என் மலர்
புதுக்கோட்டை
- பொன்னமராவதி நாச்சியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது
- ஏராளமான பக்தர்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அழகிய நாச்சியம்மன் கோவிலில் இரண்டாம் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும்.ஆண்டுதோறும் ஆடி மாதம் காப்புகட்டப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் சந்தன காப்பு சாத்தப்பட்டு நாள் தோரும் சாமி திருவீதி உலாவும் அதனைத்தொடர்ந்து கோவிலில் திருத்தேரோட்டமும் நிறைவுற்று ஆடி கடைசி ஞயிற்றுக்கிழமையான நேற்று மழைவேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு நன்மைக்காகவும்1008 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.இதில் பொன்னமராவதி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கோவிலில் அன்னதானமும் வழங்கப்பட்டன.
- திருப்புனவாசல் அரசு உதவி பெறும் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
- கல்வி போதித்த ஆசிரியருக்கு தங்க மோதிரம் பரிசு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா திருப்புனவாசல் கிராமத்தில் அரசு உதவி பெறும் ஸ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 900க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி,ஆசிரியர்களை பாராட்டுதல் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.படிக்கும் போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.மேலும் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களை அழைத்து சிறப்பு செய்தனர்.அதனை தொடர்ந்து சுப்பிரமணியன் ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தி அவருக்கு தங்க மோதிரம் பரிசாக அளித்தனர்.அதனை தொடர்ந்து அனைவரும் ஒன்று கூடி செல்பி எடுத்துக் கொண்டனர். அதோடு மட்டுமல்லாது முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவு வூட்டி தங்கள் பாசத்தை வெளிப்படுத்தி கொண்டனர். முன்னாள் மாணவர்கள் நடத்திய நிகழ்வானது காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- அறந்தாங்கி அருகே முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்றது
- 500க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்தனர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா பாண்டிபத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆவணி மாதத்தில் பொங்கல் விழா நடைபெறும்.10 நாட்கள் நடைபெறுகின்ற விழாவில் தினந்தோறும் அம்மன் வீதி உலா மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெறும். அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக பூமிதி, காவடி எடுப்பு நடைபெறும். அதே போன்று இந்தாண்டு விழாவை முன்னிட்டு நேற்று பூத்தட்டு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுகளை தலையில் சுமந்து, கிராமத்தின் முக்கிய வீதி வழியாக சென்று முத்துமாரியம்மன் கோவிலை அடைந்தனர்.அதனை தொடர்ந்து கொண்டு வரப்பட்ட பூக்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது.வருகின்ற 18-ந் தேதி லெட்சார்ச்சனையும். அதனை தொடர்ந்து 20 -ந் தேதி காப்புக்கட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்குகிறது.
- ஆலங்குடியில் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்
- ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை,
ஆலங்குடி அருகே சுடலக்கொல்லையை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 27). டிரைவர். இவர் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து வீட்டின் அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- திருக்கோகர்ணத்தில் பழங்காலப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது
- வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடந்த கண்காட்சியினை ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பழங்காலப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் ஆலோசகர் கவிஞர் அஞ்சலி தேவிதங்கம்மூர்த்தி தொடங்கிவைத்தார்.பின்னர் அவர் பேசிய போது,இந்தக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருட்களைப் பார்க்கின்ற போது நமக்கு பழைய ஞாபகங்கள் வந்துவிடுகின்றன. மரத்தாலான பொருட்கள், பீங்கான்பொருட்கள், போன்ற அரியவகை பொருட்களை இந்தத்தலைமுறை அறிந்து கொள்ள இந்தக்கண்காட்சி பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.நெகிழிப்பயன்பாடுகளை தவிர்க்கவேண்டிய கட்டயாத்திலிருக்கின்ற இந்தக்காலத்தில் இதுபோன்ற பழையபுராதன பொருட்கள் மறுபடி பயன்பாட்டுக்கு வந்தால் இயற்கையை பாதுகாக்கலாம் காண்போரை வியக்கவைத்தது கண்காட்சி என்று தெரிவித்தார்.இந்தகண்காட்சியை ஏற்பாடு செய்து நடத்திய முற்போக்குஎழுத்தாளர் சங்கத்தின் நகரத்தலைவர், தொல்லியல்துறை மாவட்டப் பொறுப்பாளர் கவிஞர் சு.பீர்முகமது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை பற்றிய விளக்கங்களை பார்வையாளர்களுக்கு விளக்கினார்.விழாவில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, கோமதிப்பிள்ளை ஆசிரியர்கள் கணியன்செல்வராஜ், உதயகுமார், கவிஞர்கள் சுரேஷ் மான்யா, புதுகைப்புதல்வன், ஈழபாரதி. பேராசிரியர் ராமன், மற்றும் ஏராளமானபொதுமக்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.
- புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் மாணவியின் குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கலந்த 2 மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
- மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட உள்ளது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே கீழையூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.சம்பவத்தன்று 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி தனது குடிநீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தார். அப்போது அவருக்கு உடனடியாக வாந்தி ஏற்பட்டது. இதனை பார்த்தஅந்த பாட்டிலில் இருந்த குடிநீருடன் சிறுநீர் கலந்திருந்தது, ஆசிரியர்கள் விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம் பற்றி அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் குடிநீரில் அசுத்தத்தை கலந்தது 2 மாணவர்கள் என்று தெரியவந்தது.இதையடுத்து இன்று அந்த மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் பள்ளிக்கு வரவழைத்தனர். மேலும் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மஞ்சுளா மற்றும் அதிகாரிகள் சென்று விசாரித்தனர். சம்பந்தப்பட்ட 2 மாணவர்களும் குடிநீர் பாட்டிலில் அசுத்தம் கலந்ததை ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து 2 பேருக்கும் மாற்றுச்சான்றிதழை உடனடியாக அதிகாரிகள் வழங்கினர். மேலும் அந்த 2 மாணவர்களின் எதிர்கால படிப்பு பாதிக்காத வகையில் இருவரையும் வெவ்வேறு அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கந்தர்வகோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- மண்வளம் குறித்தும், சுகாதாரம் காப்பது குறித்தும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் என்னுடைய தாய் மண்- எனது தேசம் என்ற தலைப்பில் பொது சுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் மண் வளத்தை காக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பைகள் பயன்படுவதை தடுத்து மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மரக்கன்றுகள் நடவு செய்து கிராமத்தின் பொது சுகாதாரம் மற்றும் கழிப்பறைகளை பயன்படுத்துதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றிய ஆணையர் பால் பிரான்சிஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள் ,வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மண்வளம் குறித்தும், சுகாதாரம் காப்பது குறித்தும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை ஒன்றிய சுகாதார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி ஒருங்கிணைத்திருந்தார்.
- கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற விழா நடைபெற்றது
- பண்டைய தமிழர்களின் நாகரீகம், வாழ்வியல் முறை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வலியுறுத்தல்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற விழா, தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் வெ.பழனிவேலு தலைமையில் நடைபெற்றது.உதவி தலைமை ஆசிரியர் தெய்வீகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் பேசும் பொழுது, தமிழகத்தின் தொல்லியல் ஆய்வுகள் நோக்கம் குறித்தும் செயல்பாடுகள் பற்றியும் அதில் மாணவர்களின் பங்கு குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் பண்டைய தமிழர்களின் நாகரீகம் | வாழ்வியல் முறை குறித்து அறிந்து கொள்ளவும் பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறினார். விழாவில் ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மாணவர் கோகுல கண்ணன் நன்றி கூறினார்.
- ஆலங்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. கருத்து கேட்பு கூட்டம் அரசடிப்பட்டியில் நடைபெற்றது
- சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அரசடிப்பட்டியில் நடைபெற்ற கழக உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கழக உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். அவருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்டத் துணைச் செயலாளர் ஞான இளங்கோவன், ஒன்றிய செயலாளர் வடிவேல், ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார், துணை செயலாளர் செங்கோல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டையில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையுடன் இணைந்து பேரணி சென்றனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையுடன் இணைந்து நடத்திய போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மணமல்லி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் போதை பழக்கத்திற்கு எதிராக கோஷமிட்ட வாறு மாணவர்கள் சென்றனர்.நிறைவாக மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணரர் உறுதிமொழிஎடுத்துக்கொண்டனர்.இந்த நிகழ்வில் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, காவலர்கள் சங்கர நாராணண், கந்தவேல், செபஸ்டின், பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், பள்ளியின்ஒருங்கிணைப்பாளர்கள் கெளாரி அபிராமசுந்தரி ஆசிரியர் கமல்ராஜ், காசாவயல் கண்ணன், உதயகுமார், கணியன் செல்வராஜ், ராமன் மற்றும் ஏராளமான மாணவ,மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டையில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
- தொடர் விபத்துகளும் நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் சாலையின் நடுவே உயரம் கூடியும், சாலையின் இருமருங்கிலும் பள்ளம் ஏற்படும், உயரம், தாழ்வு கொண்ட சாலையாக மாறி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள், பேருந்துகளில் இருந்து இறங்கும் முதியவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. மேலும் தொடர் விபத்துகளும் நடக்கிறது.எனவே பயணிகள் ,பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்று கந்தர்வகோட்டை வர்த்தக சங்கம் சார்பில் மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொன்னமராவதி உடையாபிராட்டி அம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது
- விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பொன்-புதுப்பட்டி உடையாபிராட்டி அம்மன் கோயிலில் ஆடி மாத திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். அதேபோன்று இவ்வாண்டு பாலாஜி குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சந்தன காப்பு சேர்த்தப்பட்டது. பின்னர் 1008 பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி மலர்களினாலும், குங்குமதினாலும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இவ்வாறு 1008 திருவிழாக்கு ஏற்றி வழிபாடு செய்வதன் மூலமாக மனித வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதனை ஐதிகமாக கொண்டு இக்கோயிலில் பல வருடங்களாக இந்த திருவிளக்கு பூஜை வழிபாடு என்பது இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொன்னமராவதி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் தீயணைப்பு படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.






