என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • நீர் ஆதாரம் பாதிக்கும்
    • பொதுமக்கள் வலியுறுத்தல

    ராணிப்பேட்டை,

    ராணிப்பேட்டை அருகே உள்ள கல்மேல்குப்பம் கிராம ஏரியிலிருந்து நேற்று மாலை லாரிகளில் மண் ஏற்றப்பட்டது.

    இதை அறிந்த கல்மேல்குப்பம் கிராம பொதுமக்கள், ஏரியில் மண் அள்ளப் படுவதால் தங்களுக்கான நீர் ஆதாரம் பாதிக்கும் என கூறி ஏரி மண் ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்தனர். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை போலீசார் , லாரிகளை சிறைபிடித்திருந்த பொதுமக்களிடம் அரசின் உரிய அனுமதிகள் பெற்றுத்தான் ஏரியில் மண் அள்ளப் படுவதாகவும், இதை தடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து லாரிகளை மீட்டனர்.

    ஏரியில் மண் அள்ளப்படுவதில் கிராம மக்களுக்கு ஆட்சேபனை இருந்தால் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட அறிவுறுத்தினர். இதையடுத்து கிராம பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை :

    வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). பட்டாசு தொழிலாளி.

    கடந்த 7-ந் தேதிதியன்று மாலை வாலாஜாவில் உள்ள பட்டாசு குடோனில் சுரேஷ் மற்றும் ராஜேந்திரன் (36)ஆகிய இருவரும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த னர்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீப்பொறி பட்டதில் பட்டாசுகள் வெடித்து சிதறின.

    பட்டாசு குடோனின் சிமெண்ட் ஷீட் மேற்கூரையும், கொட்டகையும் எரிந்து சாம்பலானது.

    இதில் சுரேஷ்க்கும், ராஜேந்திரனுக்கும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக சுரேசை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ராஜேந்திரனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். ராஜேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலி பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு அறிவிப்பு
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை,

    தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி), ரெயில்வே தேர்வுவாரியம் (ஆர்.ஆர்.பி.) மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் (ஐ.பீ.பி.எஸ்.) நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    தற்போது மத்திய அரசின் உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமான வரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். வயது வரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 வயது ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்களும், மாற்று த்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

    இலவச பயிற்சி வகுப்புகள்

    ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ படிக்கும் வட்டம் வழியாக போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இந்தபயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு 04172-291400, 9499055897 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வுவாரியம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து வரும் நபர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள போலீஸ் புறக்காவல் மையத்தில் இருவரையும் அமர வைத்தனர். அப்போது போலீசார் அசந்த நேரத்தில் சுகன், தமிழ்செல்வி தப்பி சென்று விட்டனர்.
    • அரக்கோணம் பகுதியில் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் . இவரது மனைவி சுசீலா (வயது 70).

    இவர் வீட்டை பூட்டி விட்டு காட்டுப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்டு பூட்டை திறந்து நகை, பணத்தை திருடி சென்று விட்டனர்.

    திருடிய ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.58 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். பணம் எடுத்தது குறித்து சுசிலா செல்போனுக்கு தகவல் வந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் சுசிலா புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் பாராஞ்சி கிராமம் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்த சுகன் (25), இவரது மனைவி தமிழ்ச்செல்வி (22) ஆகியோர் சுசீலாவின் வீட்டுக் கதவை திறந்து மூக்குத்தி மற்றும் ஏ.டி.எம். கார்டை திருடியது தெரியவந்தது. கணவன்-மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களை பரிசோதனை செய்து உடல் சான்று பெறுவதற்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

    அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள போலீஸ் புறக்காவல் மையத்தில் இருவரையும் அமர வைத்தனர். அப்போது போலீசார் அசந்த நேரத்தில் சுகன், தமிழ்செல்வி தப்பி சென்று விட்டனர்.

    இதை சற்றும் எதிர்பாராத போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் ரெயில் நிலையம், பஸ்நிலையம் போன்ற இடங்களில் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரக்கோணம் பகுதியில் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கலெக்டர் எச்சரிக்கை
    • சமையல் செய்யும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், முதல் அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகள், 8 பேரூராட்சிகளிலும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் தினசரி காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    முகாலைச் சிற்றுண்டித் திட்டத்தின் கீழ் பள்ளி சமையல் கூடங்களில் சமையல் செய்யும் பணி தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த சமையலர் பணிக்கு தகுதியுடைய மகளிரை, சம்மந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு மூலம் தேர்வு செய்து, கிராம அளவிலான முதன்மைக் குழு, பேரூராட்சி அளவிலான முதன்மைக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு பணிநியமிக்கப்பட உள்ளனர்.

    சமையல் செய்யும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் 10-ந் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 3 ஆண்டுகள் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும், சமையல் செய்யும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவரின் மகன் அல்லது மகள், சம்மந்தப்பட்டபள்ளியில் 1 முதல் 4 ஆம் வகுப்பு வரை படிக்க வேண்டும், சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி, பேரூராட்சியில் வசிக்க வேண்டும்.

    தகுதியான நபர்கள் அக்கிராம ஊராட்சியில் இல்லையெனில், அருகில் உள்ள கிராம ஊராட்சியை சேர்ந்தவராக இருக்கலாம். இந்த தகுதிகளை உடையவர்கள் மட்டுமே இப்பணிக்கு தேர்வுசெய்யப்படுவர். இப்பணிமுற்றிலும் தற்காலிகமானது.

    இதில் எவ்வித கையூட்டுக்கும் இடமில்லை. பொதுமக்கள் யாரும் பணிநிரந்தம் செய்யப்படும் என நம்பி, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • சைனபுரம், காரியா குடல் தடுப்பணைகள் முழு கொள்ளளவு எட்டியது
    • குடிநீர் 6 மாதத்திற்கு தடையின்றி கிடைக்கும் என்று அதிகாரி கூறினார்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது.

    இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று முன்தினம் இரவு காவேரிப்பாக்கம் பகுதியில் கன மழை பெய்ததால் நெமிலி கொசஸ் தலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனை பாலத்தின் மீது செல்லும் பொது மக்கள் கண்டு ரசித்தனர். இது குறித்து நீர்வளத் துறை உதவி பொறியாளர் சந்திரன் கூறுகையில்:-

    நெமிலி கொசஸ்தலை ஆற்றில் கட்டப்பட்டுள்ள சைனபுரம், காரியா குடல் தடுப்பணைகள் முழு கொள்ளளவு எட்டியது.

    இதனால் சுற்றுவட்டார பகுதிகளான சயனபுரம், ரெட்டிவலம், கீழ்வெண்பாக்கம், அசநெல்லி குப்பம், கரியாக்குடல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய பாசனத்திற்கு தேவையான நீர் கிடைக்கும்.

    மேலும் மக்களுக்கு குடிநீர் 6 மாதத்திற்கு தடையின்றி கிடைக்கும் என்று கூறினார்.

    • 160 கிலோ எடை கொண்ட 8 கட்டைகள் சிக்கியது
    • மர்ம கும்பலை தேடி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் பழைய அஞ்சல் வீதியில், ஏரிக்கரை அருகே வசிப்பவர் ரமணன். இவர் வீட்டின் அருகே யாரோ மர்ம கும்பல் செம்மர கட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனச்சரக அதிகாரி சரவணன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 160 கிலோ எடை கொண்ட 8 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் வழக்கு பதிந்து செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்டுள்ள செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.3லட்சத்து 20 ஆயிரம் வரை இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    திமிரி அடுத்த கணியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோட்டி (வயது 45), கூலித் தொழிலாளி.

    இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் சாலையை கடக்கும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோட்டி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து கோட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய டி.புதூர் கிராமத் தைச் சேர்ந்த குப்பன் (60) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஏஜர் (வயது 20). இவர் சென்னை ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

    நேற்று ஏஜரும், அவரது நண்பர் மோகன்(20) என்பவரும் மோட்டார் பைக்கில் சோளிங்கர் நோக்கி சென்றனர். பைக்கை ஏஜர் ஓட்டி சென்றார்.

    வாலாஜா அடுத்த சித்தாத்தூரில் தனியார் கல்லூரி அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ஏஜர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம டைந்த மோகன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது பற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் ஏஜர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மஞ்சப்பை திட்டம் குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ரவிசந்திரன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பிரசார வாகனத்தை கொடிஅசைத்தார். பின்னர் தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

    விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் சந்திரசேகரன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆனந்த் மற்றும் தனியார் தொழிற்சாலை அலுவலர்கள், ஊழியர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு இடம் முந்தியது வேலூர்
    • திருவண்ணாமலை மாவட்டம் 35-வது இடத்தையும், திருப்பத்தூர் மாவட்டம் 29-வது இடத்தையும் பிடித்துள்ளது

    ராணிப்பேட்டை:

    வேலூர் மாவட்டத்தில் 7,248 மாணவர்கள் 8,098 மாணவிகள் உள்பட 15,346பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.

    இதில் 6094 மாணவர்கள் 7595 மா ணவர்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 689 பேர் தேர்ச்சி அடைந்தனர்.

    இதன் மூலம் வேலூர் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 89.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் உள்ள கைதிகள் 6 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 3 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 865 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.இதில் 25,022 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 89.8 சதவீதமாக உள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 116 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 13 ஆயிரத்து 314 மாணவ, மாணவிகள் 63 மையங்களில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 623 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 87.3 சதவீதம் ஆகும்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 13,014 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.இதில் 11,860 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 91.13 சதவீதமாக உள்ளது.

    பிளஸ்-2 பொதுத் தேர்வில் ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக அளவில் கடைசி இடத்தை பிடித்தது. வேலூர் மாவட்டம் கடைசி இடத்திற்கு முன்பாக

    3 7-வது இடத்தை பிடித்தது.

    திருவண்ணாமலை மாவட்டம் 35-வது இடத்தையும், திருப்பத்தூர் மாவட்டம் 29-வது இடத்தையும் பிடித்துள்ளது.

    • கிரேன் உதவியுடன் கார் அப்புறப்படுத்தப்பட்டது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் காந்தி நகர் பைபாஸ் சாலை பகுதியில் வசித்து வருபவர் தாமரைக்கண்ணன், இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு தாமரைக்கண்ணன் வாலாஜாவிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி காரில் வந்தார். கார் வி.சி.மோட்டூர் அருகே வந்த போது சாலையில் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த டாக்டர். தாமரைக்கண்ணனனுக்கு தலை மற்றும் நெற்றியில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா போலீசார் விபத்துக்குள்ளான காரை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கிரேன் உதவியுடன் சாலையிலிருந்து அப்புறப்படுத்தி, விபத்து காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×