என் மலர்
நீலகிரி
- கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் மீண்டும் நேற்று தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
- கூடலூரில் பாதயாத்திரையை முடித்து கொண்ட ராகுல்காந்தி இன்று காலை அங்கிருந்து வேனில் கர்நாடகாவுக்கு சென்றார்.
ஊட்டி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., பாரத ஒற்றுமையை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார்.
தொடர்ந்து அவர் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் கேரள மாநிலத்திற்கு சென்றார்.
கடந்த 11-ந் தேதி தனது பாதயாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில் பாதயாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசி, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் மீண்டும் நேற்று தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
நேற்று மாலை அவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக தமிழக மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு வந்தார்.
அங்கு அவரை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான கட்சியினர் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் அங்குள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வேனில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
தொடர்ந்து அவர் அரசு கலைக்கல்லூரியில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். அவருக்கு முன்பாக பேண்டு வாத்தியங்கள் முழங்க காங்கிரஸ் கட்சியினர் தேசிய கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். சிலர் குதிரைகள் மீது அமர்ந்து தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.
நந்தட்டி, பள்ளிப்பாடி, செம்பாலா வழியாக கூடலூர் புதிய பஸ்நிலையம் பகுதிக்கு வந்த அவர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். முன்னதாக அவர் வரும் வழியில் சாலையின் இருபுறமும் மக்கள் நின்று கொண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய இசை இசைத்தபடியும், நடனமாடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல்காந்தி கட்சி நிர்வாகிளுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் இரவில் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வேனிலேயே தங்கி ஓய்வெடுத்தார்.
கூடலூரில் பாதயாத்திரையை முடித்து கொண்ட ராகுல்காந்தி இன்று காலை கூடலூரில் இருந்து வேனில் கர்நாடகாவுக்கு சென்றார். கர்நாடகாவில் அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பாத யாத்திரையாக சென்றனர்.
- நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் காமிராக்கள்.
- அடா்ந்த வனப் பகுதிக்குள் வனத்துறையினா் விடுவித்தனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள அரக்காடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை கடந்த மாதம் சிறுத்தை தாக்கிக் கொன்றது. அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கண்காணிப்பு கேமராக்களில் 2 சிறுத்தைகளின் நடமாட்டம் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து, அப்பகுதியில் வனத்துறையினா் சாா்பில் 2 கூண்டுகள் வைக்கப்பட்ட நிலையில், ஒரு சிறுத்தை மட்டும் சிக்கியது. அதனை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்று அடா்ந்த வனப் பகுதிக்குள் வனத்துறையினா் விடுவித்தனா்.
மற்றொரு சிறுத்தை கிராம பகுதிக்குள் சுற்றி வந்து விளைநிலங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் மக்கள் அச்சத்துடனேயே வசித்து வந்தனர். மேலும் அந்த சிறுத்தையும் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அந்த சிறுத்தை மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்துள்ளது. வெகுநேரமாக அங்கேயே சுற்றி திரிந்த சிறுத்தை பின்னர் வனத்திற்குள் சென்றுள்ளது.
இந்த காட்சிகள் அப்பகுயில் உள்ள குடியிருப்பில் பொருத்தப்ப–ட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
எனவே குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வரும் சிறுத்தையை கண்காணித்து, கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதனைத் தொடா்ந்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் 4-க்கும் மேற்பட்ட தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்புப் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
- தி.மு.க கவுன்சிலர்கள் போராட வேண்டியதாக இருக்கிறது என்றார்.
- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஜெகதளா பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் பேரூராட்சித் தலைவா் பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
இதில் மொத்தமுள்ள 15 உறுப்பினா்களில் தி.மு.க.வைச் சோ்ந்த 9 கவுன்சிலா்கள், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 2 கவுன்சிலா்கள், அ.தி.மு.க.வை சோ்ந்த 4 கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.
இதில் தி.மு.க.வைச் சோ்ந்த 5-வது வாா்டு உறுப்பினா் திலீப், 7-வது வாா்டு உறுப்பினா் யசோதா, 11-வது வாா்டு உறுப்பினா் பிரமிளா வெங்கடேஷ் ஆகியோா் பேரூராட்சியில் ஊழல் முறைகேடு அதிகரித்துள்ளதாக கூறி கண்களில் கருப்புத் துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, மாதாந்திர வரவு செலவு கணக்குகளை தெளிவாக சமா்ப்பதில்லை, வாா்டுகளில் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தருவதில்லை எனவும் குற்றம்சாட்டினா். இதனைத் தொடா்ந்து, மன்ற கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலா் சதாசிவம் தெரிவித்தாா்.
இதுகுறித்து 5-வது வார்டு உறுப்பினர் திலீப் கூறுகையில், ஜெகதளா பேரூராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் மன்ற தீர்மானங்களை தலைவர் எந்த கவுன்சிலரிடமும் காண்பிப்பது இல்லை. மாதாந்திர வரவு செலவு கணக்குகளும் தெளிவாக காட்டப்படுவதில்லை.
தலைவரிடம் பிளம்பர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஒரு வார்டில் ஒரு மாதத்திற்கு எத்தனை புகார்கள் அட்டென்ட் செய்கிறார்கள் என்று கேட்டால் பதில் கூறுவதில்லை. மக்களின் அன்றாட பொது ப்ரிச்சனைகளை சரி செய்ய தி.மு.க கவுன்சிலர்கள் போராட வேண்டியதாக இருக்கிறது என்றார்.
இதுகுறித்து பேரூராட்சி தலைவர் தரப்பினர் கூறும் போது, பேரூராட்சியில் அனைத்து பணிகளும் சரியாக நடைபெறுகிறது.
- புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு.
- பட்டியலை தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.
ஊட்டி, -
தி.மு.க. நீலகிரி மாவட்ட செயலாளர் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியலை தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு. முபாரக், அவைத்தலைவர் கே.போஜன், துணை செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், லட்சுமி, பொருளாளர் நாசர் அலி,
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், ராஜூ, முஸ்தபா, செந்தில் ரங்கராஜன், திராவிட மணி, காசிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா, அமிர்தலிங்கம், காளிதாஸ், மோகன்குமார், செல்வம், வீரபத்திரன், பில்லன், தொரை, சதக்கத்துல்லா, ராஜேந்திரன், கருப்பையா, உதயதேவன், ஷீலா கேத்ரின்,
ஊட்டி வடக்கு - காமராஜ், தெற்கு - பரமசிவன், மேலூர் - லாரன்ஸ், கூடலூர்- லியாகத் அலி, பந்தலூர் கிழக்கு - சுஜேஷ், மேற்கு- சிவானந்தராஜா, குன்னூர்- பிரேம்குமார், கோத்தகிரி- நெல்லை கண்ணன், கீழ்கோத்தகிரி - பீமன்.ஊட்டி- ஜார்ஜ், கூடலூர்- இளஞ்செழியன், நெல்லியாளம் - சேகர் என்ற சேகரன், குன்னூர்- ராமசாமி, நடுவட்டம்- உதயகுமார், சோலூர்- பிரகாஷ்குமார், பிக்கட்டி- நடராஜன், கீழ்குந்தா- சதீஷ்குமார், கேத்தி - சுந்தர்ராஜ், அதிகரட்டி- முத்து, தேவர்சோலை - சுப்ரமணி, ஓவேலி- செல்வரத்தினம், உலிக்கல்- ரமேஸ்குமார், ஜெகதாளா- சஞ்சீவ்குமார், கோத்தகிரி - பி.காளிதாஸ், கண்டோன்மெண்ட் நகரியம்- மார்ட்டின்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- சுற்றுலா பயணிகள் எப்போதும் வந்த வண்ணம் இருப்பர்.
- பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நேரு பூங்கா, கொடநாடு காட்சி முனை, சுண்டட்டி ஏரி, கேத்ரின் நீர்வீழ்ச்சி என பல முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் எப்போதும் வந்த வண்ணம் இருப்பர்.
இதனால் கோத்தகிரி பகுதியில் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாகவே இருக்கும்.
இந்த நிலையில் கோத்தகிரியின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே உள்ள மின்கம்பங்களில் செடிகொடிகள் வளர்ந்து புதராக காணப்படுகிறது. இதுபோன்று பெரும்பாலான மின்கம்பங்களில் செடிகள் உள்ளது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். ஒரு சில இடங்களில் இருப்பவை புலப்படாவிட்டாலும், கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள மின்கம்பத்திலும் இதே போன்று செடிகொடிகள் படர்ந்து காணப்படுகிறது.
இதனால் மின்கசிவு ஏற்பட அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை அதனை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்து வருகிறார்கள்.
எனவே இதுபோன்ற மின்கம்பங்களில் வளர்ந்திருக்கும் செடி–கொடிகளை அகற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
- நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர், தோடர் இன மக்களை சந்தித்து பேசுகிறார்.
ஊட்டி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார்.
கடந்த 11-ந் தேதியில் இருந்து நேற்று வரை 21 நாட்கள் கேரள மாநிலம் முழுவதும் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்களுடன் கலந்துரையாடுவது, பழங்குடியின மக்களை சந்தித்து பேசி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இன்று அவர் தமிழகத்தில் மீண்டும் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கேரள மாநிலம் நிலம்பூர், வழிக்கடவு வழியாக இன்று மாலை 3 மணியளவில் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆமைகுளத்திற்கு ராகுல்காந்தி வருகிறார்.
அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
பின்னர் ராகுல்காந்தி அங்கிருந்து கோழிப்பாலம், பள்ளிப்பாடி, நந்தட்டி, செம்பாலா, துப்புக்குட்டி, பேட்டை வழியாக கூடலூர் பழைய பஸ் நிலையம் வரை 6 கி.மீ. தூரத்திற்கு பாதயாத்திரையாக வருகிறார்.
அங்கு அவர் நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர், தோடர் இன மக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் மெயின்ரோடு வழியாக கூடலூர் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் அவர் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
தொடர்ந்து அவர் இரவில் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கேரவன் வேனிலேயே தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை காலை 8 மணிக்கு கூடலூரில் இருந்து புறப்பட்டு காரில் கர்நாடகாவுக்கு செல்கிறார்.
ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு கூடலூரில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராகுல்காந்தியின் பாதயாத்திரையையொட்டி கூடலூரில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்தந்த பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களையும் முன்கூட்டியே வீடுகளுக்கு செல்வதற்கு வசதி ஏற்படுத்த அந்தந்த நிறுவனங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
- நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
குன்னூர்
குன்னூர் அருகே உள்ள உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வார்டு பகுதிகளில் ஆதிவாசி பழங்குடி மக்களும், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட 16-வது வார்டை சேர்ந்த சித்ரா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பேரூராட்சி தலைவர் ராதா தலைமையிலும், பேரூராட்சியின் துணைத் தலைவர் ரமேஷ்குமார் முன்னிலையிலும் நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் செயல்அலுவலர் ரவிக்குமார், 18-வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெண்ணின் உறவினர்களும், பொதுமக்களும் நிறைமாத கர்ப்பிணியான சித்ராவுக்கு சந்தனம் மஞ்சள் குங்குமம் இட்டு மலர் தூவி வாழ்த்தி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
- நீலகிரி ஊட்டிமலை ெரயில் என்ஜின்களை தெற்கு ரெயில்ேவ பொது மேலாளர் பி.ஜி.மல்லையா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- தமிழகத்தில் பாரத் கவுரவ் திட்டத்தில் ஏற்கனவே 5 ெரயில்கள் இயங்குகின்றன.
ஊட்டி
திருச்சி பொன்மலை ெரயில்வே பணிமனையில் புதிதாக கட்டமைக்கப்பட்ட 66-வது டீசல் என்ஜின் மற்றும் நீலகிரி ஊட்டிமலை ரெ யில் என்ஜின்களை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. பொன்மலை பணிமனை 100 வருட வரலாற்று சிறப்பு பெற்றுள்ள நிலையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
அந்த வகையில் அதிவேக டீசலால் இயக்கப்படும் ஊட்டி மலை ெரயில் என்ஜின் திருச்சி பொன்மலை ெரயில்வே பணிமனையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இன்ஜினை, உருவாக்க பாடுபட்ட தொழிலாளர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
'வந்தே பாரத் திட்டம்' தமிழகத்திற்கு வர கொஞ்சம் காலம் ஆகும். அவற்றுக்கு பயன்படும் சில ரயில் பெட்டிகள் தொகுப்பு (ரேக்ஸ்கள்) நடப்பு நிதியாண்டில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் பாரத் கவுரவ் திட்டத்தில் ஏற்கனவே 5 ெரயில்கள் இயங்குகின்றன. கூடுதலாக ஒரு ெரயில் இந்த மாதத்திலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில்,3 ரயில்களும் இயக்கப்படும். இத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்கள் தேர்வு செய்ப்பட்டுள்ளன என்றார் அவர்.
நிகழ்வில் பணிமனை முதன்மை பொதுமேலாளர் ஷியாம்தார் ராம், துணைப் பொதுமேலாளர் டிஎல் கணேஷ், உள்ளிட்ட ரயில்வே பணிமனை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- ஊட்டியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 9 கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- சுற்றுலா வளா்ச்சிக்காக செப்டம்பா் 27-ந் தேதி உலக சுற்றுலா தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி
ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற உலக சுற்றுலா தின விழாவை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். இதையொட்டி ஊட்டியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 9 கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுற்றுலா வளா்ச்சிக்காக செப்டம்பா் 27-ந் தேதி உலக சுற்றுலா தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளுடன் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு உலக சுற்றுலா தினம் 'சுற்றுலா மறுசிந்தனை' என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. அத்தொழிலை மறுசீராய்வு செய்து மேம்படுத்த இந்த ஆண்டு சுற்றுலா மறுசிந்தனை என்ற கருப்பொருளை உலக சுற்றுலா நிறுவனம் உலக நாடுகளுக்கு அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி மலைவாசஸ்தலம் அனைத்திற்கும் அரசியாக விளங்குகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆண்டுதோறும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனா். இதன் இயற்கை எழில் பாதிக்காத வகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்த்து அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்து, சுற்றுச்சூழலை, இயற்கை எழிலை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடா்ந்து, கலை பண்பாட்டுத் துறை மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், ஊட்டி கோட்டாட்சியா் துரைசாமி, நகராட்சி ஆணையா் காந்திராஜா, கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநா் பாலகிருஷ்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- ஆ.ராசா 2 நாள் பயணமாக நீலகிரி வருவதாக இருந்தது.
- கோவை வழியாக நீலகிரி செல்லும் வழியில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர்.
ஊட்டி:
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க அரசின் முப்பெரும் விழா தி.மு.க கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக தி.மு.க. முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், ஊட்டியில் தி.மு.க.வின் கட்சி கொடியேற்றும் விழா நடக்க இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. துணை பொதுசெயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசாவும் கலந்துகொள்ள இருப்பதாக மாவட்ட தி.மு.க. சார்பில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்து வந்தனர்.
இதற்காக ஆ.ராசா 2 நாள் பயணமாக நீலகிரி வருவதாக இருந்தது. நேற்று மாலை. சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, பின்னர் அங்கிருந்து கார் மூலமாக அன்னூர், மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரிக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. நீலகிரி வரும் அவருக்கு வரவேற்பு கொடுக்கவும் கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் ஆ.ராசா தனது 2 நாள் நீலகிரி சுற்றுப்பயணத்தை திடீரென ஒத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்து மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிகழ்ச்சிகளின் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. துணை பொதுசெயலாளர் ஆ.ராசா, இந்துக்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்றும் அவர் கோவை வழியாக நீலகிரி செல்லும் வழியில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் ஆ.ராசா நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
- நாளையுடன் ராகுல்காந்தி கேரளாவில் தனது பாதயாத்திரையை முடித்து கொண்டு மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார்.
- கூடலூர் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அடிக்கடி சோதனை மேற்கொண்டனர்.
ஊட்டி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயண பாதயாத்திரை நடத்தி வருகிறார்.
கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தனது பாதயாத்திரையை தொடங்கிய அவர், தற்போது கேரளாவில் தனது பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.
நாளையுடன் ராகுல்காந்தி கேரளாவில் தனது பாதயாத்திரையை முடித்து கொண்டு மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு நாளை மாலை 3 மணிக்கு வருகிறார். அங்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் ஆமைகுளம் என்ற இடத்தில் இருந்து பாத யாத்திரையை தொடங்குகிறார். தொடர்ந்து கோழிபாலம், பள்ளிப்பாடி, நந்தட்டி, செம்பாலா வழியாக கூடலூர் நகர் பகுதிக்குள் ராகுல்காந்தி பாதயாத்திரையாக வருகிறார். அவருடன் கோவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களும் வருகின்றனர்.
பின்னர் பொதுக்கூட்டம் நடைபெறும் கூடலூர் புதிய பஸ் நிலைய பகுதிக்கு செல்லும் அவர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து அவர் அங்குள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கேரவன் வேனிலேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.
பின்னர் மறுநாள் 30-ந் தேதி கர்நாடகாவுக்கு புறப்பட்டு செல்கிறார். ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு அவர் பாதயாத்திரை மேற்கொள்ளும் சாலைகளில் இருபுறமும் உள்ள கட்டிடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கூடலூர் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அடிக்கடி சோதனை மேற்கொண்டனர்.அங்கு சந்தேகப்படும்படியாக ஆட்கள் வந்து இருக்கிறார்களா என விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
முன்னதாக ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், இரவில் தங்கும் மைதானம் ஆகியவற்றில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், ஆர்.டி.ஓ.சரவண கண்ணன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றனர்.
- அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் சோதனை செய்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி சிலர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் சோதனை செய்தனர்.
அவர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதற்காக பையில் கொண்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கவுரி சங்கர் (வயது 40) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 19 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






