search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் பாதையில் பாறை விழுந்த இடத்திற்கு முன்புறம் மலை ரெயில் நிற்பதை படத்தில் காணலாம்.
    X
    ரெயில் பாதையில் பாறை விழுந்த இடத்திற்கு முன்புறம் மலை ரெயில் நிற்பதை படத்தில் காணலாம்.

    தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததால் மலை ரெயில் நடுவழியில் நிறுத்தம்

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருகிறது. மண் சரிவு காரணமாக தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததால் ஊட்டி மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஈரப்பதம் அதிகரித்ததன் காரணமாக ஆங்காங்கே லேசான மண்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் தட்டப்பள்ளம் அருகே செங்குத்தான பகுதியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்தன.

    அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதேநேரத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    பாறைகள் பெரிய அளவில் இருந்ததால், பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு உடைத்து அகற்றும் பணி நடைபெற்றது.

    நேற்றுமுன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு அருகே அடர்லி-ஹில்குரோவ்ரெயில் நிலையங்கள் இடையே மண்சரிவு ஏற்பட்டு ரெயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று காலை 7.30 மணிக்கு 180 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலை ரெயில் கல்லாறு ரெயில் நிலையம் அருகே நடு வழியில் நிறுத்தப்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். பாதிவழியில் நிறுத்தப்பட்டிருந்த மலை ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு இயக்கி வரப்பட்டது. ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பாறைகளில் துளையிட்டு கம்பரசர் மூலம் வெடிவைத்து தகர்க்கப்பட்டு அகற்றப்பட்டன. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை நேற்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
    Next Story
    ×