என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • மழையூர் கிராம நிர்வாக அலுவலகம், ரேசன் கடையில் கலெக்டர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்
    • நகராட்சி பூங்காவை பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், மழையூர் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் நியாய விலைக்கடையினை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பட்டா வழங்கப்பட்ட விபரங்கள் முறையாக கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பதையும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் மழையூர் கிராம அங்காடியில் பொருட்களின் இருப்பு விபரத்தினையும், மின் அலுவலகத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.

    பின்னர் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் இ-சேவை மைய செயல்பாடுகள் குறித்தும் வட்டாட்சியர் அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் 11, 12 ஆம் வகுப்புகளில் இடை நின்ற மாணவர்களிடம், அவர்களின் பெற்றோர்களிடமும் மாவட்ட கலெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக இருப்பதால் தவறாமல் விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும் எனவும் 12 ஆம் வகுப்பு என்பது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான அடித்தளமாக அமையக்கூடிய கல்வி எனவும் மாணவர்களிடம் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.

    அதனைதொடர்ந்து, புதுக்கோட்டை நகராட்சியில் ஒட்டக்குளத்தை பார்வையிட்டும், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் புதுக்கோட்டை நகராட்சி கலைஞர் கருணாநிதி மகளிர் கலைக்கல்லூரி எதிரில் ரூ.9 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நகராட்சி பூங்காவின் பணிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா பணிகளை நல்ல முறையில் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், ஒன்றிய குழு தலைவர் மாலா ராஜேந்திரதுரை, நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா, நகராட்சி ஆணையர் (பொ) பாலாஜி, வட்டாட்சியர்கள் ராமசாமி, விஜயலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை கடைவீதியில் 2 மாதங்களாக சாலை விளக்குகள் எரியவில்லை
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கடை வீதியில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இரு புறமும் ஒளிரும் சாலை விளக்குகள் புது நகர் அருகே உள்ள சுங்கச்சாவடி பராமரிப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக இந்த விளக்குகள் செயல்படாமல் உள்ளது.இதனால் இரவு நேரங்களில் போக்குவரத்திற்கும், வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பாக உள்ளது.

    சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இந்த விளக்குகளை செயல்பட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவன பராமரிப்பில் உள்ள இந்த சாலை விளக்குகளை ஒளிரச் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட வர்த்தகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கறம்பக்குடியில் மது விற்ற 4 பேர் கைது செய்யபட்டார்
    • அவர்களிடமிருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் வந்தது. அதன் பேரில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பவர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இந்த நிலையில் கறம்பக்குடி சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சீனி கடை முக்கம், அம்பு கோவில் முக்கம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த கறம்பக்குடியை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 37), கண்டியன் தெருவை சேர்ந்த அண்ணாதுரை (51), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (39), குழந்திரான் பட்டு கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் (52) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

    • திருட்டுப்போன 75 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.
    • சுமார் 1½ ஆண்டுகளில் சுமார் ரூ.55½ லட்சம் மதிப்புள்ள 275 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மற்றும் திருட்டுப்போன செல்போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் கடந்த 2 வாரங்களில் சைபர் கிரைம் போலீசார் மூலம் 75 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உரிய நபர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று ஒப்படைத்தார்.

    சுமார் 1½ ஆண்டுகளில் சுமார் ரூ.55½ லட்சம் மதிப்புள்ள 275 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செல்போன் கண்டுபிடிப்பில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டி வெகுமதி வழங்கினார்.மேலும் செல்போன் சம்பந்தமான புகார்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் உடனடியாக ஒப்படைக்க அவர் அறிவுறுத்தினார்.

    • மது விற்றவர் கைது செய்யபட்டார்
    • அவரிடமிருந்து 9 மது பாட்டில்கள் மற்றும் ரூ.700 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை அருகே அனுமதி பெறாமல் செயல்படும் மதுபான கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் டாஸ்மாக் கடை பூட்டி இருக்கும் நேரத்தில் உணவகங்கள், பெட்டிக்கடை மற்றும் அனுமதியில்லாமல் செயல்படும் பார்களில் மது பாட்டில்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி விராலிமலை ஒன்றியம் மாத்தூர், ஆவூர், பேராம்பூர் ஆகிய ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட மதுபானக்கூடங்கள் உடனடியாக இழுத்து மூடப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை அருகேயும் உணவகங்கள் மற்றும் பெட்டிக்கடைகளில் மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் மாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது பேராம்பூர் குளத்துக்கரை அருகே மறைவான இடத்தில் வைத்து கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்த கந்தர்வகோட்டை தாலுகா, மட்டங்காடு கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி மகன் அருண்பாண்டியன் (வயது 33) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 9 மது பாட்டில்கள் மற்றும் ரூ.700 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஆலங்குடியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமசுப்புரம் தலைமை வகித்தார். நகர தலைவர் அரங்குளவன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன் துணைத்தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராமசுப்புராம் பேசுகையில்... ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் மத்தியநிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகிய இருவரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்றித் தரப்படும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையை மேம்படுத்த தனது தொகுதி நிதியிலிருந்து 1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி யின் சார்பில் நன்றிதெரி வித்து தீர்மானம் நிறைவே ற்றப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் வட்டார தலைவர் பன்னீர்செல்வம் முன்னாள் தலைவர் பாண்டியன் குமரேசன், சத்யராஜ், பூங்குன்றன், கீரமங்கலம் நகர தலைவர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • புதுக்கோட்டை சிறைச்சாலை-கூர்நோக்கு இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்
    • புதுக்கோட்டை சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என்று 442 சிறைவாசிகள் உள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட சிறைசாலை மற்றும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சிறைச்சாலை மற்றும் கூர்நோக்கு இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிரடியாக உள்ளே நுழைந்தனர். டி.எஸ்.பி. செல்வம் தலைமையில் உள்ளே சென்ற போலீசார் அங்கு செல்போன், கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், போதை மாத்திரை ஏதும் உள்ளதா என்று சோதனையில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என்று 442 சிறைவாசிகள் உள்ளனர். இவர்கள் அனைவரிடத்திலும் சோதனை நடைபெற்றது. மேலும் சிறைவாசிகள் அறை மற்றும் வளாகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை நடைபெற்றது.மேலும் சிறைவாசி களிடம் ஆயுதம் மற்றும் ஆயுதம் போன்ற பொருட்கள் ஏதும் உள்ளதாக என்றும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.இதே போல அரசினர் கூர்நோக்கு இல்லத்திலும் தீவிர சோதனை நடை பெற்றது.

    இந்த சோதனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. சோதனை நடைபெற்ற போது சிறைவாசிகளை சந்திக்க வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சோதனையை முன்னிட்டு சிறைச்சாலை வளாகத்திதை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.சிறைச்சாலை, கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையால் பரபரப்பு நிலவியது

    • 13 ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த மாங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்த முடிவு செய்யபட்டது
    • சமாதான கூட்டத்தில் அதிகாரிகள் ஒப்புதல்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபடுவர். வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும் இக்கோவிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் மண்டகப்படி பெறுவதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதத்தி னையடுத்து சம்பவ இடத்தில் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து திருவிழா நிறுத்தப்பட்டு 13 ஆண்டுகளாக திருவிழா கிடப்பில் போடப்பட்டது. மேலும் இது தொடர்பாக இரு தரப்பு சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் கிராம கட்டுப்பாட்டில் இருந்த கோவிலை, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில் மீண்டும் திருவிழா நடத்துவதென அப்பகுதி பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பினரை அழைத்து சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தலைமையில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய குழு அமைத்து திருவிழா நடத்திக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் திருவிழா நடைபெறும் பொழுது எந்த தரப்பினருக்கும் காவல்த்துறை அனுமதியின்றி கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்த்துறை சார்ந்த அதிகாரிகள் மாங்குடி ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நாய் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழந்தன
    • நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும், மனிதர்களையும் கடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர். இந்நிலையில் செரியலூர் இனாம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் தனது ஆடுகளை அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டி வைத்திருந்த போது அங்கு வந்த நாய் 2 ஆடுகளையும், 5 கோழிகளையும் கடித்து கொன்று விட்டு ஓடிவிட்டது. இதே போல அதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில ஆடுகளை நாய்கள் கடித்து குதறிக் கொன்றுள்ளது. ஊராட்சி நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாவடிபட்டி கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே மாவடிபட்டி கிராமத்தில் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் மாட்டின் பல் அடிப்படையில் நடைபெற்றது.பந்தயத்தில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள், மாட்டு வண்டிகளுடன் வந்திருந்தனர்.

    முதலாவதாக நான்கு பல் கொண்ட மாடுகளுக்கு பந்தயம் நடத்தப்பட்டது. பந்தய தூரம் போய் வர 4 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 20 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் பந்தயம் 2 பிரிவாக பிரித்து நடத்தப்பட்டது. பந்தயமானது மாவடிபட்டி- கல்லூர் சாலையில் நடைபெற்றது.பந்தயத்தின் முடிவில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தில் கலந்து கொண்ட இளம் காளை கன்றுகள் குதிரையை போல் சீறிப்பாய்ந்து ஓடியதை அப்பகுதியில் இருந்த மக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர்.

    • மணமேல்குடி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாதங்கள் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சீனியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வீரப்பன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர்களின் விவாதங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், ஒன்றிய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் காமராஜ். ஆணையர் திலகவதி, துணைத் தலைவர் செந்தாமரை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேசும்பொழுது புதிய அங்கன்வாடி கட்டிடம் கால்நடை மருத்துவமனைகளில் போதுமான பணியாளர்களை நியமிப்பது ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மயானத்திற்கு செல்வதற்கு பாதை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை பேசும்பொழுது, கந்தர்வக கோட்டைக்கு நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதே போல தரமான மருத்துவ சிகிச்சைகள் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் புதிய நவீன மருத்துவமனை கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றி தரப்படும் என்று கூறினார்.

    கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாண்டியன், திருப்பதி, முருகேசன், பாரதி பிரியா ஐயாத்துரை, சுதா ராஜேந்திரன், மலர் சின்னையன், கலியபெருமாள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மன்ற பொருள்களை ஒன்றிய அலுவலர் வை.பரமேஸ்வரி வாசித்தார்.

    ×