என் மலர்tooltip icon

    நீலகிரி

    2-வது சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்ற மலர்களை கண்டு ரசிப்பது போல், குறிஞ்சி மலர்களையும் கண்டு ரசிக்கின்றனர்.
    ஊட்டி:

    ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு அரிய வகை தாவரங்கள், பழமையான மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்தாலியன் பூங்காவில் இயற்கையாக அமைந்து உள்ள பாறையில் நீர்வீழ்ச்சி போன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மேல்பகுதியில் குறிஞ்சி செடிகள் காணப்படுகின்றன.

    தற்போது அந்த செடிகளில் குறிஞ்சி மலர்கள் நீல நிறத்தில் பூத்துக்குலுங்குகின்றன. ஸ்ட்ரோபிலாந்தஸ் சோசிபினஸ் என்ற வகையை சேர்ந்த குறிஞ்சி செடிகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மை உடையது. அதன்படி பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு குறிஞ்சி செடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்கி வருகிறது.

    2-வது சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்ற மலர்களை கண்டு ரசிப்பது போல், குறிஞ்சி மலர்களையும் கண்டு ரசிக்கின்றனர். மேலும் இதனை புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இது பூங்காவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.
    வனப்பகுதியில் காணப்படுவது போல், இங்கும் பாறைகளின் நடுவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் காண்போரை கண்டு வியக்க வைக்கிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர பல்வேறு நாடுகளில் காணப்படும் கள்ளிச்செடிகள், பெரணி செடிகள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை காண வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர்.

    தற்போது ஊட்டியில் 2-வது சீசன் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அழகு செடிகள், வண்ண மலர்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் செடிகளில் 250 வகையான மலர்கள் உள்ளன. இதில் பல லட்சம் செடிகளில் மலர்கள் பூத்து குலுங்குகிறது. இது காண்போரை கவரும் வண்ணத்தில் உள்ளது. மேலும் அங்கு பல்வேறு வகையான மலர் செடிகள் 12 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்துள்ளனர். இந்த தொட்டிகளை பார்வையிடுவதற்காக மாடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தாவரவியல் பூங்காவில் இத்தாலியன் பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.

    வனப்பகுதியில் காணப்படுவது போல், இங்கும் பாறைகளின் நடுவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் காண்போரை கண்டு வியக்க வைக்கிறது. அசைந்து ஆடும் குறிஞ்சி பூவின் அழகை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்த பூவின் மகத்துவம் குறித்து விவரிக்க பூங்கா பயணிகள் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பயணிகளுக்கு இதன் தன்மை குறித்து எடுத்துரைக்கின்றனர். குறிஞ்சி மலரை கண்ட சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தங்களது செல்போன் மற்றும் கேமிராக்களில் செல்பிக்கள், மற்றும் புகைப்படங்களை எடுத்து நினைவுகளை சேகரித்து செல்கின்றனர். தற்போது ஊட்டியில் இதமான காலநிலை நிலவுவதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுக்கின்றனர்.
    நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பங்களாவில் தனிமைப்படுத்தி கொண்டார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா. ஊட்டி அருகே கேத்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் கலெக்டரின் மகன் உள்பட சிலருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்தி கலெக்டர் மகன் சிகிச்சை பெற்று வருகிறார். மகன் பாதிக்கப்பட்டதால், கலெக்டருக்கும் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

    இதனால் சுகாதார குழுவினர் பங்களாவுக்கு சென்று கலெக்டரிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பங்களாவில் தனிமைப்படுத்தி கொண்டார். எனினும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் பாதிப்பு அதிகமாக இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் பங்களாவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    பொதுமக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து மிகுதியான நேரத்தில் ராட்சத காட்டுமாடு நடுரோட்டில் நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தை, கரடி, காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக காட்டு மாடுகள் அதிகளவில் நடமாடி வருகிறது. 10, 20 என கூட்டமாக காணப்படும் காட்டு மாடுகள் பெரும்பாலும் சுற்றுபுற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறது.

    இதனால் தேயிலை தோட்டப்பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் காட்டுமாடுகள் வீட்டு தோட்டங்களில் பயிரிடப் பட்டுள்ள காய்கறி செடிகளை தின்று தோட்டங்களையும் நாசமாக்குகிறது.

    இந்நிலையில் நேற்று காலை மஞ்சூர் கரியமலை பிரிவில் அய்யப்பன் கோவில் அருகே குழந்தைகள், பெண்கள் உள்பட பொதுமக்கள் பலர் அரசு பஸ்களுக்காக காத்திருந்தனர்.

    அப்போது ராட்சத காட்டுமாடு ஒன்று நடுரோட்டில் கம்பீரமாக நடந்து வந்தது. சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருநததால் ஓரமாக நின்றிருந்த மக்களுக்கு காட்டுமாடு வருவது முதலில் தெரியவில்லை. அருகில் வந்ததும் அதை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்து அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

    மேலும் அவ்வழியாக சென்ற வாகனங்களும் எதிரே ராட்சத காட்டுமாடு வருவதை கண்டு ஓரங்கட்டி நிறுத்தப்பட்டது. இதை எதையும் பொருட்படுத்தமால் சாவகாசமாக நடந்து சென்ற காட்டுமாடு சாலையோரத்தில் இருந்த வேலியை உடைத்து தேயிலை தோட்டத்திற்குள் சென்றது.

    சுற்றுலா பயணிகளை கவர இத்தாலியன் பூங்கா அருகே உள்ள இலை பூங்காவில் ஐரிஸ் ரக செடிகளை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரியில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது. 2-வது சீசனையொட்டி மலர் மாடத்தில் 12 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். பெரணி இல்லம் அருகே 2 ஆயிரம் பூந்தொட்டிகளை கொண்டு வட்டவடிவில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதுதவிர பூங்கா நுழைவு வாயிலில் இருபுறமும் மேரிகோல்டு செடிகளில் மலர்கள் பூத்து குலுங்கின. ஆனால் தொடர் மழை காரணமாக மலர்களில் தண்ணீர் தேங்கியதால் அந்த செடிகள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவர இத்தாலியன் பூங்கா அருகே உள்ள இலை பூங்காவில் ஐரிஸ் ரக செடிகளை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மயில், வண்ணத்துப்பூச்சி, இதய வடியில் செடிகள் நடவு செய்யப்படுகிறது. பச்சை, நீல நிறத்தில் உள்ள செடிகளை நடவு செய்து வருகிறார்கள். அங்கு 10 ஆயிரம் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியன் பூங்காவில் வளர்ந்த அலங்கார செடிகளை அழகாக வெட்டி ஒருவர் சைக்கிள் ஓட்டி செல்வது போல் 3 வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, மரங்களுக்கு அடியில் மலர் செடிகள் போதிய அளவு வளராது. இதனால் இலை பூங்காவை பயன்படுத்தும் வகையில் இலை செடிகளை கொண்டு அழகுப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

    குச்சி முச்சி பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ அடித்து செல்லப்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆட்டோவை கயிறு கட்டி மீட்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் உள்ள கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. தொடர் மழைக்கு சில இடங்களில் மண் சரிவும், மலைப்பாதைகளில் பாறை உருண்டு விழுவதும், மரங்கள் சாய்வதும் வழக்கமாக இருந்தது.

    கூடலூர் தாலுகாவில் நேற்று காலை முதலே மிதமான மழை பெய்தது. மதியத்திற்கு பிறகு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக தேவர்சோலை, பாடந்தொரை, குச்சிமுச்சி, அஞ்சிகுன்னு, செறுமுள்ளி போன்ற பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியில் வர முடியமால் தவித்தனர். குடியிருப்பை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்ததால் மிகவும் அச்சத்துடனேயே காணப்பட்டனர்.

    மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பும் உண்டானது. முதுகுளி பகுதியில் மரம் விழுந்ததில் ஒரு வீடு சேதமடைந்தது. குச்சி முச்சி பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ அடித்து செல்லப்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆட்டோவை கயிறு கட்டி மீட்டனர்.

    கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. மழைக்கு கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் தட்டப்பள்ளம் பகுதியில் சாலையின் ஓரத்தில் பாறை ஒன்று சரிந்து நடுரோட்டில் விழுந்தது. இதன் காரணமாக ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவுக்கு சாலையில் இடம் இருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, போலீசார் மற்றும், நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து வந்து பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக பந்தலூரில் 8 செ.மீ மழையும், செருமுள்ளியில் 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    பந்தலூர்-81, செருமுள்ளி-58, அப்பர் கூடலூர்-35, கொடநாடு-37, சேரங்கோடு-26, கிண்ணக்கொரை-24, நடுவட்டம்-25.
    நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருகிறது. மண் சரிவு காரணமாக தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததால் ஊட்டி மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஈரப்பதம் அதிகரித்ததன் காரணமாக ஆங்காங்கே லேசான மண்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் தட்டப்பள்ளம் அருகே செங்குத்தான பகுதியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்தன.

    அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதேநேரத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    பாறைகள் பெரிய அளவில் இருந்ததால், பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு உடைத்து அகற்றும் பணி நடைபெற்றது.

    நேற்றுமுன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு அருகே அடர்லி-ஹில்குரோவ்ரெயில் நிலையங்கள் இடையே மண்சரிவு ஏற்பட்டு ரெயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று காலை 7.30 மணிக்கு 180 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலை ரெயில் கல்லாறு ரெயில் நிலையம் அருகே நடு வழியில் நிறுத்தப்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். பாதிவழியில் நிறுத்தப்பட்டிருந்த மலை ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு இயக்கி வரப்பட்டது. ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பாறைகளில் துளையிட்டு கம்பரசர் மூலம் வெடிவைத்து தகர்க்கப்பட்டு அகற்றப்பட்டன. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை நேற்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
    ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் தொட்டபெட்டா சாலையில் காட்டெருமை, கடமான், சிறுத்தைப்புலி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
    ஊட்டி:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொட்டபெட்டா மலைச்சிகரம் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது.

    ஊரடங்கு தளர்வில் பிற சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டாலும், சாலை பெயர்ந்து இருப்பதால் தொட்டபெட்டா திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது. 6 மாதங்களாக சாலையில் வாகனங்கள் செல்லாததால் மரத்தில் இருந்து கீழே விழுந்த இலைகள் சாலையில் அப்படியே கிடக்கிறது.

    தொடர் மழையால் சில இடங்களில் பாசி படிந்து இருக்கிறது. ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் தொட்டபெட்டா சாலையில் காட்டெருமை, கடமான், சிறுத்தைப்புலி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனினும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
    ஊட்டி, காந்தல், உள்பட சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த இடி, காற்றுடன் கனமழை கொட்டியது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் மிதமான வெயிலும், அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது.

    கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலையில் நல்ல வெயில் அடித்தது. மதியத்திற்கு பிறகு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து அந்த பகுதியே இருளாக காட்சியளித்தது. சிறிது நேரத்தில் கூட லூர், பந்தலூர், தேவர்சோலை, உப்பட்டி, சேரம்பாடி, பாட்டவயல், நடுவட்டம், ஓவேலி, உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    மாலையில் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்து கொண்டே இருந்தது. இதனால் கூட லூர், பந்தலூர் பஜார் பகுதிகள், பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகள், முக்கிய சாலைகள் அனைத்திலும் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்தபடியே சென்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

    தொடர் மழையால் பாண்டியாறு, புன்னம்புழா, மாயாறு உள்ளிட்ட ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழைக்கு கூடலூர்-மலப்புரம் சாலையில் கீழ்நாடுகாணி பகுதியில் மரம் முறிந்து விழுந்து அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பானது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    ஊட்டி, காந்தல், உள்பட சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த இடி, காற்றுடன் கனமழை கொட்டியது. பலத்த மழையின் காரணமாக ஊட்டி-குன்னூர் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இருந்து சேரிங்கிராஸ் வரையிலும், கமர்ஷியல் சாலை, படகு இல்லம் சாலை, ரெயில்வே பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதோடு, வாகன போக்குவரத்தும் கணிசமாகக் குறைந்துள்ளது.

    குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளான மவுண்ட் சாலை, பெட்போர்டு, ஓட்டுப்பட்டறை, டானிங்டன், ஒரசோலை பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேகமூட்டமாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் சாலைகளில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடியே வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்.

    நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மலைரெயில் பாதையில் மீண்டும் மண்சரிவு, பாறைகள் உருண்டும் விழும் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாலும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இன்று ஒரு நாள் மட்டும் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    குன்னூர் ரெயில் நிலையத்தில் பொறியியல் பிரிவில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள இயற்கை அழகை முழுவதுமாக ரசிக்கும் வகையில் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையும், குன்னூரில் இருந்து ஊட்டி வரையும் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் எப்போதும் மலை ரெயிலுக்கு தனி மவுசு உண்டு. கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தற்போது மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் குன்னூர் ரெயில் நிலையத்தில் பொறியியல் பிரிவில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதனால் அவர்களுடன் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மலை ரெயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    கடந்த 15-ந் தேதி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஊட்டிக்கு வந்திருந்தார். அப்போது அவர் ஊட்டியில் இருந்து குன்னூருக்கு குடும்பத்துடன் மலை ரெயிலில் பயணித்தார். இந்த நிலையில் ரெயில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோத்தகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் வெளியில் வரவே அச்சம் அடைந்துள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள அரவேணு, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கரடிகள் சுற்றி திரிகின்றன. இவை அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம்.

    கோத்தகிரி கன்னிகா பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். நேற்றுமுன்தினம் இரவு இந்த பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்தது. வெகுநேரமாக அங்கு சுற்றி திரிந்த கரடி திடீரென அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்து விட்டது.

    கரடி வீட்டிற்குள் வந்ததை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து தப்பியோட்டம் ஓட்ட ம் பிடித்தனர். சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கரடி வீட்டிற்குள்ளேயே சுற்றி திரிந்தது. அங்குள்ள பொருட்களை எடுத்து சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது.

    இதுகுறித்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மக்கள் உதவியுடன் தீப்பந்தத்தை எடுத்து கொண்டு வீட்டிற்குள் சென்று கரடியை வெளியே விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த கரடி வீட்டை விட்டு வெளியில் வந்து வனத்திற்குள் சென்றது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்களும் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் அதே கரடி பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவில் சுற்றி திரிந்தது. அப்போது அங்கு பணியாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். கரடி வந்ததால் பீதியடைந்த அவர்கள் பூங்காவில் இருந்த கட்டிடத்திற்குள் சென்று தஞ்சம் அடைந்தனர். சிறிது நேரம் சுற்றி வந்த கரடி பின்னர் சென்று விட்டது.

    தொடர்ந்து இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் வெளியில் வரவே அச்சம் அடைந்துள்ளனர். தோட்ட தொழிலாளர்களும் மிகுந்த அச்சத்துடனேயே வேலைக்கு சென்று வருகின்றனர். எனவே இந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று, விக்கி மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார்.
    ஊட்டி:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு வந்துள்ளார். அவருடன் குடும்பத்தினரும் வந்துள்ளனர். தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் தங்கி இருக்கும் கவர்னர் ஊட்டியில் உள்ள இயற்கை அழகை கண்டு ரசித்து வருகிறார்.

    நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி ராஜ்பவனில் இருந்து பாதுகாப்பு வாகனங்களுடன் ஊட்டி ரெயில் நிலையத்திற்கு சென்றார். பின்னர் ஊட்டியில் இருந்து குன்னூர் சென்ற மலை ரெயிலில் தனது மனைவி லட்சுமி ரவி மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்தார். பயணத்தின்போது மலைரெயில் குகைகளை கடந்து செல்வது, அடர்ந்த வனப்பகுதிகள், பசுமையான தேயிலை தோட்டங்கள் போன்ற இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தபடியே பயணம் செய்தார்.

    மீண்டும் மாலையில் ஊட்டிக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று, விக்கி மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். அவரது மனைவி லட்சுமி ரவி ருத்ராட்சை மரக்கன்றை நட்டு வைத்தார்.

    அப்போது கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்பட கலந்து கொண்டனர்.
    ×