என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்னாசி டாஸ்மாக் விற்பனையாளர் மணிதேவனிடம் தன்னுடைய பாக்கெட்டில் பணம் இல்லை.
    • விற்பனையாளர் மணிதேவன் டாஸ்மாக் கடையில் கூகுள் பே வசதி இல்லை என கூறி மறுத்துள்ளார்.

    அகரம்சீகூர்:

    இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் பணம் இல்லா பரிவர்த்தனை காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. வங்கிக் கணக்கில் பணமும், ஆண்ட்ராய்டு செல்போனும் கையில் இருந்தால் எந்த பொருளையும் வாங்கி விட முடியும். சாதாரண தள்ளுவண்டி, தரைக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை கூகுள் பே, போன் பே, நம்பர் ட்ரான்ஸ்பர் வசதிகள் வந்துவிட்டன.

    இந்த நம்பிக்கையில் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் மேலக்காடு பகுதியைச் சேர்ந்த இன்னாசி (வயது 37) என்பவர் அன்னமங்கலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்றார்.

    அந்தக் கடையில் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலம் கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிதேவன் மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த மூர்த்தி ஆகிய இருவரும் விற்பனையாளர்களாக இருந்தனர்.

    அப்போது இன்னாசி டாஸ்மாக் விற்பனையாளர் மணிதேவனிடம் தன்னுடைய பாக்கெட்டில் பணம் இல்லை. கூகுள் பே மூலம் பணம் செலுத்துகிறேன். ஒரு குவாட்டர் மதுபான பாட்டில் தாருங்கள் என கேட்டுள்ளார். அதற்கு விற்பனையாளர் மணிதேவன் டாஸ்மாக் கடையில் கூகுள் பே வசதி இல்லை என கூறி மறுத்துள்ளார்.

    அவரது கையில் ஏடிஎம் கார்டும் இல்லை என்று தெரிகிறது. இதனால் சரக்கு அடிக்காமலேயே அவருக்கு கோபம் தலைக்கு ஏறியது. இதில் ஆத்திரமடைந்த இன்னாசி டாஸ்மாக் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். பின்னர் மணிதேவன் முகத்தில் ஓங்கி குத்தி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

    இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த மணிதேவனை சக விற்பனையாளர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூகுள் பே வசதி இல்லாததால் டாஸ்மாக் விற்பனையாளரை வாடிக்கையாளர் தாக்கி கடையின் கண்ணாடியை உடைத்த சம்பவம் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படு த்தியுள்ளது.

    • சிப்காட்டில் காலணி பூங்கா கட்டுமான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • இதன் மூலம் அதிகளவிலான பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதன் மூலம் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில், பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அமைவதுடன் மாவட்டத்தின் வளர்ச்சி மேலும் உயர்நிலை அடையும்.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவினை திறந்து வைத்து, பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் நேற்று எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில், பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி முன்னிலையில் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஜின்னா ரபீக் அஹமது, தைவான் முதலீட்டாளர்கள் குழுத்தலைவர் கிரிஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கலெக்டர் கூறுகையில், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமையவுள்ள காலணி பூங்கா உள்ளிட்ட நிறுவனங்கள் அமைவதன் மூலம் அதிகளவிலான பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதன் மூலம் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில், பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அமைவதுடன் மாவட்டத்தின் வளர்ச்சி மேலும் உயர்நிலை அடையும். மேலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் பல்வேறு சிறு, குறு தொழில்கள் உருவாகி பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும், என்றார். முன்னதாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஆய்வு மேற்கொள்ள வந்த குழுவினர்களை அப்பகுதியில் வசித்து வரும் நரிக்குறவ இன மக்கள் துளசி மாலை அணிவித்து வரவேற்றனர். மேலும் முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகத்தை கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் குழுவினர் மற்றும் தைவான் முதலீட்டாளர்கள் குழுவினர் சந்தித்து கட்டுமான பணிகள் முன்னேற்பாடுகள் குறித்து பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலந்துரையாடினார். இதில் தொழில்துறை வழிகாட்டி நிறுவன அலுவலர்கள், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை உட்பட அரசுத்துறை அலுவலர் கலந்து கொண்டனர்.


    • கல்லூரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • சமூக வலைதளங்களில் தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது, பாஸ்வேர்டு அடிக்கடி மாற்ற வேண்டுவது, ஆன்லைன் விளையாட்டு, தேவையில்லாத அப்ளிகேசன் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    பெரம்பலூர்


    பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் நடந்தது. கல்லூரி மாணவ-மாணவிகளிடையே சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், சிவமீனா (தொழில்நுட்பம்) ஆகியோர் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். இணையம் வழியாக நடக்கும் குற்றங்களான ஏ.டி.எம். கார்டை பயன்படுத்துவது பற்றியும், ஏ.டி.எம். கார்டு மற்றும் ஒ.டி.பி. எண் பகிரக்கூடாது என்பது பற்றியும், வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது என்றும், வேலை வாங்கி தருவது, இ-பைக் டீலர்ஷிப், கடன் வழங்கும் செயலிகள், ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல், கிரிப்டோ கரன்சி மோசடி, அயல்நாடு வேலைக்கு செல்வது, செல்போன் டவர் வைப்பது, பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்களில் தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது, பாஸ்வேர்டு அடிக்கடி மாற்ற வேண்டுவது, ஆன்லைன் விளையாட்டு, தேவையில்லாத அப்ளிகேசன் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930-க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


    • மதுபான கடை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இதுகுறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்ப்பவர் மணிதேவன்(வயது 46). இவர் நேற்று கடையை திறந்து மதுபானம் விற்பனை செய்து வந்தார். அப்போது அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இன்னாசி என்பவர் மதுபானம் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மணிதேவனிடம் மது பாட்டில் வாங்கிக்கொண்டு கூகுள் பே மூலமாக பணம் செலுத்தலாமா? என கேட்டுள்ளார். அதற்கு மணிதேவன் அந்த வசதி எங்களிடம் இல்லை என கூறியுள்ளார். அதற்கு எல்லா கடைகளிலும் கூகுள் பே பயன்படுத்தப்படுகிறது. உங்க கடையில் மட்டும் ஏன் பயன்படுத்தவில்லை எனக்கூறி தகராறு செய்துள்ளார். தொடர்ந்து மதுபான கடையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து மணிதேவனை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணிதேவன் கடையை பூட்டிவிட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபான கடை விற்பனையாளரை தாக்கிய இன்னாசியை வலை வீசிதேடி வருகின்றனர். தொடர்ந்து மதுபான கடையை மேற்பார்வையாளர் கிருஷ்ணராஜ் திறந்து விற்பனை செய்தார்.


    • சிறந்த திருநங்கை விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வருகிற 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    பெரம்பலூர்

    திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2022-23-ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருது பெற விரும்புபவர்கள் அரசு உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்து கொண்ட திருநங்கையாக இருத்தல் வேண்டும். மேலும் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவை பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி செய்திருக்க வேண்டும். மேலும் விருதுக்கு விண்ணப்பிப்பவர் தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. இந்த விருது பெற விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வருகிற 28-ந் தேதிக்குள் விண்ணப்பித்து விரிவான கருத்துருக்களை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விருது பெற தகுதியுள்ளவர்கள் இதற்கான தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவர், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


    • ஒகளூர் ஊராட்சியில் இலவச தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • ஒகளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லபிராணிகளான நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து ஒகளூர் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது. கால்நடை உதவி இயக்குனர் மருத்துவர் குணசேகரன் மற்றும் மருத்துவர் சுரேஷ் கிறிஸ்டோபர் அரசு பள்ளி மாணவர்களிடையே வெறிநோய் நோயின் தன்மை குறித்தும் விழிப்புணர்வு பற்றிய விளக்க உரையும் ஆற்றினர். முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், துணைத் தலைவர் அண்ணாதுரை, ஆவின் பால் பண்ணை செக்ரட்டரி சக்திவேல், அரசு பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் ஒகளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லபிராணிகளான நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. முன்னதாக ஒகளூர் அரசுப்பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி முதல் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கால்நடை உதவி மருத்துவ கோட்டை செயலாளர் மருத்துவர் இராமகிருஷ்ணன், கால்நடை உதவி மருத்துவர்கள் சத்தியசீலன், பரத், கால்நடை ஆய்வாளர் பிரேமா மற்றும் உதவியாளர்கள் சின்னதுரை, ராஜசேகரன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர் கல்பனா ஏற்பாடு செய்திருந்தார்.


    • பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டிகளில் கல்லூரி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • போட்டிகளில் மொத்தம் 589 பேர் கலந்து கொண்டு விளையாடினர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கத்தில் கடந்த 8-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான வாலிபால் போட்டி தனித்தனியாகவும், மாணவர்களுக்கான கால்பந்து, நீச்சல் போட்டிகளும் நடைபெற்றன. 200 மீட்டர் பிரீ ஸ்டைல், பிரஸ்ட் ஸ்ட்டோக், பேக் ஸ்ட்டோக், பட்டர் பிளை, 400 மீட்டர் தனி நபர் மெட்லே ஆகிய 5 வகையான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நீச்சல் போட்டிகளில் 40 மாணவர்களும், கால்பந்து போட்டியில் 264 மாணவர்களும், வாலிபால் போட்டிகளில் 285 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 589 பேர் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.ஆயிரமும் பரிசுத்தொகையாக, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவிலான முதல் இடம் பிடித்த வீரர்-வீராங்கனைகளும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் வருகிற மே மாதத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே விளையாட்டு அரங்கத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) கல்லூரி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியும், மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியும் நடைபெறவுள்ளது.

    • பெரம்பலூர் அருகே வாலிபர் கிணற்றில் பிணமாக மிதந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே எசனை தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் கமலக்கண்ணன் (வயது 25). இவர் அதே பகுதியில் மின்வாரிய ஊழியர்களுடன் தினக்கூலிக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் கமலக்கண்ணன் வெளியூர் சென்று வருவதாக தனது தாயார் ராணியிடம் கூறி விட்டு சென்றார். இந்தநிலையில் நேற்று காலை எசனை காட்டு மாரியம்மன் கோவில் பின்புறம் கீழக்கரையில் உள்ள கிணற்றில் கமலக்கண்ணன் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் கமலக்கண்ணன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து கமலக்கண்ணனின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பலூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து கமலக்கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கமலக்கண்ணனை யாரேனும் அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கமலக்கண்ணனுக்கு நீச்சல் தெரியாது என்பதும், அவர் வீட்டிற்கு ஒரே மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    • வாலிகண்டபுரம்-மருவத்தூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • இத்தகவலை உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்சார வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது என பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.


    • குன்னம் அருகே வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி டிராவல்ஸ் ஏஜெண்ட் ரூ.2½ லட்சம் மோசடி செய்ததால் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை செய்தார்
    • இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் போலீஸ் சரகத் திற்கு உட்பட்ட செட்டிகுளம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி மகன் சுந்தரபாண்டியன் (வயது 30). டிப்ளமோ சிவில் என்ஜி–னீயரிங் படித்துள்ள இவர் உள்ளூரில் போதிய வேலை கிடைக்காததால் வெளி–நாட்டு வேலைக்கு செல்ல முயற்சி மேற்கொண்டிருந்தார். இதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களும் அனுப்பி வந்தார். இதற்கிடையே தனது நண்பர் ஒருவரின் அறிவு–ரைப்படி செந்துறை அருகே சோழன்குடிக்காடு பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜெண்டு பிரபாகரனை சுந்த–ரபாண்டியன் தொடர்பு கொண்டார். அவர் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக உறுதி அளித்தார். இதைய–டுத்து சுந்தரபாண்டி–யனிடம் பிரபாகரன் ரூ.2 ½ லட்சத்தை பெற்றுக்கொண்டார். மேலும் 6 மாதத்தில் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகவும் உறுதி அளித்திருந்தார். ஆனால் பிரபாக–ரன் கூறியபடி சுந்தர–பாண்டியனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப–வில்லை. பலமுறை அவர் கேட்டும் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி தருமாறு சுந்தரபாண்டியன் கேட்ட–போது, பிரபாகரன் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தான் நடத்தி வந்த டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனத்தையும் மூடிவிட்டு தலைமறைவாகி விட்டார் இதேபோல் பலரிடம் பிரபாகரன் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியது தெரிந்து சுந்தர–பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பணத்தை இழந்து தவித்து வந்த அவர் மன விரக்தியில் இருந்தார். நேற்று தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வயல்வெளி பகுதிக்கு சென்று அங்கு அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அங்கு வந்தவர்கள் சுந்தர–பாண்டியனை மீட்டு உடனடியாக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்தநிலையில் இன்று அதிகாலை சுந்தரபாண்டி–யன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை செல்வமணி கொடுத்த புகாரின்பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கல் வீச்சில் தடா பெரியசாமியின் பேரன் அதிரந்தன் என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது அகரம்சீகூர் அருகேயுள்ள திருமாந்துறை கிராமம். இங்குள்ள நோவா நகரில் தனது மகன் பிரபாகரனுடன் ஒரே குடும்பமாக வசித்து வருபவர் தடா பெரியசாமி (வயது 61).

    இவர் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்து வருகிறார். இதற்கு முன்னதாக தடா பெரியசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தார். பின்னர் அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். மேலும் ஒரு அறக்கட்டளை நிர்வாகியாகவும் உள்ளார்.

    இதற்கிடையே சமீபத்தில் திருவாரூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து அவதூறான சில தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருமாவளவனும் தடா பெரியசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி நிர்வாகி ஒருவர் வெளியிட்டு இருந்த வீடியோவில், திருமாவளவன் குறித்து பேச தடா பெரியசாமிக்கு எந்தவித தகுதியும் கிடையாது. அதையும் மீறி அவர் பேசிய அவதூறு பேச்சுக்கு தகுந்த தண்டணையை விரைவில் அனுபவிப்பார் என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை வெளியில் சென்ற தடா பெரியசாமி பெரம்பலூரில் பல்வேறு கட்சி பணிகளை மேற்கொண்டார். பின்னர் இரவில் வீடு திரும்பிய அவர் வீட்டின் முன்பு தனக்கு சொந்தமான இன்னோவா காரை நிறுத்தியிருந்தார். அருகிலேயே இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.

    இரவு சுமார் 11 மணியளவில் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனங்களில் பெயர், விபரம் தெரியாத 7 பேர் வந்துள்ளனர். கடுமையான பனிப்பொழிவு காரணமாகவும், கிராமம் என்பதாலும் யாரும் அதனை முதலில் அறிந்திருக்கவில்லை.

    பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர் தடா பெரிசாமியின் கார் மீது பாறாங்கற்களை வீசினர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கட்டைகளால் காரை சரமாரியாக அடித்து உடைத்தனர். அத்துடன் காரின் டயர்களை கத்தியால் குத்தி கிழித்தனர். இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது.

    சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வர கதவை திறந்தனர். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவர்களை வெளியே வரவிடாமல் தடுக்கும் வகையில், வீட்டின் மீதும் சரமாரியாக கருங்கற்களை வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    இந்த கல் வீச்சில் தடா பெரியசாமியின் பேரன் அதிரந்தன் (4) என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அடுத்த ஒருசில நிமிடங்களில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தடா பெரியசாமி மங்களமேடு போலீசில் புகார் அளித்தார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் தனது காரையும், வீட்டையும் சேதப்படுத்தி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். 

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜின் மகன் சிவசங்கர்(வயது 23). பொக்லைன் ஆபரேட்டர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த தங்கராசுவின் மகன் மணிகண்டன்(26). கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் மணிகண்டனுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று மதியம் மணிகண்டனும், சிவசங்கரும் கவுல்பாளையம் அய்யனார் கோவில் அருகே மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கவுல்பாளையம் எம்.பி.சி. காலனி பகுதியை சேர்ந்த மண்ணுமுட்டி என்ற மணிகண்டன்(23), தனக்கும் மது வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு புதுமாப்பிள்ளை மணிகண்டனும், சிவசங்கரும் மறுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் மண்ணுமுட்டி என்ற மணிகண்டன் அங்கிருந்த காலி மதுபாட்டிலை உடைத்து சிவசங்கரின் கழுத்தில் குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவசங்கரை, மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×