என் மலர்tooltip icon

    நீலகிரி

    • ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 6-வது ஆண்டாக பூப்பந்து போட்டி நடைபெற்றது.
    • கெங்கமுடி அணி வெற்றி பெற்றது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கப்பச்சி கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 6-வது ஆண்டாக பூப்பந்து போட்டி நடைபெற்றது. இதன் இறுதிபோட்டி நடந்தது.

    இதில் இளித்துறை அணிக்கும் கெங்கமுடி அணியும் மோதின. இந்த போட்டியில் கெங்கமுடி அணி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் அ.தி.மு.க மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் கலந்து கொண்டனர். அவருக்கு கிளப் சார்பில் மேளத்தளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.மேலும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் வளர்ச்சிக்காக ரூபாய்_25000 நிதி உதவி வழங்கினார்.

    • தோட்டத்திற்கு சென்ற ராஜ் இரவு வெகு நேரம் ஆகியும் வரவில்லை.
    • புதுதோட்டத்தில் மர்மமான முறையில் ராஜ் இறந்து கிடந்தார்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குஞ்சப்பனை புதூரை சேர்ந்தவர் ராஜ். விவசாயி. இவருக்கு திருணமாகி 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இவருக்கு சொந்தமாக குஞ்சப்பனை அடுத்த புதுதோட்டத்தில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இங்கு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ராஜ் நேற்று மாலை தனது தோட்டத்திற்கு செல்வதாக கூறி விட்டு, சென்றார். ஆனால் இரவு வெகு நேரத்தை தாண்டியும் அவர் வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து இன்று அதிகாலை அவரது உறவினர்கள் அனைவரும், புதுதோட்டத்தில் உள்ள தோட்டத்திற்கு தேடி சென்றனர்.அப்போது, அங்கு மர்மமான முறையில் ராஜ் இறந்து கிடந்தார். அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பார்வையிட்டனர்.அப்போது தலையில் கல்லால் குத்தி கொல்லப்பட்டதற்கான தடயம் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர் மழையால் சாலையில் செல்லும் வாகனங்களும், வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களை மெதுவாகவே இயக்கி சென்றனர்.
    • சில வாகன ஓட்டிகள் மழையில் நனையாமல் இருக்க வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு பாதுகாப்பான இடங்களில் நின்று கொண்டனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.

    குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் இதமான வெயில் நிலவியது. மதியத்திற்கு பிறகு வானில் கருமேகங்கள் திரண்டு, இருளாக காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது.

    மாலையில் சாரல் மழையாக தொடங்கி இரவில் பலத்த மழையாக மாறியது. இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இந்த மழையால் குன்னூர் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழையால் சாலையில் செல்லும் வாகனங்களும், வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களை மெதுவாகவே இயக்கி சென்றனர். சில வாகன ஓட்டிகள் மழையில் நனையாமல் இருக்க வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு பாதுகாப்பான இடங்களில் நின்று கொண்டனர்.

    விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால், குன்னூர் அய்யப்பன் கோவில் பகுதி, இன்கோசர்வ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு மழைநீரும், சாக்கடை நீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடின.

    குன்னூர் பஸ் நிலையம் முன்பு பல்வேறு இடங்களில் இருந்து தண்ணீரில் அடித்து வரப்பட்ட கழிவு பொருட்கள் தேங்கி அந்த பகுதியே சேறும், சகதியுமாக காட்சி அளித்தது.

    இதேபோல் குன்னூர் புறநகர் பகுதிகளான பர்லியார், வண்டிச்சோலை, ஒட்டுப்பட்டரை உள்பட கிராம பகுதிகளிலும் கனமழை பெய்தது. கோத்தகிரி, ஊட்டி, கூடலூர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    திடீரென கொட்டி தீர்த்த மழை காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் ஊழியர்கள் இதுநாள்வரை கைகளிலேயே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வந்தனர்.
    • கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நவீன எந்திரம் வாங்கப்பட்டது


    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்க்காக பொது கட்டண கழிப்பிடங்கள் இயங்கி வந்தன.

    இந்த கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் ஊழியர்கள் இதுநாள்வரை கைகளிலேயே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வந்தனர். பொது கழிப்பிடங்களை ஊழியர்கள் கைகளில் சுத்தம் செய்வதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பு எதிர்ப்பு காட்டி வந்தது.

    கழிப்பிடங்களை சுத்தம் செய்ய ஊழியர்களுக்கு நவீன கருவிகளை வழங்க வேண்டி கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மக்கள் அதிகாரம் சார்பில் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தது. இந்த மனுவை பரிசோதித்த செயல் அலுவலர் நீண்ட நாள் முயற்சிக்கு பிறகு கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நவீன எந்திரம் வாங்கப்பட்டது. இந்த எந்திரத்தின் சோதனை ஓட்டம் நடந்தது.

    இந்த எந்திரம் எந்த அளவு தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்கிறது என்பதையறிந்து தேவைக்கேற்றார் போல் மேலும் சில எந்திரங்களை வாங்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என ெசயல் அலுவலர் தெரிவித்தார்.

    • வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பர்.
    • 5 அடுக்குகளைக் கொண்ட இந்த ரோஜா தோட்டம் 4 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    தமிழக மக்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் அவர்களின் முதல் விருப்பமாக நீலகிரி மாவட்டம் தான் இருக்கும். இயற்கையின் மொத்த அழகையும் அங்கு கண்டு வியந்து ரசிக்கலாம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பர்.

    இந்த நிலையில், தெற்கா சியாவில் புகழ்பெற்ற ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள ரோஜாக்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். மேலும் நிலா மாடம், புல் மைதானம், நீரூற்று, போன்ற இடங்களைக் கண்டு ரசித்து வருகின்றனர். 5 அடுக்குகளைக் கொண்ட இந்த ரோஜா தோட்டம் 4 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ளது.

    பூங்காவின் மேற்புரம் மே மாதத்தில் பூக்கள் பூக்கும் வண்ணம் செடிகள்கவாத்து செய்யபட்டு உள்ளதால் மேல் அடுக்கில் பூக்களை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்

    ஆனால் அவர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில் கீழ் அடுக்குகளில் உள்ள செடிகளில் ரோஜா பூக்கள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.

    சிறப்பு மிக்க இந்த பூங்காவில் தற்போது பூத்துக்கு லுங்கும் ரோஜா க்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    ஊட்டியில் ரோஜா க்களின் அணிவகுப்பை காண குவியும் சுற்றுலா பயணிகள் ரோஜாமலர்கள் மனதிற்கு புத்துணர்வு அளிப்பதாக மகிழ்சி தெரிவித்தனர்.

    • ஆண்டுதோறும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இப்பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
    • இந்த பண்டிகை மூலம் வறட்சி நீங்கி, மழை பொழிந்து, ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிவித்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் குடியிருப்பு பகுதியை ஹட்டி என்று கூறுவார்கள். அவர்கள் ஆண்டுதோறும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உப்புஹட்டுவ என்ற பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். நேற்று கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உப்பு ஹட்டுவ பண்டிகை கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி நேற்று காலை அவரவர் வீட்டில் இருந்து ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து உப்பு, பச்சை கடலை, புல் வகைகள் என கொண்டு வந்து ஆற்றில் கரைத்தனர். பின்னர் ஆடு, மாடுகளுக்கு உப்பு தண்ணீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த பாரம்பரிய வழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு, பின்பு காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இலை, செடிகளை, வீட்டிற்கு கொண்டு சென்று, அதை வீட்டின் முற்றத்தில் தொங்கவிடுவர். இதன் காரணமாக தங்களுக்கு நோய், நொடிகள் வராமல் இருக்க அந்த செடிகள் உதவும் என்பது நம்பிக்கை.

    மேலும் ஆடு, மாடுகள் உப்பு தண்ணீர் குடிப்பதால், காலையில் இருந்து இரவு வரை மேய்ச்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு திரும்பி வரும் என்ற நம்பிக்கையில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது.

    மேலும் வீட்டில் பாயாசம் தயாரித்து தங்கள் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் படுகர் இன மக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டா டப்படுகிறது. இந்த பண்டிகை மூலம் வறட்சி நீங்கி, மழை பொழிந்து, ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிவித்தனர்.

    • இந்த அரங்கை பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி திறந்து வைத்தார்
    • மஞ்சள் துணிப்பை உபயோகப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அரவேணு,

    கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் கோத்தகிரி பஸ் நிலையம் முன்பு மறு சுழற்சி செய்யப்பட்ட உரம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், வீணாகும் பிளாஸ்டிக் பொருட்களை எவ்வாறு பயனுள்ளதாக மாற்றுவது குறித்து விழிப்புணர்வு அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த அரங்கை பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி திறந்து வைத்தார். குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார் அரங்கை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மஞ்சள் துணிப்பை உபயோகப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கவர்களை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு பேரூராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தாசில்தார் காயத்ரி, செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், வருவாய் ஆய்வாளர் அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு புகைப்படங்கள், மாற்றுப்பொருட்கள், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை வீணாக்காமல் மாற்று பயன்பாட்டிற்கு உபயோகிப்பது குறித்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

    • காட்டு யானை ஒன்று குட்டிகளுடன் இந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளது
    • தொழிலாளர்கள் பாதுகாப்புடனும் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை, மசக்கல் பகுதியை சுற்றிலும் பல குக்கிராமங்கள் அமைந்துள்ளது.

    இப்பகுதியில் அதிகப்படியான மலைகாய்கறி விவசாயம் நடைபெற்று வருகிறது.

    இங்கு அதிகாலை நேரங்களில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் அவரை போன்ற மலைகாய்கறிகள் பறிக்கவும், நீர் பாய்ச்சவும் விவசாயிகள் செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் தற்போது சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானை ஒன்று குட்டிகளுடன் இந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகளில் உலா வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    மேலும் தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்களை தாக்கும் அபாயமும் உள்ளது. எனவே, தேயிலை, தோட்ட விவசாய பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • காங்கிரஸ் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    பந்தலூர்,

    ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நெல்லியாளம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் ஷாஜி தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் செயலாளர் அனஸ் ஏடாலாத் பேரணியை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அனுமதியின்றி கண்டன பேரணி நடத்தியதாக சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி எலியாஸ் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    • கூக்கல்தொரை பகுதியை சுற்றிலும் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன.
    • காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியை சுற்றிலும் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் தற்போது சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் குட்டிகளுடன் வந்து, இங்குள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே உலா வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளதால், பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் மற்றும் காய்கறி விவசாயிகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். விவசாய பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • 800-க்கும் மேற்பட்ட பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள் உள்ளனர்.
    • 300 பேர் மட்டுமே பணி நிரந்த ரம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் 800-க்கும் மேற்பட்ட பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 300 பேர் மட்டுமே பணி நிரந்த ரம் செய்யப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள 500 பேர் தற்காலிக பணியாளர்க ளாகவே உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த போதிலும், இவர்கள் இதுவரை பணிநி ரந்தரம் செய்யப்படவில்லை. மேலும், நிரந்தர பணியா ளர்களுக்கும் இதுவரை யில் தோட்டக்கலைத்துறை சார்பில் காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை.மேலும், ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு போன்றவை வழங்கப்படாமல் உள்ளது. இதனால், தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பண்ணை பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகை பிடித்தம் செய்திட வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பத்தாண்டு பணிக்காலம் முடிந்தவர்க ளுக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் காலியாக உள்ள மஸ்தூர் மற்றும் அடிப்படை பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தோட்டக் கலைத்துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி தாவரவியல் பூங்கா பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கி ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4-வது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத், தோடர் சமுதாய முன்னேற்ற சங்க தலைவர் மந்தேஸ் குட்டன், படுக தேச பார்ட்டி தலைவர் மஞ்சை மோகன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

    பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகளோ அல்லது மாவட்ட நிர்வாகமோ பேச்சு வார்த்தை எதுவும் நடத்தவில்லை. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • வருவாய்த்துறை அதிகாரிகள் கார்களை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
    • 5 ரூபாய் நாணயங்கள், 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் இருந்தது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பூங்கா அருகே குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார் மற்றும் தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை பார்வையிட்டு சோதனை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்படி ஏதாவது இருந்தால், அந்த வாகனங்களுக்கு அபராதமும் விதித்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தனர். காருக்குள் சாக்குமூட்டைகள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரில் ஏறி சாக்குமூட்டையை பிரித்து சோதனை மேற்கொண்டனர்.

    அதில், ஏராளமான 5 ரூபாய் நாணயங்கள், 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் இருந்தது. இதன் மதிப்பு 2 லட்சத்து 59 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கார் டிரைவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த நபரையும், பணத்தையும் குன்னூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர். விசாரணையில்,அந்த வாலிபர் திருப்பூரை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது.

    இவர் நீலகிரியில் உள்ள கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு கொடுப்பதற்காக இந்த நாணயங்களை பழனியில் இருந்து எடுத்து வந்ததும், அதற்கு அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் நேற்று ஒரே நாளில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக அந்த வழியாக வந்த 20 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×