என் மலர்
பெரம்பலூர்
- 9 மாத கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- சங்கீதாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் 1-வது வார்டுக்கு உட்பட்ட எம்.பி.சி. காலனியை சேர்ந்தவர் மணி. இவர் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் என்ஜினீயரிங் ஓர்க்ஸ் கடையில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சங்கீதா(வயது 19) என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி திருமணம் முடிந்தது. தற்போது சங்கீதா 9 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் சங்கீதாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.15 மணியளவில் சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் வயிற்றில் இருந்த ஆண்குழந்தையும் இறந்து விட்டது.இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சங்கீதாவுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகனும் விசாரணை நடத்தி வருகிறார்.
- டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிள்ளையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்(வயது 27). நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரண்யா(24). இவர்களுக்கு திருமணமாகி அகல்யா, ஓவியா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டில் ஆள் யாரும் இல்லாதபோது தினேஷ் தனது வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியில் சென்றிருந்த சரண்யா வீட்டிற்கு வந்து பார்த்தபோது தூக்கில் தினேஷ் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தினேஷின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்
- அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை
பெரம்பலூர்:பெரம்பலூரில் இருந்து வேப்பந்தட்டை வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்திற்கு அரசு பஸ் நேற்று இரவு சென்றது. பஸ்சை பெரம்பலூரை சேர்ந்த முருகேசன்(வயது52) என்பவர் ஓட்டி சென்றார். நடத்துனராக நூத்தப்பூரை சேர்ந்த முருகேசன்(48) பணியில் இருந்தார். அப்போது பஸ் வெண்பாவூர் அருகே சென்றபோது இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் கல் வீசி பஸ் கண்ணாடியை உடைத்தனர். உடனடியாக டிரைவர், நடத்துனர் மற்றும் பயணிகள் மர்ம நபர்களை பிடிக்க துரத்தியுள்ளனர். ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இந்த கல் வீச்சு தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் முருகேசன் கை.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கல்வீசி பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தால் பஸ்ஸை அங்கேயே நிறுத்திவிட்டு பின்னாடி வந்த தனியார் பஸ்ஸில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா பள்ளி வாளகத்தில் நடைபெற்றது.
- பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு பதவியேற்பு மற்றும் உறுதிமொழியினை வழங்கினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா பள்ளி வாளகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ண கல்வி நிறுவனங்களின் தலைவர் ம.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன், பெண்கள்பள்ளி முதல்வர் கோமதி, வித்யா பவன் பள்ளியின் முதல்வர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு பதவியேற்பு மற்றும் உறுதிமொழியினை வழங்கி பேசியதாவது:-
மாணவ பருவத்தில் தங்கள் காதுகளில் விளைகின்ற இரு பொருள் தரும் வாக்கியங்களை நன்மைக்கு தரும் பொருள் நன்மை தராபொருள் எது என பகுத்தாய்ந்து அதன்படி நடந்தால் வாழ்வில் உயர்ந்த பதவியை அடைய முடியும் என்றார்.
விழாவில் முன்னதாக பள்ளி முதல்வர் கலைச்செல்வி அனைவரையும் வரவேற்றார். இறுதியில்ஒ ருங்கிணைப்பாளர் பிரியா நன்றி கூறினார்.
விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம், மருததுரை, செல்வராணி, துறைத் தலைவர்கள்ந ல்லேந்திரன், முத்துக்குமார், பாலகிருஷ்ணன், மகாலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
- ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் பெரம்பலூர் 4-வது இடம் பிடித்துள்ளது.
- 100 சதவீதம் இலக்கு எட்டப்பட்டுள்ளது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்ட பணி குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்கும் பணியானது கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் பெரம்பலூர் மாவட்ட வாக்காளர்கள் ஆர்வமுடன் தாமாக முன்வந்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைத்து கொண்டதால், மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 4-வது இடம் பெற்றுள்ளது மேலும் 4 வாக்கு சாவடிகளில் 100 சதவீதம் இலக்கு எட்டப்பட்டுள்ளது, என்றார்.
- கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வட மாநில ஊழியர்களிடம் போலீசார் விசாரணை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் ஒரு ஓட்டல் பின்புற பகுதியில், அதே பகுதியை சேர்ந்த பாலமணியம்மாளுக்கு என்பவருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று மாலை 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் பிணமாக மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்டவர்கள் இதுகுறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் போல் இருப்பதால், அந்தப்பகுதியில் இயங்கும் தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரியும் வட மாநில ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- பாடாலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை
பெரம்பலூர்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணிபாளையம், திருவளக்குறிச்சி, நல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.
- தனியார் பள்ளியில் உலக கைகழுவும் தினம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது
- காய்ச்சல் விழுப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது
பெரம்பலூர்
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வரிசைப்பட்டி கிராமத்தில் உள்ள வரதவிகாஸ் பப்ளிக் பள்ளியில் செயல்படும் செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலக கை கழுவும் தினம் மற்றும் இன்புளுயன்ஸா காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்சியினை பள்ளியின் தாளாளர் ராஜா ஏற்பாடு செய்திருந்தார். பள்ளி முதல்வர் அருள்பிரபாகர் தலைமைதாங்கினார். மண்டலஅலுவலர் ஆனந்தகுமார் வரவேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மேலமாத்தூர் அரசு மருத்துவர் ரமேஷ் மற்றும் கொளக்காநத்தம் அரசு சிறார் மருத்துவர் மணிகண்டன், சுகாதாரஆய்வாளர் முருகேன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடம் இ்ன்புளுயன்ஸா நோய் வராமல் எவ்வாறு நம்மை பாதுகாத்துக்கொள்ள செய்ய வேண்டும். நோய்வராமல் காப்பதற்கு நாம் கையை எவ்வாறு கழுவவேண்டும். கை கழுவாமல் சாப்பிட்டால் ஏற்படக்கூடிய நோய்கள் பற்றியும், செயல்முறையுடன் விளக்கி கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- வாகனம் மோதி பெண் பலியானார்
- உறவினர் வீட்டிற்கு சென்ற போது விபரீதம்
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் நகர்பகுதி சங்குப்பேட்டை அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மனைவி தனம் ( வயது 55). இவர் நேற்று வேப்பந்தட்டை தாலுக்கா அயன் பேரையூரில் உள்ள சமத்துவபுரத்தில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். பிறகு பெரம்பலூர் திரும்பி செல்வதற்காக பஸ் ஏற பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக தனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியின் மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தனம் பரிதாபமாக உயிர் இருந்தார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது
பெரம்பலூர்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு முழுவதும் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். ஒரேநாடு, ஒரே கொள்கை என்ற 7-வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். மாநில துணைச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் வேல்மணி, மாவட்ட பொருளாளர் புகழேந்தி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஓய்வுபெற்ற ஆசிரியர் பிரிவின் மாவட்ட தலைவர் புலவர் ராமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
- கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் நேற்று தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமையில் உடலில் பட்டை, நாமம் அணிந்து கொண்டு கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், 100 யூனிட் இலவச மின்சாரம் என்பதனை 300 யூனிட்டாக மாற்ற கோரியும், 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுக்கும் மின் அளவீட்டை ஒரு மாதத்திற்கு ஒரு தடவை கணக்கெடுக்க வலியுறுத்தியும், வேளாண்மை துறை ஊழல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிலர் சட்டை அணியாமல் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்க கூட்டமாக செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார், அவர்களை தடுத்து 5 பேர் மட்டும் சென்று மனு கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து கலெக்டர் அலுவலக படிக்கட்டுகளில் விவசாயிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியே வந்தார். அவரிடம் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், காரில் ஏறி செல்ல முயன்றார். அப்போது கலெக்டரிடம் முறையிட வந்த விவசாயிகளிடம் என்னவென்று கூட விசாரிக்கவில்லை என்று கூறி, கலெக்டரின் காரை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர வேலையின் காரணமாக வெளியே செல்வதாகவும், மீண்டும் வந்து அவர்களை சந்திப்பதாகவும் விவசாயிகளிடம் கலெக்டர் கூறியதையடுத்து, அவரது கார் செல்ல வழிவிட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையர்கண்ணி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கை மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக, கூறினார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- விவசாயி வீட்டில் ரூ.50 ஆயிரம் திருட்டுபோனது.
- வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயவேல்(வயது 45). விவசாயி. இவர் நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றார். பின்னர் மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பெட்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது தொடர்பாக வி.களத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






