என் மலர்
பெரம்பலூர்
- குன்னம் புதுவேட்டைக்குடியில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார்
- இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, புதுவேட்டக்குடி மெயின் ரோட்டை சோ்ந்தவர் சின்னதுரை (வயது 29), எலக்ட்ரீசியன். இவருக்கு சூர்யா என்ற மனைவி உள்ளார்.இவர்களுக்கு குழந்தை இல்லை. சின்னதுரை வரிசைபட்டி கிராமத்தில் ஒருவரின் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்றிருந்தார்.அந்த வீட்டின் அருகே உள்ள மின் கம்பத்தில் ஏறிய சின்னதுரை மின் பராமரிப்பு பணி செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாக உயா் அழுத்த மின்சார பாதையில் அவரது உடல் மோதியது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் சின்னதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சின்னதுரையின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் உரிமையாளரை கைது செய்யக்கோரியும், அவரிடம் இருந்து இழப்பீடு பெற்று தரக்கோரியும், சின்னதுரையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் மருதையான் கோவில்-அகரம் சீகூர் சாலையில் வரிசைபட்டி பிரிவு சாலையில் நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் தலைமையில், குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்தனர். இதையடுத்து போக்குவரத்து பாதிப்பு ஒழுங்குப்படுத்தப்பட்டு சின்னத்துரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வ லமாக வந்து ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம்,
பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது. அச்சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்ததாக கூறி வருவாய்த் துறையினர் சிலையை அப்புறப்படு த்தினர்.இதில் அங்கு கூடியிருந்த பொது மக்களையும் இந்து முன்னணியினரையும் போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.மேலும் அங்கிருந்த இந்து முன்னணி திருச்சி கோட்ட பொறுப்பாளர் குணா தலைமையில் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட முயற்சித்ததாக கூறி முன்னெச்சரிக்கையாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவி த்தும், கைது செய்யப்ப ட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும். கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு இந்து முன்னணி மாவட்ட துணை த்தலைவர் பழனிச்சாமி தலைமையில் இந்து முன்னணியினர் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வ லமாக நான்கு ரோட்டிற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமபாலமு ருகன், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பாண்டி யராஜன், பாக்கியராஜ், அருள், விஜய், வெற்றிச்செ ல்வன், தவமணி, ரமேஷ், ஐயம்பெருமாள், பி.எம்.ஆர் ரமேஷ், இளவரசன் உள்ளிட்டோர் கலந்து கொ ண்டு கண்டனம் கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
- பெரம்பலூர் அருகே ரூ.25¾ லட்சத்தை மோசடி செய்த பால் பண்ணை உரிமையாளரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
- பால் பண்ணையையும் பூட்டி விட்டு கிராமத்தை விட்டு தலைமறைவானவர் கைது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 25). இவர் அதே கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளாக அம்மன் என்ற பெயரில் பால்பண்ணை நடத்தி வந்தார். இளங்கோவனிடம் அந்த கிராமத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் 120 பேர் காலை, மாலை ஆகிய இருவேளைகளில் பால் ஊற்றி வந்தனர். அவர்களுக்கு கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை கொடுக்க வேண்டிய ரூ.25 லட்சத்து 78 ஆயிரத்து 945-ஐ பட்டுவாடா செய்யாமல் இளங்கோவன் ஏமாற்றி வந்தார்.
பின்னர் அவர் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி பால் பணத்தை கொடுக்காமல் வசித்து வந்த வீட்டையும், பால் பண்ணையையும் பூட்டி விட்டு கிராமத்தை விட்டு தலைமறைவானார். இளங்கோவன் மீது நடவடிக்கை எடுத்து தர வேண்டிய பால் பணத்தை பெற்று தருமாறு பால் உற்பத்தியாளர்கள் பாடாலூர் போலீஸ் நிலையத்தில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர். சிறையில் அடைப்பு இதையடுத்து பாடாலூர் போலீசார் கடந்த 15-ந்தேதி இளங்கோவன் மீது பணம் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவான இளங்கோவனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் படி, பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி வழிக்காட்டுதலின் பேரில், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, கோபாலபுரம் கிராமத்தில் தலைமறைவாகி இருந்த இளங்கோவனை தனிப்படை போலீசார் பிடித்து பெரம்பலூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து திருச்சி மாவட்டம், துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.
- தகாத வார்த்தையால் திட்டிய ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே செங்குணம் காலனி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 46). இவர் செங்குணம் கிராம ஊராட்சியில் செயலாளராக பணி புரிந்து வருகிறார். கோவிந்தன் நேற்று மாலை பெரம்பலூர்-அரியலூர் நெடுஞ்சாலையில் அருமடல் பிரிவு சாலையில் உள்ள மளிகை கடை அருகே மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்ட மளிகை கடையின் உரிமையாளரின் மனைவி கோவிந்தனை வேறு இடத்துக்கு சென்று மது அருந்துமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன் அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் இது குறித்து அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் கூறினார்.
சாலை மறியல் பெண்ணை திட்டிய ஊராட்சி செயலாளர் கோவிந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்குணம் கிராம ஊராட்சிக்குட்பட்ட முத்து நகர், முல்லை நகரை சோ்ந்த பொதுமக்கள் பெரம்பலூர்-அரியலூா் நெடுஞ்சாலையில் அருமடல் பிரிவு சாலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இது தொடர்பாக ஊராட்சி செயலாளர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதை தொடர்ந்து அவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பெரம்பலூர் அருகே எறையசமுத்திரம் காட்டு கொட்டாயை பகுதியை சோ்ந்த விவசாயி கிணற்றில் விழுந்து தவித்தார்
- பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே எறையசமுத்திரம் காட்டு கொட்டாயை பகுதியை சோ்ந்தவர் சிவா (வயது 40), விவசாயி. இவர் நேற்று மதியம் அருகே வயலில் உள்ள கிணற்றில் இறங்கி பழுதான மோட்டாரை தூக்க சென்றார். பின்னர் அவர் கிணற்றில் இருந்து மேலே ஏற முயன்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். பின்னர் சிவா கிணற்றில் இருந்து மேலே ஏற முடியாமல் தவித்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி சிவாவை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
- பெரம்பலூர் அருகேசினிமா துறை தொழிலாளி வீட்டில் பணம் திருட்டு நடைபெற்று உள்ளது
- பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை வடக்கு ஏ.வி.ஆர். நகரில் வசித்து வந்தவர் செல்லதுரை (வயது 45). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்து சென்னையில் வசித்து வருவதோடு, அங்கு சினிமா துறையில் செட் அமைப்பாளராக பணி புரிந்து வருகிறார்.இதனால் அவருடைய சொந்த வீட்டை அவரது தாய் பொன்னாமணி 10 நாட்களுக்கு ஒரு முறை வந்து பார்த்து செல்வது வழக்கம்.இந்த நிலையில் செல்லத்துரையின் வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அக்கம், பக்கத்தினர் பொன்னாமணிக்கும், செல்லத்துரைக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து பொன்னாமணி வந்து பார்த்த போது செல்லத்துரையின் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம் நடைபெற்றது
- அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டார்
பெரம்பலூர்,
மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமினை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பார்வையிட்டார். முகாமில் அரசு மருத்துவமனை மருத்துவர்களான எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அறுவை சிகிச்சை தேவைப்படுவோர்கள், அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்களுக்காக பரிந்துரை செய்தனா். உரிய ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் முகாமிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அரசுத்துறைகளின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சா் சிவசங்கர் பார்வையிட்டார். முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி, ஒரு மாணவருக்கு ரூ.2.02 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக்கூடிய சர்க்கர நாற்காலிகளையும், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், முகாமிற்கு வருகை தந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மஞ்சள் பைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விளக்க கையேடுகளையும் அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 16 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மொத்தம் 401 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 33 ஆயிரத்து 918 மதிப்பிலான உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா். இதில் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. நிறைமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை), பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 20-ந்தேதி ஆண்டி குரும்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 21-ந்தேதி சின்னவெண்மணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
- பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு முகாமில் 13 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது
- சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் வசிக்கும் பொதுமக்களின் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களை விசாரிக்க சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. முகாமில் ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமரன், பெரம்பலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபுபக்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நல்லம்மாள், ராமர் மற்றும் ஏட்டு பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நிலப்பிரச்சினை தொடர்பாக பெறப்பட்ட மொத்தம் 13 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
- தொழிலாளியை பிளேடால் கிழித்தவர் கைது செய்யப்பட்டார்
- குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அசூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44), தொழிலாளி. இவரது மனைவி சுசியை, அதே பகுதியை சேர்ந்த விவசாயி முத்தழகன் (32) தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை தட்டி கேட்ட சிவக்குமாரை முத்தழகன் பிளேடால் கிழித்துள்ளார். இதில் காயமடைந்த சிவக்குமார் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மொபட்டில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்
- விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை ஏ.வி.ஆர். நகர் அப்புசாமி 2-வது தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 53). இவருக்கு கல்யாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சசிக்குமார் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி கேண்டீன் ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 12-ந்தேதி இரவு நண்பர் மணிகண்டனை மொபட்டில் அழைத்து கொண்டு பெரம்பலூா் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது துறையூர்-பெரம்பலூர் சாலையில் கல்யாண் நகர் அருகே உள்ள திருமண மண்டபம் எதிரே சென்றபோது அந்த வழியாக ஒருவர் சாலையின் குறுக்கே சென்றதால் சசிகுமார் மொபட்டில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக துறையூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகுமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
- இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை செயல்படுத்தப்படும் என கலெக்டர் அறிவிப்பு
பெரம்பலூர்,
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய கடன் நிதியுதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12-ம் ஆண்டு வரை கடனுதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும். இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை செயல்படுத்தப்படும். இந்த அரிய வாய்ப்பினை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் அருகே ஓடும் லாரியில் திடீரென தீப்பற்றி எரிந்தது
- தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்
பெரம்பலூர்,
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர்-செங்குணம் பிரிவு சாலை அருகே நேற்று காலை ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியின் முன்பக்க என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை கண்ட டிரைவர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கினார். இதையடுத்து லாரியின் முன்பக்கம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து தீயணைப்பான் கருவியை கொண்டு, லாரியில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். பின்னர் தண்ணீரை ஊற்றி தீைய அணைக்க முயன்றனர். இதற்கிடையே பெரம்பலூர் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






