமான திண்டுக்கல் வந்தும் குழந்தையை கேட்டு யாரும் வராததால் இது குறித்து வீரமணி உதவி எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் ரெயில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்ததும் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டபானி, பெண் போலீஸ் ரம்யா ஆகியோர் வீரமணி என்பவரிடம் இருந்து குழந்தையை பெற்று போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் குழந்தைகள் நல காப்பக களப்பணியாளரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர் யார்? என கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
- 20 பெட்டிகளுடன் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது.
சேலம்:
சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது-
கோடை விடுமுறையையொட்டி சேலம், நாமக்கல் கரூர் வழியாக பெங்களூரு-மதுரை இடையே நாளை (30-ந் தேதி) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் பெங்களூருவில் இருந்து நாளை இரவு 7 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம் பங்காரு பேட்டை வழியாக இரவு 10.30 மணிக்கு சேலத்திற்கு வந்தடையும். கரூருக்கு அதிகாலை 1.43 மணிக்கும், மதுரைக்கு காலை 6.15 மணிக்கும் வந்தடையும். மறு மார்க்கத்தில் மே மாதம் 1-ந் தேதி காலை 9,10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு சேலத்திற்கு மதியம் 2.20 மணிக்கு வந்தடையும் இந்த இரவு 7. 30 மணிக்கு பெங்களூருக்கு சென்றடையும். 2 அடுக்கு ஏ.சி. பெட்டி 2, 3 அடுக்கு ஏ.சி. பெட்டி 16, லக்கேஜ் பெட்டி உள்பட மொத்தம் 20 பெட்டிகளுடன் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
சேலம்:
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் ஹரி, இவர் தனது உறவினருக்கு மாத்திரை வாங்க சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள மருந்தகத்திற்கு நேற்று மாலை வந்தார்.
தொடர்ந்து டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரை சீட்டை அங்கு பணியில் இருந்த மருந்தாளுனர் மாதேஸ் என்பவரிடம் கொடுத்தார். அப்போது ஹரி கொடுத்த மருந்து சீட்டை மருந்தாளுனர் கீழே போட்டு விட்டு வேறொரு நோயாளிக்கான மருந்து சீட்டை பார்த்து மாத்திரை கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது ஹரி மருந்தாளுனர் குடிபோதையில் இருப்பதாகவும், மாத்திரையை மாற்றி கொடுத்தது குறித்தும் கேட்ட போது பதில் சொல்லாமல் இருந்ததாகவும், அலட்சியமாக செயல்பட்ட மருந்தாளுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிய படி கூச்சலிட்டார்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து மருந்தாளுனர் மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இது குறித்து மருத்துவமனை டீன் கூறுகையில், மருந்தாளுனர் குடிபோதையில் இருந்தாரா? என்பது குறித்து டாக்டர்கள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவருக்கு உடலில் ஏதாவது பிரச்சினை இருக்கும் என்று கருதுவதால் இன்று அவருக்கு டாக்டர்கள் குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்கிறார்கள். அதன் அடிப்படையில் இது தொடர்பாக மருத்துவ குழு மூலம் விரிவான விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






