என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • ஆலங்குடி போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள பாழடைந்த கட்டிடம் பாம்பு, விஷ ஜந்துக்கள் புகலிடமாக இருக்கின்றது
    • கட்டிடத்திற்கு அருகில் உள்ள பொது மக்களின் குடும்பத்தினரும் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேருந்து நிலையம் அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும், போலீசார் குடியிருப்பும் உள்ளது. இதன் அருகே வருவாய்த்துறையினர் குடியிருந்த ஓட்டு கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடம் குடியிருப்பதற்கு தகுதியற்ற கட்டிடம் என்று காலி செய்து சுமார் 25 வருடங்களாக யாரும் பயன்படுத்தாமல் பாழடைந்த கட்டிடமாக உள்ளது. இதனை யாரும் பயன்படுத்தாத நிலையில், அங்கு பாம்பு போன்ற விஷ ஜந்துகள் அதிக அளவில் உள்ளன. இதனால் போலீஸ் குடியிருப்பில் உள்ள போலீசாரின் குடும்பத்தினரும் அவர்களது குழந்தைகளும் கட்டிடத்திற்கு அருகில் உள்ள பொது மக்களின் குடும்பத்தினரும் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    எந்தவித பயன்பாடும் இல்லாத இந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கோ குழந்தைகளுக்கோ ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன்பே உடனடியாக இந்தப் பாழடைந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்பது இங்குள்ள குடியிருப்பு வாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    • திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    புதுக்கோட்டை:

    அன்னவாசல் அருகே வாதிரிப்பட்டியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த 25-ந் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மன் வீதி உலாவும், அதனை தொடர்ந்து வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா இன்று நடந்தது. இதையொட்டி, திரவுபதி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து, பக்தர்கள் சத்திரத்தில் உள்ள குளத்தில் புனித நீராடினர். இதையடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    • மது விற்ற பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    செம்பட்டிவிடுதி பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ஆலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்பட்டிவிடுதி அருகே மதுவிற்ற இச்சடி அண்ணா நகரை சேர்ந்த மதியழகன் (வயது 46), கீழப்பட்டி மாங்கோட்டையை சேர்ந்த மூர்த்தி மகன் சந்திரசேகரன் (33), கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் வீரய்யா (32), மேல நெம்மகோட்டையை சேர்ந்த நாராயணன் மகன் விஜயகுமார் (34), கறம்பக்குடி தாலுகா வாண்டான்விடுதிய சேர்ந்த செல்வராசு மகன் அழகர் (36) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 134 மது பாட்டில்கள், ரூ.21,280, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து செம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் ராஜாளிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுவிற்ற ராஜாளிப்பட்டி பகுதியை சேர்ந்த மணி (63), முத்துலட்சுமி (49) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • புதுக்கோட்டையில் பா.ஜ.க. எம்பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    மல்யுத்த வீராங்களைகள் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பா.ஜ.க. எம்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டையில் மாதர், வாலிபர், மாணவர் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மல்யுத்த வீராங்கணைகள் ஆகியோர் தங்கள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரன் சிங் மீது கடந்த ஜனவரி 18-ந் தேதி அன்று குற்றம் சாட்டினர். இந்தப் புகாரின் அடிப்படையில் டில்லி போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மல்யுத்த வீரங்கணைகள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கணைகள் மீதே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பாஜக எம்பியை பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மல்யுத்த விராங்கணைகள் மீதான வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்திஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சுசீலா தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் டி.சலோமி, எஸ்.பாண்டிச்செல்வி, எஸ்.சந்தோஷ்குமார், எம்.மகாலெட்சுமி, முத்துமாரி, டேவிட், தோழமைச் சங்க நிர்வாகிகள் ஆர்.சோலையப்பன், ஆர்.சுப்பிரமணியன், என்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றன.

    • ஆலங்குடியில் மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யபட்டார்
    • சரத்குமார் உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). ஆலங்குடி மின்வாரிய அலுவலக ஊழியரான இவர், கீழாத்தூர் பகுதியில் உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்நிலையில், பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டதாக ஆலங்குடி மின்வாரியத்தில் போர்மேனாக பணிபுரிந்த கணேசனை, பணியிடை நீக்கம் செய்து ஆலங்குடி செயற்பொறியாளர் உத்தரவிட்டார்.

    • விராலிமலை அருகே உள்ள தனியார் மதுபான ஆலையில் இருந்து ஆற்றில் கழிவு நீர் திறந்துவிடப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்
    • கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை அகற்றித் தர வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல்களின் சிறப்பான வாதத்தால் தடை நீக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு பேரவை, ஆர்வலர்கள் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டையில் வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இடையப்பட்டி அருகே உள்ள இடத்தில் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதனை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் வருகையையொட்டி விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அமைச்சர் மெய்யநாதனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது போலீஸ் அதிகாரிகளும் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றிக் கொள்ள தங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் தமிழக அரசிடம் அனுமதி கோரியது.

    ஆனால் அதை தமிழக அரசே அகற்றும் என முதல்வர் அறிவித்துள்ளார்.இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முதல்வருக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர். கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை அகற்றித் தர வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி அதை தமிழக அரசு அகற்ற இயலாது. மீண்டும் மஞ்சள் பை திட்டத்தின் மூலம் துணைப்பையின் பயன்பாடு 25 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.ஆனாலும், ஆங்காங்கே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருக்கிறது.

    விரைவில் அதையும் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தையும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுதான் தமிழகத்தில் புழக்கத்தில் விடப்படுகிறது. விராலிமலை அருகே உள்ள தனியார் மதுபான ஆலையில் இருந்து ஆற்றில் கழிவு நீர் திறந்துவிடப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் காவிரி குண்டாறு திட்டப் பணிகளில் தொய்வு இருக்காது. அதன் வழித்தடமும் மாற்றி அமைக்கப்படாது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • திருமயம் ஊராட்சியில் முடிவுற்ற பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது
    • திருமயம் ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை போக்கும் விதமாக ஊராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை போக்கும் விதமாக ஊராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருமயம் அருகே ஓலை குடிப்பட்டியில் 15-வது நிதிக்குழு மான்யம் 2020-21ல் புதிதாக ரூ.4 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் போர்வெல்லுடன் பைப்லைன் விஸ்தரிப்பு, செங்காடுதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 980 மீட்டர் பைப் லைன், திருமயம் கடைவீதியில் 91 மீட்டருக்கு ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயையும் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சரண்யா சரவணன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அறந்தாங்கி அருகே மத நல்லிணக்க மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
    • 21 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஏனாதி கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் சேக் இஸ்மாயில் ஒலியுல்லா தர்கா இணைந்து நடத்தும் மத நல்லிணக்க திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது. பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் பங்கேற்றன. 5 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு, நடுக்குதிரை, கரிச்சான் குதிரை என 32 ஜோடி மாடுகளும், 21 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.

    பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரைகளுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடு மற்றும் குதிரைகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பந்தையத்தை ரசிகர்கள் சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்து கண்டு ரசித்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஏனாதி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • அறந்தாங்கி அருகே விருதபுரீஸ்வரர் கோவில் இரட்டை தேரோட்டம் நடைபெற்றது
    • பக்தர்கள் அரோகரா, விருதபுரீஸ்வரா என்ற நாமத்தைக் கூறி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருப்புனவாசல் ஸ்ரீ விருதபுரீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கியது முதல் இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் ஊர் முக்கியஸ்தர்கள், மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரட்டை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    முதல் தேரில் ஸ்ரீ விருதபுரீஸ்வரர் சாமியும், 2-வது தேரில் ஸ்ரீ பெரியநாயகி அம்பாளையும் எழுந்தருளச் செய்தனர். அப்போது பக்தர்கள் அரோகரா, விருதபுரீஸ்வரா என்ற நாமத்தைக் கூறி தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலை சுற்றி நான்கு வீதிகளிலும் தேர்கள் வலம் வந்தது. திருத்தேர்களில் அமர்ந்திருந்து விருதபுரீஸ்வரர், பெரியநாயகி அம்பாள் சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆலயத்தைச் சுற்றிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருப்புனவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • அறந்தாங்கி அருகே அழிஞ்சி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • இதில் ஏராளமான சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அம்பலவானேந்தல் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ அழிஞ்சி அய்யனார் சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 30-ந்தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3 நாட்களாக 4 கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மோகன் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நெல் சாகுபடியில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்த வேளாண்மை அதிகாரி ஆலோசனை கூறியுள்ளார்
    • அருகம்புல், கோரை ஆகிய களைகள் இந்நோய்க்கு மாற்று உறைவிடமாக இருக்கும்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இந்நோயானது இளம் பயிரைத் தாக்கும்போது 60 சதவீதத்திற்கும் மேல் சேதம் விளைவிக்கிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட பயிரின் மேல் மழைநீர்பட்டு வழிந்தோடுவதாலும், பெருங்காற்று வீசும்போது பயிர்கள் ஒன்றோடொன்று உரசுவதால் உண்டாகும் காயத்தாலும் பரவுகிறது.

    காற்றுடன் தொடர்ந்து பெய்யும் மழைத்தூறல், மந்தமான தட்பவெப்பநிலை, அதாவது 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் நிலவுதல், காற்றினில் ஈரப்பதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருத்தல் ஆகியன இந்நோய் பரவுவதற்கு உகந்த சூழல்களாகும். நிழலான பகுதிகள், நெருக்கமாகப் பயிரிடப்பட்டு தழைச்சத்து அதிகமாகவும், சாம்பல் சத்து குறைவாகவும் இடப்பட்ட வயல்கள் போன்றவற்றிலும் இதன் தாக்குதல் அதிகம் காணப்படும். அருகம்புல், கோரை ஆகிய களைகள் இந்நோய்க்கு மாற்று உறைவிடமாக இருக்கும்.

    எனவே அந்தக் களைகளை முழுவதுமாக அழித்து விட வேண்டும். நோய் தாக்கப்பட்ட இலைகளை அல்லது பயிரினைப் பறித்து அழித்து விட வேண்டும். இதனால் மற்ற பயிர்களுக்கு இந்நோய் பரவாது. நோய் தாக்கப்பட்ட வயல்களிலிருந்து அருகிலிருக்கும் வயல்களுக்குக் கண்டிப்பாக நீர்பாய்ச்சுதல் கூடாது. மேலும் வயலில் அதிகமாக நீர்நிறுத்தவும் கூடாது. நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20 சதவீதப் பசுஞ்சாணக் கரைசல் தெளிக்க வேண்டும்.

    இதற்கு ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் நீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வடிகட்டிப் பெறப்படும் தெளிந்த கரைசலுடன் 100 லிட்டர் நீரைக் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்க வேண்டும். தாக்குதல் அதிகமாகக் இருந்தால் காப்பர்ஆக்சிகுளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை 120 கிராம் ஆகிய மருந்துக் கலவையினை 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்து இந்நோயினை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    புதுக்கோட்டை :

    ஆலங்குடியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவிலூர் பஸ் நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்த கே.வி.கோட்டையை சேர்ந்த முத்து (வயது 40), பள்ளத்திவிடுதி வடக்கு பட்டியை சேர்ந்த நாடியான் (47) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ×