என் மலர்
பெரம்பலூர்
- ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க மனு அளித்தனர்.
- பழுதடைந்துள்ள கடையை அகற்றிவிடவேண்டும்
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது பொதுமக்கள் அளித்த ஒரு மனுவில், குன்னம் தாலுகா, அத்தியூர் ஊராட்சி, புதுப்பேட்டை 1-வது வார்டில் பழுதடைந்துள்ள ரேஷன் கடையை அகற்றிவிட்டு, ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வணிக தொடர்பாளர்களாக 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் பணியை தனியார் வசம் ஒப்படைப்பதாக தெரிகிறது. எங்கள் பணியை தனியார் வசம் ஒப்படைக்காமல் அந்த வங்கியே தொடர வேண்டும், என்று கூறியிருந்தனர்.
குன்னம் தாலுகா அத்தியூர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களான மலர்கொடி, லெட்சுமணன், சுதா, வெற்றி சக்தி, பழனிவேல் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் ஊராட்சியில் தலைவர் எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. நாங்கள் எங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தாலும், அதனை அவர் சரி செய்யவில்லை. எனவே இந்த மனுவை சமர்ப்பித்து ராஜினாமா செய்து கொள்கிறோம், என்று கூறியிருந்தனர்.
- சீரடி மதுரம் சாய்பாபா கோவில் வருடாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது.
- பாபா ஊர்வலம் துவங்குகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே தீரன் நகர் எதிர்புறம் அமைந்துள்ள ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் 8ம் ஆண்டு வருடாபபிஷேக விழா நாளை (22ம்தேதி) நடைபெறுகிறது.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தீரன் நகர் எதிர்புறம் அமைந்துள்ள ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் மற்றும் தியான மண்டபம் கட்டப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. இதன் 8ம் ஆண்டு வருடாபபிஷேக விழா நாளை (22ம்தேதி) நடைபெறுகிறது.
இவ்விழாவையொட்டி நாளை காலை 9.15மணியளவில் மகாகணபதிஹோமத்துடன் பூஜை பூர்வாங்க பணிகள் துவங்குகிறது. இதை தொடர்ந்து 11மணியளவில் மகாதீபாரணையும், அலங்காரம் மற்றும் மதிய ஆரத்தியும் நடைபெறுகிறது. மாலை 3 மணியளவில் பெரம்பலூர் சிவன் கோயிலிருந்து முளைப்பயிர், பால்குடம் மற்றும் பாபா ஊர்வலம் துவங்குகிறது.
ஊர்வலத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தொடங்கிவைக்கிறார். ஊர்வலம் கடைவீதி, பாலக்கரை, கலெக்டர் அலுவலக சாலை வழியாக கோயிலை அடைகிறது. பின்னர் மாலை 6 மணியளவில் சாய்பாபாவிற்கு பால், பண்ணீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகமும் நடைபெறுகிறது.
தொடர்ந்த இரவு 7 மணியளவில் மகாதீபாரணை நடைபெறுகிறது. நாளை நாள்முழுவதும் அன்னதானம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் ரெங்கராஜ், தலைவர் கலியபெருமாள், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜயா மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
- பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தமைக்காக மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை கலெக்டர் பாராட்டியுள்ளார்
- ஆசிரியர்களின் கடின முயற்சி மற்றும் மாணவர்களின் முழு கவன படிப்பினால் இந்த சாதனையை பெரம்பலூர் பெற்றுள்ளது
பெரம்பலூர்:
அரசு பொதுத்தேர்வில் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி விகிதத்தில் 97.95 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், 10-ம் வகுப்பு தேர்வில் 97.15 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து பெரம்பலூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 ஆயிரத்து 933 மாணவர்களும், 3ஆயிரத்து 734 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 667 பேர் தேர்வெழுதினர். இதில் 3 ஆயிரத்து 836 மாணவர்களும், 3 ஆயிரத்து 674 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 510 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 97.95 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 4 ஆயிரத்து 186 மாணவர்களும், 3 ஆயிரத்து 704 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 890 பேர் தேர்வெழுதினர். இதில் 4 ஆயிரத்து 18 மாணவர்களும், 3 ஆயிரத்து 647 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 665 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 97.15 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு ஆசிரியர்களின் கடின முயற்சி மற்றும் மாணவர்களின் முழு கவன படிப்பினால் இந்த சாதனையை பெரம்பலூர் பெற்றுள்ளது என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
- அரசு பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
- இலவச தொலைபேசி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி பெரம்பலூர், மேலப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் அவரது குழுவினரான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, பார்வதி, சுமா ஆகிய போலீசார் மாணவ-மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும்,
ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- வரதட்சணை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பீல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி மகழி (வயது 24). இவர்கள் 2 பேரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். எம்.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 16-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த உறவினர்கள் மகழியை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகழி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் வரதட்சணை கொடுமை காரணமாக தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் மலர்க்கொடி மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் மகழிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) பால்பாண்டி விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இளம்பெண்ணின் சாவுக்கு காரணமான சத்தியமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகழியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- அறுவடைக்கு பின் செய்நேர்த்தி ஆகியவைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயிற்சி வேப்பந்தட்டை, பாண்டகப்பாடி, தேவையூர், கை.களத்தூர், இனாம் அகரம், பசும்பலூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாம்களில் மானாவாரி பயிர் சாகுபடி தொழில்நுட்பம், மண்வள மேலாண்மை, ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு மற்றும் அறுவடைக்கு பின் செய்நேர்த்தி ஆகியவைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கருணாநிதி, வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்)
கீதா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி வேப்பந்தட்டை வேளாண்மை உதவி இயக்குனர் பச்சியம்மாள் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் வேப்பந்தட்டை வட்டார வேளாண்மை அலுவலர் ரமேஷ், துணை வேளாண்மை அலுவலர் தமிழரசன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள், பயிர் பரிசோதனை திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் காலி பதவியிடங்களுக்கான வேட்பு நடைபெறுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
பெரம்பலூர் :
மாவட்ட கலெக்டர்கள் ஸ்ரீவெங்கடபிரியா (பெரம்பலூர்) கவிதா ராமு (புதுக்கோட்டை) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
பெரம்பலூர் மாவட்ட த்தில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேலப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் இரூர் கிராம ஊராட்சி 1- வது வார்டு, பிலிமிசை கிராம ஊராட்சி 4-வது வார்டு, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் வி.களத்தூர் கிராம ஊராட்சி 7-வது வார்டு, வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் கீழப்புலியூர் கிராம ஊராட்சி 8-வது வார்டு ஆகிய உறுப்பினர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.
இதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் 7-வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், அன்னவாசல் ஒன்றியம் வெட்டுக்காடு, அறந்தாங்கி மேலப்பட்டு, அரிமளம் நெடுங்குடி, குன்றாண்டார் கோவில் தென்னங்குடி, புதுக்கோட்டை ெதாண்டைமான் ஊரணி ஆகிய 5 ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்கள், 22 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 28 பதவியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு வேட்பு மனுக்கள் பெறும் பணி தொடங்கும். வருகிற 27-ந்தேதி வேட்புமனுக்கல் தாககல் செய்ய இறுதி நாள்.
தொடர்ந்து வருகிற 28-ந்தேதி காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வருகிற 30-ந்தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம்.
பின்னர் ஜூலை 9-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 12-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஜூலை 14-ந்தேதி தேர்தல் நடைமுறைகள் முடிவு பெறும்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி இந்த ஊரக உள்ளாட்சி அமைப்பு காலி பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.
- பெரியார் நினைவு சமத்துவபுரம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.
- ரூ.79.40 லட்சத்தில் நடைபெறுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை ரூ.79.40 லட்சத்தில் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.
சமத்துவபுரத்தல் உள்ள வீடுகள், பூங்கா, சமுதாயக்கூடம், நூலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியவை சேதமடைந்த நிலையில் இருந்தன. எனவே வீடுகள் உட்பட சமத்துவபுர வளாகம் முழுவதையும் சீரமைத்து தர வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் சமத்துவ புரத்தைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அண்மையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.79.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுது.
இந்த நிதியில் சமத்துவபு ரத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல், பூங்கா மேம்பாடு மற்றும் சமுதாயக்கூடம், நூலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியவறறின் கட்டிடங்களில் உள்ள சேதங்களைச் சீரைமைத்தல், வீடுகள் உள்ள பழுழக ளைச் சீரமைத்தல் ஆகிய பணிகள் தீவிராக மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன.
- விருதுநகர் மாவட்டம் 97.27 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று 2-வது இடத்தை பிடித்தனர்.
- மதுரை மாவட்டத்தில் 96.89 சதவீத மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
பெரம்பலூர்:
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. மொத்தம் தேர்ச்சி சதவீதம் 93.76 சதவீதமாகும்.
பெரம்பலூர் மாவட்டம் 12-ம் வகுப்பு தேர்வில் முதல் இடத்தை பிடித்தது. அந்த மாவட்டத்தில் 97.95 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 97.53 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி 98.39 ஆகவும் அந்த மாவட்டத்தில் இருந்தது.
அதற்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டம் 97.27 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று 2-வது இடத்தை பிடித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்தது. அந்த மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 97.02 ஆக இருந்தது. அதற்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டத்தில் 96.91 சதவீத மாணவ-மாணவிகளும், மதுரை மாவட்டத்தில் 96.89 சதவீத மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்தது. அந்த மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் 86.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
- அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அனல்மின் நிலக்கரி திட்டத்திற்கு கையகப்படுத்திய நிலத்தை நிலம் கொடுத்த விவசாயிகளிடமே அரசு திரும்ப ஒப்படைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி உள்ளது.
- விவசாயிகளுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதாக கூறி கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் திரும் ஒப்படைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அனல்மின் நிலக்கரி திட்டத்திற்கு கையகப்படுத்திய நிலத்தை நிலம் கொடுத்த விவசாயிகளிடமே அரசு திரும்ப ஒப்படைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி உள்ளது.
அதே போல பெரம்பலூர் மாவட்டத்தில் திருமாந்துறை, எறையூர் சர்க்கரைஆலை, பெருமத்தூர், மிளாகநத்தம், லெப்பைகுடிகாடு, அயன்பேரையூர் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதாக கூறி கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் திரும் ஒப்படைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
ஜூலை 17ம்தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், கருணாநிதி, சிவானந்தம், செல்லமுத்து, செல்லதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- பெரம்பலூரை அடுத்த எசனையில் பிரசித்தி பெற்ற செங்கமல வல்லித்தாயார் சமேத வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேணுகோபாலசுவாமி சூரியவாகனத்தில் வீதியுலா வருகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) புன்னை மர வாகனத்திலும், 21-ந்தேதி மட்டையடி மற்றும் ஊஞ்சல் உற்சவமும், 22-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த எசனையில் பிரசித்தி பெற்ற செங்கமல வல்லித்தாயார் சமேத வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் இரவில் அன்னம், சிம்மம், அனுமந்தர், சந்திரன், கருடன், யானை, நாகபாஷம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடும், சக்கரத்தாழ்வார் திருவீதி உலாவும் நடந்தது.
இதையடுத்து, கடந்த 16-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், இரவில் பூப்பல்லக்கில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.
தேரோட்டம் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 21 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் வேணுகோபாலசுவாமி- பாமா, ருக்மணி காலை 11 மணியளவில் எழுந்தருளினர். பின்னர் தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை 5 மணியளவில் கோவில் நிலையை வந்தடைந்தது. இந்த விழாவில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ஹரிஹரசுப்ரமணியன் (மலைக்கோட்டை), லட்சுமணன் (திருச்சி), கோவில்ஆய்வாளர் வினோத்குமார், கோவில் செயல் அலுவலர் தேவி, கோவில் தக்காருமான ஹேமாவதி உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேணுகோபாலசுவாமி சூரியவாகனத்தில் வீதியுலா வருகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) புன்னை மர வாகனத்திலும், 21-ந்தேதி மட்டையடி மற்றும் ஊஞ்சல் உற்சவமும், 22-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது.
தேரோட்ட ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.
- பயிற்சியின் காலஅளவு 10 நாட்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.
- இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவசமாக துரித உணவுகள் தயாரித்தல் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் ஆனந்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சிமையத்தில் துரித உணவுகள் தயாரித்தல் பயிற்சி நாளை 20ம்தேதி முதல் இலவசமாக அளிக்கப்படவுள்ளது. 18 வயதுக்கு மேலும், 45 வயதுக்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும். சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்த வேண்டும்.
பயிற்சியின் காலஅளவு 10 நாட்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் அலுவலகத்தில் தகுந்த ஆவணங்கள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ஆகியவற்றுடன் நாளை (20ம்தேதி) க்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விபரங்களுக்கு 04328 - 277896, 9488840328 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.






