என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • மாவட்ட நிர்வாகத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தும் விதமாக சில ஊராட்சி மன்ற தலைவர்கள் செயல்படுகிறார்கள்
    • கலெக்டர் கடும் எச்சரிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்து 288 கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மற்றும் ஊராட்சிகளில் சுகாதாரம் மற்றும் சுத்தத்தை கடைபிடிக்கும் நம்ம ஊரூ சூப்பரு விழிப்புணர்வு இயக்கம் நடத்திடுவது குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

    கிராமத்தில் குழந்தைகள் விடுமுறை நாட்களில் குளம், குட்டை ஆறுகளில் சென்று விளையாடுவதை தவிர்க்க அனைத்து வீடுகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    குழந்தை திருமணம் நடைபெற்றால் நீங்களும் அதற்கு ஒரு முக்கிய குற்றவாளி என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

    குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்க அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுதி ஏற்று செயல்படுங்கள்.

    ஒவ்வொரு ஊராட்சிகளும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அந்தப் பிரச்சினைகளை பெரிதாக்கி தூண்டிவிட்டு பொதுமக்களை சாலை மறியல், போராட்டங்கள் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஊராட்சி மன்ற தலைவர்களே அல்லது பெண் தலைவர்களின் கணவர்மார்களே தூண்டுதலாக உள்ளனர் என தெரிய வருகிறது.

    சாலை வசதி அல்லது பட்டா தேவை போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதனை பெரிதாக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தும் விதமாக சில ஊராட்சி மன்ற தலைவர்கள் செயல்படுகிறார்கள்.

    இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசு விதிமுறைகள் என்ன தெரிவிக்கின்றதோ அதை பின்பற்றியே ஒவ்வொரு வளர்ச்சி திட்டமும் செயல்படு்தப்படுகிறது.

    விதிமுறைகளை மீறி செயல்படுத்த முடியாத வகையில் இருக்கும் பிரச்சனைகளை தூண்டிவிட்டு பின்னால் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எங்களுக்கு தெரிய வருகிறது. இவைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

    இதை ஊராட்சி மன்ற தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு பிரச்சிணையாக இருந்தாலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்களை சமாதானப்படுத்தி விதிமுறைகளின் படியே செயல்படுத்த முடியும் என மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

    பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தான் உங்களை ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுத்து உள்ளார்கள். பிரச்சனைகளை தூண்டி விடுவதற்கு உங்களை தேர்ந்தெடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். கிராமத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்
    • போலீஸ் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ,வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் பட்டாசுகள் வியாபாரம் செய்து வருபவர் சுரேஷ் (42).

    நேற்று மாலை வாலாஜாவில் ஆசிரியர் காலனி எம்.ஜி.ஆர் நகர் பகுதி வீட்டில் உள்ள பட்டாசு குடோனில் சுரேஷ்(42 )மற்றும் ராஜேந்திரன் (36)ஆகிய இருவரும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென தீப்பொறி பட்டதில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் பட்டாசுகள் வைத்திருந்த குடோனின் சிமெண்ட் ஷீட் மேற்கூரையும், கொட்டகையும் எரிந்து சாம்பலானது. மேலும் இதில் சுரேஷ்(42), ராஜேந்திரன் (36)இருவரும் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் சிகிச்சை க்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பட்டாசுகள் வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தியதால் அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து வெளியே வந்து பார்த்தனர்.

    பின்னர் இது பற்றி தகவலறிந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாசில்தார் நேரில் ஆய்வு
    • 6 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த காட்டுப் பாக்கம் கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் 6 பேர் கடந்த மாதம் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்ட ரிடம் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

    மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறை வேற்றும்பொருட்டு நேற்று நெமிலி தாசில்தார் பாலசந்தர் இலவச வீட்டுமனை வழங்கவுள்ள இடத்தை தேர்வுசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

    இது குறித்து நெமிலி தாசில்தார் பாலசந்தர் கூறுகையில், "6 பேருக்கு வீட்டுமனை வழங்க தேவையான இடம் விரைவில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பட்டா வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.

    அப்போது மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், வரு வாய் ஆய்வாளர் கனிமொழி, கிராம நிர்வாக அலுவலர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அடுத்தடுத்து ஒரே இடத்தில் தொடரும் விபத்து
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    சென்னையில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று ராணிப் பேட்டை முத்துக்கடை நோக்கி நேற்று இரவு எம்.பி.டிசாலை யில் வந்து கொண்டிருந்தது. ஆட்டோ நகர் அருகே வரும் போது கன்டெய்னர் லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கன்டெய்ன ரின் முன் பகுதி சேதம் அடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணிப்பேட்டை போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்த விபத்து நடைபெற்ற அதே இடத்தில் நேற்று முன்தினம் இரவு தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி, பஸ்சில் இருந்த 6 பேர் காயமடைந்தனர்.

    சாலையை அகலப்படுத்தாமல் சாலையின் மையப்பகுதி யில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதாலும், இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    இதை தவிர்க்க உடனடியாக சாலையை அகலபடுத்தி, சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு
    • ராணிப்பேட்டையில் புதிய திட்டபணிகள் தொடக்கம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய திட்ட பணிகள் கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது.

    வாலாஜா ஒன்றியம் வானாபாடி ஊராட்சியில் களத்துமேடு பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வானாபாடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் மறுவாழ்விற்காக வழங்கப்படும் நிதியுதவி வழங்குதல்,

    கல்மேல்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கல்புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்ப ள்ளியில் ரூ.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடம், ரூ.10.லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடம், கன்னிகாபுரத்தில் புதிய பகுதி நேர ரேசன் கடை, கல்மேல்குப்பத்தில் ரூ.19லட்சத்து50 ஆயிரம் மதிப்பில் புதியஆழ்துளை கிணறு, பைப்லைன்,

    தரைமட்டநீர்தேக்கத் தொட்டி , கல்மேல்குப்பம் ஊராட்சி மற்றும் அம்மூர் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில், அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ. 19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற 7 திட்டப்பணிகள் தொடக்க மற்றும் வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டது.

    விழா நிகழ்ச்சிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்து பேசினார்.

    விழா நிகழ்ச்சிகளில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தும், பணிகளை தொடங்கி, நிதியுதவிகளை வழங்கினர்.

    அப்போது அவர் பேசியதாவது :-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்களில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் மகத்தான திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதியில் கூறாத பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.

    இந்த மக்களாட்சியில் கட்சி பாகுபாடின்றி மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது. ஒரு நல்லாட்சி என்பது மக்களின் வரிப்பணத்தினை தேவையற்ற திட்டங்களுக்காக வீணடிக்காமல் அப்பணம் மக்களையே சேரும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதைத்தான் நமது முதல் அமைச்சர் செய்து வருகிறார்.

    நமது முதல் அமைச்சர் மகளிர்க்கும்,கல்விக்கும்,சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அதனால் பொதுமக்கள் யார் மக்களுக்கான பயனுள்ள திட்டங்களை செயல்படுத்திகிறார்கள் என சிந்தித்து செயல்பட வேண்டும். மக்கள் ஒற்றுமையுடன் இருந்து அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

    நிகழ்ச்சிகளில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன். அம்மூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், ஒன்றியக் குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம்,ஒன்றியக் குழு உறுப்பினர்கள் செல்வி, ராமச்சந்திரன், வானாபாடி, கல்மேல்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஈஸ்வரி, ராஜரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கால் தவறி ஆழமான பகுதியில் விழுந்து பரிதாபமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 58). டிராக் டர் டிரைவர். இவர் நேற்று எஸ்.என்.கண்டிகையில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார். அங்குள்ள கல்லாற்றில் இடுப்பளவு நீரில் இறங்கினார்.

    அப்போது திடீரென கால் தவறி ஆழமான பகுதியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நாகப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேய்ந்து கொண்டிருந்த போது பரிதாபம்
    • மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது

    அரக்கோணம்:

    அரக்கோணம் மற்றும் சுற்றி யுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

    அரக்கோணத்ம் அடுத்த உரியூர் பகுதியில் நேற்று மாலையில் ஆனந்தன் என்பவரது பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது.

    அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த நிலையில் மின் னல் தாக்கியதில் பசு மாடு பலியானது. 

    • தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் ரெயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
    • வந்தே பாரத் ரெயில் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரக்கோணம்:

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு வந்தது.

    அரக்கோணம் அருகே மகேந்திரவாடி, அன்வர்திகான் பேட்டை இடையே ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் ரெயில் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் டி-6 பெட்டியில் 75 மற்றும் 76 இருக்கை கண்ணாடிகள் உடைந்து விரிசல் ஏற்பட்டது.

    இந்த தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் ரெயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

    இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசியவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தே பாரத் ரெயில் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை வீடுத்துள்ளனர்.

    • வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட் டம், ஆற்காடு அருகே கீழ்வி ஷாரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி (வயது 42). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இவரது மகன் ரமேஷ் பலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை அடைக்க பத்மாவதி வீட்டில் இருந்த நகையை மகனுக்கு கொடுத்ததாகவும், இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று பத்மாவதி விஷ தழையை அரைத்து குடித்தார். இதனைய டுத்து அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவம னையிலும், பின்னர் அங்கி ருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்புத் துறையி னர் தீயை அணைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ் விஷாரம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையம் நேற்று காலை திடீரென தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்ற நபர்கள் பார்த்து விட்டு ராணிப்பேட்டை தீயணைப்புத்துறையினர் மற்றும் ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த திடீர் தீவிபத்தால் ஏ.டி. எம். எந்திரம் தீயில் எரிந்து கருகியது.

    மேலும் இந்த திடீர் தீ விபத்திற்கு மின் கசிவு கார ணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்தும், ஏ.டி.எம் எந்திரம் இருந்த பணம் தீயில் கருகியதா என்பது குறித்தும் ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்து முன்னணி வலியுறுத்தல்
    • அன்னதானம் வழங்கினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலையில் சுயம்பு லிங்கங்கள் ,சப்தகன்னிகள்,முருகர் கோவில், பெரிய அளவில் சிவலிங்கம் ஆகியவை உள்ளன.

    இந்த மலை மீது சித்ரா பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகள், பஜனை, கச்சேரி, பக்தர்களுக்கு அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    கோவில் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக லாலாப்பேட்டை மற்றும் முகுந்தராயபுரம் ஊராட்சிகளை சேர்ந்த இருதரப்பினர் இடையே சில மாதங்களாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததால், நேற்று சித்ரா பவுர்ணமி விழா உள்பட பஜனை, கச்சேரி, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த இருதரப்பினருக்கும் தடை விதித்தது. சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொ ள்ளவும் உதவி கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து காஞ்சனகிரி மலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. லாலாப்பேட்டை பகுதி பொதுமக்கள், பக்தர்கள், காஞ்சனகிரி மலைக்கு செல்லும் பாதையில் லாலாப்பேட்டை எல்லையில் பந்தல் அமைத்து நடராஜர் சுவாமி வைத்து அபிஷேகம், பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கினர்.

    இதனை கண்ட ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார் பூஜைகள், வழிபாடு நடத்த கூடாது என பொதுமக்கள், பக்தர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து கொட்டும் மழையில் பந்தல் அகற்றப்பட்டு , நடராஜர் சுவாமி சிலையும் எடுத்து செல்லப்பட்டது.

    முன்னதாக அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பினர் காஞ்சனகிரி மலை கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்காக அனு மதிக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் உரிய அனுமதி பெற்று வரக்கூறியதால் அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் இந்து முன்னணி அமைப்பினர் ராணிப்பேட்டை உதவி கலெக்டரிடம் , பக்தர்களை காஞ்சனகிரி மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என மனுவும் கொடுத்துள்ளனர்.

    • குளிப்பதற்காக சென்றபோது பரிதாபம்
    • தேசிய பேரிடர் மீட்பு படையினர் போராடி பிணமாக மீட்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த அனந்தலை, எடகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகன் கோகுல் பிரசாத் (வயது 14) சென்னையில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கோகுல் பிரசாத் சொந்த ஊரான எடக்குப்பம் கிராமத்திற்கு வந்தார். நேற்று மதியம் கோகுல் பிரசாத் அப்பகுதி நண்பர்களோடு சேர்ந்து கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றார்.

    அப்போது ஆழமான பகுதிக்கு சென்றார். நீச்சல் தெரியாததால் தண்ணீருக்குள் மூழ்கினார். இதை பார்த்த நண்பர்கள் பயந்து போய் கிராம பொது மக்களிடம் தெரிவித்தனர்.

    வாலாஜா போலீஸ் நிலையத்திற்கும், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குட்டையில் மூழ்கிய சிறுவனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேரமாகியும் மாணவன் கிடைக்காததால் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தண்ணீர் குட்டையில் இறங்கி தேடுதலில் ஈடுபட்டனர்.

    சில மணி நேர தேடுதலுக்கு பின்னர் நீரில் மூழ்கி கிடந்த மாணவனை பிணமாக மீட்டனர்.

    தொடர்ந்து மாணவன் உடலை கைப்பற்றிய வாலாஜா போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×