search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டத்தை தூண்டி விடும் பெண் ஊராட்சி தலைவர்களின் கணவர்கள்
    X

    போராட்டத்தை தூண்டி விடும் பெண் ஊராட்சி தலைவர்களின் கணவர்கள்

    • மாவட்ட நிர்வாகத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தும் விதமாக சில ஊராட்சி மன்ற தலைவர்கள் செயல்படுகிறார்கள்
    • கலெக்டர் கடும் எச்சரிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்து 288 கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மற்றும் ஊராட்சிகளில் சுகாதாரம் மற்றும் சுத்தத்தை கடைபிடிக்கும் நம்ம ஊரூ சூப்பரு விழிப்புணர்வு இயக்கம் நடத்திடுவது குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

    கிராமத்தில் குழந்தைகள் விடுமுறை நாட்களில் குளம், குட்டை ஆறுகளில் சென்று விளையாடுவதை தவிர்க்க அனைத்து வீடுகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    குழந்தை திருமணம் நடைபெற்றால் நீங்களும் அதற்கு ஒரு முக்கிய குற்றவாளி என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

    குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்க அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுதி ஏற்று செயல்படுங்கள்.

    ஒவ்வொரு ஊராட்சிகளும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அந்தப் பிரச்சினைகளை பெரிதாக்கி தூண்டிவிட்டு பொதுமக்களை சாலை மறியல், போராட்டங்கள் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஊராட்சி மன்ற தலைவர்களே அல்லது பெண் தலைவர்களின் கணவர்மார்களே தூண்டுதலாக உள்ளனர் என தெரிய வருகிறது.

    சாலை வசதி அல்லது பட்டா தேவை போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதனை பெரிதாக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தும் விதமாக சில ஊராட்சி மன்ற தலைவர்கள் செயல்படுகிறார்கள்.

    இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசு விதிமுறைகள் என்ன தெரிவிக்கின்றதோ அதை பின்பற்றியே ஒவ்வொரு வளர்ச்சி திட்டமும் செயல்படு்தப்படுகிறது.

    விதிமுறைகளை மீறி செயல்படுத்த முடியாத வகையில் இருக்கும் பிரச்சனைகளை தூண்டிவிட்டு பின்னால் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எங்களுக்கு தெரிய வருகிறது. இவைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

    இதை ஊராட்சி மன்ற தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு பிரச்சிணையாக இருந்தாலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்களை சமாதானப்படுத்தி விதிமுறைகளின் படியே செயல்படுத்த முடியும் என மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

    பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தான் உங்களை ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுத்து உள்ளார்கள். பிரச்சனைகளை தூண்டி விடுவதற்கு உங்களை தேர்ந்தெடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். கிராமத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×