என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • நாட்டார்மங்கலம் பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் கோயிலில் திருவிழா இம்மாதம் 19ம் தேதி இரவு வடக்கிமலை அடிவாரத்தில் உள்ள கொடுவாய் தீட்டி பாறையில் குடி அழைப்பு, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, திருவிழாவில் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை பாரம்பரிய முறைப்படி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பச்சாயி, மன்னார் ஈஸ்வரன், பூவாயி, காத்தாயி, விநாயகர் சுவாமிகள் வீதியுலா கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில்,திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் வீதியுலாவும் நடைபெற்றது.25ம் தேதி காத்தாயி சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கோயில் வளாகத்தில் வீதியுலா வந்தது. நேற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் பச்சாயி அம்மன், காத்தாயி, பூவாயி சுவாமிகள் வைக்கப்பட்டு மாலை தேரோட்டம் நடைபெற்றது.

    திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயில் வளாகத்தில் சுற்றி வலம் வந்து தேர் நிலையை அடைந்தது.

    அதனை தொடர்ந்து பூக்குழி மிதித்தல் நடைபெற்றது. பக்தர்கள் குழந்தையை சுமந்து தீ மிதித்தனர். விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் பாடாலூர் போலீசார் ஈடுபட்டனர். விழாவில் ஆலத்தூர் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழரசி, செயல் அலுவலர் ஹேமாவதி நாட்டார்மங்கலம், கூத்தனூர், சீதேவிமங்கலம், செட்டிகுளம், பாடாலூர் போன்ற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவில் இன்று தேதி மஞ்சள் நீராடுதல் மற்றும் குடிவிடுதல் நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவு பெற்றது. 

    • பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் சரகத்திற்கு––ட்பட்ட தேனூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் அசோகன் ( வயது 33).
    • மனவேதனை அடைந்த அசோகன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் சரகத்திற்கு––ட்பட்ட தேனூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் அசோகன் ( வயது 33). இவரது மனைவி பாப்பாத்தி இவர்களுக்கு அஜித்தா என்ற மகள் உள்ளார்.

    அசோகன் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அடிக்கடி வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட குடும்ப தகராறில் பாப்பாத்தி வீட்டில் கோபித்து கொண்டு அருகில் உள்ள தனத தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த அசோகன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் குன்னம் போலீசார் சம்பவத்துக்கு விரைந்து சென்று அசோக–னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்ணதாசனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கம்பு பயிரிடப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பி வேலியில் சிக்கி ஆண் காட்டுப்பன்றி ஒன்று மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது
    • மின் கம்பி வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்ததால் கண்ணதாசனுக்கு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் வசூலித்தனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பேரளி வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 40), விவசாயி. சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கம்பு பயிரிடப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பி வேலியில் சிக்கி ஆண் காட்டுப்பன்றி ஒன்று மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுப்பன்றியின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்து சித்தளி வனப்பகுதியில் புதைத்தனர்.

    மேலும் மின் கம்பி வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்ததால் கண்ணதாசனுக்கு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் வசூலித்தனர்.

    பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா, குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று 14 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து, கால்பந்து, பூப்பந்தாட்டம், ஹேண்ட் பால், எறிபந்து, கோ-கோ, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், கபடி உள்ளிட்ட போட்டிகள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியினை பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் தலைவர் பரமேஷ்குமார், பொருளாளர் செல்லப்பிள்ளை, துணை செயலாளர் பாஸ்கர், நகர்மன்ற துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மேலும் முதலிடம் பிடித்த அணிகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரம்பலூர் குறுவட்ட அளவிலான 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான மேற்கண்ட விளையாட்டு போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

    • அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • மாத ஊதியத்தை வழங்கக்கோரி நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே குரும்பலூரில் இயங்கி வந்த பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்த கல்லூரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்காலிகமாக பணிபுரியும் கவுரவ, மணிநேர விரிவுரையாளர்கள் நேற்று காலை தங்களது பணிகளை புறக்கணித்து 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டத்தில் கலந்து கொண்ட கவுரவ-மணி நேர விரிவுரையாளர்கள் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்கிட வேண்டும்.

    1.1.2020 முதல் உள்ள நிலுவை தொகையினை வழங்கிடவும், அனைத்து விரிவுரையாளர்களுக்கும் சம ஊதியம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். மணிநேர விரிவுரையாளர்கள் என்ற பெயரை கவுரவ விரிவுரையாளர் மாற்றி அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறைவேற்றி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    • போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பணிமனை முன்பு நடந்தது

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்ஷனர் நலச்சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரும், மத்திய சங்க தலைவருமான மருதமுத்து தலைமை தாங்கினார். சங்கத்தின் பெரம்பலூர் கிளை தலைவர் கந்தசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 7 ஆண்டு காலமாக அகவிலைப்படி உயர்த்தப்படாததை கண்டித்தும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஓய்வூதியர்களை புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், 3 ஆண்டு கால ஊதிய ஒப்பந்த காலத்தை 4 ஆண்டு காலமாக மாற்றியதை கண்டித்தும், 15 ஆண்டு காலமாக கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்காததை கண்டித்தும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மருத்துவ திட்டம் இல்லாததை கண்டித்தும், 2020-ம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன் வழங்கப்படாததை கண்டித்தும், 1.4.2003 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படாததை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 1½ ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாததை தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 

    • தேனூர், கீழப்பெரம்பலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது
    • கே.ஆர்.நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி, கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் தேனூர், கீழப்பெரம்பலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சார வினியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், ஆர்.எஸ்.மாத்தூர்,

    கே.ஆர்.நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி, கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

    • பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
    • 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

    பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த சிறு, குறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். மேலும் முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த 10-க்கும் மேற்பட்ட பிரபல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளனர்.

    எனவே 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

    எனவே இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார் துறை நிறுவனங்களும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது
    • வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பெரம்பலூர்:

    ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில்,

    செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிப்பட்டனர். 

    • நகர்ப்புற ஏழைகளுக்கு சிறந்த வாழ்க்கை நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் சாதகமான சூழலை உருவாக்குதல், அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்த வேண்டும்.
    • கவுள்பாளையம் ஊராட்சியின் மூலம் சீரான மற்றும் சுகாதாரமான குடிநீர் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு குழுவின் முதல் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதாவது-

    துறைமங்கலம் குடியிருப்பு பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைவராகவும், நிர்வாக பொறியாளர் ஒருங்கிணைப்பாளராகவும், சட்டமன்ற உறுப்பினர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையாளர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், சமூக அறக்கட்டளை உறுப்பினர், குடியிருப்பு சங்க உறுப்பினர் உள்ளிட்ட 18 நபர்கள் அடங்கிய துறைமங்களம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.

    504 குடியிருப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்காகவும், பராமரிப்பதற்காகவும், நிர்வகிப்பதற்காகவும் இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

    நகர்ப்புற ஏழைகளுக்கு சிறந்த வாழ்க்கை நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் சாதகமான சூழலை உருவாக்குதல், அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்த வேண்டும்.

    கவுள்பாளையம் ஊராட்சியின் மூலம் சீரான மற்றும் சுகாதாரமான குடிநீர் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தெருவிளக்குகள், சாலை வசதிகள், கழிவு நீர் ஓடைகள் தேவையான இடங்களில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நீர் தேக்க தொட்டிகள் முறையாக சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டத்தினை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் இளம்பரதி, உதவி நிர்வாக பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் சங்கவி, கவுல் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், மற்றும் பெரம்பலூர் மாவட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குழுவின் அனைத்து துறை சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி பேரூர் மேற்கு மந்தைவெளி பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் மண்டலபூஜை நிறைவடைந்தது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி பேரூர் மேற்கு மந்தைவெளி பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் சிதிலமடைந்ததையடுத்து கோவில் புனரமைப்பு குழுவினர் அம்மன் அருள் வாக்குப்படி பிரபல தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ் குமாரை சந்தித்தனர்.

    இதையடுத்து டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் தலைமையில் புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டு திருக்கடையூர் உலக புகழ்பெற்ற ஸ்தபதி கிருஷ்ணமூர்த்தி வசம் திருப்பணிகளை ஒப்படைத்தனர். தொடர்ந்து திருப்பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி கோவில் புனராவர்த்தன நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடந்தது.

    அதனைத்தொடர்ந்து தினமும் மாலை நேரங்களில் கோவிலில் மண்டல பூஜை மண்டகப்படிதாரர்கள் சார்பில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் மண்டலபூஜை நிறைவடைந்தது. இைதயடுத்து சுவாமி சிலைகளுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    நிகழ்ச்சிக்கு கோவில் அறக்கட்டளை தலைவர் சூரியபிரகாசம் தலைமை தாங்கினார். முன்னதாக சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசால பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீதிரௌபதிஅம்மன் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    தொடர்ந்து திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது.
    • இதில் காளான் வளர்ப்பு, அழகு கலை பயிற்சி, சணல் பை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் ஊராட்சி ஒன்றியம் வாரியாக இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விழிப்புணர்வு மூலமாக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. அதன்படி பெரம்பலூர் ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 27-ந் தேதியும், வேப்பந்தட்டை ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந்தேதியும்,

    பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மற்றும் ஆலத்தூர் ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந்தேதியும், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்டவர்களுக்கு 17-ந்தேதியும், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்பட உள்ளது. இவற்றில் காளான் வளர்ப்பு, அழகு கலை பயிற்சி, சணல் பை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

    எனவே, ஊரக பகுதிகளை சேர்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை,

    ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9444094325 மற்றும் 04328-225362 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    ×