என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
பெரம்பலூர்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், அபிராமபுரம், துறைமங்கலம், கே.கே.நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அரியலூர் மெயின்ரோடு, மின்நகர், நான்குரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர்சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், எளம்பலூர், இந்திராநகர், சிட்கோ, அருமடல் ரோடு, அருமடல், ஆத்தூர் ரோடு மற்றும் கிராமிய பகுதிகளான செங்குணம், போலீஸ் குடியிருப்பு, சமத்துவபுரம், வடக்குமாதவி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
- கலெக்டரிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்
பெரம்பலூர்
கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணை செயலாளர் கீதா தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேஸ்வரி, செயலாளர் சின்னப்பொண்ணு, பொருளாளர் ஷர்மிளா பேகம், துணைத் தலைவர் பொன்மணி, துணை செயலாளர் சாந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட மாதர் சங்கத்தினர், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலையும், கூலியும் வழங்கிட வேண்டும். அந்த திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட முதியோர்களுக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். நீண்ட காலமாக குடியிருப்பவர்களின் வீடுகளுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். ஏழை குடும்பங்களின் ரேஷன் அட்டையில் என்.பி.எச்.எச். என்ற குறியீடினை பி.எச்.எச். என திருத்தம் செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை தடையில்லாமல் வழங்கிட வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் இது தொடர்பான மனுக்களை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
- பெண் உட்பட 2 பேரை சிறையில் அடைத்தனர்.
- சிறுமி கற்பழிப்பு புகாரில்
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கரம்பியம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் வசந்தராஜ் (வயது30). இவரது உறவினர் மகேந்திரன் மனைவி சங்கரி (22). இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சங்கரி வீட்டிற்கு வந்த 17 வயது மனவளர்ச்சி குன்றிய பெண்ணை சத்தியராஜ் கற்பழி த்துள்ளார். அச்சிறுமி தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் சித்தி கொடுத்த புகாரி ன்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறுமியை கற்பழித்த இளைஞர் வசந்தராஜ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த சங்கரி ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
- போலீசார் நேற்று ரோந்து சென்றனர்
- சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட விவசாயி கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, வெள்ளுவாடி கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் நாட்டு சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட தோட்டத்து உரிமையாளர் தங்கவேலை (வயது 51) போலீசார் கைது செய்தனர்.
2 லிட்டர் நாட்டு சாராயத்தையும், 150 லிட்டர் நாட்டு சாராய ஊறலையும் போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக
- வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
பெரம்பலூர்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்தை சேர்ந்த கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகமது பட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூர்,
பெரியம்மாபாளையம், பிள்ளையார் பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகார், பாலையூர், பெரிய வடகரை, வெண்பாவூர் ஆகிய பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரி தெரிவித்து உள்ளார்.
- வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை
- முதியவர் மர்மமான முறையில் இறந்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 62). இவருடைய மனைவி ரத்னம். நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற கதிர்வேல் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே சாலையோரத்தில் கதிர்வேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை கண்டவர்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதிர்வேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கதிர்வேலின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிர்வேல் எப்படி இறந்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நர்சிங் மாணவியை திருமணம் செய்த
- டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதுடைய டிப்ளமோ நர்சிங் முதலாமாண்டு படித்து வரும் மாணவி கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி தனது சித்தி வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.
ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்காதால் இதுகுறித்து மாணவியின் தாய் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். மேலும் மாணவியை அம்மாபாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்த சிவராமன் மகன் டிரைவர் விஜய் என்ற விஜயகுமார் (26) என்பவர் அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக மாணவியின் தாய் ஏற்கனவே போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மாணவியை அழைத்து சென்று விஜயகுமார் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விஜயகுமாரையும், அந்த மாணவியை பெரம்பலூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அந்த மாணவியை அவரது தாயிடம் ஒப்படைத்தனர். மாணவி மாயமான வழக்கை மாற்றி விஜயகுமார் மீது குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
- விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள
- பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. இங்கு அனைத்து பருவத்திலும் அனைத்து வகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டம் மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் ஆகியவை உற்பத்தியில் தமிழகத்திலேயே முதலிடம் வகித்து வருகிறது. பால் உற்பத்தியிலும் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது.
மாவட்டத்தில் வேப்பந்தட்டையில் பருத்தி ஆராய்ச்சி மையம் உள்ளது. ஆனால் அடிப்படையில் முழுமையாக விவசாயத்தை தொழிலாக கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி இல்லை என்பது அனைவரிடத்திலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூரில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்று விவசாயிகளும், விவசாயிகள் சங்கங்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 65), விவசாயி.
- திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லோகநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 65), விவசாயி. இவருக்கு திருமணமாகவில்லை.
கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதியடைந்த லோகநாதன் நேற்று முன்தினம் காலை தனது தம்பி வயலில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்டவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லோகநாதன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினர்.
- நுகர்வோர் உணவு பொருள் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் - அதிகாரி தகவல்
- கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் உணவு பொருட்களுடன் தயாரிப்பு மற்றும் காலாவதி விவரங்களும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
பெரம்பலூர் :
பெரம்பலூரில் இனிப்பு மற்றும் பலகாரங்களை தயாரிக்கும் உணவு பொருள் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு உணவு பாதுகாப்பு துறையின் பெரம்பலூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார வகைகள் மற்றும் பேக்கரி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006, அதன் விதிமுறைகள் 2011-ன்படி கண்டிப்பாக உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு பெற்றிருக்க வேண்டும். தரமான மூலப்பொருட்களை தெரிந்த உணவு வணிகர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகளில் உணவை அடைத்து விற்பனை செய்யக்கூடாது. மேலும் கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் உணவு பொருட்களுடன் தயாரிப்பு மற்றும் காலாவதி விவரங்களும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
நுகர்வோருக்கு உணவு பொருள் தொடர்பான புகார் ஏதேனும் இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இனிப்பு மற்றும் கார வகைகள், பேக்கரி தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மேற்கண்ட வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தவறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குன்னம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் 12-ம் ஆண்டு புரட்டாசி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாலை பெருமாள் கருட வாகனத்தில் வாண வேடிக்கையுடன் கூடிய திருவீதி உலாவும் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் 12-ம் ஆண்டு புரட்டாசி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூபமும், அதனை தொடர்ந்து கோ பூஜை, ஸ்தயனா, திருமஞ்சனம் முதல் கால பிரசாத வினியோகம், பின்னர் திருக்கல்யாண பெருவிழாவும், ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் மாலை பெருமாள் கருட வாகனத்தில் வாண வேடிக்கையுடன் கூடிய திருவீதி உலாவும் நடைபெற்றது. இரவு பள்ளியறை சேவையும் நடந்தது.
நிகழ்ச்சியில் குன்னம் மற்றும் சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
- கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 56 விற்பனையாளர்கள் மற்றும் 2 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்படவுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெரம்பலூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 56 விற்பனையாளர்கள் மற்றும் 2 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்படவுள்ளது.
இது குறித்து தகவல் கேட்டு பல விண்ணப்பதாரர்கள் தொலைபேசி மூலம் பல்வேறு சந்தேகங்களை தெளிவுப்படுத்திட அழைப்பதால் கூட்டுறவுத்துறையின் சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. TN COOP DEPT என்ற யூ-டியூப் சேனலில் உள்ள வீடியோ (http://www.youtube.com/watch?v=G6c5e2ELJDS) மூலம் விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர்கள், கட்டுநர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் தேவையான ஆவணங்கள் குறித்து தெரிந்து பயன்பெறலாம்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை www.drbpblr.net என்ற இணையதளம் வழியாக மட்டுமே வரும் நவம்பர் மாதம் 14ம்தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.






