என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • மாத ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை
    • பணி நிரந்தரம் கோரி கோஷம்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி (ஒ.எச்.டி.) ஆபரேட்டர், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி மற்றும் பள்ளியில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாத ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாத ஊதியத்தை பிரதி மாதம் 5-ந்தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். தூய்மை காவலர்களை பணி நிரந்தப்படுத்தி, உரிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். துப்புரவு பணிகளை அவுட் சோர்சிங் முறையில் விடும் முயற்சியை கைவிட வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு மாதம் ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டும். பல ஆண்டுகளாக பணிபுரியும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை சுழற்சி முறையில் பாரபட்சமாக நிறுத்துவதை கைவிட்டு, அவர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்

    • வீடு முழுவதும் தரை மற்றும் சுவர்களில் ரத்தம் தெறித்து சிதறிக்கிடந்தது.
    • வீட்டின் வாசல் முதல் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 80). இவரது மனைவி பார்வதி என்ற மாக்காயி (70).

    இந்த தம்பதிக்கு மாக்காயி, காந்தி, செல்வாம்பாள், சரசு ஆகிய 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அதே ஊரில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். விவசாயியான மாணிக்கம் அதே ஊரின் மையப்பகுதியில் சொந்த வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

    அவ்வப்போது மாணிக்கம் தம்பதியினர் மகள்கள் வீட்டுக்கு சென்று வருவதும், அதேபோல் மகள்கள் பெற்றோரை பார்க்க குழந்தைகளுடன் வந்து செல்வதும் வழக்கமாக இருந்தது.

    தனக்கான நிலபுலன்களை மகள்களுக்கு பிரித்து கொடுத்த மாணிக்கம் தங்களின் எதிர்கால தேவைக்காக நகை, பணமும் சேர்த்து வைத்திருந்தார். அதனைக் கொண்டு குடும்பம் நடத்தவும், விவசாய பணிகள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட செலவுகளையும் செய்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று விவசாய பணிகளை முடித்துக்கொண்டு மாலையில் வீடு திரும்பிய மாணிக்கம் இரவு சாப்பிட்டுவிட்டு தனது மனைவியுடன் தூங்கினார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் மாணிக்கம் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கிராமம் என்பதால் தனது மகள் யாராவது வந்திருக்கலாம் என்று எண்ணி, கதவை திறந்தார். உடனே அதிரடியாக உள்ளே புகுந்த மர்மநபர்கள் மாணிக்கத்தின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினர். இதனை சற்றும் எதிர்பாராத அவர் கூச்சல் போட்டார்.

    இதைக்கேட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவரது மனைவி பார்வதியும் பதறி எழுந்தார். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரையும் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் இருவரையும் வீட்டிற்குள் துரத்தி துரத்தி கொடூரமாக கழுத்தை அறுத்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர்.

    பின்னர் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் சாரலுடன் மழை பெய்து கொண்டிருந்ததால் யாருக்கும் தம்பதியினர் போட்ட மரண ஓலம் கேட்கவில்லை.

    தினமும் அதிகாலையிலேயே எழுந்து பார்வதி வாசல் தெளித்து கோலம் போடுவது வழக்கம். ஆனால் இன்று காலை நீண்ட நேரமாகியும் வாசல் தெளிக்காமல் இருந்தது. அதே நேரம் வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் வெளியே நின்று பார்வதியை அழைத்தனர்.

    ஆனால் உள்ளே இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர்.

    அங்கு கணவன், மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். வீடு முழுவதும் தரை மற்றும் சுவர்களில் ரத்தம் தெறித்து சிதறிக்கிடந்தது. மேலும் வீட்டின் வாசல் முதல் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    உடனடியாக அவர்கள் அதே ஊரில் வசித்து வரும் மாணிக்கத்தின் 4 மகள்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த பெற்றோரின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டிற்குள் சென்று கொலையுண்ட தம்பதியினரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்த அவர்கள் மோப்பநாய், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.

    வீட்டில் எவ்வளவு நகை, பணம் இருந்தது, அது கொள்ளையர்களுக்கு எப்படி தெரிந்தது, கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மர்மநபர்கள் வந்தார்களா அல்லது முன்விரோதம், பகை காரணமாக வந்த மர்மநபர்கள் தம்பதியை கொலை செய்துவிட்டு நகை, பணத்தை எடுத்து சென்றார்களா, உறவினர்களே இதில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். நள்ளிரவில் வயதான தம்பதியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெங்காயம், தக்காளி, மரவள்ளி பயிருக்கு காப்பீடு
    • நிதி உதவி, நிலையான வருமான் கிடைக்க ஏதுவாக

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், தக்காளி, மரவள்ளி ஆகிய பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, புதுப்பிக்கப்பட்ட பாரத பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2022-23 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் தோட்டக்கலைப்பயிர்களான சின்ன வெங்காயம், மரவள்ளி மற்றும் தக்காளி பயிர்களுக்கு இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடு செய்திடும் வகையில் விவசாயிகளுக்கு நிதி உதவி மற்றும் நிலையான வருமானம் கிடைக்க ஏதுவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.சின்ன வெங்காயம் பயிருக்கு குறுவட்டங்களான கொளக்காநத்தம், செட்டிக்குளம், பெரம்பலூர், குரும்பலூர், வெங்கலம் மற்றும் வாலிகண்டபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மரவள்ளி பயிருக்கு வேப்பந்தட்டை, வெங்கலம் மற்றும் பசும்பலூர் குறுவட்டங்களும், தக்காளி பயிருக்கு கூத்தூர் குறுவட்டமும் தேர்வு செய்து வரப்பெற்றுள்ளன.சின்ன வெங்காயத்திற்கு ஏக்கருக்கு காப்பீடு தொகை 41 ஆயிரத்து 500. இதில் விவசாயிகள் செலுத்தவேண்டிய பிரிமிய தொகை ரூ. 2 ஆயிரத்து 75 ஆகும். தக்காளி ஏக்கருக்கு காப்பீடு தொகை ரூ.17 ஆயிரத்து 50. இதில் விவசாயிகள் செலுத்தவேண்டிய பிரிமியதொகை ரூ. 853 ஆகும். இந்த தொகையை நாளை (31ம்தேதிக்குள்) செலுத்தவேண்டும். மரவள்ளி ஏக்கருக்கு காப்பீடு தொகை ரூ. 24 ஆயிரத்து100. இதில் விவசாயிகள் செலுத்தவேண்டிய பிரிமிய தொகை ரூ. ஆயித்து 205 ஆகும். இந்த தொகையை வரும் பிப்.28ம்தேதிக்குள் செலுத்தவேண்டும்.இத்திட்டத்தில் பயன்பெற நடப்பு ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் சிட்டா, நடப்பு பருவ அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் முதலியவற்றை கொண்டு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பிரீமியத் தொகையைசெலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • மகா மண்டல பூஜை
    • அனைத்து மும்மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் மற்றும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை ஆகிய தெய்வங்களுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 12ம்தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. நேற்று மகா மண்டல பூஜை 48 நாள் சிறப்பு நிகழ்ச்சி காலை 10 மணி அளவில் மஹா யாகமும், அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூர்ணகதி முடித்து மகாததீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வீடுகளில் ஆயுத சோதனை
    • 18 ரவுடிகள் தலைமறைவு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின் பேரில் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி, ஏடிஎஸ்பி மதியழகன் தலைமையில் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் முன்னிலையில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர்கள் வினோத் கண்ணன், ராம்குமார், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர்கள் அசோகன், குமார் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் பெரம்பலூர் சங்குப் பேட்டை, திருநகர், கோனேரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் திடிர் சோதனை செய்தனர்.அப்போது ரவுடிகள் வீட்டில் உள்ளனரா ? எங்கு உள்ளனர் ? குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனரா என ரவுடிகளிடமும், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடப்பட்ட 48 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 117 ரவுடிகளில் இதுவரை குண்டாஸ் சட்டத்தில் 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ரவுடிகள் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளனர். 3 ரவுடிகள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். . 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 55 பேர் ஆர்டிஓ உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 18 ரவுடிகள் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    • குடும்ப தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் கோட்டாட்சியர் நிறைமதியும் விசாரணை நடத்தி வருகிறார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள சிறுநிலா காட்டுக்கொட்டகையை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி கலையரசி (வயது 28). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பிரதாப்(4) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கலையரசி, பருத்தி வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். வெளியில் சென்றிருந்த வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, உயிருக்கு போராடிய நிலையில் இருந்த கலையரசியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் கோட்டாட்சியர் நிறைமதியும் விசாரணை நடத்தி வருகிறார்.


    • கீழப்பெரம்பலூர், அகரம்சீகூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே தேனூர் மற்றும் கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் நாளை(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. பராமரிப்பு பணி முடியும் வரை இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் புதுவேட்டகுடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், ஆர்.எஸ்.மாத்தூர், கே.ஆர்.நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி, கிளியப்பட்டு ஆகிய கிராமங்களில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


    • 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, ஜெயா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
    • ஜெயா மற்றும் 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஜெயா (வயது 25). என்ஜினீயரிங் படித்துள்ள இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் பென்னகோணத்தை சேர்ந்த கண்ணனின் மகன் விஜயகுமாருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந் தேதி திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு 2 வயதில் நிகிதா, நிகிசா என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர். என்ஜினீயரான விஜயகுமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஜெயா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி விஜயகுமாரின் தாய் தமிழ்ச்செல்வி அழைத்ததன்பேரில் ஜெயா குழந்தைகளுடன் கணவர் வீட்டிற்கு வந்தார்.

    அங்கு முதல் தளத்தில் உள்ள அறையில் ஜெயா குழந்தைகளுடன் தங்கியிருந்தார். நேற்று காலை வெகுநேரமாகியும் ஜெயா தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த தமிழ்ச்செல்வி காலை 9 மணியளவில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது அறையின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் ஜெயா தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அருகே 2 பெண் குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். இதுபற்றி தகவல் அறிந்தமங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, ஜெயா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தகவல் அறிந்த ஜெயாவின் பெற்றோர், சகோதரர், உறவினர்கள் உள்ளிட்டோர் அங்கு வந்து ஜெயா மற்றும் குழந்தைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    இதையடுத்து ஜெயா மற்றும் 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தங்களது மகள், பேத்திகள் சாவில் மர்மம் உள்ளதாகவும், விஜயகுமாரின் தாய் தமிழ்ச்செல்வி மற்றும் விஜயகுமாரின் அண்ணன் வினோத்குமாரின் மனைவி பிரியா ஆகியோர் ஜெயாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், மேலும் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு ஜெயாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் ஜெயாவின் பெற்றோர் தரப்பில் புகார் கூறப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்று மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தைகளை கொன்று ஜெயா தற்கொலை செய்திருந்தால், அதற்கான காரணம் என்ன?, அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டினார்களா?, அல்லது அவரும், குழந்தைகளும் கொலை செய்யப்பட்டனரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அரசால் கோரப்படும் சான்றுகளை நாளை மறுநாளுக்குள் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
    • மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் நடுக்குவாதம் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் உயிருடன் உள்ளார் என்பதற்கான சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மருத்துவ சான்றுடன், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இந்த அலுவலகத்தில் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதுநாள் வரை மேற்கண்ட சான்றுகள் வழங்காத மாற்றுத்திறனாளி நபர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை மறுநாளுக்குள் (திங்கட்கிழமை) வழங்கிட வேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட சான்றுகளை வழங்காத மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்க இயலாது என்று கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் பிரம்மபுரீசுவரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • பெண்கள் குத்து விளக்குக்கு மலர் சாற்றி, தீபம் ஏற்றி குங்கும அர்ச்சனை செய்து கூட்டுவழிபாடு நடத்தினர்.

     பெரம்பலூர்

    பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீசுவரர் கோவிலில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நேற்று இரவு நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு குத்து விளக்குக்கு மலர் சாற்றி, தீபம் ஏற்றி குங்கும அர்ச்சனை செய்து கூட்டுவழிபாடு நடத்தினர். அதனைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் நந்தியம் பெருமானை வழிபட்டனர். பூஜை ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராஜா உள்ளிட்ட பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

    • ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தைப்பூச கொடியேற்றம் நடைபெற்றது.
    • விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனத்தில் முருகப்பெருமான் திருவீதி உலா வருவார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடிப்பட்டம் திருவீதி உலா வந்த பின் கொடிமரத்திற்கு புனித தீர்த்தங்களால் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் பக்தி பரவசத்துடன் கொடியேற்றப்பட்டது. மேலும் காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகளுக்கு பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனத்தில் முருகப்பெருமான் திருவீதி உலா வருவார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 4-ந் தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • வேப்பந்தட்டை அருகே ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
    • திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது

    வேப்பந்தட்டை:

    திருச்சியில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வழியாக பெங்களூர் நோக்கி நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த பஸ்சில் 20 பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை லால்குடி அருகே உள்ள பூவாளூரை சேர்ந்த பசுபதி (வயது29) ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 2 மணி அளவில் வேப்பந்தட்டை பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர். தகவலறித்து நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சில் இடுபாடுகளில் சிக்கித் தவித்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவத்தில் ஓசூரை சேர்ந்த புஷ்பா காந்தி (வயது 60), அதே ஊரை சேர்ந்த லட்சுமி (55), பெங்களூரை சேர்ந்த ராஜேஷ் (45) உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் டிரைவர் பசுபதி, மாற்று டிரைவர் உத்திரகுமார், கிளீனர் நேசமணி உள்பட 5 பேர் காயம் இன்றி தப்பித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நள்ளிரவு விபத்து சம்பவத்தால் வேப்பந்தட்டையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    ×