என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    கலவை:

    கலவையை அடுத்த குப்பிடி சாத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜி மகன் ஆறுமுகம் (வயது 21). இவர் மேளம் அடிக்கும் இசைக்கலைஞராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் செங்கனாபுரம் கிராமத்தில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் மேளம் அடிக்க ஆறுமுகம், அவரது நண்பர் தினேஷ் சென்றுள்ளனர்.இரவு நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது பென்னகர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்க மகன் அஜித் (24), வெங்கடேசன் ஆகிய இருவரும் ஆறுமுகத்தையும் தினேசையும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கியுள்ளனர். அருகே இருந்த வர்கள் தடுத்தபோது அஜித்தும் வெங்கடேசனும் தப்பி ஓடிச் சென்றுள்ளனர்.காயமடைந்த ஆறுமுகம், தினேஷ் ஆகிய இருவரும் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இது குறித்து கலவை சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்து விசா ரணை செய்தார்.கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆறுமுகம், அவரது மாமா நிலத்தில் நுங்கு, பனங்காய் வெட்டியபோது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஆறுமுகத்தை தாக்கியதாக அஜீத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் வெங்கடேசனை போலீ சார் தேடி வருகின்றனர்.

    • ஜல்லிகற்களில் சிக்கி தவறி கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 35). இவர் சென்னை மடிப்பாக்கத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    நேற்று காலை சென்னை செல்வதற்காக அருள்தாஸ் பைக்கில் சென்றார். அனந்தலை தனியார் கல் குவாரி அருகே வந்த போது சாலையில் கிடந்த ஜல்லிகற்களில் பைக் சிக்கியது. இதில் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். அருள்தாஸ் பலத்த காயமடைந்தார்.

    இதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் அருள் தாசை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அருள்தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இனிப்புகள் வழங்கினர்
    • 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் பழனி பேட்டை அங்காளம்மன் கோவில் அருகே ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி தலைமையில் அ.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை பட்டாசு வெடித்தும், 108 தேங்காய் உடைத்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    இதில் அரக்கோணம் அ.தி.மு.க நகர செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், பழனி, விஜயன், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார்
    • வாலாஜா பஸ் நிலையம் விரிவாக்க பணிக்கு அடிக்கல் நாட்டினார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.56 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கருணாநிதி நூற்றாண்டு சிமெண்டு சேமிப்பு கிடங்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா.வெங்கட், துணை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சிமெண்டு சேமிப்பு கிடங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், சிவராமன், தி.மு.க.ஒன்றிய செயலாளர் கடப்பேரி.சண்முகம், நிர்வாகிகள் சுந்தரம், தியாகராஜன் உள்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,தி.மு.க.வின் மாவட்ட, ஒன்றிய,நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக வாலாஜா நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 8 லட்சம் மதிப்பில் வாலாஜா பஸ் நிலையம் விரிவாக்க பணிக்கும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்.

    இதில் வாலாஜா நகர மன்றத் தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், திமுக நகர செயலாளர் தில்லை உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரி திடீர் ஆய்வு
    • ரூ.15 ஆயிரம் அபராதம்

    அரக்கோணம்:

    அரக்கோணம் பஜார், காந்தி ரோடு, பழைய பஸ் நிலையம் மற்றும் சுவால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைகள், டீக்கடைகள், சிற்றுண்டி கடைகள் மற்றும் பெட் டிக்கடைகளில் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆனந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட் டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப், தெர்மாகோல் கப், கேரி பேக் உள்ளிட்டவைகளை பதுக்கி வைத்திருந்த 2 குடோன்களில் இருந்து சுமார் 500 கிலோ பிளாஸ்டிக்பொருட்களை மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆனந்த் பறிமுதல் செய்து ரூ.15 ஆயிரம் அபரா தம் விதித்தார்.

    ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் ரகுராமன், என் ஜினீயர் செல்வகுமார், சுகாதார அலுவலர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நீச்சல் பழக சென்றபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 23), தச்சு தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் அரக்கோணம் அடுத்த அம்மனூர் தேவதானம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழகச் சென்றார்.

    அப்போது திடீரென தாமோதரன் நீரில் மூழ்கினார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அந்த பகுதி மக்கள் கிணற்றில் குதித்து தாமோதரனை தேடினர்.

    இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தாமோதரனை பிணமாக மீட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் தாமோதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 35 ஆயிரத்து 58 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்

    ராணிப்பேட்டை :

    ராணிப்பேட்டை மாவட் டத்தில் நகராட்சிகளில் உள்ள 35 பள்ளிகளிலும், பேரூராட்சிகளில் உள்ள 34 பள்ளிகளிலும், ஊரக பகுதிகளில் 541 பள்ளிகள் என மொத்தம் 610 பள்ளிகளில் படிக்கும் 35 ஆயிரத்து 58 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

    வாலாஜா டோல்கேட் அடுத்த சென்ன சமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காலை உணவு திட்ட தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது மாணவர்களுடன் அமர்ந்து உணவு ஊட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா.வெங்கட், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் கடப்பேரி.சண்முகம் உள்பட தி.மு.க.நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை
    • 24 மணிநேர அவசர உதவி எண்ணை தொடர்புக்கொள்ள அறிவுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் கடந்த 19 மற்றும் 20-ந்தேதி ஆகிய 2 திருமண முகூர்த்த நாட்களில் மாவட்டத்திலுள்ள அரக்கோணம், சோளிங்கர், நெமிலி, காவேரிப்பாக்கம் ஆகிய வட்டாரங்களில் மொத்தம் 11 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களுக்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து ஆலோசனைகளும், அறிவுரையும் வழங்கப்பட்டது.

    குழந்தை திருமணம் செய்தால் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் முன் ஜாமீனில் வெளிவர முடியாது என எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

    குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மீட்கப்பட்ட குழந்தைகள் தற்போது, பெற்றோர்களிடம் அறிவுரைகள் வழங்கி ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுமாயின் அக்குழந்தைகளை குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குழந்தை தொழிலாளர்கள், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் குழந்தைகள், குழந்தைத் திருமணங்களுக்கு ஆளாகும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், கொடுமைக்கு உள்ளாகும் குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவிட குழந்தைகளுக்கான 24 மணிநேர அவசர உதவி எண் சைல்டு லைன் -1098 க்கும், மேலும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் குறித்து பெண்கள் உதவி எண்-181 க்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • காலை உணவு திட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்
    • மண்புழு உரம் தயாரிக்கும் இடத்தையும் ஆய்வு நடத்தினார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதலில் 1-வது வார்டு தந்தை பெரியார் நகரில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து 2-வது வார்டு வேல்முருகன் நகரில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி திடக்கழிவு மேலாண்மை மையம் மற்றும் குப்பைகள் தரம் பிரித்து மக்கும் குப்பைகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் இடத்தையும் ஆய்வு செய்தார்.

    பின்னர் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் பள்ளியில் முதல் - அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது பேரூராட்சி உதவி இயக்குனர் கணேசன், பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் அம்சா, பேரூராட்சி செயல் அலுவலர் குமார், பள்ளி தலைமை ஆசிரியை ஷர்மிளா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • வேப்பமரத்தில் தழைபறித்த போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் கண் ணப்பன் விவசாயி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 55). இவர் நேற்று வீட் டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தழைபறிக்க சென்றுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சா ரம் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச் செல்வியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக ஆற்காடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜாபேட்டையில் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மதியம் இங்குள்ள கழிவறை குப்பை தொட்டியில் பிறந்து 2 மணி நேரமே ஆண் குழந்தை பிணமாக கிடந்தது.

    இது குறித்து ஆஸ்பத்திரி அலுவலர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்மார்கள், குழந்தைகளின் விவரம் சரியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    எனவே ஆஸ்பத்திரிக்கு வெளியிலிருந்து குழந்தையை கொண்டு வந்து கழிவறை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளார்களா? முறையின்றி குழந்தை பிறந்ததால் குப்பை தொட்டியில் வீசி சென்று விட்டார்களா? என பல்வேறு கோணங்களிலும், ஆஸ்பத்திரி சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி கூட்டம் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரண கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் வாலாஜா ஒன்றியம், வன்னிவேடு ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர், எனவே அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ந் தேதி வன்னிவேடு அரசினர் பள்ளியில் மாவட்டத்தின் சார்பில் அரசு விழா கொண்டாட மாவட்ட கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலரை கேட்டு கொள்வது, அடுத்த ஆண்டு முதல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகை தினத்தை உள்ளூர் விடுமுறை தினம் என அரசாணை வழங்க வேண்டும்.

    நவ்லாக் ஊராட்சி புளியங்கண்ணு கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட கலெக்டரை கோருவது, வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் கொரோனாவிற்கு முன்பு நிறுத்தப்பட்டு வந்த அனைத்து ெரயில்களும் மீண்டும் நின்று செல்ல தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் வலியுறுத்து வது, ராணிப்பேட்டையில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவ மனையை மத்திய அரசு நிதி உதவியுடன் உடனடியாக துவங்க கோருவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதை தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர்கள் அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படுவதில்லை எனவே பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள்,கட்டிட தொழிலாளர்கள், விவசாயிகள், வியா பாரிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முறையான கால நேரத்தில் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊராட்சி அலுவலர் உமாபதி நன்றி கூறினார்.

    ×