என் மலர்
ராமநாதபுரம்
- சாலையோர பாதுகாப்பு பணியில் நிற்கும் போலீசாருக்கு தற்காலிக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
- போலீசார் அசராமல் பணி செய்ய பயனுள்ளதாக அமைந்தது.
ராமநாதபுரம்
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. சாலையோரம் பாது காப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் முதன் முறையாக ராமநாதபுரத்தில் தற்காலிக நிழற்குடை அமைத்து கொடுத்து அசத்தி யுள்ளனர்.
நீண்ட தூரம் மரமோ, நிழற்குடையோ இல்லாத பகுதிகளில் சாலை யோரம் நிற்கும் போலீசாருக்கு மடக்கும் தன்மை யுடன் கூடிய நிழற்குடை அமைத்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு பணியில் போலீசார் அசராமல் பணி செய்ய பயனுள்ளதாக அமைந்தது. ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் இந்த முன்னெடுப்பு சமூக ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறுகையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ேபாலீசாருக்கு 250 பிரத்யேக சுருக்கி மடக்கும் குடை வாங்கப்பட்டுள்ளது. கவர்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு 120 குடைகள் வழங்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்றார்.
- ராமநாதபுரத்தில் கல்வித்துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்பட வேண்டும்.
- ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கி ணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையின் தலைமை அலுவலகமான முதன்மை கல்வி அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக அரண்ம னை பகுதியில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது.
3 ஆண்டுகளுக்கு முன்பு முதன்மை கல்வி அலுவல கத்தில் உள்ள ஆவண காப்பக அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல ஆவணங்கள் எரிந்து சாம்ப லானது. தற்போது அந்த அறை சீரமைக்கப்பட்டு மீண்டும் முதன்மைக்கல்வி அலுவலகம் அந்த கட்டி டத்திலேயே இயங்கி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையின் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவல கம் ஓம் சக்தி நகரில் உள்ள ஒரு அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலகம் (இடைநிலைக்கல்வி) பழைய கலெக்டர் அலுவலக பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதேபோல் கல்வித்து றையின் துணை திட்டமான ஆர்.எம்.எஸ்.ஏ. அலுவலகம், மாவட்ட உடற்கல்வி இயக்கு நர் அலுவலம், தனியார் மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் ஆகியவை ராமநாதபுரத்தில் தனித்தனியாக இயங்கி வருகின்றன. மேலும் ஜெ.ஆர்.சி., பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம், சாலை பாதுகாப்பு மன்றம், தொன்மை பாதுகாப்பு மன்றம் போன்ற அலுவல கங்களும் ராமநாதபுரத்தில் இயங்கி வருகின்றன.
எனவே ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையின் பெரும்பாலான செயல்பாடு களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தையே சார்ந்து உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் ராமநாதபுரத்தில் கல்வித்துறை அலுவலகங் களை ஒரே இடத்தில் அமைத்து செயல்பட செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
- கவர்னர் ரவி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பரமக்குடி யில் உள்ள தியாகி இமானு வேல்சேகரன் நினைவிடத் தில் மலர் அஞ்சலி செலுத்த வருகை தந்தார். அவரை தேவேந்திர பண்பாட்டுக் கழக தலைவர் பரம்பை பாலா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதனை தொடர்ந்து இமானுவேல் சேகரின் மகள் சுந்தரி பிரபா ராணி பேரன்கள் ரமேஷ், கோம கன், சக்கரவர்த்தி, சந்துரு, பேத்தி லதா ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.
இதனை தொடர்ந்து கவர்னர் ரவி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார். பின்னர் தேவேந்திர பண்பாட்டுக் கழகம், இமானுவேல் சேகரன் குடும்பத்தினர் சார்பாக தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இருந்து வெளி யேற்ற வேண்டும், இமானு வேல் சேகரன் நினை விடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும், அவரது பிறந்தநாளை அரசு விழா வாக அறிவிக்க வேண்டும், ஓட்டப்பாலம் ரவுண்டானா வில் இமானுவேல் சேகரன் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து முதுகுளத்தூர் தாலுகா புல்வாய்குளம் கிராமம் சார்பாகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட கவுரவ விரிவுரையாளர்கள் சார்பாக தமிழகத்தில் பணி யாற்றும் 6000-க்கும் மேற்பட்ட கவுரவ விரி வுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேவேந்திர பண்பாட்டு கழக செயலாளர் புண்ணிய மூர்த்தி, பொருளாளர் முருகேசன், பா.ஜனதா நிர்வாகி குமார், வழக்கறிஞர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வலையர்வாடி கடல்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 115 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- 115 கிலோ கடல் அட்டை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, வேதாளை, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கடல் அட்டை, தங்கம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.
இதை தடுக்க கடலோர காவல்படை போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு மண்டபம் அருகே உள்ள வலையர்வாடி பகுதியில் இருந்து கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக மண்டபம் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்தப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வலையர்வாடி கடல்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 115 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். கடல் அட்டை இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டதா? அதனை பதுக்கி வைத்தவர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 115 கிலோ கடல் அட்டை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 53 லட்சம் ஆகும்.
இந்தநிலையில் மண்டபம் அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்தனர். உடனே அதில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பினர். தொடர்ந்து போலீசார் சோதனையிட்டபோது 10 கிலோ கடல் அட்டை கடத்தியது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- சிவன் கோவில்களில் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது.
- அபிஷேக பால், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அன்னபூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், தயிர், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள், அரிசி மாவு, அபிஷேகப்பொடிகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் மற்றும் அபிஷேக பால், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதே போல் தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவில், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில், ஓரியூர் சேயுமானவர், மட்டுவார் குழலி அம்மன், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் கோவில், தளிர் மருங்கூர் சிவன் கோவில் ஆகிய பகுதிகளிலும் சோமவார பிரதோசத்தை ஒட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பழ கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது.
- மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளையில் கிழக்கு கடற்கரை சாலையில் பன்னீர் என்பவருடைய பழக்கடை கிட்டங்கி உள்ளது. அங்கு நேற்று திடீரென தீப்பற்றி மளமளவென கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது. இதில் பழம் அடுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகள் எரிந்து சாம்பலாயின. அருகில் டிராஸ்பார்மர் இருந்ததால் பெரும் விபத்தை தவிர்க்கும் வகையில் மின் இணைப்பு துண்டிக்கபபட்டது.
மஞ்சள் கரச்சான் ஊரணியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பொதுமக்கள் தீயை அணைத்தனர். திருவாடானையில் இருந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
- “Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தி லும் வேலைநாடும் இளை ஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ள லாம். இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப் படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெறலாம்.
முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வேலைநாடுநர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற
21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறு வதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலி க்கப்படும். தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் "Tamil Nadu Private Job Portal" (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழ ங்கப்ப டுகிறது. இந்த இணைய தளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவன ங்களும் வேலை தேடும் இளை ஞர்களும் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளிவாசல்களில் புனித இரவு தொழுகை நடந்தது.
- திரளானோர் பங்கேற்றனர்.
கீழக்கரை
ரம்ஜான் மாதத்தில் லைலத்துல் கத்ரு எனப்படும் புனித இரவில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து இரவு முழுவதும் தூங்காமல் பள்ளிவாசல்களில் திருக்குரான் ஓதி சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். இதன்படி நேற்று புனித இரவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி , பெரியபட்டணம், பனைக்குளம், திருப் புல்லாணி உள்பட மாவட் டத்தின் பல்வேறு பகுதி களிலும் உள்ள ஜும்மா பள்ளி வாசல்களில் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து நறுமணம் பூசி தொழுகை மற்றும் சிறப்பு துஆவில் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின் உலக நன்மைக்காகவும், மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும், திருக்குர்ஆன் ஓதி சிறப்பு துஆ செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று இரவு பள்ளிவாசல்களில் விடிய விடிய இஸ்லாமிய மக்கள் திருக்குர்ஆன் ஓதி இறைவனை தொழுதனர்.
அனைத்து ஊர்களிலும் ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதிகாலை அனைத்து பள்ளி வாசல் களிலும் நோன்பு நோற்பதற்காக சகர் உணவு வழங்கப் பட்டது. பெண்களுக்கான தொழுகை மதரசாக்களிலும், வீடுகளிலும் நடந்தது.
- இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர், அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர்.
- இலங்கையை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.
ராமேசுவரம்:
இலங்கையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.
இதன் காரணமாக அங்கு நடுத்தர மற்றும் ஏழை-எளிய குடும்பத்தினர் வாழ வழியின்றி தவித்தனர். இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர், அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர்.
அவர்கள் அனைவரும் ராமேசுவரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.
இலங்கை வவுனியா தேக்கன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சாந்த குமார் (வயது33). இவர் தனது மனைவி ரூப லட்சுமி(26), மகன் ஹேம் சரண்(7), மகள் யோசனா(4), மற்றொரு மகன் தருஷான்(2) ஆகியோருடன் நேற்று இரவு இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு பிளாஸ்டிக் படகு ஒன்றில் புறப்பட்டு வந்துள்ளார்.
அவர்களை படகில் அழைத்து வந்த நபர், தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதியில் நள்ளிரவில் இறக்கி விட்டு சென்று விட்டார். அவர்கள் அங்கு தவித்தபடி நின்றதை இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த வழியாக சென்ற மீனவர்கள் பார்த்தனர். அவர்கள் அதுகுறித்து ராமேசுவரம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அரிச்சல் முனை பகுதிக்கு சென்று அங்கு தவித்தபடி நின்ற சாந்தகுமார், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு கடற்கரைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் 5 பேரும் மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டனர்.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்தது குறித்து சாந்தகுமார் மற்றும் அவரது மனைவியிடம் கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தினர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அங்கு வாழ வழியின்றி தவித்ததன் காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர். மேலும் தங்களை படகில் அழைத்து வந்தவர்கள் ரூ.1லட்சம் வாங்கியதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு, அங்கிருந்து ராமேசுவரம் தனுஷ் கோடிக்கு இதுவரை 237 பேர் அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கோடி மதிப்பில் செயல்படுத்தி உள்ளது.
- சாலை மறியல் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுக்கு சென்ற மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
சாயல்குடி:
வறட்சி மாவட்டமாக அறியப்படும் ராமநாதபுரத்தில் பெரும்பாலான கிராமங்களில் தற்போது வரை குடிநீர் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக நீண்ட தூரம் அலைய வேண்டிய நிலை உள்ளது.
குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கோடி மதிப்பில் செயல்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு குழாய் அமைத்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் ஓரளவு தண்ணீர் பிரச்சினை குறைந்துள்ளது.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சில கிராமங்களில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வரை அங்கு குடிநீர் சப்ளை நடைபெறவில்லை.
இதனால் அந்த கிராம மக்கள் கூட்டுக் குடிநீர் எப்போது வரும் என்ற ஏக்கத்துடன் உள்ளனர்.
சாயல்குடி அருகே உள்ள ஒப்பிலான் ஊராட்சி எம்.ஆர். பட்டிணம் கிராமத்திலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் புதிதாக குழாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால் மாதங்கள் பல ஆகியும் தற்போது வரை இந்த திட்டத்தை செயல் படுத்தவில்லை.
இந்த நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் எம்.ஆர்.பட்டிணம் கிராமத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு குடத்து தண்ணீருக்காக பல கிலோமீட்டர் செல்லும் நிலை உள்ளது. மேலும் அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடமும் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை.
இதை கண்டித்தும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இன்று காலை எம்.ஆர்.பட்டிணத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் ஒப்பிலான்-வாலிநோக்கம் சாலையில் காலி குடங்களுடன் திரண்டனர்.
பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் 4 மணிநேரம் நீடித்தது. இதன் காரணமாக ஒப்பிலான்-வாலிநோக்கம் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. சாலை மறியல் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுக்கு சென்ற மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
- இயற்கை வேளாண்மையில் விவசாயம் செய்வது குறித்து விவசாயி தரணி முருகேசனிடம் கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டறிந்தார்.
- கவர்னர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ராமநாதபுரம்:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக நேற்று ராமநாதபுரம் வந்தார். அவர் நேற்று மண்டபம் மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்று, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளுடனும் கலந்துரையாடினார்.
அதன்பிறகு உச்சிப்புளி நாகாச்சி பகுதியில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்பு மாலையில் தேவிப்பட்டினம் நவாஷண கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் கடலுக்குள் உள்ள நவகிரகத்தை சுற்றி வந்து தரிசனம் செய்தார். பின்பு கவர்னர் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கினார்.
கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை ராமநாதபுரம் அருகே எட்டிவயல் கிராமத்தில் உள்ள தரணி முருகேசன் என்பவரின் இயற்கை வேளாண் பண்ணைக்கு சென்றார். அங்கு இயற்கை வேளாண் மையை பயன்படுத்தி பயிரிடப்பட்டிருந்த பயிர்களை பார்வையிட்டார்.
இயற்கை வேளாண்மையில் விவசாயம் செய்வது குறித்து விவசாயி தரணி முருகேசனிடம் கேட்டறிந்தார். இயற்கை வேளாண் பண்ணையில் 3 மணி நேரம் இருந்த கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் திருஉத்திரகோசமங்கையில் உள்ள மங்கலநாத சுவாமி கோவிலுக்கு சென்றார்.
அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்பு கவர்னர் ஆர்.என்.ரவி கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். அதனை முடித்து கொண்டு கவர்னர் மீண்டும் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.
அங்கு மதிய உணவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்கும் கவர்னர், பிற்பகல் 3 மணியளவில் கார் மூலம் பரமக்குடி சென்று இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்பு அங்கிருந்து கமுதி அருகே உள்ள பசும்பொன்னுக்கு சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
அதனை முடித்து கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி கார் மூலமாக மாலை 6 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரு மாவட்டங்களிலும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- கவர்னர் வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- கவர்னர் வருகையை எதிர்த்து ராமநாதபுரத்தில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
ராமநாதபுரம்:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) மற்றும் நாளை (19-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் கவர்னரை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் காலோன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்பு கவர்னர் அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.
ராமநாதபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற கவர்னரை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்பு சிறிது நேர ஓய்வுக்கு பிறகு கார் மூலம் ராமேசுவரம் புறப்பட்டு சென்றார்.
அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்ற அவர், மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். மேலும் அங்குள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார். பின்பு மீண்டும் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.
இதையடுத்து மாலை 4.30 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மேல்தேவிபட்டிணத்தில் உள்ள நவபாஷாண கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு தேவிப்பட்டிணம் செல்லும் கவர்னர், மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். அதனை முடிந்து கொண்டு ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார்.
இரவில் அங்கு தங்கி ஓய்வெடுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (19-ந் தேதி) காலை 7 மணியளவில் சத்திரக்குடி அருகே உள்ள எட்டிவயல் கிராமத்திற்கு சென்று தரணி முருகேசன் என்பவரின் இயற்கை வேளாண்மை பண்ணையை பார்வையிடுகிறார்.
பின்பு அங்கிருந்து புறப்பட்டு காலை 10 மணியளவில் திருஉத்தர கோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதனை முடித்து கொண்டு மீண்டும் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு கவர்னர் திரும்புகிறார்.
அங்கு மதிய உணவை முடிக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி, பிற்பகல் 3 மணியளவில் கார் மூலம் பரமக்குடி செல்கிறார். அங்கு இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்பு அங்கிருந்து கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.
அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்து புறப்பட்டு கார் மூலமாக மாலை 6 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கவர்னர் வருகையை எதிர்த்து ராமநாதபுரத்தில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கவர்னர் பயணிக்கக் கூடிய சாலைகள், அவர் செல்லக்கூடிய இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






