என் மலர்
ராமநாதபுரம்
- தி.மு.க.வின் கரங்களை பலப்படுத்துவோம்.
- எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் பேசினார்.
ராமநாதபுரம்
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சியின் 15-வது ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் பெரியபட்டினத்தில் அந்த கட்சியின் சார்பில் மாவட்டத்தலைவர் ரியாஸ்கான் கட்சிக்கொடியை ஏற்றி பேசினார்.
கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, கட்சிக்கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாவட்ட, தொகுதி, நகர் நிர்வாகிகள் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இதுகுறித்து மாவட்டத்தலைவர் ரியாஸ்கான் கூறுகையில், தற்போது மோடி தலைமையிலான அரசு தி.மு.க.வை முடக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் தி.மு.க. மவுனமாக உள்ளது. அடுத்தடுத்து அமைச்சர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சம் தி.மு.க.வுக்கு உள்ளது.
தி.மு.க. கரங்களை பலப்படுத்த எஸ்.டி.பி.ஐ. துணை நிற்கும் என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட, தொகுதி, நகர் நிர்வாகிகள் செயல்வீரர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
ராமநாதபுரம் கிழக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
- ராமநாதபுரத்தில் 15 பவுன் நகை மாயமானது.
- மகன் மீது தாய் போலீசில் புகார் செய்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வீரம்மாள் (வயது 70). இவர் கடந்த ஒரு மாதகாலமாக உடல் நிலை சரியில்லாமல் தனது மகள் பவானி என்பவர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீரம்மாள் வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை காணவில்லை. நகை வைத்து இருந்த பீரோ உடைக்கப் படவில்லை எனவும், தனது வீட்டின் மேல் தளத்தில் குடியிருக்கும் தனது மகன் மீது சந்தேகம் உள்ளதாகவும் வீரம்மாள் போலீசில் புகார் செய்தார். ராமநாதபுரம் பஜார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கடலுக்கு சென்ற தொண்டி மீனவர்களுக்கு மீன்பாடு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- கடலுக்கு சென்ற தொண்டி மீனவர்களுக்கு மீன்பாடு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடலோர கிராமமானது சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் நகர் என்று அழைக்கப்படும் லாஞ்சியடி மற்றும் சோழியக்குடி.
இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று, செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் கரை திரும்புவர்.
கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 60 நாட்கள் மீன் பிடி தடைக்காலத்திற்கு பிறகு தற்போது ஆழ்கடல் சென்று மீன் பிடித்து வருகின்றனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ஆழ்கடலில் கிடைக்கும் இறால், நண்டு, மீன் வரத்து இல்லாமல் சிறிய வகை காரல், நெத்திலி, நண்டு ஆகியவை மட்டுமே வலையில் சிக்குகிறது என மீனவர்கள் வேதனையில் உள்ளனர். மேலும் தற்போது வலையில் சிக்கும் இந்த மீன் வகைகள் கோழி தீவனத்திற்கு மட்டுமே பயன்படும். இவற்றையும் உப்புப் போட்டு வெயிலில் உலர்த்திய பின்னரே விற்பனை செய்ய முடியும். அந்தவகையில் பக்குவப்படுத்தியும் கிலோ ரூ30-க்கு மட்டுமே விலை போகும்.
மீன் பிடி தடைக்காலத்தில் படகுகளை பழுதுபார்த்து செலவு செய்து கையிருப்பு பணம் அனைத்தும் செலவாகி, 60 நாட்களுக்கு பிறகு மீண்டும் டீசல், பணியாட்கள் சம்பளம், உணவு உள்ளிட்ட செலவுகள் செய்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றும் கருவாடு காயப்போடும் நிலையே உள்ளது என இப்பகுதி விசைப்படகு மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
- ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- 300-க்கும் அதிக மான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பஸ்கள் நின்று செல்லும் வகையில் ரெயில் நிலையம் அருகே பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து 300-க்கும் அதிக மான பஸ்கள் இயக்கப்படு கின்றன. போதிய பராம ரிப்பின்றி பஸ் நிலைய தரைத்தளம் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. பிளாட்பார கடைகளில் கூரை பூச்சு பெயர்ந்து அடிக்கடி கீழே விழுகிறது.
இந்த நிலையில் ரூ.20 கோடியில் பஸ் நிலையத்தை சீரமைத்து சந்தை திடல் வரை விரிவுபடுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அதனை முன்னிட்டு தற்காலிகமாக பயணிகள் வசதிக்காக பழைய பஸ் நிலையம், மூலக்கொத்தளம் பகுதிகளில் இருந்து பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து ரெயில் நிலையம் அருகே உள்ள பழைய பஸ் நிலையத்தில் புதிதாக தரைத்தளம் அமைத்தல், கழிவறை செப்பனிடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறை வடைந்து செயல்பட தொடங்கியதும் புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் அகற்றப்பட்டு விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மாத்திரை உட்கொள்ளும் நேரத்தை கவரில் குறிப்பிட்டு வினியோகம் செய்யப்பட்டது.
- நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் வெங்குளம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் எப்போது, எப்படிஉட்கொள்வது? என்ற விபரம் தெரிவிக்கப்படாமல் வெறுமனே வழங்கப்படுகிறது.
இதனால் நோயாளிகள் அதனை உட்கொள்வதில் சிக்கல் இருப்பதாகவும், எனவே தனியார் மருத்துவ மனைகளில் வழங்கப்படு வதைபோல தனித்தனி கவர்களில் எந்தெந்த வேளைகளில் உட்கொள்ள வேண்டுமென தெளிவாக குறிப்பிட்டு வழங்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளை தெளிவான விபரங்களுடன் வழங்குவதில் என்ன சிரமம் உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாத்திரைகளை தனி கவரில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் தனித்தனி கவர்களில் உட்கொள்ளும் வேளைகுறித்து எழுதி வழங்கப்படுகிறது. இதனை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
- கடல் பசு மீது பிளாஸ்டிக் கவர் ஒன்றை போட்டு மூடி வனத்துறையினர் இரவு முழுவதும் பாதுகாத்தனர்.
- பிரேத பரிசோதனை செய்த பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என்று மண்டபம் வனச்சரகர் தெரிவித்தார்.
ராமநாதபுரம்:
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என சுமார் 1400-க்கும் அதிக மான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலைகளில் சமீப காலமாக கடல் பசு, டால்பின் உள்ளிட்டவை சிக்குகிறது. அதனை உடனடியாக மீனவர்கள் உயிருடன் பத்திரமாக கடலில் விட்டு விடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு பாம்பன் தெற்கு மன்னா் வளைகுடா தோனித்துறை கடற்கரையில் இறந்த நிலையில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியது. இதை கண்ட மீனவர்கள் மண்டபம் வனச்சரகர் மகேந்திரனுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து பறவைகள், நாய் உள்ளிட்டவைகள் இறந்த கடல் பசுவின் உடலை சேதபடுத்தாமல் இருக்க கடல் பசு மீது பிளாஸ்டிக் கவர் ஒன்றை போட்டு மூடி வனத்துறையினர் இரவு முழுவதும் பாதுகாத்தனர்.
இறந்த நிலையில் கரை ஒதுங்கியது கடல் பசு 1500 கிலோ எடை கொண்டதாக இருக்கலாம் எனவும், கடல் பசு பாறைகளில் முட்டியதால் உயிரிழந்ததா? அல்லது உடல் நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா? என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என்று மண்டபம் வனச்சரகர் தெரிவித்தார். கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் கடற்கரை மணலில் வனத்துறையினர் பள்ளம் தோண்டி புதைத்தனர்.
- அரசு மாதிரி பள்ளியில் பயோ மேக்ஸ் பாடப்பிரிவை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாடப்பிரிவு பிரிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
அரசு மாதிரி பள்ளிகளில் ஏற்கனவே இருந்தபடி பயோ மேக்ஸ் பாட பிரிவில் (கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்) படித்தால் மருத்துவம் அல்லது என்ஜினீயரிங் படிக்க முடியும். தற்போது 2023-24-ம் கல்வியாண்டில் இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
பயோ மேக்ஸ் பாடப் பிரிவை தற்போது பயோ கம்ப்யூட்டர் (இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்),மேக்ஸ் கம்ப்யூட்டர் (இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ்) என இரண்டாக பிரித்து மாணவர் சேர்க்கை நடக்கி றது. இம்முறைக்கு மாணவர் கள், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாண வர்களில் அதிக மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாதிரி பள்ளிகளில் பிளஸ் 1-ல் சேர்க்கப்படுகின்றனர்.
2023-24 கல்வி ஆண்டிற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் மாணவர்கள் விருப்ப பாடமான பயோ மேக்சை இரண்டாக பிரித்து இதில் ஒன்றை தேர்ந்தெ டுக்க வற்புறுத்துகின்றனர்.
இதில் ஏதாவது ஒரு பிரிவை தேர்வு செய்யும் போது ஒன்று மருத்துவ படிப்பிற்கு செல்ல முடியும். அல்லது என்ஜினீயரிங் செல்ல முடியும். முன்பு பயோ மேக்ஸ் பாடத்தை தேர்வு செய்தவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங் இரண்டிலும் சேர வாய்ப்பு இருந்தது. தற்போது பிரிக்கப்பட்ட பாடப்பிரிவு நடைமுறையில் அப்படி சேர முடியாது. இதுகுறித்து மாணவர்கள், பெற்றோர்கள் கூறுகையில், பிளஸ்- 1 சேரும்போதே மாணவர்கள் டாக்டரா? என்ஜினீயரா? என முடிவு எடுக்குமாறு வற்புறுத்தும் வகையில் பாடப்பிரிவு பிரிக்கப்பட்டுள்ளது.
இம்முறையால் ராமநாத புரத்தில் கலந்தாய்வுக்கு வந்த 150 பேரில் 60 பேர் பங்கேற்கவில்லை. இதனால் மாணவர்கள் மன உளச்ச லுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே முதல்- அமைச்சர் ஸ்டாலின், கல்வித்துறை அமைச்சர், தலையிட்டு பழைய முறைப்படியே மாதிரி பள்ளிகளில் பயோ மேக்ஸ் பாடப்பிரிவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றனர்.
- கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- ஏராளமான படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை யின் பேரில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார். 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் மற்றும் காகிதம், கண்ணாடி துண்டுகள், தேங்காய் நார், சணல் போன்ற கழிவு பொருட்களில் இருந்து கலை படைப்புகளை தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் போட்டி போட்டு ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஆர்வத்துடன் களம் இறங்கி தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஏராளமான படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
மாவட்ட அளவில் நடை பெறும் போட்டியை மிஞ்சும் வகையில் மாணவிகள் நூற்றுக்கணக்கான படைப்பு களை தயார் செய்து காட்சிப்படுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம், இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் ஆகியோர்கள் கலை படைப்புகளை பார்வை யிட்டு மாணவிகளின் தயா ரிப்பு குறித்து கேட்டறிந்து பாராட்டினர். இறுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
- நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போதுமான மருத்துவ வசதியில்லை.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வரு கிறது. இந்த பகுதியில் ஏராளமான கிராமங்களும் அபிராமம் நகரில் குடியி ருந்து வருபவர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் இங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வருகின்றனர்.
அபிராமம், அகத்தாரிருப்பு நத்தம், அச்சங்குளம், அ.பச்சேரி, பாப்பனம் தீர்த்தாண்டதானம் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு போதுமான மருத்துவ வசதியில்லை.
அவசர தேவைக்கு அபி ராமத்திலிருந்து கமுதி அல்லது 50 கிலோமீட்டர் தூரம் உள்ள பரமக்குடிக்கு செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே நத்தம் ஆரம்ப சுகாதார நிலை யத்தை அரசு மருத்துவமனை யாக தரம் உயர்த்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இந்த பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகவும், விவசாயிகள், கூலி தொழி லாளர்கள் நிறைந்த பகுதி யாகவும் உள்ளது. உடல் நிலை பாதிக்கப்பட்டால் அரசு ஆஸ்பத்திரியை நம்பி செல்லும் நிலை உள்ளது.
பாம்பு கடி மற்றும் சாலை விபத்து போன்ற அவசர சிகிச்சைக்கு வரும் நோயா ளிகளுக்கு போதுமான மருத்துவ வசதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லை.
அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை போதுமான மருத்துவ வசதிகளுடன் அரசு மருத்துவமனையாக செயல்படுத்திட சுகாதார துறையும், மாவட்ட நிர்வாக மும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
- கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை தாங்கினார்.
கீழக்கரை
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் அலாவுதீன், துணை முதல்வர் ஷேக்தாவூது ஆகியோர் தலைமை தாங்கினர்.
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் தவசிலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை பயிற்றுவித்தார். இதில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லெப்டினன்ட் மருதாச்சலமூர்த்தி, சப்-லெப்டினன்ட் வினோத், ராஜேஷ்கண்ணா ஆகியோர் செய்திருந்தனர்.
- தீவனப் பயிர் சாகுபடி திட்டங்களில் பயன்பெற கால்நடை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பசுந்தீவன பற்றாக்கு றையை நிவர்த்தி செய்யும் வகையிலும், வறட்சி காலங்களில் கால்நடை களுக்கு தீவனம் வழங்கும் பொருட்டும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் (2023-24) அரசு மானியத்துடன் கூடிய கீழக்கண்ட தீவனப் பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
வேளாண்மைத்துறை இணை இயக்குநருடன் கலந்தாலோசித்து தோட்டம், பழத் தோட்டங்களில் ஊடு பயிராக பசுந்தீவனங்கள் சாகுபடி செய்வதற்கு 20 ஏக்கர் குறியீடு பெறப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பவராக இருந்து, குறைந்த பட்சம் 0.25 ஏக்கர், அதிக பட்சம் 1 ஏக்கர் பரப்பில் பாசன வசதியுடன் கூடிய நிலம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும், இதற்கு முன் இச்சலுகையை பெற்றவராக இருத்தல் கூடாது.
பசுந்தீவனங்கள் வீணாவதை குறைப்பதற்காக புல்வெட்டும் கருவிகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற 2 கால்நடைகள் வைத்திருக்க வேண்டும். இதற்கு முன் 10 வருடங்களில் இந்த சலுகையை பெறாத வராகவும் புல் வெட்டும் கருவி 50 சதவீத தொகையை ஏற்பவராகவும் இருக்க வேண்டும்.
எல்லா இனங்களிலும் 30சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்த வர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். மேலும் குறுவிவ சாயிகள் மற்றும் ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பி னர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெற விருப்பமுள்ள திட்டங்களை குறிப்பிட்டு எழுத்து மூலமாக விண்ணப்பம் அளிக்கலாம்.
மேலும் தங்கள் கால்நடை களுக்குத் தேவையான தீவன விதைகளை இத்திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வளர்ச்சி திட்டப்பணிகளை உரிய காலத்தில் முடிக்க சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு வலியுறுத்தியுள்ளது.
- மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவின் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் சந்திரன், சிந்தனை செல்வன், சிவக்குமார், தளபதி, நாகைமாலி, பரந்தாமன், பூமிநாதன், காந்திராஜன், ஜவாஹிருல்லா, மணியன், அருண்குமார் முன்னிலையில், தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரை கொண்ட பகுதியாகும். பிரதானமாக மீன்பிடி தொழில் உள்ளது. மீனவர்கள் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் மீன்வளத்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்த, பயன்பாடற்ற கட்டிடங்களை பொது ப்பணித்துறை அப்புறப்படுத்த வேண்டும். சாலைவசதி, குடிநீர் வசதி போன்றவற்றை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசின் திட்டப்பணிகள் பொது மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். அந்த வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 38 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அன்பழகன் வழங்கினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






