என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் புறநகர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் குடியிருப்பான தீரன் நகரில் அருள்சக்தி விநாயகர் கோவில் உள்ளது.
- கோவில் வளாகத்தில் வைத்திருந்த உண்டியல் திருட்டு போயிருந்ததை பார்த்து திடுக்கிட்டார்.
பெரம்பலூர் புறநகர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் குடியிருப்பான தீரன் நகரில் அருள்சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பெரம்பலூர் கம்பன் நகர் 2-வது தெருவைச்சேர்ந்த கார்த்திகேயன்(வயது 45) அர்ச்சகராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 20-ந் தேதி விநாயகர் கோவிலில் பூஜை முடிந்தபின்னர், கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று மாலை மீண்டும் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் வைத்திருந்த உண்டியல் திருட்டு போயிருந்ததை பார்த்து திடுக்கிட்டார். உடனடியாக கார்த்திகேயன் இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.
போலீசார் விசாரணை இதைத்தொடர்ந்து போலீசார் தீரன் நகருக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. திருட்டுபோன உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- ரத்தினசாமி வீட்டை பூட்டிவிட்டு மேல கடம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
- வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.70 ஆயிரம், 2 பவுன் நகைகள் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கடம்பூரை சேர்ந்தவர் ரத்தினசாமி(வயது 67). இவர் கடந்த 21-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு மேல கடம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, நகை மற்றும் பணம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.70 ஆயிரம், 2 பவுன் நகைகள் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்து ரத்தினசாமி அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் ஓட்டை பிரித்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந்தேதி காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது
- விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந்தேதி காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கின.
- பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா, குடியரசு தின விழாவினை முன்னிட்டு குன்னம் குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கின. நேற்று 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான எறிபந்து, இறகுப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், ஆக்கி ஆகிய போட்டிகள் நடந்தன.
இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் ஒற்றையர், இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது. போட்டியினை வேப்பூர் கல்வி மாவட்ட அலுவலர், மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும், அணிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெற உள்ளது
- வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது.
பெரம்பலூர்:
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக்கழகமாகும். இந்த கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப் படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கி வருகிறது. இதன்படி திருச்சி கண்டோன்மெண்ட் பிராமினேட் ரோடு கே.ஆர்.டி. பில்டிங்கில் 2-வது தளத்தில் உள்ள அதன் கிளை அலுவலகத்தில் கடந்த 17-ந் தேதி தொடங்கிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மத்திய-மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்பட உள்ளது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த புதிய தொழில் முனைவோர்கள், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வந்து தொழில் கடன் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குன்னம் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
பெரம்பலூர்:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மங்களமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவளாந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், குன்னம், வேப்பூர், ஓலைப்பாடி, எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், க.புதூர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்."
- தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் என்ற கலியபெருமாள். இவரது மகன் ஒன்றரை இட்லி என்ற மணிகண்டன்(வயது 26). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 4.1.2020 அன்று விளையாடி கொண்டிருந்த 6 வயதுடைய 1-ம் வகுப்பு படித்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பெரம்பலூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து மகிளா கோர்ட்டு அமர்வு நீதிபதி முத்துகுமரவேல் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.6 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- விஜயகாந்த் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மாவட்ட தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவாஅய்யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், புகழேந்தி, பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தில் வரும் 25ம்தேதி கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவது, செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி கோயிலில் வெள்ளி தேர் இழுப்பது, பள்ளியில் காலை, மதிய உணவு வழங்குவது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய பொறுப்பாளர்கள் சஞ்சீவிகுமார், விஷ்வா, வெங்கடேசன், பேரூர் பொறுப்பாளர்கள் ஸ்ரீதரன், மாவட்ட அணி நிர்வாகிகள் இளையராஜா, செந்தில்குமார், கருணாநிதி, சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக நகர செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி சோழரசன் நன்றி கூறினார்.
- கல்லூரி மாணவர் விபத்தில் பலியானார்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் விபத்தில் பலி
பெரம்பலூர்:
பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு ரெங்கா நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது 2-வது மகன் பிரவீன்ராஜ் (வயது 21). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி என்ஜினீயரிங் படித்து வந்தார். விடுமுறை நாளான நேற்று மாலை வீட்டில் இருந்த பிரவீன்ராஜ் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
அப்போது ஆவின் பால் பண்ணை அருகே சென்ற போது, எதிரே வந்த பதிவெண் இல்லாத தண்ணீர் டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரவீன்ராஜ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
பிரவீன்ராஜின் தந்தையும், சப்-இன்ஸ்பெக்டருமான சண்முகம் ஏதோ விபத்து நடந்தது என்று கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அப்போது தனது மகன் விபத்துக்குள்ளாயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் தனது மகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அங்கு பிரவீன்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மகனின் உடலை பார்த்து சண்முகம் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.
இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டேங்கர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். தந்தை கண் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது."
- வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
- தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 35). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், வானபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். இன்று காலை மீண்டும் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 8½ பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், குன்னம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
- விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- அழகிய கலைநயத்துடன் தத்ரூபமாக உருவாக்குகின்றனர்.
பெரம்பலூர்:
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இதனால் தற்போது பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 1 அடி முதல் 9 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை அழகிய கலைநயத்துடன் தத்ரூபமாக உருவாக்குகின்றனர். பரமசிவன்-பார்வதி, முருகன், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் ஆகியோருடன் விநாயகர் இருப்பது, பல்வேறு வாகனங்களில் கம்பீரமாக வீற்றிருப்பது, சிங்கத்தின் மீது அமர்ந்து இருப்பது என்று விதவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்துகின்றன.
- மீன் வளர்ப்பை ஊக்குவிக்க மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- விண்ணப்பத்தினை வருகிற 31-ந்தேதிக்குள் கொடுக்க வேண்டும்
பெரம்பலூர்:
தமிழ்நாட்டில் மீன் வளர்ப்பினை ஊக்குவித்திட மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்ற மீனவ விவசாயிகள், சொந்த நிலத்தில் 250 முதல் 1,000 ச.மீ. அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன்குஞ்சு, மீன்தீவனம், உரங்கள் ஆகிய மீன் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருள்கள் மற்றும் பறவை வேலி அமைத்தல் ஆகியவற்றிற்கு ஒரு அலகிற்கு ஆகும் செலவினமான ரூ.36 ஆயிரத்தில் இருந்து 50 சதவீதம் மானியத்தில் ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.18 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். மேற்கண்ட மானியத்தொகையானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே, மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பெரம்பலூர் மாவட்ட பயனாளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை வருகிற 31-ந்தேதிக்குள் பெரம்பலூர் எஸ்.கே.சி. காம்பளக்சில் மேல்தளத்தில் உள்ள மீன்வள ஆய்வாளர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்திலும் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329-228699 என்ற தொலைபேசி எண்ணையும், 6381344399 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.






