என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது
    • இத்திட்டத்தின் கீழ் நெல் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் கடந்த 15-ந் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    2023-24-ராபி சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் சம்பா பயிர் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும்பொழுது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நெல் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் கடந்த 15-ந் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனை மேலும் நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, பயிர் காப்பீடு செய்ய வருகிற 22-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு ள்ளது.

    எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் நெல் சம்பா பயிரிட்டுள்ள அனைத்து விவசாயிகளும் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி வரும் 22-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை தூக்கியெறியவேண்டும் என மக்கள் குரல் கொடுத்தனர்.
    • தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட ஆட்சியில் எந்தவித வளர்ச்சியும் இல்லை.

    பெரம்பலூர்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். நேற்று அவர் பெரம்பலூரில் யாத்திரையில் பங்கேற்றார்.

    பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கிய நடைபயணம் ரோவர் ஆர்ச், சங்குபேட்டை, சிவன் கோவில், கடைவீதி, தெப்பக்குளம் கனரா வங்கி, பழைய பஸ்ஸ்டாண்ட், காந்தி சிலை வழியாக வந்து ஆத்தூர் சாலை காமராஜர் வளைவு பகுதியில் முடிவடைந்தது.

    என் மண் என் மக்கள் யாத்திரையை ஜூலை 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கி தென் தமிழகம், கொங்கு மண்டலம் பூர்த்தி செய்து 107-வது சட்டசபை தொகுதியாக பெரம்பலூருக்கு யாத்திரை வந்துள்ளேன். எல்லா தரப்பு மக்களையும் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளேன்.

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை தூக்கியெறியவேண்டும் என மக்கள் குரல் கொடுத்தனர். ஏழை மக்களை பரம ஏழையாக மாற்றும் தி.மு.க. ஆட்சியை அகற்றவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

    தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே 32 சதவீதம் உற்பத்தி திறனில் வளர்ச்சியில் உள்ளது. பெரம்பலூரின் உற்பத்தி திறன் வெறும் புள்ளி 6 சதவீதம் கூட கிடையாது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் ஒரு சதவீதம் கூட உற்பத்தி திறனை அடையவில்லை. 70 ஆண்டுகளாக 6 முறை தி.மு.க. ஆட்சி புரிந்தும் உற்பத்தி திறன் பெறவில்லை.

    தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட ஆட்சியில் எந்தவித வளர்ச்சியும் இல்லை. தொழிற்சாலை கொண்டுவரவில்லை. வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை.

    பாசன வசதியை மேம்படுத்தவில்லை, விவசாயத்தை செழிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் தமிழகத்திற்கு புதிய அரசியல் தேவைப்படுகிறது. நம்மை ஒதுக்கிய அரசியல்வாதிகளை நாம் ஒதுக்கிவைக்கவேண்டும்.

    ஊழல் பட்டியல் வெளியிட்டு வருகிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. அமைச்சரவையில் உள்ள 35 பேரில் 11 பேர் மீது ஏற்கனவே ஊழல் வழக்கு உள்ளது.

    5 பேர் மீது தற்போது ஊழல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் இந்த அளவிற்கு ஊழல் செய்த அமைச்சர்கள் தமிழகத்தில் உள்ளனர். 30 மாதங்களில் ஊழலை சாதனையாக செய்துள்ளது தி.மு.க. அரசு.

    திருவண்ணாமலையில் சிப்காட்டிற்காக அரசு 3 ஆயிரத்து 200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்து 125 நாட்களாக அவர்களது விவசாய நிலத்தில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 விவசாயிகள் மீது தமிழக அரசு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது. இந்தியாவிலேயே விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்த ஒரே அரசு தி.மு.க. அரசு தான்.

    அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து சேர்த்த பட்டியலில் உலக அளவில் முன்னாள் மந்திரி ராசா பெயர் 2-வது இடத்தில் உள்ளது. கோவையில் அவருக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    9 ஆண்டில் மத்திய அரசு தமிழகத்திற்கு 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி கொடுத்துள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க. மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டுகிறது.

    தமிழகத்தில் தேர்தலில் அளித்த 511 தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என தி.மு.க. கூறுகிறது. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

    2014-ம் ஆண்டில் இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் 11-வது பெரிய நாடாக இருந்தது. தற்போது உட்கட்டமைப்பு, சாலை மேம்பாடு என அனைத்திலும் முன்னேற்றம் அடைந்து உலக அளவில் பொருளதாரத்தில் 5 இடத்திற்கு உயர்ந்துள்ளது. நாகரிகமான அரசியல் தமிழக மண்ணிற்கு வரவேண்டும், வளர்ச்சி சார்ந்த அரசியல் வரவேண்டும், ஏழை மக்கள் முன்னேற்றத்திற்கான அரசியல் வரவேண்டும். அப்படிபட்ட ஆட்சி வரவேண்டும் என்றால் மத்தியில் பா.ஜ.க. மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும். அதற்கான வாய்ப்பை நீங்கள் வழங்க வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    யாத்திரையில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில இணை பொருளாளர் சிவசுப்ரமணியம், மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் , மாநில பொதுக்குழு உறுப்பினர் ராம்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் செல்வராஜ் வரவேற்றார். முடிவில் நகர தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • பெரம்பலூரில் இன்று அண்ணாமலையின் பாதயாத்திரை நடைபெறுகிறது
    • நாளை லால்குடியில் நடக்கிறது

    பெரம்பலூர்,

    பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் என் மண், என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி பெரம்ப லூரில் இன்று நடைபெறு கிறது .

    பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் யாத்திரை ரோவர் ஆர்ச், சங்குப்பேட்டை, சிவன் கோவில், கடைவீதி, தெப்ப குளம், கனரா வங்கி, அம்பேத்கர் சிலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை வழியாக காமராஜர் வளைவு பகுதியில் நிறைவடைகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடையில் அண்ணாமலை பேசுகிறார்.

    இந்த யாத்திரையில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகா னந்தம், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

    இதனைத் தொடர்ந்து அவர் நாளை(17-ந்தேதி) லால்குடி தொகுதியில் மதியம் 3 மணிக்கு தனது யாத்திரையை தொடங்குகிறார். லால்குடி அருகே ஆங்கரை பிள்ளையார் கோவில் அருகில் யாத்திரையை தொடங்கும் அண்ணா மலைக்கு புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், மாவட்ட பார்வையாளர் யோகிதாசன் தலைமையில் பா.ஜ.க.வினர் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    திருச்சி மெயின் ரோடு வழியாக ஆங்கரை, மலை யப்பபுரம், சந்தைப்பேட்டை, லால்குடி ரவுண்டானா சென்று அங்கு நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை புறநகர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் செய்து வருகின்றனர்

    • பெரம்பலூரில் நடன செவ்வியல் போட்டி நடைபெற்றது
    • தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மாணவி சாதனை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலா உற்சவப் போட்டிகளான வாய்ப்பாட்டு இசைசெவ்வியல், நடனம் செவ்வியல், நாடகம், இசைக்கருவி தாளவாத்தியம், காண்கலை, இருபரிமாணம் காண்கலை, முப்பரிமாணம் நடனம், பாரம்பரிய நாட்டுப்புறவகை, உள்ளூர் தொன்மை பொம்மை விளையாட்டுகள் போன்ற பல்வேறு வகையான போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட சாரணர் கூட்ட அரங்கில் நடைபெற்றன.

    இதில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி வே.ஹாசினி நடன செவ்வியல் போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    மேலும் வருகின்ற 17-ந் தேதி சேலத்தில் வைஷ்யா கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான கலை பண்பாட்டு போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

    நடன செவ்வியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    பள்ளியின் முதன்மை முதல்வர், துணை முதல்வர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    .

    • விமல்ராஜா வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார்.
    • பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜா. இவருக்கும் திருச்சி மாவட்டம், தாத்தையார்பேட்டையை சேர்ந்த நடேசன் மகள் கோகிலா (28) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கோகிலாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இரு வீட்டார்களும் பேசி விமல்ராஜாவையும் கோகிலாவையும் பிரித்து வைத்துள்ளனர். தற்போது விமல்ராஜா வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார்.

    விமல்ராஜா தன்னை பிரிந்ததற்கும், 2-வது திருமணம் செய்ததற்கும் அவரது அக்காள் கணவர் தனபால் (வயது 50) காரணம் என்று கோகிலா சந்தேகம் அடைந்தார். இதையடுத்து சம்பவத்தன்று ஈச்சம்பட்டியில் உள்ள தனபாலின் வீட்டிற்கு வந்த கோகிலா அவரது மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்தார்.

    இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து கோகிலாவை கைது செய்தனர்.

    • பெரம்பலூரில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடைபெற்றது
    • விழாவை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது

    பெரம்பலூர்,

    70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்  மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இணைப்பதிவாளரும் அலுவலக துணைபதிவாளருமான அப்துல் சலீம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் இந்திரா, சங்க செயலாட்சியர் தாரணி மற்றும் அலுவலர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் (துணைப்பயிற்சி நிலையம்) 2023-24-ம் ஆண்டு 23-வது அஞ்சல் வழி மற்றும் பகுதி நேர (மாற்றத்திற்குட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி (புதிய பாட்திட்டத்தின்படி) விரைவில் தொடங்கப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.100-ஐ இணையவழியில் செலுத்த வேண்டும்.10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ப்ளஸ்-2 தேர்ச்சி பெற்ற வர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தினை அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பத்தினை வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

    • பெரம்பலூரில் அ.தி.மு.க. பிரமுகர் ஓட்டலை அடித்து நொறுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
    • மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் விளாமத்தூர் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாமுண்டி துரை(வயது 39). அ.தி.மு.க. பிரமுகரான இவர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி பிரிவு ரோடு அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இவரது ஓட்டலுக்கு அடையாளம் தெரியாத வகையில் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வந்த சிலர் டேபிள், சேர், ஃப்ரிட்ஜ், டிவி உள்ளிட்ட பொருட்க ளை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிவிட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். அப்போது அப்பகுதி யில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். இந்த விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது அய்யலூரை சேர்ந்த கலையரசன் (24), வெண்பா வூரை சேர்ந்த அழகேந்திரன் (35), வரகுபாடியை சேர்ந்த விக்னேஷ்(24) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கல்குவாரி ஏலத்தில் மோதல் எதிரொலியாக கனிம வளத்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்
    • மற்றொரு அதிகாரி நீண்டநாள் விடுப்பு எடுத்து சென்றார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 31 குல்குவாரிகள் ஏலம் விடுவதற்கான டெண்டர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி நடந்தது. அப்போது டெண்டர் கோரி விண்ணப்பிக்க வந்த பா.ஜ.க.வினரையும், அரசுத்துறை அதிகாரிகளையும், காவல்துறையினரும் தி.மு.க.வினர் தாக்கியதோடு, அலுவலக பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதமாக்கினர். இதனால் கல்குவாரி டெண்டரை ரத்து செய்து கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்.

    இது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் (பொ) ஜெயபால் பெரம்பலூர் போலீசில் புகார் அளித்ததன்பேரில் 20-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குபதிந்து 13 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

    கல்குவாரி டெண்டர் விசயத்தில் அரசு அலுவலர்கள் பா.ஜ.க.வினருக்கு ஆதராக செயல்பட்டனர் என தி.மு.க.வினர் கூறி வந்த நிலையில் வன்முறை சம்பவத்தின் எதிரொலியாக கனிம வளத்துறை அதிகாரிகள் திடீரென கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு உள்ளள்ளனர். கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் ஜெயபால் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார்.

    திருச்சி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை இனை இயக்குநர் சரவணன் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குனர் பொறுப்பையும் சேர்ந்து கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றிய தற்காவிக ஊழியர்களை தவிர அனைத்து அலுவலர்களும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய குமரிஅனந்தன் குன்னம் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும், அவருக்கு பதிலாக அங்கு குன்னம் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய நாராயணசாமி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கும், துணை தாசில்தார் மணிமேகலை கலெக்டர் அலுவலச சம்பள பிரிவு துணை தாசில்தாராகவும், அவருக்கு பதிலாக நில எடுப்பு பிரிவு துணை தாசில்தார் சீனிவாசன் பெரம்பலூருக்கும் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மோதல் சம்பவத்தின்போது தாக்கப்பட்ட உதவி புவியியலாளர் இளங்கோவன் மனஉளைச்சல் அடைந்து நீண்ட நாள் விடுப்பில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூருக்கு உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள சரவணன் ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் துணை இயக்குநராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றிள்ளார்.

    பதவி உயர்வு பெற்று 7 மாவட்டங்களை உள்ளடக்கிய புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநராக திருச்சியில் பணிபுரிந்து வருகிறார். தற்போது சரவணணை கூடுதல் பொறுப்பாக பெரம்பலூருக்கு நியமித்து சென்னை கனிம வள துறை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. சரவணன் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தை சேர்ந்தவர் என்பதும், முன்னாள் அமைச்சர் ராஜாவின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • பெரம்பலூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் ஓட்டலில் புகுந்த மர்மகும்பல் பொருட்களை அடித்து நொறுக்கியது
    • வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் விளாமுத்தூர் கிராமம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாமுண்டிதுரை (வயது 39). இவரது மனைவி பிரியா. அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.

    மாமுண்டிதுரை கல்பாடி பிரிவு சாலை அருகே ஓட் டல் வைத்து நடத்தி வருகி றார்.இந்த நிலையில் தீபாவளி அன்று அதிகாலையில் மாமுண்டி மற்றும் பணியா ளர்கள் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது 6 பேர் கொண்ட கும்பல், தங்களது முகத்தை துணியால் கட்டி மறைத்துக் கொண்டு, ஓட்ட லுக்குள் புகுந்தது.இவர்களை பார்த்த மாமுண்டிதுரை மற்றும் பணியாளர்கள் அதிர்ச்சி யடைந்து அவர்களை யார் நீங்கள்? எதற்காக முகத்தை மூடியுள்ளீர்கள் என்று கேட்டனர்.ஆனால் அந்த கும்பல் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், குளிர்சாதன பெட்டிகள், டி.வி. ஆகியவற்றை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

    இந்த சம்பவம் குறித்து மாமுண்டிதுரை பெரம்ப லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு ெசய்த போலீ சார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வை யிட்டு விசாரணை நடத்தி னர்.இந்த சம்பவத்திற்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா? என பல்வேறு கோண ங்களில் விசாரணை நடத்தி வரு கின்றனர். ஓட்டலில் புகுந்து பொருட்களை மர்மநபர்கள் அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வளைதளங்களில் வைராலாகி வருகிறது.

    • பெரம்பலூரில், நாளை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது
    • பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் கூட்டம், பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

    பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம், என்று பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    • தீபாவளியன்று தீ பற்றி எரிந்த கூரை வீடு
    • மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் ராசி நகரில் வசித்து வருபவர் கலியபெருமாள் மகன் கோவிந்தராஜ் (58), பந்தல் அமைப்பு காண்ட்ராக்டர் . அருகில் இருக்கும் தமக்கு சொந்தமான வீட்டில் தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இவரது கூரை வீடு மின் கசிவால் நேற்று தீ பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து தீயை அணைத்தனர் .

    மேலும் கூரை வீட்டில் பந்தல் போடும் பணிக்கான துணிகள், சோபா ஆகிய பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×