என் மலர்
ராணிப்பேட்டை
- போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
- பொதுமக்களின் புகார்களுக்கு விரைவில் தீர்வு காண்பதால் முடிவு
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம் போலீஸ் நிலையத்திற்க்கு பொதுமக்களின் புகார்களை 2 தினங்களில் விசாரணை செய்து தீர்வு காண்பது, பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் உரையாடுவது, போலீஸ் நிலையத்தை சுகாதாரமாக வைத்துள்ளது உள்ளிட்டவற்றை பாராட்டி ஐ.எஸ்.ஓ. சான்று வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஐ.எஸ்.ஓ. தணிக்கையாளர் பி.கார்த்திகேயன் பாணாவரம் போலீஸ் ஸ்டேஷனை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதியிடம் தரச்சான்றிதழை நேற்று வழங்கினார்.
கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிருஷ் அசோக், பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் பலர் உடனிருந்தனர்.
- ராணிப்பேட்டை கலெக்டர் அறிவுறுத்தல்
- வளர்ச்சி பணிகளுக்காக அகற்றப்படுகிறது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மரக்கன்றுகள் நட வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரக்கோணம் நெடுஞ்சாலை பணி, பனப்பாக்கம் தொழிற்பூங்காவிற்கு அணுகு சாலை அமைத்தல், தண்டலம்- பேரப்பாக்கம், தக்கோலம்-அரிகிலபாடி சாலை அகலப்படுத்தும் பணி, வாலாஜா நெடுஞ்சாலைக்குட்பட்ட பாகவெளி-முசிறி-அரிசனகாலனி சாலை அமைத்தல் ஆகிய வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள சாலை ஓரங்களில் உள்ள மரங்களை அகற்றிட பசுமைக் குழுவின் அனுமதி கோரி நடத்தப்பட்ட இந்த பசுமைக் குழுக் கூட்டத்தில் மரங்களை அகற்றிட ஒப்புதல் வழங்க ப்பட்டுள்ளது.
அனைத்து வகையான வளர்ச்சி பணிகள், கட்டிடப் பணிகளுக்காக அகற்றப்படும் மரங்களுக்கு மாறாக ஒரு மரத்திற்கு தலா 10 மரக் கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற ஆணையினை அனைத்து துறைச்சார்ந்த அலுவலர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
கண்காணிப்பு
சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, வனத்துறை ஆகிய துறைகள் மூலம் இப்பணிகள் நடைபெறுவதை கண்காணித்திட தமிழ்நாடு முதல் அமைச்சர் அலுவலகத்திலிருந்து மாவட்டத்திற்கு ஒரு பசுமை இயக்க கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, பசுமைக்குழு மூலம் மரங்களை அகற்றிட ஒப்புதல் வழங்கிய மேற்படி இடங்களில் அகற்றப்படும் மரங்களுக்கு தலா 10 மரக்கன்றுகள் நடப்படு வதை மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறையி னருடன் இணைந்து பசுமை இயக்க கண்காணிப்பு அலுவலர் கண்கா ணிப்பார்கள்.
ஆகவே இனிவரும் காலங்களில் மேற்படி பணிகளின் போது அகற்றப்படும் மரங்களுக்கு மாறாக துறைகளின் மூலம் நடப்படும் மரக்கன்றுகளை பசுமை இயக்க கண்காணிப்பு அலுவலர் கண்காணித்து அதன் அறிக்கையினை துறையின் மூலம் தமிழ்நாடு முதல் அமைச்சரின் பார்வைக்கு சமர்ப்பிக்க ப்பட்டு ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் உதவி வன பாதுகாப்பு அலுவலர் மணிவண்ணன், சப்-கலெக்டர் சத்திய பிரசாத், வனசரகர் சரவணன் பாபு, பசுமை இயக்க கண்காணிப்பு அலுவலர் ஏஞ்சலின் சூசை நாயகி, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உள்பட பசுமை இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- அஷ்டாபிஷேகம் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் சபரி நகரில் உள்ள நவசபரி ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
காலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. மேலும் அத்தப்பு கோலம் வரையப்பட்டு ஓணம் பூஜைகள் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும், சபரி சாஸ்தா சமிதி குழுவினரின் பஜனையும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு ஹரிவராசனம் பாடல் பாடி கோவில் நடை சாத்தப்பட்டது. இதில் ராணிப்பேட்டை சிப்காட் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
- இன்று காலை 4 மணிநேரம் ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
அரக்கோணம்:
சென்னை செண்ட்ரல் அரக்கோணம் இடையே தண்டவாள சீரமைப்பு பணிகள் இன்று நடந்தது.
இதனால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்கள்,எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் சென்னை செல்ல திட்டமிட்டு இருந்த பயணிகள் அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வந்த போது டிக்கெட் கொடுக்கும் இடத்தில் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என ஊழியர்கள் தெரிவித்தனர். முன் அறிவிப்பு இன்றி திடீரென அறிவித்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இதுபோன்று தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
இது குறித்து உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இன்று காலை 4 மணிநேரம் ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
- மின் கம்பங்கள் சாய்ந்தது
- மின் சப்ளை பாதிப்பால் மக்கள் அவதி
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.
மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் மின் சப்ளை நிறுத்தம் செய்யப்பட்டது. மழை நின்ற பின்னர் மின் சப்ளை தரப்பட்டது.
ஆனால் மழையுடன் பலத்த காற்று வீசியபோது போலீஸ் குடியிருப்பு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மரங்கள் முறிந்து மின்சார வயர்க ளின் மீது விழுந்ததால் சில மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.
இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் மின்சப்ளை பாதிக்கப்பட்ட தாக பொதுமக்கள் தெரிவித்தனர்
வெயிலின் தாக்கத்திற்கு பின்னர் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ராணிப்பேட்டை 24.6, பாலாறு அணைக்கட்டு 28, வாலாஜா 18.8, ஆற்காட்டு 24.8, கலவை 8.2 அளவு மழை பெய்துள்ளது.
- நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம்
- பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதால் நடவடிக்கை
ராணிப்பேட்டை:
வாலாஜா நகர மன்றத்தின் சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் கமலராகவன், ஆணையாளர் (பொறுப்பு) மங்கையர்க்கரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வாலாஜா நகரில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.
எனவே நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது
- பொதுமக்களை முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளியது.
கலவை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்க ஏராளமான பொதுமக்கள் வந்தனர்.
இதில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனால் கலெக்டரை தவிர பிற துறை அதிகாரிகள், பொதுமக்களின் குறைகளை கவனிக்காமல் செல்போனில் மூழ்கினர்.
குறிப்பாக மின்வாரிய அதிகாரி ஒருவர் தனது செல்போனில், சமூக வலைதளமான பேஸ்புக் பயன்படுத்திக் கொண்டிருந்தது பொதுமக்களை முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளியது.
அதே போல பல அதிகாரிகள் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணம் பொது மக்களிடையே உள்ள நிலையில், அதில் பங்கேற்க வரும் அரசு அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை கவனிக்காமல் செல்போனில் மூழ்குவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்
- போலீசார் மடக்கி பிடித்தனர்
அரக்கோணம்:
நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில், அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 6-வது பிளாட்பாரத்திற்கு வந்தது.
அப்போது பயணிகள் சிலர் இறங்கினர். சிலர் ரெயிலில் ஏறியதும் சிறிது நேரம் கழித்து ரெயில் புறப்பட்டது.
அந்த நேரத்தில் ரெயிலின் படியில் நின்று கொண்டிருந்த கன்னியாகுமரியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் இருந்து செல்போனை பிளாட்பாரத்தில் இருந்த ஒரு வாலிபர் பறித்து கொண்டு ஓடினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் கூச்சலிட்டார். உடனடியாக சக பயணிகள் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான், ரெயில்வே இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம், பங்காருபேட்டையைச் சேர்ந்த சக்திவேல் (வயது 24) என்பது தெரியவந்தது.
இவர் ஏற்கனவே பலமுறை ரெயிலில் பயணிகளிடம் செல்போன் பறித்தது தெரியவந்தது. மேலும், இவர் மீது பங்கா ருபேட்டை, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து, அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.20,000 மதிப்பிலான செல்போனை பறிமுதல் செய்தனர்.
- வருகிற 3-ந் தேதி நடக்கிறது
- 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு அருகே கிளாம்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வர சித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை)காலை நடைபெறுகிறது.
பின்னர் மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டு அறுசுவை அன்னதானம் நடைபெறும்.
இதனையடுத்து இரவு 7 மணிக்கு சாமி ஊர்வலம் நடைபெறும்.முன்னதாக செப்டம்பர் 2-ந் தேதி (சனிக்கிழமை)காலை மகா கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெறும்.
இரவு முத்து மாரியம்மன் நாடக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கிளாம்பாடி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
- போலீசார் கடும் எச்சரிக்கை
- ஆவணங்களை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தனியார் திருமண மண்டபத்தின் உரிமையாளர்களுக்கு குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுப்பதோடு அதனை குறைப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி திருமணம் நடத்த மண்டபதிற்கு வரும் பெற்றோர்களிடம் மணப்பெண்ணிற்கு 18-வயது பூர்த்தி அடைந்துள்ளதா என்பதை கேட்டறிய வேண்டும்.
மேலும் மண்டப உரிமையாளர்களாகிய நீங்கள் பெண்ணின் வயதை உறுதி செய்ய கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும்.
அவ்வாறு சரிபார்க்காமல் குழந்தை திருமணம் ஏதாவது நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே நீங்களும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மண்டப உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- ரெயில்வே போலீசார் விசாரணை
அரக்கோணம்:
சென்னை சென்டிரலில் இருந்து மங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் - செஞ்சி பனப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் பயணம் செய்ததிருப்பூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 28) என்பவர் ரெயில் பெட்டியில் இருந்து தவறி விழுந்தார்.
இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், செந்தில் குமார் தலைமையிலான போலீசார், கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்து இருந்த நந்தகுமாரை மீட்டு சிகிச்சைக் காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மீன் பிடிக்க சென்றபோது விபரீதம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது சலாவுதின் (வயது 43). திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன், 1மகள் உள்ளனர். முகமது சலாவுதின் அரக்கோணம் பாப்பாங்குளம் பகுதியில் தங்கி பழைய இரும்பு பொருள் வாங்கும் கடையில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் சலாவுதின் நேற்று அதி காலை சுமார் 5 மணியளவில் மங்கம்மாபேட்டை பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது திடீரென சலாவுதின் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்து விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஏரியில் இருந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






