என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சரவணன், சரண்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி கைகளால் தாக்கி உள்ளார்

    புதுக்கோட்டை:

    அரிமளம் ஒன்றியம், ராயவரம் அருகேயுள்ள ஆலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் சரண்யா. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 38) என்பவருக்கும் இடையே வரப்பு அமைப்பதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சரண்யாவின் தந்தை வரப்பு அமைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சரவணன், அவரிடம் எவ்வாறு நீ வரப்பு அமைக்கலாம் என கேள்வி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த சரண்யா அங்கு வந்து சரவணனிடம் என் தந்தையிடம் எப்படி பேசலாம் என கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், சரண்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி கைகளால் தாக்கி உள்ளார். இதுகுறித்து அரிமளம் ேபாலீஸ் நிலையத்தில் சரண்யா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • வாகனம் மோதி விவசாயி இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     புதுக்கோட்டை:

    அரிமளம் ஒன்றியம், மிரட்டு நிலை அருகே தெற்குபொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 43)விவசாயி. இவர் சம்பவத்தன்று தெற்குபொன்னம்பட்டியில் இருந்து நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மருதன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாண்டியன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாண்டியன் மனைவி ஆராயி கொடுத்த புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறந்தாங்கியில் அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க கூடுதலாக பணம் கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது
    • பயனாளிகள் கண்ணீர் மல்க குற்றசாட்டி வருகின்றனர்
    அறந்தாங்கி,


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குரும்பக்காடு பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. 120 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வருகிறது. இதில் கஜாபுயலால் பாதிப்படைந்தவர்கள் மற்றும் நகர்புறத்தில் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதற்கான ஆவணங்களை வருவாய்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சரிபார்க்கப்பட்டு உரியவர்களுக்கு வீடுகள் வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

    அதனடிப்படையில் கடந்த ஆண்டு 9-வது மாதம் 120 பயனாளிகளிடமிருந்து தலா ரூ.1 லட்சம் காசோலையாக நிர்வாகம் சார்பில் பெறப்பட்டது. இந்நிலையில் வீடுகள் பூர்த்தியாகி பயனாளிகளிடம் ஒப்படைக்கும் தருவாயில் மீண்டும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கட்ட வேண்டும் என நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பயனாளிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பயனாளிகள் கூறுகையில், ஏழை எளிய மக்களாகிய நாங்கள் வசிக்க வீடு இன்றி அன்றாடம் காய்சியாக வாழ்ந்து வருகிறோம். எதோ அரசின் சார்பில் இலவச வீடு என்றார்கள், அதனை நம்பி வந்தோம். ஆனால் ஒரு லட்சம் பயனாளிகள் கட்ட வேண்டும், மீதி பங்கை அரசு கட்டும் என்று கூறினார்கள், வேறு வழியின்றி இருப்பதை விற்று ரூ.1 லட்சம் பணத்தை கட்டினோம். ஆனால் தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கட்ட சொல்கிறார்கள்.

    இருக்க வீடு இன்றி வாழும் எங்களால் இவ்வளவு தொகையினை எப்படி கட்ட முடியும். ஏற்கனவே கட்டிய பணத்திற்கு 8 மாதத்திற்கும் மேலாக வட்டி கட்டிக் கொண்டு வருகிறோம். இந்த நிலையில் இப்படி ஒரு தகவல் பேரிடியாக உள்ளது. எனவே அரசு கவனத்தில் கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர். இதற்கிடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பரம ஏழைகளுக்கு கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பெறுவதற்கு ஏற்கனவே ரூ.1 லட்சம் வாங்கப்பட்ட நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கேட்பது எந்த வகையில் நியாயம், எனவே ஒன்றிய, மாநில அரசுகள் ஏழைகளுக்கு உதவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆலங்குடி போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள பாழடைந்த கட்டிடம் பாம்பு, விஷ ஜந்துக்கள் புகலிடமாக இருக்கின்றது
    • கட்டிடத்திற்கு அருகில் உள்ள பொது மக்களின் குடும்பத்தினரும் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேருந்து நிலையம் அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும், போலீசார் குடியிருப்பும் உள்ளது. இதன் அருகே வருவாய்த்துறையினர் குடியிருந்த ஓட்டு கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடம் குடியிருப்பதற்கு தகுதியற்ற கட்டிடம் என்று காலி செய்து சுமார் 25 வருடங்களாக யாரும் பயன்படுத்தாமல் பாழடைந்த கட்டிடமாக உள்ளது. இதனை யாரும் பயன்படுத்தாத நிலையில், அங்கு பாம்பு போன்ற விஷ ஜந்துகள் அதிக அளவில் உள்ளன. இதனால் போலீஸ் குடியிருப்பில் உள்ள போலீசாரின் குடும்பத்தினரும் அவர்களது குழந்தைகளும் கட்டிடத்திற்கு அருகில் உள்ள பொது மக்களின் குடும்பத்தினரும் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    எந்தவித பயன்பாடும் இல்லாத இந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கோ குழந்தைகளுக்கோ ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன்பே உடனடியாக இந்தப் பாழடைந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்பது இங்குள்ள குடியிருப்பு வாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    • திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    புதுக்கோட்டை:

    அன்னவாசல் அருகே வாதிரிப்பட்டியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த 25-ந் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மன் வீதி உலாவும், அதனை தொடர்ந்து வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா இன்று நடந்தது. இதையொட்டி, திரவுபதி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து, பக்தர்கள் சத்திரத்தில் உள்ள குளத்தில் புனித நீராடினர். இதையடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    • மது விற்ற பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    செம்பட்டிவிடுதி பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ஆலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்பட்டிவிடுதி அருகே மதுவிற்ற இச்சடி அண்ணா நகரை சேர்ந்த மதியழகன் (வயது 46), கீழப்பட்டி மாங்கோட்டையை சேர்ந்த மூர்த்தி மகன் சந்திரசேகரன் (33), கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் வீரய்யா (32), மேல நெம்மகோட்டையை சேர்ந்த நாராயணன் மகன் விஜயகுமார் (34), கறம்பக்குடி தாலுகா வாண்டான்விடுதிய சேர்ந்த செல்வராசு மகன் அழகர் (36) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 134 மது பாட்டில்கள், ரூ.21,280, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து செம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் ராஜாளிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுவிற்ற ராஜாளிப்பட்டி பகுதியை சேர்ந்த மணி (63), முத்துலட்சுமி (49) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • புதுக்கோட்டையில் பா.ஜ.க. எம்பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    மல்யுத்த வீராங்களைகள் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பா.ஜ.க. எம்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டையில் மாதர், வாலிபர், மாணவர் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மல்யுத்த வீராங்கணைகள் ஆகியோர் தங்கள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரன் சிங் மீது கடந்த ஜனவரி 18-ந் தேதி அன்று குற்றம் சாட்டினர். இந்தப் புகாரின் அடிப்படையில் டில்லி போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மல்யுத்த வீரங்கணைகள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கணைகள் மீதே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பாஜக எம்பியை பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மல்யுத்த விராங்கணைகள் மீதான வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்திஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சுசீலா தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் டி.சலோமி, எஸ்.பாண்டிச்செல்வி, எஸ்.சந்தோஷ்குமார், எம்.மகாலெட்சுமி, முத்துமாரி, டேவிட், தோழமைச் சங்க நிர்வாகிகள் ஆர்.சோலையப்பன், ஆர்.சுப்பிரமணியன், என்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றன.

    • ஆலங்குடியில் மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யபட்டார்
    • சரத்குமார் உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). ஆலங்குடி மின்வாரிய அலுவலக ஊழியரான இவர், கீழாத்தூர் பகுதியில் உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்நிலையில், பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டதாக ஆலங்குடி மின்வாரியத்தில் போர்மேனாக பணிபுரிந்த கணேசனை, பணியிடை நீக்கம் செய்து ஆலங்குடி செயற்பொறியாளர் உத்தரவிட்டார்.

    • விராலிமலை அருகே உள்ள தனியார் மதுபான ஆலையில் இருந்து ஆற்றில் கழிவு நீர் திறந்துவிடப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்
    • கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை அகற்றித் தர வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல்களின் சிறப்பான வாதத்தால் தடை நீக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு பேரவை, ஆர்வலர்கள் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டையில் வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இடையப்பட்டி அருகே உள்ள இடத்தில் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதனை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் வருகையையொட்டி விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அமைச்சர் மெய்யநாதனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது போலீஸ் அதிகாரிகளும் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றிக் கொள்ள தங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் தமிழக அரசிடம் அனுமதி கோரியது.

    ஆனால் அதை தமிழக அரசே அகற்றும் என முதல்வர் அறிவித்துள்ளார்.இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முதல்வருக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர். கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை அகற்றித் தர வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி அதை தமிழக அரசு அகற்ற இயலாது. மீண்டும் மஞ்சள் பை திட்டத்தின் மூலம் துணைப்பையின் பயன்பாடு 25 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.ஆனாலும், ஆங்காங்கே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருக்கிறது.

    விரைவில் அதையும் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தையும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுதான் தமிழகத்தில் புழக்கத்தில் விடப்படுகிறது. விராலிமலை அருகே உள்ள தனியார் மதுபான ஆலையில் இருந்து ஆற்றில் கழிவு நீர் திறந்துவிடப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் காவிரி குண்டாறு திட்டப் பணிகளில் தொய்வு இருக்காது. அதன் வழித்தடமும் மாற்றி அமைக்கப்படாது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • திருமயம் ஊராட்சியில் முடிவுற்ற பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது
    • திருமயம் ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை போக்கும் விதமாக ஊராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை போக்கும் விதமாக ஊராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருமயம் அருகே ஓலை குடிப்பட்டியில் 15-வது நிதிக்குழு மான்யம் 2020-21ல் புதிதாக ரூ.4 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் போர்வெல்லுடன் பைப்லைன் விஸ்தரிப்பு, செங்காடுதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 980 மீட்டர் பைப் லைன், திருமயம் கடைவீதியில் 91 மீட்டருக்கு ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயையும் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சரண்யா சரவணன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அறந்தாங்கி அருகே மத நல்லிணக்க மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
    • 21 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஏனாதி கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் சேக் இஸ்மாயில் ஒலியுல்லா தர்கா இணைந்து நடத்தும் மத நல்லிணக்க திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது. பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் பங்கேற்றன. 5 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு, நடுக்குதிரை, கரிச்சான் குதிரை என 32 ஜோடி மாடுகளும், 21 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.

    பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரைகளுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடு மற்றும் குதிரைகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பந்தையத்தை ரசிகர்கள் சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்து கண்டு ரசித்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஏனாதி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • அறந்தாங்கி அருகே விருதபுரீஸ்வரர் கோவில் இரட்டை தேரோட்டம் நடைபெற்றது
    • பக்தர்கள் அரோகரா, விருதபுரீஸ்வரா என்ற நாமத்தைக் கூறி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருப்புனவாசல் ஸ்ரீ விருதபுரீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கியது முதல் இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் ஊர் முக்கியஸ்தர்கள், மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரட்டை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    முதல் தேரில் ஸ்ரீ விருதபுரீஸ்வரர் சாமியும், 2-வது தேரில் ஸ்ரீ பெரியநாயகி அம்பாளையும் எழுந்தருளச் செய்தனர். அப்போது பக்தர்கள் அரோகரா, விருதபுரீஸ்வரா என்ற நாமத்தைக் கூறி தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலை சுற்றி நான்கு வீதிகளிலும் தேர்கள் வலம் வந்தது. திருத்தேர்களில் அமர்ந்திருந்து விருதபுரீஸ்வரர், பெரியநாயகி அம்பாள் சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆலயத்தைச் சுற்றிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருப்புனவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×