என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    சாலை விரிவாக்கத்தின் போது குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலை தற்போது அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அம்மாபாளையம் கிராமத்தில் இருந்து வன்னிமலை பகுதிக்கு குடிநீர் செல்லும் குழாய் அடிக்கடி சேதமடைந்து வருவதும், அதனை ஊராட்சி நிர்வாகமும் சரி செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று வன்னிமலை பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது சாலை அகலப்படுத்தும் பணி செய்ய வந்தவர்களிடம் பொதுமக்கள் மதியம் வரை பொறுத்திருக்குமாறும், குடிநீர் சென்ற பிறகு வேலை செய்யுமாறு கூறினர்.

    இதனை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இதனால் குடிநீர் சென்று கொண்டிருந்த குழாய் சேதமடைந்தது. இதனால் அதிருப்தி அடைந்த வன்னிமலை பகுதி மக்கள் நேற்று மதியம் பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலையில் அம்மாபாளையத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த அம்மாபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி நிர்வாகத்தினர் மாலைக்குள் சேதமடைந்த குழாயை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தேனி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளுக்கான முகாமை சிறப்பு பார்வையாளர் ஆய்வு செய்தார்.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பான சிறப்பு முகாம்கள் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்கள் நடந்தது. இந்த முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய தேனி மாவட்டத்துக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளரும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனருமான தட்சிணாமூர்த்தி தேனி மாவட்டத்துக்கு வந்தார்.

    தேனி ஆர்.சி. உயர்நிலைப்பள்ளி, நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, ஆண்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த சிறப்பு முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    முன்னதாக வர்ககாளர் பட்டியில் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக அரசு துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தட்சிணாமூர்த்தி கலந்துகொண்டு அரசு துறை அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், பெரியகுளம் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சாந்தி, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது. இதில் சேர்க்கை, திருத்தத்திற்கு ஏராளமானவர்கள் படிவங்களை அளித்தனர்.
    பெரம்பலூர்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் வருகிற 30-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேற்றுநடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போல் அரியலூர் மாவட்டத்தில் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் ரமணசரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும் மற்றும் பலர் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் உள்ளிட்டவைக்கும் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர். முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உதவி புரிந்தனர்.

    விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. இதேபோல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 27, 28-ந்தேதிகளிலும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செம்போடை தெற்கு காடு செந்தில்குமார் (வயது 35) என்பவர் வீட்டின் பின்புறம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் புதுச்சேரி எரிசாராயத்தை கைப்பற்றி செந்தில்குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
    தொடர்ந்து பெய்து வரும் மழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 10 ஏரிகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் ஏற்கனவே விசுவக்குடி, கொட்டரை நீர்த்தேக்கங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 71 ஏரிகளில், 18 ஏரிகள் ஏற்கனவே நிரம்பிய நிலையில், தற்போது கீழப்பெரம்பலூர், வயலூர், கிழுமத்தூர், அகரம்சீகூர், பேரையூர், சாத்தனவாடி, நெய்குப்பை, கீரவாடி ஆகிய ஏரிகளும், லாடபுரம் பெரிய ஏரி, வி.களத்தூர் சிறிய ஏரி என 10 ஏரிகளும் நிரம்பி, மறுகாலில் உபரி நீர் வெளியேறி செல்வதால், அதன் அருகே உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    பல குளங்களும் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் மாவட்டத்தில் நெற்குணம், பென்னக்கோணம், காரியானூர் ஆகிய 3 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. பெரம்பலூர் சிறிய ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி, ஆயிக்குடி ஏரி ஆகிய 3 ஏரிகளில் 71 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. 6 ஏரிகளில் 51 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. 11 ஏரிகளில் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. 22 ஏரிகளில் ஒரு சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.

    பச்சமலை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள கோரையாறு அருவி, எட்டெருமை பாழி அருவி, லாடபுரம் மயிலூற்று அருவி, புதுநடுவலூர் அத்தி அருவி ஆகியவற்றிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் வில்லனாக நடித்த அபிமன்யூ சிங், பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படுவதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
    ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யூ மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

    விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. இப்படம் குறித்து வில்லன் நடிகர் அபிமன்யூ சிங், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அண்ணாத்த படம் விமர்சகர்களுக்காக எடுக்கப்பட்டது இல்லை என்றும் ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். 

    அஜித் - அபிமன்யூ
    அஜித் - அபிமன்யூ

    அபிமன்யூ ஏற்கனவே விஜய்யுடன் தலைவா, சூர்யாவுடன் ரத்த சரித்திரம்-2, கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பெரம்பலூர் பெரிய ஏரி, சின்னாறு நீர்த்தேக்க பெரிய ஏரி உள்பட 15 ஏரிகளில் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் நீர் நிரம்பி உள்ளன.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் 73 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மேற்கு எல்லையான பச்சைமலையில் பலத்த மழை பெய்து வருவதால் காட்டாறுகளிலும், ஏரிகள், குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    பச்சைமலையில் இருந்து உற்பத்தியாகிவரும் கல்லாற்றில் மழைநீர் அதிகரித்து வருவதால் பாண்டகப்பாடியில் உள்ள தடுப்பணையில் நீர்வழிந்து வெள்ளாற்றுக்கு செல்கிறது. மாவட்டத்தில் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரி, சிறிய ஏரி, வெண்பாவூர், நூத்தாப்பூர், பாண்டகப்பாடி, அரசலூர் ஏரி, பெரம்பலூர் தாலுகாவில் உள்ள மேலப்புலியூர் அய்யலூர், குன்னம் தாலுகாவில் உள்ள கீழப்பெரம்பலூர், வடக்கலூர், வடக்கலூர் அக்ரகாரம், ஒகளூர், கீரனூர், பெருமத்தூர், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள வரகுபாடி ஆகிய 16 ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

    நெற்குணம், பேரையூர், வயலூர், கிழுமத்தூர், அகரம்சிகூர், கைப்பெரம்பலூர், குரும்பலூர், லாடபுரம் ஆகிய 9 ஏரிகளில் 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளன. பெரம்பலூர் சிறிய ஏரி (வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி), துறைமங்கலம் பெரியஏரி, வி.களத்தூரில் உள்ள சிறிய மற்றும் பெரிய ஏரிகள், குரும்பலூர் ஏரி ஆகிய 54 ஏரிகளிலும் 71 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளன.

    கைகளத்தூர், எழுமூர், ஆய்குடி, தழுதாழை, வெங்கலம், அன்னமங்கலம் ஆகிய 6 ஏரிகளும் 51 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை நிரம்பி உள்ளன. பெரம்பலூர் பெரிய ஏரி, சின்னாறு நீர்த்தேக்க பெரிய ஏரி உள்பட 15 ஏரிகளில் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் நீர் நிரம்பி உள்ளன. அரணாரை நீலியம்மன் ஏரி, எசனை உள்பட 23 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு குறைவாக நீர் நிரம்பி உள்ளது.

    விசுவக்குடி அணையின் முழு கொள்ளளவான 26.74 அடியில், தற்போது 25.78 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. உபரிநீர் பிரதான மதகுவழியாக திறந்து விடப்படுகிறது. இதனை நேற்று பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன் மேலாண்மை இயக்குனருமான அனில் மேஷ்ராம், மாவட்ட கலெக்டருடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருதையாற்றின் குறுக்கே கொட்டரையில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தின் உயரம் 33.78 அடி ஆகும். இதில் முழு கொள்ளளவான ஏறத்தாழ 212.47 மில்லியன் கனஅடி நீர் தேங்கி உள்ளதால், பிரதான மதகுகள் வழியாக உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.

    நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு;-

    பாடாலூர்-3, அகரம் சிகூர்-14 லெப்பைக்குடிகாடு-13, பெரம்பலூர்-8, எறையூர்-9, கிருஷ்ணாபுரம்-10, தழுதாழை-9, வி.களத்தூர்-10, வேப்பந்தட்டை-9, மொத்த மழை அளவு-92 மி.மீ.
    அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமேசுவரம் நடராஜபுரம், அண்ணா நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களை பார்வையிட்டு தீயணைப்புத் துறையினரின் வெள்ள தடுப்பு உபகரணங்களையும் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதியில் அமைச்சர் மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அமைச்சர் தங்கம் தென்னரசு வடகிழக்கு பருவ மழையையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடு மற்றும் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    அப்போது அமைச்சர் பேசுகையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை தடுப்பு போல வெள்ள தடுப்புக்கான எல்லாவிதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பாதுகாக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

    எந்தந்த இடங்களில் தண்ணீர் தேங்குகிறதோ அதையெல்லாம் ஆய்வு செய்து வருகிறோம். ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையிலும் மற்ற நகராட்சி பகுதிகளிலும் மழைநீர் தேங்காத வகையில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    தொடர்ந்து 2, 3 நாட்களுக்கு கனமழை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் பொது மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினை இல்லாத வகையிலும், கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் உடமைகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மின்சார வாரியம் போன்ற அத்தியாவசிய துறைகள் அனைத்தும் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

    முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமேசுவரம் நடராஜபுரம், அண்ணா நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களை பார்வையிட்டு தீயணைப்புத் துறையினரின் வெள்ள தடுப்பு உபகரணங்களையும் பார்வையிட்டார்.

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தங்கச்சிமடம், ஊராட்சி அய்யன் தோப்பு பகுதியில் மழைநீர் தேங்கும் இடங்களையும் பார்வையிட்டார். பாம்பன் பாலம் மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை கண்மாய், ராமநாதபுரம் பெரிய கண்மாய் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கலெக்டர் சங்கர்லால் குமாவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி பிரவீன் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    மங்களமேடு அருகே பெண்ணை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மங்களமேடு:

    மங்களமேட்டை அடுத்துள்ள காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 43). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பவள்ளி(35). இவரது வீட்டின் அருகே பாலசுப்பிரமணியனின் தம்பி ராமலிங்கம்(47), அவரது மனைவி செல்லம் (38) ஆகியோர் வசித்து வருகிறார்கள். நேற்று காலை புஷ்பவள்ளி வீட்டின் அருகே உள்ள மணல்மேட்டில் ராமலிங்கத்தின் குழந்தைகள் இயற்கை உபாதை கழித்ததாக தெரிகிறது. இதனை புஷ்பவள்ளி கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கமும், செல்லமும் புஷ்பவள்ளியை கம்புகளால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த புஷ்பவள்ளி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மங்களமேடு போலீசில் அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தையும், செல்லத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திறக்கப்பட்ட கார் கதவு மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    மன்னார்குடி பகுதியில் இருந்து கார் ஒன்று தஞ்சை நோக்கி நேற்றுமாலை வந்து கொண்டிருந்தது. தஞ்சையை அடுத்த காட்டூர் அருகே சாலையோரத்தில் காரை நிறுத்திய டிரைவர், தன்பக்கமுள்ள கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒருவர், திறக்கப்பட்ட கார் கதவில் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதை அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் பலியானவர் தஞ்சையை அடுத்த கீழஉளூரை சேர்ந்த விவசாயி முத்துக்கிருஷ்ணன் (வயது65) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் புதுக்காலனியில் வசித்து வருபவர் சாமிதுரை(வயது 30). இவரது மனைவி அருள்மொழி(25). கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிதுரை தனது சொந்த ஊரான வேப்பந்தட்டை தாலுகா நூத்தாப்பூருக்கு சென்றார். 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு அருள்மொழியும் தீபாவளி பண்டிகைக்காக நூத்தாப்பூருக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் பக்கத்து வீட்டை சேர்ந்த மகாலட்சுமி, சாமிதுரை வீட்டின் கதவு திறந்திருந்ததை கண்டு அவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சாமிதுரை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது. நகைகளை போர்வைக்கு அடியில் மறைத்து வைத்திருந்ததால், அவை தப்பின. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரிதுன் இயக்கத்தில் மைண்ட் டிராமா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட்டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் முன்னோட்டம்.
    மைண்ட் டிராமா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட்டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘நினைவோ ஒரு பறவை’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தடைபட்டு வந்தது. தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் காரைக்குடியில் துவங்கவுள்ளது.

    படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் கூறுகையில், ‘’எங்களது படத்திலிருந்து மீனா மினிக்கி.... மற்றும் இறகி இறகி...., கனவுல உசுர..... என்ற பாடல்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். இந்த கொரோனா பெருந்தொற்று காரணத்தால் நாங்கள் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. மனிதர்களின் உயிரை விட நாங்கள் படப்பிடிப்பை பெரிதாகக் கருதவில்லை. தற்போது சாதாரண சூழல் நிலவி வருவதால் அடுத்த மாதம் டிசம்பரில் காரைக்குடியில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம்.

    முன்னோட்டம்
    படக்குழுவினர்

    அதேபோல் இந்த கொரோனா பெரும் தொற்றால் எங்கள் படத்தில் பணி புரிந்த சிலரையும் நாங்கள் இழந்து விட்டோம். அது மிகவும் மன வேதனை அளித்தது. மீண்டும் தற்போது புதிய உற்சாகத்தோடு அடுத்தகட்டப் படப்பிடிப்பை டிசம்பர் முதல் காரைக்குடியில் துவக்க உள்ளோம்’’.

    நினைவோ ஒரு பறவை படத்தை ரிதுன் இயக்க யூடியூப் புகழ் ஹரி பாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக நடிக்கிறார். தமன் இசை அமைக்கும் இப்படம் 2022 ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.
    ×