என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் இருந்து 3,500 பேர் பங்கேற்க அனுமதி.
    • இலங்கையில் இருந்து 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அனுமதி.

    ராமேசுவரம் :

    இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்து இருக்கிறது. இந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் பிரசித்தி பெற்றதாகும்.

    1974-ம் ஆண்டு வரை இந்தியா வசம் இருந்த கச்சத்தீவு, பின்னர் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது.

    கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் ஆண்டுதோறும் அங்குள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில், இருநாட்டு மக்களும் கலந்துகொள்ளலாம் என, அது சம்பந்தமான ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.

    ஆண்டுதோறும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்திலோ நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா மார்ச் 3 மற்றும் 4-ந்தேதிகளில் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான மார்ச் 3-ந்தேதி மாலையில், ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடி ஏற்றப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ஆலயத்தை சுற்றி 11 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி நடைபெற்று, சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். இரவில் தேர் பவனி நடைபெற்று முதல் நாள் திருவிழா நிறைவுபெறும்.

    2-வது நாளான மார்ச் 4-ந்தேதி காலை 7 மணி அளவில் 2-வது நாள் திருவிழா திருப்பலி பிரார்த்தனை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் இருநாட்டு பங்கு தந்தையர்களும், இருநாட்டு மக்களும் கலந்து கொள்கிறார்கள். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெறும் இந்த திருவிழா திருப்பலிக்கு பின்னர் கொடி இறக்கம் நடைபெற்று திருவிழா நிறைவடைகிறது.

    கச்சத்தீவில் இந்த ஆண்டு நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் குறித்து நேற்று இலங்கை யாழ்ப்பாணத்தில் கலெக்டர் சிவபாதசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நெடுந்தீவு பங்குத்தந்தை, கடற்படை அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில், இந்த ஆண்டு கச்சத்தீவு ஆலய திருவிழாவில் தமிழகத்தில் இருந்து 3,500 பேரும் இலங்கையில் இருந்து 5 ஆயிரம் பேரும் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு திருவிழாவில் இந்தியாவில் இருந்து 100-க்கும் குறைவானவர்களும், இலங்கையில் இருந்து 300 பேரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • குடியரசு தினத்தை முன்னிட்டு த.மு.மு.க. சார்பில் ரூ. 52 ஆயிரத்தை கல்வி, மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
    • ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி பராமரிப்புக்கு நிதியாக ரூ. 20 ஆயிரம் வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் த.மு.மு.க. தலைமை அலுவலகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு த.மு.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் தேசிய கொடியை ஏற்றி கல்வி மற்றும் மருத்துவ உதவியாக ரூ. 52 ஆயிரம் வழங்கினார்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூர் சாதிக் அலி என்பவருக்கு உயர் கல்வி உதவியாக ரூபாய் 12 ஆயிரம், மதுரை மாவட்ட த.மு.மு.க. நிர்வாகிகள் பரிந்துரை அடிப்படையில் மதுரையில வசிக்கும் பாத்திமா என்ற பெண்ணிற்கு ரூ. 10 ஆயிரம், கன்னியாகுமரி மாவட்ட த.மு.மு.க. நிர்வாகிகள் பரிந்துரை அடிப்படையில் விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேருக்கு மருத்துவ உதவியாக ரூ. 10 ஆயிரம், ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி பராமரிப்புக்கு நிதியாக ரூ. 20 ஆயிரம் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க.மாவட்டத் தலைவர் பிரிமியர் இப்ராஹிம், மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம், 15-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காதர் பிச்சை, ம.ம.க. மாவட்ட துணைச் செயலாளர் ஜாஹிர் பாபு, த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர் சுலைமான், வர்த்தக அணி காஜா சுகுபுதீன், மாவட்ட துணை செயலாளர் அப்துல் சாகுல் ஹமீது, தென் மண்டல செயலாளர் அப்துல் வாஜித், சமூக நீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான்,மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளர் தாஜுதீன், த.மு.மு.க நகர் செயலாளர் முகம்மது தமிம், ம.ம.க. நகர் செயலாளர் அப்பாஸ்,நகர் பொருளாளர் மைதீன் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
    • 11-வது வகுப்பு மாணவி சம்சூன் பசிகா நன்றி கூறினார்.

    கீழக்கரை

    கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் தலைமை வகித்தார். கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து நடைபெற்ற குடியரசு தின விழா தொடக்க நிகழ்ச்சியில் 7-வது வகுப்பு மாணவி முஷ்ரிபா, 6-வது வகுப்பு மாணவிகள் அகமது அலினா, ஷானா ஹயா ஆகியோர் கிராஅத் ஒதினர். 5-வது வகுப்பு மாணவர் முகம்மது பைஜான் வரவேற்றார். பிளஸ்-2 (மெட்ரிக்) மாணவி சித்தி ஹனூனா, 7-வது வகுப்பு (உயர்நிலைப்பள்ளி) மாணவி எகிதா, 5-வது வகுப்பு (தொடக்கப்பள்ளி) மாணவி அல்சனா ஆகியோர் குடியரசு தின உரையாற்றினர். மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மாணவர்களின் உடல் வலிமை, மன உறுதியை ஏற்படுத்தும் வகையில் பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் விழாவில் 5 ஓடுகளை அடுக்கி வைத்து அதன் மீது தீப்பற்ற வைத்து ஒரே தடவையில் அடித்து சிதறடித்து் பார்வை யாளர் களது பாராட்டை பெற்றார்.

    ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூத்த மனநல மருத்துவர் பெரியார் லெனின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி குடியரசு தின சிறப்புரையாற்றினார்.சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது பெற்ற இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் தலைவர் வழக்கறிஞர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிமிற்கு பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ- மாணவிகள் சார்பில் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 11-வது வகுப்பு மாணவி சம்சூன் பசிகா நன்றி கூறினார்.

    பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் ஆலோசனையின் படி இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முஸ்தபா, இஸ்லாமியா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி மற்றும் நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.

    • விவசாயிகளின் பங்களிப்புடன் நெல்லில் ரகம் தேர்வு செய்யப்பட்டது.
    • இதற்கான ஏற்பாடுகளை பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பண்ணை அலுவலர்கள் மேகராசு, காமராசு, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, அஞ்சலி ஆகியோர் செய்திருந்தனர்.

    பரமக்குடி

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் பங்களிப்போடு நெல்லில் ரகங்களைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியர் முத்துராமு ரகங்களின் தேர்வில் விவசாயிகளின் பங்கு குறித்து எடுத்துரைத்தார். பரமக்குடி உதவி வேளாண்மை இயக்குநர் மனோகரன், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏற்ற நேரடி நெல் விதைப்பு முறைக்குத் தகுந்த நெல் ரகங்களை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். விவசாயிகள் ரகங்கள் விளைவிக்கப்பட்ட வயலுக்குச் சென்று தங்களுக்கு பிடித்த ரகங்களை வரிசையிட்டு கொடுக்கப்பட்ட சீட்டுகளை அந்தந்த ரகத்திற்கு பக்கத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் போட்டு தேர்வு செய்தனர். இதில் பரமக்குடி, நயினார் கோவில் வட்டார முன்னோடி நெல் விவசாயிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பண்ணை அலுவலர்கள் மேகராசு, காமராசு, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, அஞ்சலி ஆகியோர் செய்திருந்தனர்.

    • மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சியில் 74-வது குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, கோரி க்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளை அழைத்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரை வழங்கினார். தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி பேசினார். கோரவள்ளியில் கலை யரங்கம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளி த்தார்.

    மண்டபம் ஒன்றிய ஆணையாளர் சண்முக நாதன், கோரவள்ளி ஊராட்சி தலைவர் கோகிலவாணி சிவஞானம் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஜே.பிரவின் ஏற்பாட்டில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.விற்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ரெட்டையூரணியில் புதிய கலையரங்கத்தை திறந்து வைத்து கட்சி கொடி ஏற்றினார்.

    காரான், வழுதூர், வாலாந்தரவை, சாத்தான் குளம் ஆகிய இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் முன்னிலையில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். அப்போது 500-க்கும் அதிகமான பொதுமக்களுக்கு வேட்டி,சேலை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர்கான், மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர், வாலாந்தரவை ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜீவா சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வாலிபர் மற்றும் பாஸ்போர்ட் ஏஜெண்ட் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • தலை மறைவான ஜகாங்கீரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கை கொழும்பு மரதானா பகுதியை சேர்ந்த துவான் சபைதீன் (வயது 45) என்பவரை ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய சோதனையில் வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, ஆதார்கார்டு ஆகியவை இருந்ததை கண்டு அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரின் பாஸ்போர்ட்டை சோதனையிட்டபோது அவர் சட்டவிரோதமாக உரிய காலத்திற்கு பிறகு தங்கியிருப்பதுடன் மேற்கண்ட ஆவணங்களை பெற்றுள்ளதும் தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீ சார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாமனாரின் முகவரியை பயன்படுத்தி பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். இந்த நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதால் பழைய பாஸ்போர்ட்டை பயன் படுத்த முடியாததால் புதிய பாஸ்போர்ட் பெற எண்ணி உள்ளார்.

    இதற்காக பெரிய பட்டி னத்தை சேர்ந்த ஜகாங்கீர் என்பவரை அணுகினார். அவர் ஆவணங்களை பெற்றுக்கொண்டு ராமநாதபுரம் அருகே பனைக் குளம் மேற்குத்தெருவை சேர்ந்த டிராவல் ஏஜென்சி நடத்தும் அன்வர்ராஜா(45) என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்து தூத்துக்குடி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்று கொடுத்துள்ளார். இதனை வைத்து அவர் குடும்பத்துடன் துபாய் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கியூ பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பு ல்லாணி போலீசார் வழக்கு பதிவு செய்து துவான் சபைதீனை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார் பனைக்குளத்தில் டிராவல் ஏஜென்சி நடத்தும் பனைக்குளத்தை சேர்ந்த அன்வர் ராஜாவை பிடித்து வந்து விசாரித்தனர்.

    இதையடுத்து துவான் சபைதீன் (வயது 45), பனைக்குளம் அன்வர் ராஜா(45) ஆகியோரை போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர். தலை மறைவான ஜகாங்கீரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • காரைக்குடியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
    • முடிவில் நகர தலைவர் சன் சுப்பையா நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் நகர தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கினார். நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்புரையாற்றினார். தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் துணை வேந்தருமான சபாபதி மோகன், தலைமை கழக பேச்சாளர் முகவை ராமர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    இதில் மாநில மாணவரணி துணை செயலாளர் பூர்ணசங்கீதா, தேவகோட்டை நகர செயலாளர் பாலமுருகன், கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர்மன்ற உறுப்பினர்கள் மைக்கேல், கார்த்திகேயன், சித்திக், ஹேமலதாசெந்தில், தனம்சிங்கமுத்து, பூமிநாதன், நாச்சம்மை, நகர துணை செயலாளர் கண்ணன், வட்ட செயலாளர்கள் பாண்டி, ரமேஷ், விஜயகுமார், முகமதுகனி, மாவட்ட பிரதிநிதி சேவியர் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் சன் சுப்பையா நன்றி கூறினார்.

    • சிவகங்கையில் குடியரசு தின விழாவில் தேசியக்கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பள்ளி மாணவ, மாணவி்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக விளையாட்டு மைதானத்தில், இன்று குடியரசு தினவிழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்ததுடன், காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக 56 காவலர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கினார்.

    விழாவில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 057 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்த்து றையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலும், தொழில் வணிகத்துறையின் (மாவட்ட தொழில் மையம்) சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 91 ஆயிரத்து 576 மதிப்பீட்டிலும் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 78 ஆயிரத்து 133 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும், 59 காவல் துறையைச் சேர்ந்த காவலர்களுக்கும், பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 388 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர், பள்ளி மாணவ, மாணவி்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

    விழாவில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.
    • இதில் மாவட்ட கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்க விட்டு, குடியரசின் பெருமையை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையை சேர்ந்த 61 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம், 63 பேருக்கு சான்றிதழ்கள், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பொதுச் சேவையில் சிறந்து விளங்கிய தன்னார்வலர்கள் உட்பட மொத்தம் 190 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி னார்.

    வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், வாழ்ந்து காட்டு வோம் திட்டம், மீன்வளத்துறை, தாட்கோ, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை துறை களின் சார்பில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, விலை யில்லா தையல் எந்திரங்கள், சலவை பெட்டிகள், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை என மொத்தம் 48 பயனாளி களுக்கு ரூ. 96 லட்சத்து88 ஆயிரத்து 986 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    விழாவில், ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை) பிரதீப்குமார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன்,வன உயிரின காப்பாளர் ஜெகதீஸ் பகன் சுதாகர் உள்பட போலீஸ் அதிகாரிகள், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தடுப்பு கம்பிகளை அமைத்து பிரகாரத்தை மறைத்து வைத்துள்ளனர்.
    • பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாகவும் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும் காசிக்கு நிகராகவும் கருதப்படுவது ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    கடந்த சில மாதங்களாகவே பக்தர்கள் பல சன்னதிகளுக்கு சென்று நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாத அளவிற்கு கோவிலின் பிரகாரங்களில் பல இடங்களில் தடுப்பு கம்பிகள் வைத்து பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே தற்போது பக்தர்கள் கிழக்கு வாசல் சாமி சன்னதி வழியாக செல்ல கோவில் நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.100 மற்றும் ரூ.200 சிறப்பு தரிசன டிக்கெட்டில் செல்லும் பக்தர்கள் மட்டுமே கிழக்கு வாசலின் சாமி சன்னதி வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

    இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சாமி சன்னதி வழியாக அனுமதிக்கப்படாமல் அம்மன் சன்னதி வாசல் வழியாக தடுப்பு கம்பிகள் அமைத்து அதன் வழியாக வரிசையில் செல்கிறார்கள். இதனால் கூடுதல் நேரம் கோவிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    மூன்றாம் பிரகாரம், அம்மன் சன்னதி பிரகாரம், சாமி சன்னதி பிரகாரம் வரை அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் வழியாக முதல் பிரகாரம் சென்று அதன் பின்னர் இலவச தரிசன பாதையில் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    பொதுவாக ஆகம விதிமுறைபடி சிவன் கோவிலில் முதலில் சாமியை தரிசனம் செய்து விட்டு தான் பக்தர்கள் அம்பாளை தரிசிக்க வேண்டும். அதன்பிறகு அம்பாள் சன்னதி வாசல் வழியாகவே வெளியே வரவேண்டும் என்பது ஆகம விதிமுறை.

    ஆனால் ராமேசுவரம் கோவிலிலோ ஆகம விதிமுறைகளை மீறி பக்தர்களை சாமி சன்னதி வாசல் வழியாக அனுமதிக்காமல் அம்பாள் சன்னதி வாசல் வழியாகவே கோவில் நிர்வாகம் அனுமதித்து வருவதோடு மட்டுமல்லாமல் மூன்றாம் பிரகாரத்தின் குறுக்கே மைய பகுதி மற்றும் அம்மன் சன்னதி உள்பகுதி வாசல் அருகே என கோவிலின் உள்ளே பல இடங்களில் தடுப்பு கம்பிகளை அமைத்து பிரகாரத்தையும் மறைத்து வைத்துள்ளனர்.

    இது மட்டுமில்லாமல் பக்தர்கள் காசி விஸ்வநாதர், முருகன் சன்னதி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளுக்கும் செல்ல முடியாத அளவிற்கு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாமல் கஷ்டப்படுவதோடு மட்டுமல்லாமல் கோவிலின் சாமி சன்னதி பிரகாரம் மற்றும் மூன்றாம் பிரகாரத்தையும் சுற்றிவர முடியாமலும் கஷ்டப்படுகின்றனர். கோவில் நிர்வாகத்தினரின் இந்த செயல் பக்தர்களை வேதனைக்குள்ளாக்கிறது. எனவே தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • விவசாயிகள் தங்க ளது கால்நடைகள் கட்டப் பட்டிருக்கும் கொட்டகை மற்றும் தரைத்தளத்தில் கொசுவை ஒழிக்க கொசு மருந்தை அடிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    இந்தியாவில் வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் வேலூர், விழுப்பரம், திருவண்ணா மலை, தருமபுரி, ஈரோடு, சேலம், திருச்சி போன்ற மாவட்டங்களில் கால்நடை களுக்கு தோல் கழலை நோய் பரவி வருகிறது.

    இந்நோய் பரவாமல் தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறை மூலம் அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் உள்ள கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தொடர்பான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இந்நோய் கூலக்ஸ் என்ற கொசு கடிப்பதன் மூலமும் கடிக்கும் பூச்சிகள் மற்றும் உண்ணிகள் மூலம் கால்நடைகளுக்கு பரவும் ஒரு தொற்று நோயாகும். எனவே விவசாயிகள் தங்க ளது கால்நடைகள் கட்டப் பட்டிருக்கும் கொட்டகை மற்றும் தரைத்தளத்தில் கொசுவை ஒழிக்க கொசு மருந்தை அடிக்க வேண்டும்.

    கண்ணில் நீர் வடிதல், சளி ஒழுகுதல், கடுமையான காய்ச்சல், உடல் முழுவதும் வீக்கம் மற்றும் உருண்டையான கட்டிகள் உடைந்து சீழ் வெளியேற்றம், கால்களில் வீக்கம், மாடுகள் சோர்வாக காணப்படுவது போன்றவை தோல் கழலை நோயின் அறிகுறிகள் ஆகும்.

    நோய் தாக்கம் ஏற்பட்டு உள்ள கால்நடைகளுக்கு உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்தவர்களை அணுகி உரிய ஆலோசனை பெற்று நோய்க் கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தங்கள் கிராமத்தில் நடக்கும் தோல் கழலை நோய் தொடர்பான முகாம்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்

    • ராமநாதபுரம் நகர் மன்ற அவசர கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடந்தது.
    • மேலும் அனைத்து கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர் மன்ற தலைவர் கார்மேகம் கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், கமிஷனர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி அலுவலர் இசக்கி யம்மாள் அவசர தீர்மானங்களை வாசித்தார். ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வராக தங்கள் பகுதியில் உள்ள குறைபாடுகள் மற்றும் நகராட்சி அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து நகர்மன்ற தலைவர் கார் மேகத்திடம் எடுத்துரைத்த னர். அவர் சம்பந்தப்பட்ட அலுவலர் களிடம் உடனடி யாக குறைபாடு களை சரி செய்ய வேண்டுமாய் அறிவுறுத்தினார். மேலும் அனைத்து கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர் மன்ற தலைவர் கார்மேகம் கூறினார்.

    ×