என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் 2-வது முறையாக வழிந்து ஓடுகிறது.
    • ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொட்டரை கிராமத்தில் உள்ள மருதையாறு நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது. தற்போது கடல்போல் காட்சியளிக்கும் நீர்த்தேக்கத்தில் இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள். கொட்டை மருதையாறு நீர்த்தேக்கம் இந்த ஆண்டில் பெய்த மழையால் 2-வது முறையாக நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது."

    • கட்டுமானப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.5 சதவிகிதமாக குறைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள தனியார் திருமண அரங்கில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் தலைமையில் நடைபெற்றது.

    பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மொத்தம் 22 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான பணபலன்களும் வழங்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பொருட்களுக்கும், ரியல் எஸ்டேட் துறைக்கும் 25 சதவிகிதமாக உள்ள ஜி.எஸ்.டி வரியை 5 சதவிகிதமாக மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதானி போன்ற ஒரு சில தனிநபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு பொருளாதார ரீதியாக செயல்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு, மாநில அரசுகளின் உரிமைகளை மதித்து மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி இருந்தால் மட்டுமே அந்தந்த மக்களுடைய தேவைகள் சரியாக போய் சேரும், அந்த பணிகளை மோடி அரசு செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் யுவராஜ், கண்ணன், மாநில பொருளாளர் பொறியாளர் ஜெகதீசன், மாநில இனைச்செயலாளர் பொறியாளர் சிவக்குமார், மண்டல தலைவர் பொறியாளர் ராஜாராம் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுபான கூடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது.
    • டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே சில மதுபான கூடங்களில்(பார்) சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் தற்போது பள்ளி மாணவர்கள் சிலர் மது போதைக்கு அடிமையாகி வருவதாகவும், சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பவர்கள், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. கடந்த 25-ந்தேதி காலை பள்ளி மாணவர்கள் சீருடையில் இருந்த 2 பேர் பள்ளிக்கு செல்லாமல் பெரம்பலூரில் ஒரு டாஸ்மாக் கடை அருகே உள்ள மதுபான கூடத்தில் இருந்து ஒருவரிடம் இருந்து மதுபாட்டில்களை வாங்கி, அதனை புத்தகங்களை சுமக்கும் பையில் வைத்துக்கொண்டும், நொறுக்கு தீனிகளை வாங்கிக்கொண்டும் காட்டு பகுதிக்கு சென்று மது அருந்தியதோடு, புகை பிடித்தனர். பின்னர் போதையில் அவர்கள் நகரில் தள்ளாடியபடி வலம் வந்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி மாணவர்களுக்கு மது பாட்டில்கள், போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதோடு, விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

    • தூய்மை பணியாளர்கள் சங்க பிரசார கூட்டம் நடந்தது.
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தின் சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் அன்பரசு வரவேற்று பேசினார். மாநில செயலாளர் கனி, மாநில தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா ஊக்கத் தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தாமதமின்றி உரிய நேரத்தில் ஊதிய உயர்வு வழங்க பணி பதிவேடு, ஊதிய உயர்வு பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும். மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும். வாரிசு வேலையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டது. வட்டாரத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் திரளாக கூட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொறுப்பாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

    • அனுமதியின்றி செயல்பட்ட மதுபான கூடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
    • 27 மது பாட்டில்கள், 7 பீர் பாட்டில்கள் பறிமுதல்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் செயல்பட்டு வரும் மதுபான கூடத்தில் (பார்) நேற்று காலை சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலர்களும், மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாரும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு மது பாட்டில்களை விற்பனை செய்த மதுபான கூட ஊழியர் குன்னம் தாலுகா, ஒகளூர் கிழக்கு வ.உ.சி.நகரை சேர்ந்த சுப்ரமணியின் மகன் முருகேசனை (வயது 34) கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 27 மது பாட்டில்கள், 7 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த அந்த மதுபான கூடம் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.

    • விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • மகளை அழைத்து வருவதற்காக சென்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மாக்காயிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 47). விவசாயி. இவரது மகள் துர்கா நேற்று சென்னையில் இருந்து ரெயிலில் அரியலூருக்கு வந்தார். அவரை ஊருக்கு அழைத்து வருவதற்காக நேற்று மாலை மாக்காயிகுளத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் அரியலூர் ெரயில் நிலையம் நோக்கி ராமச்சந்திரன் சென்று கொண்டிருந்தார்.

    ராமலிங்கபுரம் காட்டுப்பகுதியில் சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் மறைந்திருந்தவர்கள் என மொத்தம் 7 பேர் கொண்ட கும்பல் திடீெரன வந்து, மோட்டார் சைக்கிள் மூலம் ராமச்சந்திரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை, சாலையோர பள்ளத்தில் தள்ளி இரும்பு ஆயுதங்களால் தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ராமச்சந்திரனின் மனைவி லலிதா கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாண்டியன், மதியழகன், மங்களமேடு துணை சூப்பிரண்டு ஜனனிபிரியா, குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, ராமச்சந்திரனின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் ராமச்சந்திரனின் உடலை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சண்முகமூர்த்தி ஊரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்
    • இன்று அதிகாலை எழுந்து வந்து பார்த்தபோது மளிகைக்கடையுடன் இணைந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருவத்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது கொளக்காநத்தம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சண்முகமூர்த்தி (வயது 63). இவர் அதே ஊரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதனையொட்டியே வீடும் அமைந்துள்ளது. மேலும் இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் மற்றொரு வீடும் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மளிகைக்கடை வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிய அவர் தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டுக்கு மனைவி விஜயாவுடன் தூங்க சென்றார். இன்று அதிகாலை எழுந்து வந்து பார்த்தபோது மளிகைக்கடையடன் இணைந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே அதே பகுதியில் பக்கத்து தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது ஓட்டு வீட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் சீனிவாசன் என்பவரது வீட்டில் ரூ.10 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். சீனிவாசன் கடந்த 24-ந்தேதி முதல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வீடு திரும்பிய நிலையில் திருட்டு சம்பவம் அவருக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

    ஒரே கிராமத்தில் அடுத்தடுத்த 3 வீடுகளில் நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர் திருட்டு தொடர்பாக மருத்துவத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் போலீசாரை கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • இரு தரப்பினர் மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கோவில் நிலத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள சிறுவயலூரில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் யார் விவசாயம் பார்ப்பது? என்பது தொடர்பாக சிறுவயலூரை சேர்ந்த ராஜேந்திரன் தரப்பிற்கும், சிவகுமார் தரப்பிற்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டை போன்றவற்றால் தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் ராஜேந்திரன் மற்றும் வீரமுத்து ஆகியோர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட சிறுவயலூரைச் சேர்ந்த சிவகுமார் (45), செல்லமுத்து (32), மாயவேல் (43), பாபு (30) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்."

    • அரசு ஊழியரிடம் நகை-பணத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    • கவனத்தை திசை திருப்பி பறித்து சென்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், புதுவேலூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி(வயது 54). இவர் பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் வெங்கடேசபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்து, ஒரு அடகு கடையில் வைத்திருந்த 2 பவுன் மோதிரத்தை ரூ.77 ஆயிரம் கட்டி திருப்பினார்.

    பின்னர் தண்டபாணி அந்த மோதிரத்தையும், மீதமுள்ள ரூ.43 ஆயிரத்தையும் ஒரு கைப்பையில் வைத்து தனது மோட்டார் சைக்களில் முன்பக்க கவரில் வைத்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். வழியில் அவர் பெரம்பலூர்-துறையூர் சாலையில் அரணாரை விலக்கு அருகே உள்ள சினிமா தியேட்டர் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் அதே சாலையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் தண்டபாணியிடம், அவரது பணம் கீழே விழுந்து கிடப்பாதாகவும், அதனை எடுக்குமாறும் கூறி அவரது கவனத்தை திசை திருப்பினர். பின்னர் 2 பேரும் தண்டபாணியின் மோட்டார் சைக்கிள் கவரில் இருந்த பணம், நகையை திருடிக்கொண்டு துறையூர் செல்லும் சாலையில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    அவர்களை பிடிப்பதற்காக தண்டபாணி தூரத்தி கொண்டு ஓடிய போது கால் தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். பின்னர் தண்டபாணி இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்"

    • கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த லெப்பைகுடிக்காடு ஜமாலியா நகரை சேர்ந்த உமர்பாரூக்கின் மகன் நியாஸ் அகமது (வயது 29) என்பவர் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். நியாஸ் அகமதுவிடம் இருந்து 10 கிராம் எடையுள்ள 5 கஞ்சா பொட்டலங்கள், ரூ.1,370, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது."

    • ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்
    • தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தான்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே ஆலம்பாடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். கொத்தனார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ரிகாஸ்(வயது 9) என்ற மகனும், தேவிகாஸ்ரீ(5) என்ற மகளும் உண்டு. இதில் ரிகாஸ் பெரம்பலூரில் உள்ள ரோவர் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று காலை ரிகாஸ், தனது மாமாவுடன் அருகே உள்ள ஊராட்சிக்கு சொந்தமான ஏரிக்கு சென்றான். அப்போது அப்பகுதியில் ரிகாஸ் ஒருபுறமும், அவனது மாமா மற்றொரு புறமும் இயற்கை உபாதை கழிக்க சென்றிருந்தனர். பின்னர் அவனது மாமா வந்து பார்த்தபோது ரிகாசை காணவில்லை. இதனால் அவன் வீட்டிற்கு சென்றிருப்பான் என்று நினைத்து, அவர் வீட்டிற்கு வந்தார்.

    ஆனால் ரிகாஸ் வீட்டிற்கு வராததை அறிந்து, அவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவனை காணாததால், ஏரிக்கு சென்று பார்த்தனர். அங்கும் அவன் இல்லாததால் திரும்பி வந்து கிராமத்தில் தேடினர். இதையடுத்து மீண்டும் அவர்கள் ஏரிக்கு சென்று, அங்கு மண் எடுக்கப்பட்ட குழியில் நிரம்பிய தண்ணீரில் இறங்கி தேடினர்.

    அப்போது தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்த ரிகாசை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ரிகாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    ×