என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகே இரண்டு மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கு ஆலங்குடி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது
    • கருப்பையா மீது தற்கொலைக்கு தூண்டுதல் போக்சோ, மோசடி ஆகிய 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாஞ்சன்விடுதி யைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மாரிக்கண்ணு (வயது 40). கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு 3 மகன்கள் இருந்தனர்.

    அதில் ஒருவர் அரிமளத்தில் உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். தாயுடன் வசித்து வந்த இருவரும் அரசுப் பள்ளிகளில் முறையே பிளஸ்-2 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    இந்நிலையில், சித்தன்னவாசல் அருகே உள்ள கல்குவாரி பள்ளத்தில் குதித்து மாரிக்கண்ணு மற்றும் அவரது மகள்கள் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேரும் ஜூலை 3-ந்தேதி தற்கொலை செய்து கொண்டனர்.

    இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் மாரிக்கண்ணுடன் மாஞ்சன் விடுதியை சேர்ந்த கருப்பையா (36) கூடா நட்பு வைத்திருந்ததோடு அவரிடம் இருந்து 10 பவுன் நகைகள் வாங்கிக்கொண்டு கொடுக்க மறுத்து வந்ததுடன் அவரது மகளுக்கும் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதையடுத்து கருப்பையா மீது தற்கொலைக்கு தூண்டுதல் போக்சோ, மோசடி ஆகிய 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இந்த வழக்கு ஆலங்குடி காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்
    • நள்ளிரவில் அன்னம் கதவை திறந்த நிலையில் அவரது வீட்டிற்குள் 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் அதிரடியாக புகுந்த‌து

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை காவல் நிலையம் அருகே உள்ள ஆவுடையாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 66). இவர் பால்வளத் துறையில் கூட்டுறவு சார் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.‌

    இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், சம்பவத்தன்று வீட்டில் அவரின் மனைவி அன்னம் மற்றும் அவர்களது மருமகள் ரமாபிரபா ஆகியோர் இருந்துள்ளனர்.

    நள்ளிரவு 2.30 மணிக்கு மின்சாரம் இல்லாத நிலையில் இன்வெர்ட்டரை இயக்க ஆதிமூலத்தின் மனைவி அண்ணன் சென்ற நிலையில் யாரோ சிலர் கதவை தட்டி உள்ளனர். இதனையடுத்து அன்னம் கதவை திறந்த நிலையில் அவரது வீட்டிற்குள் 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் புகுந்த‌து.

    பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த மூன்று பேரின் வாயில் துணியை வைத்து அடைத்து பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டினர்.

    மேலும் அவர்களை தாக்கியதோடு அன்னம் மற்றும் அவரது மருமகள் ராமபிரபா அணிந்திருந்த 14 பவுன் தங்க நகைகளையும், பீரோவில் இருந்த ரூ.82,500 பணம், 2 விலை உயர்ந்த செல்போன்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இது குறித்து போலீசாருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் வல்லத்திராகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மேலும் சம்பவ இடம் வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே விசாரணை மேற்கொண்டார். கொள்ளை தொடர்பாக வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவல் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் கிராம அங்காடி அருகே சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அரசு சிமெண்ட் குடோன் உள்ளது.
    • பழுதடைந்து எந்த வேளையும் இடிந்து பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை அகற்ற பொதுமக்கள் அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் கோவிலூர் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் கிராம அங்காடி அருகே சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அரசு சிமெண்ட் குடோன் உள்ளது.

    மிகவும் பழுதடைந்து எந்த வேளையும் இடிந்து பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை அகற்ற பொதுமக்கள் அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    எனவே அங்காடி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் வரும் கிராம பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை உடனே அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொடி அசைக்கும் முன்பாகவே பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தொடங்கினர்.
    • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் பிரகதாம்பாள் கோவிலுக்கு இந்த புதிய தேர் செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர் பகுதியான திருக்கோகர்ணத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட புதுக்கோட்டை தேவஸ்தானஸ்துக்கு சொந்தமான பிரகதாம்பாள் உடனுறை கோகர்னேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருந்திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

    இதையடுத்து தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதால் இந்த ஆண்டு ஆடிப்பெருந்திருவிழவை சிறப்பாக கொண்டாட கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த 23-ந்தேதி ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரில் எழுந்தருளினர்.

    சரியாக காலை 8.50 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெறுவதால் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க தயாராக இருந்தனர். எப்போதும் கோவில் நிர்வாகம் சார்பில் கொடியசைத்த பின்னரே பக்தர்கள் தேரை இழுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    ஆனால் இன்று கொடி அசைக்கும் முன்பாகவே பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தொடங்கினர். இதையடுத்து நிலையத்தில் இருந்து இரண்டு அடி நகர்ந்திருந்த நிலையில் தேர் ஒருபக்கமாக சாய்ந்து கவிழ்ந்தது.

    இதில் தேரின் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த 5 பெண்கள் உள்பட 8 பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் பெயர், விபரம் வருமாறு:-

    அரிமளம் ராஜகுமாரி (வயது 64), புதுக்கோட்டை பழனியப்பா நகர் சரிகா (22), திருக்கோகர்ணம் விஜயலட்சுமி (65), வைரவன் (63), திருவப்பூர் ஜெயக்குமார் (54), அங்கம்மாள் (60), கலைச்செல்வி (47), அடப்பன்கார சத்திரம் ராஜேந்திரன் (48).

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டனர். பின்னர் காயம் அடைந்த அவர்களை ஆம்புலன்ஸ் வேன் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் தேர் கவிழ்ந்ததை பார்த்த அதிர்ச்சியில் 5 பேர் மயக்கமடைந்தனர். அவர்களை சிலர் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர்.

    சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஆகியோர் விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும் நவீன பொக்லைன் எந்திரம் மூலம் கவிழ்ந்த தேரை நிலை நிறுத்தும் பணியினையும் மேற்கொண்டனர்.

    தேர் புறப்பட்ட இடத்திலேயே கவிழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இன்னும் சில மீட்டர் தூரம் நகர்ந்திருந்தாலும் தேரின் இருபுறமும் இன்னும் ஏராளமான பக்தர்கள் சென்றிருப்பார்கள். அப்போது பாதிப்பும் அதிகமாக இருந்திருக்கும் என கூறப்பட்டது.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் பிரகதாம்பாள் கோவிலுக்கு இந்த புதிய தேர் செய்யப்பட்டது. 2 ஆண்டுகள் தேரோட்டமே நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு திருவிழாவில் தேர் கவிழ்ந்தது பக்தர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குரங்கு அம்மை நோய் தடயங்களுடன் வந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
    • சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    திருச்சி விமான நிலையத்துக்கு தினமும் 700 பேருக்கு மேல் வருகின்றனர். அதிகளவில் அரபு நாடுகளில் இருந்து திருச்சிக்கு வருவதால் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு, குரங்கு அம்மை நோய்க்கான தடயங்கள் காணப்பட்டது. அவரை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் யாரிடமும் சொல்லாமல் வெளியேறி ஊருக்கு சென்றுவிட்டார். இது குறித்து புதுக்கோட்டை சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சென்று அந்த நபரை அழைத்து வந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அவரிடமிருந்து ரத்தம், சிறு நீர், தொண்டை மற்றும் தோல் பகுதிகளில் எச்சில் போன்றவற்றை சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப் பிவைக்கப்பட்டுள்ளது. முடிவு வந்த பிறகே எதையும் கூற முடியும் என்றார்.

    • அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள தினமும் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
    • புதுக்கோட்டையில் புத்தக திருவிழா தொடக்கம்

    புதுக்கோட்டை:

    மாணவர்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள நாள்தோறும் குறைந்தது ஒரு மணி நேரமாவது புத்தகம் வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

    புதுக்கோட்டையில் 5-வது புத்தக திருவிழா கோலாகலமாக தொடங்கி யது. இதை மாநில சட்டத்து றை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

    புதுக்கோட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 5-வது புத்தகத் திருவிழா நகர்மன்ற வளாகத்தில் தொடங்கியது. இக்கண்காட்சி வருகிற ஆகஸ்ட் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    100 அரங்குகளில் ஆயி ரக்கணக்கான தலைப்பு களில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் வானியல் நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்தும் வகையிலான கோளர ங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. அரசின் பல்வேறு துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

    பின்னர் புத்தகம் வாங்குவதற்கு முதல் கட்டமாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கி அவர் பேசியதாவது :-

    புதுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அகிலன், அழ.வள்ளியப்பா ஆகியோரது நூற்றாண்டு விழாவின் போது புத்தகத் திருவிழா நடத்தப்படுவது பாராட்டுதலுக்கு உரியது. கொரோனா பரவலால்2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு எழுச்சியுடன் இத்திருவிழா நடைபெறுகிறது. தன்னுடைய சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ள புத்தக வாசிப்பு முக்கியமானது.

    நினைவாற்றல், அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள புத்தக வாசிப்பு அவசியமானது. படித்ததை ஆழமாக பதிய வைத்துக் கொண்டால் தான் எதிர்காலத்துக்கு நல்லது. எனவே மாணவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது புத்தகம் வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றார்.

    விழாவில் கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை, நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.கருப்பசாமி, கோட்டாட்சியர் (பொறுப்பு) கருணாகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • சார் பதிவாளர் அலுவலக எல்லை சீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பதிவுத்துறையின் சார்பில், புதுக்கோட்டை வருவாய் மாவட்டம் மற்றும் வருவாய் வட்டங்களின் அடிப்படையில், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை மற்றும் காரைக்குடி பதிவு மாவட்டங்களில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் எல்லை சீரமைப்பு தொடர்பான, பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, காரைக்குடி மற்றும் பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்தில் இயங்கிவரும் அறந்தாங்கி, பொன்னமராவதி, மீமிசல், சுப்பிரமணியபுரம், கீரமங்கலம் மற்றும் பேராவூரணி சார்பதிவகங்களில் உள்ள புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தை சேர்ந்த வருவாய் கிராமங்கள், அவை அமைந்துள்ள வருவாய் வட்டத்தில் உள்ள சார்பதிவகங்களுடன் இணைக்கப்பட உள்ளன.

    மேலும் புதுக்கோட்டை பதிவு மாவட்டத்திற்குட்பட்ட 1 எண் இணை சார்பதிவகம், ஆலங்குடி, அன்னவாசல், குளத்தூர், கீழாநிலை, திருமயம், கந்தர்வகோட்டை, பெருங்க@ர், மணமேல்குடி மற்றும் விராலிமலை சார்பதிவகங்களுக்குட்பட்ட வருவாய் கிராமங்களை அவை அமைந்துள்ள வருவாய் வட்டத்தில் உள்ள சார்பதிவகங்களுடன் இணைக்கப்பட உள்ளன.

    இதுதொடர்பான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் அரசிற்கு அனுப்பி மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    • புண்ணியவயல் கிராமத்தில் சாலை அமைத்துதர கோரி பொது மக்கள் போராட்டம் நடைபெற்றது
    • 2-வது நாளாக நடைபெறுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் புண்ணியவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் இவர்களுக்கு போதிய பாதை வசதி இல்லையென கூறப்படுகிறது. வயல்காடு பகுதியின் நடுவே குடியிருப்புகள் அமைந்துள்ளதால் வாய்க்கால் வரப்புகளையே பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

    மழைக்காலங்களில் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் அவசரகால மருத்துவத்திற்கு செல்லக்கூடியவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாது யாரேனும் இறக்க நேரிட்டால் விவசாய பயிர்களுக்கு நடுவே உடலை கொண்டு சென்று அடக்கம் செய்யும் சூழல் உள்ளது.

    தாங்களாகவே முன்வந்து தங்களது விவசாய நிலத்தில் இடம் ஒதுக்கீடு செய்து 90 சதவீதம் வரை மண் சாலை அமைத்துள்ளனர். ஆனால் மீதம் உள்ள 50 மீட்டர் அளவிற்கு சாலை அமைக்க மாற்று சமூகத்தை சேர்ந்த 2 குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தங்கள் இடத்தில் சாலை அமைக்கக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    நாங்கள் இதுவரை காடுகரைமேடுகளில் நடந்து விட்டோம் எங்கள் சந்ததிகளாவது தார்ச்சாலையில் நடக்கட்டும் என வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம் என்றனர். ஒரு வீட்டிற்கு பாதை இல்லையென்றால் அந்த வீட்டிற்கு பாதை விட வேண்டும் என்று சட்டம் இருக்கையிலும், மக்கள் பயன்பாட்டிற்காக நெடுஞ்சாலைகள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அரசு ஒரு கிராம மக்கள் போக்குவரத்திற்காக 5 அடி அகலம் நிலத்தை எடுத்து சாலை அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உணவுப் பொருட்கள் சரியான அளவில் வழங்க கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • பொதுவிநியோகம் திட்டம் குறித்து காலாண்டு கூட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பொதுவிநியோகம் திட்டம் குறித்த, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் மற்றும் தன்னார்வ நுகர்வோ ர் அமைப்புகளுடனான 2-வது காலாண்டு கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் பொதுவிநியோகம் திட்டம் குறித்த புகார்களை 1967 மற்றும் 1800 4255 901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி வழியே புகார் தெரிவிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும்,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைகள் குறித்தும், நடப்பு காலாண்டில் வழங்கப்பட்ட புதிய மின்னணு குடும்ப அட்டைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, நியாயவிலைக் கடைகளை இரண்டாக பிரித்து புதிய பகுதிநேர அங்காடி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் அனைத்து நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விபரங்கள், விலைப் பட்டியல், அங்காடி வேலை நேரம் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அலைபேசி எண்கள் உள்ளிட்டவைகள் காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கேட்டறிந்தார்.

    அதனைத் தொடர்ந்து, கலெக்டர் தலைமையில் நடைபெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான 2வது காலாண்டு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    உணவுப் பொருட்களை சரியான அளவிலும், தரத்திலும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், துணைப் பதிவாளர் (பொ) அப்துல் சலீம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • வாலிபர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஸ்கூட் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார்.
    • வாலிபர் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஸ்கூட் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி இருந்துள்ளது.

    இதையடுத்து, அந்த பயணி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நோய் பாதிப்பு ஒன்றும் இல்லை, அதனால் பயப்பட வேண்டாம் என டாக்டர் ஒருவர் அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனால் அவர் டிஸ்சார்ஜ் ஆகாமல் சொந்த ஊருக்கு சென்றார்.

    இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் அந்த வாலிபர் இல்லாததால் புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபரின் முகவரியை வைத்து அதிகாரிகள் நேற்று அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரிடம் பேசி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • முதுகுனம்மற்றும் சேவியர் குடிகாடு கிராமங்களில் உள்ள ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா அரவம்பட்டியில் நடைபெற்றது.
    • விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு 114 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாஅரவம்பட்டி, முதுகுனம்மற்றும் சேவியர் குடிகாடு கிராமங்களில் உள்ள ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா அரவம்பட்டியில் நடைபெற்றது.

    விழாவிற்கு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புதியரசன் தலைமை தாங்கினார். விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு 114 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக்மழவராயர், ஒன்றிய குழு உறுப்பினர் பாண்டியன், அரவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி சசிகுமார், துணைத்தலைவர் அருண் பிரசாத், கிராம நிர்வாக அலுவலர் சிவசக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தீயணைப்பு அதிகாரி வீட்டில் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி
    • உறவினர் வீட்டிற்கு சென்ற போது நடந்த விபரீதம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் புதுத்தெருவை சேர்ந்தவர் அருணகிரி மகன் ராஜ்குமர்(வயது 47). இவர் சிப்காட் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர், திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, டிரஸ்சிங் டேபிளில் இருந்த தங்கதோடு, மொபைல் போன், பவர் பேங்க் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வந்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    ×