என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • ஆவணம்-கைகாட்டி பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • அவர்களிடம் இருந்து ரூ.4,060 மற்றும் 4 செல்போன்கள், 105 ஆன்லைன் லாட்டரி சீட்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வடகாடு அருகேயுள்ள ஆவணம்-கைகாட்டி பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஆவணம்-கைகாட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடை அருகே சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட அணவயல் ஆண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 50), அணவயல் வதங்கன் தெருவை சேர்ந்த புஷ்பராஜ் (40) ஆகியோரை வடகாடு போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.4,060 மற்றும் 4 செல்போன்கள், 105 ஆன்லைன் லாட்டரி சீட்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    • புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது
    • அன்றைய தினங்கள் மதுபானம் விற்பனை நடைபெறாது என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வருகிற 28-ந் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளாகும். இதேபோல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி காந்தியடிகள் பிறந்தநாள். இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள், ஓட்டல் பார்கள் வருகிற 28-ந்தேதி மற்றும் 2-ந் தேதி ஆகிய 2 நாட்கள் விடுமுறையாகும். அன்றைய தினங்கள் மதுபானம் விற்பனை நடைபெறாது என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

    • கந்தர்வகோட்டை அண்டனூரில் தூய்மை பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்
    • துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணி மேற்கொண்டனர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கம் சார்பில்"குப்பை இல்லா இந்தியா" பிரச்சார இயக்கம் மூலம் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அண்டனூர் ஊராட்சி வேலாடிப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் தலைமையில் கிராம இளைஞர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் இணைந்து தூய்மை பணி மேற்கொண்டனர் இதில் ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி எழுத்தர் இளவரசன் , வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமியும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.

    • அன்னவாசல் புதுத்தெருவை சேர்ந்த 4 வயது சிறுவன் காதில் இருந்த கல் அகற்றப்பட்டது
    • அரசு டாக்டர் வெற்றிகரமாக காதில் இருந்த கல்லை அகற்றினார்

     புதுக்கோட்டை,

    அன்னவாசல் புதுத்தெருவை சேர்ந்த 4 வயது சிறுவன் நேற்று தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது காதுவலியால் அலறி துடித்தான். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் டாக்டர் மணியன் சிறுவனை பரிசோதித்தபோது அவனது காதில் சிறிய அளவிலான கல் இருப்பதை கண்டறிந்தார். அதன்பின்னர் சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவனின் காதில் இருந்த கல்லை வெளியில் எடுத்தார். பின்னர் சிறுவன் சகஜ நிலைக்கு திரும்பினான். இதையடுத்து அரசு டாக்டருக்கு சிறுவனின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

    • மிரட்டுநிலை கிராமத்தில் கதண்டு கடித்து தொழிலாளி பலியானார்
    • அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை,

    அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 55), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மிரட்டுநிலையில் உள்ள தென்னை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது அங்கு இருந்த கதண்டு இவரை கடித்துள்ளது. இதையடுத்து அவர் அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இந்தநிலையில் நேற்று அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆரோக்கியம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா.ஜ.க. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பில் ஆலங்குடியில் 730 மரக்கன்றுகள் வழங்கும்
    • தேக்கு, செம்மரம், புங்கை, பலா, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

    ஆலங்குடி, 

    பிரதமர் மோடியின் 73 -வது பிறந்தநாள் விழாவை ஓராண்டு காலத்திற்கு கொண்டாட பா.ஜ.க. கட்சியினர் திட்டமிட்டு ள்ளனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோ ட்டை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பில் ஆலங்குடியில் 730 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட சுற்றுச்சூழல் தலைவர் முருகேசன் தலைமை வைத்தார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார்.

    வடகாடு முக்கம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜெகதீசன் கலந்து கொண்டு தேக்கு, செம்மரம், புங்கை, பலா, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

    பொது மக்களுக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பயணிகளுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் வழங்கி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை அக்கறையோடு வளர்க்குமாறு அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் ஓட்டுனர் அணி குமார், முத்துவேல் வாண்டையார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிராம நிர்வாக அலுவலர்களை ஈடுபடுத்துவதில் விலக்களிக்க வேண்டும்அரங்க. வீரபாண்டியன் வலியுறுத்தல்
    • கணினி பயிற்சியையும் புறக்கணிப்பதாக நாங்கள் தெரிவித்தோம்

    புதுக்கோட்டை, 

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் அரங்க. வீரபாண்டியன் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டிஜிட்டல் பயிர் சர்வே முறையை அடிப்படையாகக் கொண்டு சாகுபடியை பதிவேற்ற தமிழக அரசு திட்ட மிட்டுள்ளது.

    மேற்படி திட்டம் அண்டை மாநிலமான ஆந்திராவில் முதலில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் அதிகாரிகள் மற்றும் நில அளவர்கள் ஆகியோர் மூலம் செய்து வந்தனர்.

    பின்னர் தற்போது 2022 -2023-ல் ஒவ்வொரு கிராமங்களிலும் "சச்யவாலா" என்று பல துறைகளை சார்ந்த ஒருங்கிணைந்த குழு மூலம் இத்திட்டம் பயிர் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது.

    அதே நேரம் பேரிடர் காலங்களில் மட்டும் கிராம நிர்வாக அலுவலர்கள் இழப்பீடுகளை கணக்கிட இப்பணியில் நேரடியாக செயல்படுத ்தப்படுகிறார்கள்.

    கர்நாடக மாநிலத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் டிஜிட்டல் பயிர் சர்வே பணியை செய்ய 1000 முதல் 1500 உட்பிரிவுகளுக்கு தலா ஒரு நபர் வீதம் என நியமித்து ஒரு உட்பிரிவுக்கு ரூபாய் பத்து என கர்நாடக வேளாண்மை துறை மூலம் வழங்கப்படுகிறது.

    எனவே இதுபோன்று தனி நபர்களை நியமித்து நமது மாநிலத்திலும் இப்ப பணியை செய்ய வேண்டும்.

    இதற்காக கடந்த 8-ந் தேதி தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் வருவாய் செயலாளர் ஆகியோர்களை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் சுரேஷ், ராஜேந்திரன், முத்துச்செல்வன், நல்ல கவுண்டன், விஸ்வநாதன் உள்ளிட்டவருடன் சென்று இடர்பாடுகளை கூறியுள்ளோம்.

    இது தொடர்பான கணினி பயிற்சியையும் புறக்கணிப்பதாக நாங்கள் தெரிவித்தோம் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கறம்பக்குடியில் விநாயகர் சிலை ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன

    கறம்பக்குடி,  

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சீனி கடை முக்கம், தென்னகர், சடையன் தெரு, பேருந்து நிலையம், நரங்கியப்பட்டு, உள்பட 9 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

    இதை தொடர்ந்து சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்ப ட்டிருந்த விநாயகர் சிலை கள் தாரை தப்பட்டைகள் முழங்க கறம்பக்குடி சீனி கடை முக்கம் பகுதிக்கு ஊர்வலமாக சென்றடைந்தன.

    பின்னர் அங்கிருந்து சிலைகளின் ஒன்றுபட்ட ஊர்வலம் நடைபெற்றது. இந்துக்களின் ஒற்றுமை எழுச்சி ஊர்வலம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தை பாஜக மற்றும் இந்து முன்னணி மாநில மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி வைத்து பேசினார்கள்.

    இந்த ஊர்வலம் சீனி கடை முக்கத்தில் தொடங்கி திருவோணம் சாலை, தட்டாவூரணி சாலை, தட்டார தெரு, கடைவீதி, பள்ளிவாசல் வீதி, பேருந்து நிலையம், கச்சேரி வீதி, புதுக்கோட்டை ரோடு வழியாக சென்று திருமணஞ்சேரி அக்கினி ஆற்றை அடைந்தது.

    பின்னர் விழா குழுவினர்கள் பூஜைகள் செய்து ஆற்றில் சிலைகளை கரைத்தனர்.

    புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோர் தலைமையில் 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விநாயகர் சிலை ஊர்வலத்தினால் கறம்பக்குடியில் நேற்று மாலை 3 மணி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

    • மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்இளமுருகு முத்து கடும் கண்டனம்
    • சம்ப வத்தை அரங்கேற்றி யவ ர்களை தண்டிக்காமல் இது நாள் வரை காலம் தள்ளிய கொடுமையும் தான் மீண்டும் இது போன்றதொரு அவல த்தை நாம் காண வழி வகுத்துள்ளது.

    புதுக்கோட்டை 

    அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது,

    தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே பனைக்குளம் அரசு நடுநி லைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    இந்த அருவருப்பான, வெட்கக்கேடான, கேவல மான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    புதுக்கோட்டை மாவ ட்டம் வேங்கைவயல் அசி ங்கம் அடங்குமுன்பு அடுத்த அநியாயம் நடந்து ள்ளது.

    இந்த இழிசெயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அல்லது யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வேங்கை வயலில் பட்டி யிலன மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூரத்தை செய்த நபர்களை 300 நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை தமிழக அரசு கண்டு பிடிக்க முடியாததும்,

    அந்த கொடிய சம்ப வத்தை அரங்கேற்றி யவ ர்களை தண்டிக்காமல் இது நாள் வரை காலம் தள்ளிய கொடுமையும் தான் மீண்டும் இது போன்றதொரு அவல த்தை நாம் காண வழி வகுத்துள்ளது.

    இனி இது போன்ற கேவலங்கள், கொடூரங்கள் தொடராமல் இருக்க தமிழக அரசு, வேங்கை வயல் மற்றும் பனைக்குளம் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கதிராமங்கலத்தில்விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
    • வளர்ச்சி திட்டம் மூலம் கிடைக்கும் சலுகைகள் பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது

    அறந்தாங்கி, 

    ஆவுடையார்கோவில் தாலுகா கதிராமங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் சவிதா பயிற்சி குறித்து விளக்கி பேசினார். அப்போது வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்ட செயல்பாடுகள், வேளாண்மை கிடங்கில் உள்ள இடுபொருட்கள், விதை இருப்பு, நேரடி நெல் விதைப்பு தொழில்நுட்பங்கள், மானியம் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் கிடைக்கும் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. முகாமில் அங்கக விதை சான்றளிப்பு துறை அலுவலர் இளஞ்செழியன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜகுபர்அலி, பொறுப்பு அலுவலர் இன்பசேகரன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராமநாதன், கீர்த்திகா உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நரிமேட்டை சேர்ந்தவர் நிவேதா (வயது 27). இவர் சென்னையில் ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று புதுக்கோட்டைக்கு வந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கந்தர்வகோட்டை பகுதியில் நாளை காலை முதல் மாலை வரை மின் நிறுத்தம்
    • துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு

    கந்தர்வகோட்டை, 

    ஆதனக்கோட்டை , புதுப்பட்டி , பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை ,மின்னாத்தூர்,கணபதிபுரம் ,பெருங்களூர் ,தொண்டைமான் ஊரணி, வாராப்பூர் ,அண்டக்குளம், மண விடுதி, சோத்துபாைளை, சொக்கநாத பட்டி, மாந்தான் குடி ,காட்டு நாவல், மட்டையன்பட்டி , மங்களத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி 'வளவம்பட்டி ,சங்கம் விடுதி. கல்லாக்கோட்டை, மட்டங்கால் ,வேம்பன் பட்டி ,சிவன் தான் பட்டி ,வீரடிப்பட்டி, புதுப்பட்டி ,நம்புரான் பட்டி, மோகனூர் |பகட்டுவான் பட்டி ,பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி ,மங்கனூர், வடுகப்பட்டி ,பிசானத்தூர், துருசுப்பட்டி. வெள்ளாள விடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை(22ந்தேதி) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    ×