search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டி
    X

    மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டி

    • பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டிகளில் கல்லூரி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • போட்டிகளில் மொத்தம் 589 பேர் கலந்து கொண்டு விளையாடினர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கத்தில் கடந்த 8-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான வாலிபால் போட்டி தனித்தனியாகவும், மாணவர்களுக்கான கால்பந்து, நீச்சல் போட்டிகளும் நடைபெற்றன. 200 மீட்டர் பிரீ ஸ்டைல், பிரஸ்ட் ஸ்ட்டோக், பேக் ஸ்ட்டோக், பட்டர் பிளை, 400 மீட்டர் தனி நபர் மெட்லே ஆகிய 5 வகையான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நீச்சல் போட்டிகளில் 40 மாணவர்களும், கால்பந்து போட்டியில் 264 மாணவர்களும், வாலிபால் போட்டிகளில் 285 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 589 பேர் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.ஆயிரமும் பரிசுத்தொகையாக, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவிலான முதல் இடம் பிடித்த வீரர்-வீராங்கனைகளும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் வருகிற மே மாதத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே விளையாட்டு அரங்கத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) கல்லூரி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியும், மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியும் நடைபெறவுள்ளது.

    Next Story
    ×