என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் தர்ணா போராட்டம்
    X

    விவசாயிகள் தர்ணா போராட்டம்

    • விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் நேற்று தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமையில் உடலில் பட்டை, நாமம் அணிந்து கொண்டு கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், 100 யூனிட் இலவச மின்சாரம் என்பதனை 300 யூனிட்டாக மாற்ற கோரியும், 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுக்கும் மின் அளவீட்டை ஒரு மாதத்திற்கு ஒரு தடவை கணக்கெடுக்க வலியுறுத்தியும், வேளாண்மை துறை ஊழல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிலர் சட்டை அணியாமல் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்க கூட்டமாக செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார், அவர்களை தடுத்து 5 பேர் மட்டும் சென்று மனு கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து கலெக்டர் அலுவலக படிக்கட்டுகளில் விவசாயிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியே வந்தார். அவரிடம் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், காரில் ஏறி செல்ல முயன்றார். அப்போது கலெக்டரிடம் முறையிட வந்த விவசாயிகளிடம் என்னவென்று கூட விசாரிக்கவில்லை என்று கூறி, கலெக்டரின் காரை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர வேலையின் காரணமாக வெளியே செல்வதாகவும், மீண்டும் வந்து அவர்களை சந்திப்பதாகவும் விவசாயிகளிடம் கலெக்டர் கூறியதையடுத்து, அவரது கார் செல்ல வழிவிட்டனர்.

    இதையடுத்து அங்கு வந்த மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையர்கண்ணி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கை மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக, கூறினார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×