என் மலர்
உள்ளூர் செய்திகள்

புண்ணியவயல் கிராமத்தில் சாலை அமைத்துதர கோரி பொது மக்கள் போராட்டம்
- புண்ணியவயல் கிராமத்தில் சாலை அமைத்துதர கோரி பொது மக்கள் போராட்டம் நடைபெற்றது
- 2-வது நாளாக நடைபெறுகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் புண்ணியவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் இவர்களுக்கு போதிய பாதை வசதி இல்லையென கூறப்படுகிறது. வயல்காடு பகுதியின் நடுவே குடியிருப்புகள் அமைந்துள்ளதால் வாய்க்கால் வரப்புகளையே பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
மழைக்காலங்களில் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் அவசரகால மருத்துவத்திற்கு செல்லக்கூடியவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாது யாரேனும் இறக்க நேரிட்டால் விவசாய பயிர்களுக்கு நடுவே உடலை கொண்டு சென்று அடக்கம் செய்யும் சூழல் உள்ளது.
தாங்களாகவே முன்வந்து தங்களது விவசாய நிலத்தில் இடம் ஒதுக்கீடு செய்து 90 சதவீதம் வரை மண் சாலை அமைத்துள்ளனர். ஆனால் மீதம் உள்ள 50 மீட்டர் அளவிற்கு சாலை அமைக்க மாற்று சமூகத்தை சேர்ந்த 2 குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தங்கள் இடத்தில் சாலை அமைக்கக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நாங்கள் இதுவரை காடுகரைமேடுகளில் நடந்து விட்டோம் எங்கள் சந்ததிகளாவது தார்ச்சாலையில் நடக்கட்டும் என வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம் என்றனர். ஒரு வீட்டிற்கு பாதை இல்லையென்றால் அந்த வீட்டிற்கு பாதை விட வேண்டும் என்று சட்டம் இருக்கையிலும், மக்கள் பயன்பாட்டிற்காக நெடுஞ்சாலைகள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அரசு ஒரு கிராம மக்கள் போக்குவரத்திற்காக 5 அடி அகலம் நிலத்தை எடுத்து சாலை அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.






