என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • 7 அடி உயரத்துடன் ஒன்றே கால் அடி அகலத்துடன் இருபுறமும் 80 வரிகளில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது
    • குளத்தின் நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டும் என தகவல் பதிவு பொறிக்கப்பட்டுள்ளது

    கந்தர்வக்கோட்டை,

    கந்தர்வக்கோட்டை அருகே கலலுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சம்பட்டிப்பட்டியில் கல் பலகை நட்டிருப்பதாக குரும்பூண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் சேகர் அளித்த தகவலின் பேரில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளர் ஆ. மணிகண்டன் கல்வெட்டை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது,

    சம்பட்டிப்பட்டி கல்வெட்டில் 7 அடி உயரத்துடன் ஒன்றே கால் அடி அகலத்துடன் உள்ள பலகைக் கல்லின் இருபுறமும் 80 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. ராசராச வளநாடு, ராசேந்திர சோழ வள நாடு, அன்பில் எனப்படும் அம்புக் கோவில் தெற்கிலூரில் காணியுடையார் மக்களில் திருமலைராய தொண்டைமானார் என்று குறிப்பிட்டு இருப்பதன் மூலம் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகமாக அம்புக்கோவிலை குறிப்பிடுவதை அறிந்து கொள்ள முடிகிறது.

    மேலும் இவ்வூரில் இருக்கும் பகவாந்ராயர் மற்றும் ராசிவராயர் ஆகியோருக்கு சம்பட்டிப்பட்டியில் அமைந்துள்ள பிரமன் வயலை மானியமாக வழங்கிய மன்னின் உத்தரவு, தாமிரத்தில் எழுதி சாசன மாக்கப்பட்டதையும், நிலத்தின் 4 எல்லைகளும் வாமன கோட்டுருவம் பொறிக்கப்பட்ட எல்லைகல் நடப்பட்டதையும் பொது ஆண்டு 1758-ல் பொறிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிரம்ம குளத்தின் நீரை பயிருக்காக மட்டுமே பாய்ச்ச வேண்டும் என்றும்,

    இதற்கு இடையூறு செய்வோர் தோஷத்துக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தும் அந்த கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்திற்கு முயன்றவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்
    • சுப முத்துக்குமரன் பாசறையை சேர்ந்தவர்கள்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் அண்ணா சிலை அருகே சுப முத்துக்குமரன் பாசறை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பழைய பஸ் நிலையத்திலிருந்து நடை பயணமாக புறப்பட்ட நபர்களை மின்சார வாரியம் அலுவலகம் முன்பு மறித்து போலீசார் கைது செய்தனர். இதில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு சுப முத்துக்குமரன் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலீபன் தலைமை தாங்கினார்.

    • புதுக்கோட்டையில் தனியார் பஸ் சிறைபிடிக்கப்பட்டது
    • புது பேருந்து நிலையத்திற்குள் வராததால் பொதுமக்கள் ஆத்திரம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு தினசரி அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன. அவ்வாறு செல்லும் பஸ்கள் அனைத்தும் விராலிமலை புதிய பஸ் நிலையத்திற்கு சென்று விட்டு அதன் பிறகு மணப்பாறைக்கு செல்லும். ஆனால் ஒரு சில பஸ்களை தவிர மற்ற பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் விராலிமலை சோதனைச்சாவடி வழியாகவே சென்று விடுகின்றன. இதனால் அவ்வப்போது பயணிகளுக்கும், பஸ் டிரைவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு வந்த ஒரு தனியார் பஸ்சில் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்கு பயணித்த பயணிகளில் ஒருவர் புதிய பஸ் நிலையத்திற்கு கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் அந்த பயணியிடம் கண்டக்டர் புதிய பஸ் நிலையம் செல்லாது, வேண்டுமென்றால் விராலிமலை சோதனைச்சாவடி நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பஸ்சானது விராலிமலை சோதனைச்சாவடி நிறுத்தத்தை வந்தடைந்தது. இதனையடுத்து அங்கு இறங்கிய அவர், டிரைவரிடம் சென்று ஏன் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது டிரைவர் சரிவர பதில் கூறாமல் பஸ்சை இயக்கியதை கண்ட சக பயணிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பஸ்சை சிறைபிடித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நிலைமையை புரிந்து கொண்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் இனிமேல் புதிய பஸ் நிலையம் சென்று விட்டு அதன் பிறகு மணப்பாறைக்கு செல்கிறோம் என கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அந்த தனியார் பஸ் புதிய பஸ் நிலையம் சென்று விட்டு மணப்பாறைக்கு சென்றது.

    • கோவில்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது
    • 12 காளைகள், 108 வீரர்கள் பங்கேற்பு

    புதுக்கோட்டை,

    அறந்தாங்கி அருகே கோவில்பட்டி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 காளைகள் வந்திருந்தன. 108 வீரர்கள் கலந்து கொண்டனர். மஞ்சுவிரட்டில் கயிற்றில் ஒரு காளையை கட்டிவிட்டு அதை அடக்க 9 பேர் கொண்ட குழு மாடுபிடி வீரர்களையும் களத்தில் இறக்கவிட்டு 25 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் வீரர்கள் காளைகளை அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. பின்னர் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்க உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.

    • சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்றது.
    • 4-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    புதுக்கோட்டை:

    திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து 27-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து மண்டகபடிதாரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சிறப்பு அலங்காரத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 30-ந் தேதி திருமஞ்சனம் நடைபெற்று கருட வாகனத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா நடக்கிறது. 4-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • கல்லாக்கோட்டை பகுதியில் அடிக்கடி மின் தடையால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்
    • தங்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த கல்லாக்கோட்டை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி விவசாயப்பகுதியாகும். பம்பு செட்டை பயன்படுத்தி விவசாயம் ெசய்யப்பட்டு வருகிறது. மேலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. இங்கு அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குடிநீருக்காக மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் பம்பு செட்டுகள் இயங்காதால் பயிர்கள் காய்ந்து விடுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தங்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • ஜல்லிகட்டு ஆர்வலர்களால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டையில் 5-ந்தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது
    • இதற்காக அரசு மருத்துவகல்லூரியிலிருந்து திருச்சி சாலை சிப்காட் செல்லும் வழியில் பந்தல் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

    புதுக்கோட்டை,

    தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை சட்டப்போராட்டம் நடத்தி அனுமதி பெற்று தந்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜல்லிகட்டு ஆர்வலர்களால் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் புதுக்கோட்டையில் வருகிற 5-ந்தேதி பாராட்டு விழா நடைப்பெறுகிறது.இதற்காக அரசு மருத்துவகல்லூரியிலிருந்து திருச்சி சாலை சிப்காட் செல்லும் வழியில் பந்தல் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

    இதையொட்டி இன்று மாலை கற்பக விநாயகர் மகாலில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்ட துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பத்திரப்பதிவு துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 8 அமைச்சர்கள் கலந்துக் கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. மேலும் ஜல்லிகட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் உட்பட ஜல்லிகட்டு பேரவையினர், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

    • தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
    • தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியது மற்றும் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் மௌனமாக இருப்பதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது திருமாவளவன் வாய் திறந்து பேசி இருப்பது பாராட்டுதலுக்கு உரியது.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை தி.மு.க.வினர் கொண்டாடுவதற்கு தார்மீக அடிப்படையில் உரிமை உள்ளதா, இல்லையா என்பது அவர்களின் மனசாட்சிக்கே தெரியும். ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தீர்ப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கறம்பக்குடியில் 51 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டது
    • கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜானகிராமன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தங்கு தடை இன்றி கிடைப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜானகிராமன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெங்கரை முகமது அப்பாஸ் (வயது 39), வாணிப தெரு சேக் தாவூத் ஆகியோரிடமிருந்து 51 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கோவில் திருவிழாவை முன்னிட்டு குரும்பூர்கோவில்பட்டியில் வடமஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது
    • ஒரு காளைக்கு 9 வீரர்கள் என 25 நிமிடங்கள் ஒவ்வொரு போட்டியும் நடைபெற்றது

    அறந்தாங்கி,

    அறந்தாங்கி தாலுகா குரும்பூர்கோவில்பட்டி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு வடமஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை , தஞ்சை, சிவகங்கை, மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 13 காளைகள் பங்கேற்றன. அதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 117 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளனரா என மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    ஒரு காளைக்கு 9 வீரர்கள் என 25 நிமிடங்கள் ஒவ்வொரு போட்டியும் நடைபெற்றது. போட்டியில் வீரர்கள் காளைகளை அடக்கியும், காளைகள் வீரர்களிடமிருந்து தப்பித்ததும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியது.மொத்தம் 13 காளைகளில் பெரும்பாலான காளைகள் வீரர்களிடம் சிக்காததால், காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் ரொக்கப்பணம், கட்டில், அண்டா உள்ளிட்ட நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆரவரத்துடன் கண்டு ரசித்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • திருவரங்குளத்தில் அரங்குளநாதர்-பெரியநாயகி அம்பாள் வீதி உலா நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதக்கோட்டை திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பாள் சமேத அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதையடுத்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாள் சிம்ம வாகனம், காமதேனு வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தனியாக சமையல் செய்ததை கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியரின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள செங்கமாரி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மகாலெட்சுமி (வயது 23). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே கடந்த 25-ந்தேதி ராஜாவின் சகோதரருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து மகாலெட்சுமி தனியாக சமைக்கத் தொடங்கியுள்ளார்.

    இது தொடர்பாக மாமியார் காந்திமதி, கணவர் ராஜா உள்ளிட்டோர் மகாலெட்சுமியை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான மகாலெட்சுமி வயலுக்கு பயன்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதில் மயக்கமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் மகாலெட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

    அதனை தொடர்ந்து மகாலெட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியரின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்பத்தகராறில் 23 வயது இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×