என் மலர்
பெரம்பலூர்
- 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இரு சக்கர வாகனம் திருட முயன்ற
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள சு.ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் கோமதி. இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்தநிலையில் நள்ளிரவு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எழுந்து பார்த்தனர். அப்போது 2 வாலிபர்கள் கோமதியின் மோட்டார் சைக்கிளை திருட முயற்சி செய்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் கையும், களவுமாக பிடித்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அத்தியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி (வயது 30), அதே கிராமத்தை சேர்ந்த முனியப்பன் (22) என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
- மண்டல அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது
- 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்
பெரம்பலூரில் மண்டல அளவிலான செஸ் போட்டி துறையூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 8, 10, 12, 15, 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு திறமையுடன் காய்களை நகர்த்தி விளையாடினார்கள். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ உயிர்ச்சத்து திரவம் கொடுக்கும் முகாம் தொடங்க உள்ளது
- 4-ந் தேதி தொடங்குகிறது.
பெரம்பலூர்
6 மாதம் முதல் 60 மாதம் வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் 'ஏ' உயிர்ச்சத்து திரவம் 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. வைட்டமின் 'ஏ' திரவம் குழந்தைகள் சராசரி வளர்ச்சியடைய உதவி செய்கிறது. மேலும் கண் பார்வை குறைபாடு வராமல் தடுக்கிறது. அதனடிப்படையில், வருகிற 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 43,448 குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உதவியுடன் வீடு வீடாக சென்று வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்படவுள்ளது. 6 மாதம் முதல் 60 வது மாதம் வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் கொடுத்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் என்ஜினீயரிங் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது
- மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் பங்கேற்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் தொழில் துறை தேவைகளுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக சீனிவாசன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரபு ஜெயக்குமார் மோசெஸ் கலந்து கொண்டார். தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகள், தொழில் துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் பயனாளர்களுக்கு வழங்கும் சலுகைகள், மானியங்கள் போன்றவற்றை பற்றி அவர் எடுத்துரைத்தார்
ஜென் கேர் அகாடெமி தலைமை செயல்பாட்டு அதிகாரி கவுசியா சித்திக், கல்லூரி முதல்வர் இளங்கோவன் உட்பட பலர் பேசினர்.
இதில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், டீன்கள் அன்பரசன், சிவராமன் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா வரவேற்றார். முடிவில் பேராசிரியை பரமேஸ்வரி நன்றி கூறினார்.
- பெரம்பலூர் மாவட்ட வருவாய்த் துறையினர் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
- தாசில்தார் பணிநீக்கம் கண்டித்து கலெக்டர் அலுவலக் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்
பெரம்பலூர்,
கள்ளக்குறிச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள் கைதை கண்டித்தும், தாசில்தார் மனோஜ் முனியனின் பணி நீக்க காலத்தை ரத்து செய்யகோரியும் நேற்று பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று பணியினை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி வருவாய் தாசில்தார் மனோஜ்முனியனின் பணி நீக்க காலத்தை ரத்து செய்ய கோரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ததை கண்டித்தும், பணி நீக்க காலத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் நேற்று கையொப்பமிட்டு பணி புறக்கணிப்பு செய்தனர். மேலும் மாவட்ட பொருளாளர் குமரிஆனந்தன் தலைமையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக போர்ட்டிகோவில் வருவாய்த்துறை அலுவலர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், டிஆஓ அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய அனைத்து அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது.
- பெரம்பலூரில் இலவச கணினி கணக்கியல் பயிற்சி நடைபெற உள்ளது
- பயிற்சியில் பங்குபெற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
பெரம்பலூர்,
பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவசமாககணினி கணக்கியல் பயிற்சி பெற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மைய இயக்குநர் ஆனந்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சிமையத்தில் கணினி கணக்கியல் பயிற்சி இலவ2ாக இளைஞர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. மேலும் எம்எஸ் ஆபிஸ்பேக்கேஜ், டேலி ஆகியவையும் கற்றுத்தரப்படும். 19 வயதுக்கு மேலும், 45 வயதுக்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும். சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்த வேண்டும்.
பயிற்சியின் காலஅளவு 30 நாட்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் அலுவலகத்தில் தகுந்த ஆவணங்கள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ஆகியவற்றுடன் வரும் 6ம்தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விபரங்களுக்கு 04328 - 277896, 9488840328 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
- வயலப்பாடி கிராமத்தில் வையைக்கரை ஆண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
- ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே வயலப்பாடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த வையைக்கரை ஆண்டவர் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆவணி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதன் பின்னர் தினமும் ஒவ்வொரு உபயதாரர்கள் பங்களிப்புடன் வையைக்கரை ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. தினமும் இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் நாடு நலம் பெற வேண்டியும், மழை வேண்டியும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று வையைக்கரை ஆண்டவருக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வெடி, மேள தாளங்கள், முழங்க திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வாணவேடிக்கையுடன் கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் தேரோடும் நான்கு வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனர். ஒவ்வொரு தெருவிலும் பக்தர்கள் கூடிநின்று அர்ச்சனை செய்தனர். பின்னர் மாலை தேர் நிலைக்கு வந்து நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தில் வயலூர், வேப்பூர், கல்லை, ஓலைப்பாடி, கீரனூர், துங்கபுரம், கோவிந்தராஜபட்டினம் உள்பட சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கீழபுலியூர் கிராமத்தில் நின்று கொண்டிருந்த காரில் மர்மமான முறையில் தனியார் நிறுவன மேலாளர் இறந்து கிடந்தார்
- உடலை கைப்பற்றி மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் அருகேயுள்ள கீழப்புலியூர் கிராமத்தில் நின்று கொண்டிருந்த ஒரு காரில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காரில் இறந்து கிடந்தவர் சித்தலி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் நல்லுசாமி (வயது 40) என்பதும், இவருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிய நிலையில் இவரது மனைவி இறந்து 9 ஆண்டுகள் ஆவதும், இதனால் இவர் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானதும் தெரிய வந்தது. மேலும் பெரம்பலூரில் உள்ள நான்கு ரோடு அருகே அரியலூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. மேலும் இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நல்லுசாமி எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
- சிவனடியார்கள் கலந்து கொண்டு திருவாசகத்தில் உள்ள 51 பதிக பாடல்களை பாராயணம் செய்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்த பாலையூரில் உள்ள வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது ஓராண்டு நிறைவையொட்டி இக்கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி வேதநாயகி, வேதபுரீஸ்வரர், வேதநாராயண பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிவனடியார்கள் கலந்து கொண்டு திருவாசகத்தில் உள்ள 51 பதிக பாடல்களை பாராயணம் செய்தனர். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள நடராஜருக்கு திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாலையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக காலையில் கோவிலுக்கு மேலே கருடன் பறந்து வட்டமிட்டதும், மாலையில் மழை பெய்ததும் பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் விரைந்து நிரப்பிட வேண்டும். சத்துணவு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயதில் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரத்து 750 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு அரசின் காலி பணியிடங்களில் முன்னுரிமை கொடுத்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது பலத்த மழை பெய்ததால், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பயணிகள் நிழற்குடையில் ஒதுங்கி நின்று தங்களது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். இதில் மாவட்ட செயலாளர் சித்ரா, ஒன்றிய தலைவர் தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட நிர்வாகிகள், கலெக்டரை சந்தித்து, ஏற்கனவே கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி சங்க உறுப்பினர்களிடம் இருந்து ரத்த கையெழுத்து பெற்ற கோரிக்கை மனுவை கொடுத்து கலைந்து சென்றனர்.
- வேப்பந்தட்டை எறையூர் சிப்காட் தொழில் பூங்காவினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்
- கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்த எறையூர் சர்க்கரை ஆலை அருகே 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில், ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் 243 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட சிப்காட் தொழில் பூங்காவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து காலணி பூங்கா அமைக்க கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகைப்புரிந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று எறையூர் சிப்காட் தொழில் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ஜெ.ரபீக் அகமது, கட்டுமான பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக பெரம்பலூரிலேயே மூலப்பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு, காலணிகள் தயாரிக்கப்படுகிறது. கொரியா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், பெரும் நிறுவனங்களும் தொழில் தொடங்க வர உள்ளனர். 3 ஆண்டிற்குள் முழுமையாக பணிகள் முடிக்கப்படும், என்று கூறினார்.ஆய்வின்போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அரசு செயலாளர் டாக்டர் தரேஸ் அகமது, மாவட்ட கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, முன்னாள் கவுன்சிலர் ஜெயராமன், வசிஷ்டபுரம் ஊராட்சி மன்ற தலைவரும், ஒன்றிய தி.மு.க. துணைச் செயலாளருமான கனிமொழி பன்னீர்செல்வம், ஒகளூர் ஊராட்சி மன்றத் தலைவர் அண்பழகன மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். எறையூரில் ஆய்வை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.
- உற்பத்தி செயல்முறைகளின் அடிப்படையில் தென்னை நார் தொழிற்சாலைகளை வகைப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் மெய்ய நாதன் வலியுறுத்தி உள்ளார்
- சுற்றுச்சூழல் மற்றும் வனம் பருவநிலை மற்றும் தொழிலாளர் வேலைவாய்ப்புத்துறை மத்திய மந்திரி பூபேந்தர் யாதவை சந்தித்து ஒரு மனு அளித்தார்
பெரம்பலூர்,
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் மெய்ய நாதன் புதுடெல்லியில் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனம் பருவநிலை மற்றும் தொழிலாளர் வேலைவாய்ப்புத்துறை மந்திரி பூபேந்தர் யாதவை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-சென்னை தலைமை செயலகத்தில் எனது தலைமையில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற கூட்ட அரங்கில் தென்னை நார் தொழில் உற்பத்தி சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தென்னை நார் தொழிற்சாலைகளின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அவற்றிற்கு தீர்வுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் தற்போதைய நிலையில் இந்த தொழிற்சாலைகள் வெள்ளை வகைப்பாட்டில் தான் தொடர்கிறது என தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் ஜூலை 2023 ல் வெளியிடப்பட்ட மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தொழிற்சாலைகளுக்கான வரைவு வகைப்பாடு அறிவிக்கையின் மீது தென்னை நார் சங்கங்களும் முறையீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.தென்னை நார் தொழில்களை ஆரஞ்சு என வகைப்படுத்துவதால் தென்னை நார் தொழில்களின் தற்போதைய சிரமங்கள் மற்றும் வீழ்ச்சி குறித்து சிந்திக்கப்பட்டது.மீண்டும் தென்னை நார் தொழிலை ஆரஞ்சு வகைக்கு மாற்றினால் மின்சுமை ஏற்படும். தேவைகள் மாற்றம், காங்கிரிட் தளம் அமைத்தல், விவசாயிகளுக்கு வருவாய் இடர்பாடு ஏற்படும்.மேலும் இந்த தொழிலில் கழிவுநீர் எதுவும் வெளியே ற்றப்படுவதில்லை. எனவே உற்பத்தி செயல்முறையின் அடிப்படையில் தென்னை நார் தொழில்களை மறுவகைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.தென்னை நார் உற்பத்தி (உலர் செயல்முறை அல்லது ஈர செயல்முறை) வெள்ளை வகையாகும்.இதில் ரசாயன செயல்முறை அல்லது சாயம் பூசும் செயல்முறை என்பது ஆரஞ்சு வகையாகும்.எனவே தொழில் உற்பத்தி செயல்முறைகளின் அடிப்படையில் அதனை வகைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட ஒன்றிய மந்திரி தென்னை நார் தொழிற்சாலைகளை மறுவகைப்படுத்துவது குறித்த அறிவிக்கையின் இறுதி வடிவம் வெளியிடும்போது மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.மனு அளித்த போது தமிழ்நாடு மாநில தென்னை நார் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதி போகோ மன்ஸ், கோவை மாவட்ட தென்னைநார் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பழனி பலர் உடன் இருந்தனர்.






