என் மலர்tooltip icon

    நீலகிரி

    • பேரணியை மாவட்ட நீதிபதி மற்றும் பலர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
    • இப்ேபரணி ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஊட்டி அரசினர் கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.

    பேரணியை மாவட்ட நீதிபதியும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவருமான நீதிபதி ஆர்.ஸ்ரீதரன், காவல்துறையின் துணை கண்காணிப்பாளர் யசோதா, நகர மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வனக்குமார், கனகராஜ், அரசினர் கலைக்கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊட்டி அரசினர் கலைக்கல்லூரியில் துவங்கிய இந்த பேரணி ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    • மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு தலைவர் சத்தார் பாபு தலைமை வகித்தார்.
    • ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கும் விழா நடைபெற்றது.

    ஊட்டி,

    புதிய புயல் நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் ஊட்டி மனநலம் குன்றியோர் இல்லத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு தலைவர் சத்தார் பாபு தலைமை வகித்தார். புதிய புயல் ஆறுமுகம் வரவேற்றார். இல்ல காப்பாளர் செந்தில், ஆர்.கே. புரம் பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளா, உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் உலிகல் சண்முகம், ஆசிரியர் கையேடு தயாரித்த ஓவியா, ஆசிரியர் காந்தல் ஜேம்ஸ், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு பிலோமினா மற்றும் தனலட்சுமி, பொறியாளர் விஞ்ஞானி ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மகளிர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவும், ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் இல்ல பொறுப்பாளர்கள் அருள்மேரி, ரேவதி நன்றி கூறினர்.

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • ஆண்டு விழா மகா கணபதி யாகத்துடன் தொடங்கியது..

     ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமாதேஸ்வர் கோவிலில் ஆண்டு திருவிழா வெகு கோலகலமாக நடைபெற்றது.

    சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆண்டு விழா மகா கணபதி யாகத்துடன் தொடங்கியது. வாத்திய முழக்கங்களுடன் கோழிகண்டியில் தொடங்கி மாதேஸ்வரர் கோவிலில் முடிவடைந்தது.

    3 நாட்கள் நடைபெற்ற ஆண்டு விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா குழு தலைவர் கே.கே.கங்காதரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    • ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டம் நடந்தது.
    • புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தி.மு.க அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் அனைவரையும் வரவேற்றார்.கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பல்லவி ராஜா கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, காசிலிங்கம், திராவிடமணி, ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தராஜா, சுஜேஷ், நகர செயலாளர்கள் இளஞ்செழியன் பாபு, சேகரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, பேரூர் செயலாளர்கள் உதயகுமார், சுப்ரமணி, நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, பேரூராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி, வள்ளி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம் நன்றி கூறினார்.

    • நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • முதுமலையில் தெப்பக்காடு முகாமுக்கு செல்லும் சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஊட்டி:

    பிரதமர் மோடி வருகிற 8-ந்தேதி சென்னை வர உள்ளார். அன்று நடக்கும் விழாவில் அவர் சென்னையில் இருந்து கோவைக்கு இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார்.

    அதற்கு அடுத்த நாள் 9-ந்தேதி மீண்டும் தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்துக்கு பிரதமர் மோடி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன்விழா நாடு முழுவதும் உள்ள 53 புலிகள் காப்பகத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட உள்ளதாக மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், பிரதமர் மோடி 9-ந் தேதி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு செல்கிறார். அங்கிருந்து அதன் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கும், வயநாட்டில் உள்ள புலிகள் காப்பகத்துக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, பிரதமர் மோடி முதுமலைக்கு வரும் உறுதியான தகவல்கள் எதுவும் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. டெல்லியில் இருந்து பிரதமர் வரும் விவரங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட பின்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.

    முதுமலைக்கு வரும் பிரதமர் மோடி ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பாராட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்பட வில்லை.

    தற்போது பிரதமர் வருவதாக வெளியான தகவலை அடுத்து, நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதுமலையில் தெப்பக்காடு முகாமுக்கு செல்லும் சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுதவிர குட்டி யானைகள் பராமரிக்கப்படும் கரால் பகுதிக்கும் புதியதாக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இங்கு எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தொடர்ந்து உயர் அதிகாரிகள் வந்து செல்வதுடன், மத்திய, மாநில அரசுகளின் வி.ஐ.பி.களும் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். பிரதமர் வருகை பற்றி இதுவரை எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குட்டி யானைக்கு திரவ உணவுகள் வழங்கி யானையை தங்கள் குழந்தை போல பொம்மனும், பெள்ளியும் கவனித்து வந்தனர்.
    • யானைக்குட்டிக்கு காயம் இருந்ததால், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஊட்டி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் தாயை பிரிந்து 5 மாத ஆண் குட்டி யானை தனியாக சுற்றி திரிந்தது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து, குட்டி யானையை கண்காணித்து அந்த யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் குட்டி யானை கிணற்றில் தவறி விழுந்ததில் காயம் அடைந்தது. இதனால் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இதைத்தொடர்ந்து, குட்டி யானையை முதுமலைக்கு அனுப்பி பராமரிக்க வனத்துறை முடிவு செய்தது. அந்த குட்டி யானையை அழைத்துச் செல்வதற்காக ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்திருந்த பாகன் பொம்மன் முதுமலையிலிருந்து வரவழைக்கப்பட்டார்.

    அவரது கண்காணிப்பில், லாரியில் ஏற்றப்பட்டு முதுமலைக்கு குட்டி யானை கொண்டு செல்லப்பட்டது. அங்கு வனத்துறையினர் குட்டி யானையை பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியிடம் ஒப்படைத்தனர்.

    குலதெய்வத்துக்கு பூஜை செய்து, ஆரத்தி எடுத்து குட்டி யானையை கரோல் எனப்படும் கூண்டில் அடைத்து வைத்து பராமரித்து வந்தார். கூண்டில் யானை படுப்பதற்காக பஞ்சு மெத்தையும் கொடுக்கப்பட்டிருந்தது.

    முதலில் அடம் பிடித்த யானை பின்னர், பொம்மனுடன் சேர்ந்து கொண்டு விளையாட தொடங்கியது. தொடர்ந்து குட்டி யானைக்கு திரவ உணவுகள் வழங்கி யானையை தங்கள் குழந்தை போல பொம்மனும், பெள்ளியும் கவனித்து வந்தனர்.

    யானைக்குட்டிக்கு காயம் இருந்ததால், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து மருத்துவ குழு ஆலோசனைப்படி குட்டி யானைக்கு மருந்துகளும், உணவுகளும் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் குட்டி யானைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    உடனடியாக கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து யானை குட்டிக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும், நள்ளிரவு 1 மணியளவில் குட்டி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

    குட்டி யானை இறந்த தகவலை அறிந்ததும் அந்த யானை குட்டியை பராமரித்து வந்த பொம்மன், பெள்ளி தம்பதியர் மற்றும் வனத்துறையினர் சோகம் அடைந்தனர்.

    இன்று காலை காலை கால்நடை டாக்டர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் குட்டியை உடற்கூராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    காயம் அடைந்த குட்டி யானையை மருத்துவர்கள் கண்காணிப்புடன், கூண்டில் அடைத்து பராமரித்து வந்தோம். யானை குட்டி நன்றாகவே இருந்தது.

    நேற்று திடீரென யானை குட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்களை அழைத்து சிகிச்சை அளித்தோம். இருப்பினும் இறந்து விட்டது. யானை குட்டி ஒவ்வாமை காரணமாக வயிற்று போக்கு ஏற்பட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளது.

    இருப்பினும் உடற்கூராய்வுக்கு பின்னரே யானை குட்டி இறந்ததற்கான காரணம் தெரியவரும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 64 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி, பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்கள் உள்ளன.

    இந்த தாலுகாக்களில் கூட்டுறவுத்துறை சார்பில் 335 ரேஷன் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கட்டுப்பாட்டில் 28 கடைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், எஸ்டேட் நிர்வாகத்தால் நடத்தப்படும் கடைகள் என மொத்தம் 404 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.

    தரமான சேவை வழங்கி வரும் ரேஷன் கடைகளுக்கு சர்வதேச தரச்சான்று பெற தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

    இதன்படி தொழிலின் தரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐ.எஸ்.ஓ. 9001 மற்றும் பாதுகாப்பு மேலாண்மை வினியோகத்தின் சிறந்த செயல்பாட்டுக்கான ஐ.எஸ்.ஓ. 28000 என 2 வகையான தரச்சான்று பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 64 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கேஷ் பஜார், மினி சூப்பர் மார்க்கெட், வண்டிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அப்பர் குன்னூரில் 2 கடைகள், ஓட்டுப்பட்டறை, வசம்பள்ளம், வெலிங்டன், ஜெயந்தி நகர், கூர்க்கா கேம்ப், ஊட்டி மார்க்கெட் போஸ்-1, காந்தல்-2, பிங்கர் போஸ்ட் பகுதிகளில் இயங்கும் ரேஷன் கடைகள் என மொத்தம் 60 கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. 9001:2015 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

    முத்ததோரை, தாய்சோலை, தூனேரி, எல்லக்கண்டி ஆகிய 4 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. 28000:2022 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    கியூஆர் கோடு முறையில் பணம் செலுத்தும் வசதி நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த ஆண்டு முன்கூட்டியே குதிரை பந்தயம் தொடங்கப்பட உள்ளது.
    • தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குதிரைகள் வரவழைக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    சுற்றுலா நகரமான ஊட்டிக்கு ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    அரசு சார்பில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தனியார் சார்பிலும் ஆண்டு தோறும் ஊட்டியில் குதிரை பந்தயம் மற்றும் நாய் கண்காட்சி போன்றவைகள் நடத்தப்படுகிறது. இது இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

    ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி தொடங்கி ஒன்றரை மாதங்கள் இந்த குதிரை பந்தயம் நடத்தப்படும். இதற்காக, சென்னை, புனே, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பந்தய குதிரைகள் கொண்டு வரப்படும். இந்த குதிரை பந்தயம் ஜூன் மாதம் வரை நடத்தப்படும். ஆனால், மே இறுதி வாரத்திற்கு மேல் மழை தொடங்கி மூன்று மாதங்களுக்கு கொட்டி தீர்க்கிறது.

    இதனால், ஜூன் மாதங்களில் குதிரை பந்தயம் நடத்துவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இம்முறை முன்னதாகவே ஊட்டியில் குதிரை பந்தயத்தை தொடங்கி முன்னதாக முடிக்க சென்னை ரேஸ் கிளப் முடிவு செய்துள்ளது.

    அதன்படி இந்த ஆண்டு முன்கூட்டியே குதிரை பந்தயம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குதிரைகள் வரவழைக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற 1-ந்தேதி முதல் குதிரை பந்தயம் தொடங்கப்பட உள்ளது. குதிரை பந்தயம் தொடங்க உள்ளதால் சுற்றுலாபயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். 1-ந் தேதி முதலே ஊட்டியில் அதிகளவில் சுற்றுலாபயணிகள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தது
    • தடை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் மற்றும் டம்ளர் பயன்படுத்த தடையும் விதித்தார்.

    கோத்தகிரி

    கோத்தகிரி பழைய உழவர் சந்தைக்கு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் குன்னூர் ஆர்டிஓ பூசனக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து சுகாதாரமற்ற முறையில் கிடந்தது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெழுகு பூசப்பட்ட டம்ளர்கள் பயன்படுத்த வந்ததும் தெரியப்பட்டது. இதனை அடுத்து அந்த கடைக்கு ஆர்டிஓ சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும் கடையை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் டம்ளர் பயன்படுத்த தடையும் விதித்தார். தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று டாஸ்மார்க் ஊழியர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர் உத்தரவின் படி கோத்தகிரியில் போதை பொருட்கள் ஒழிப்பு சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குஞ்சப்பனை சோதனை சாவடி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் தவிட்டுமேட்டை சேர்ந்த பாலன்(23) என்பதும், கஞ்சா விற்க நின்றதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • 3 நாட்கள் நடைபெற்ற ஆண்டு விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமாதேஸ்வர் கோவிலில் ஆண்டு திருவிழா வெகு கோலகலமாக நடைபெற்றது

    சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆண்டு விழா மகா கணபதி யாகத்துடன் தொடங்கியது. வாத்திய முழக்கங்களுடன் கோழிகண்டியில் தொடங்கி மாதேஸ்வரர் கோவிலில் முடிவடைந்தது.

    3 நாட்கள் நடைபெற்ற ஆண்டு விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா குழு தலைவர் கே.கே.கங்காதரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்

    • மலைகளின் ராணியான நீலகிரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
    • ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு நடைபெறும் மலர்க்கண்காட்சி 125-வது மலர் கண்காட்சி ஆகும்.

    ஊட்டி:

    மலைகளின் ராணியான நீலகிரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இருந்தாலும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயிலை சமாளிப்பதற்காகவும், குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காகவும் வழக்கத்தை விட பல மடங்கு சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.

    அவ்வாறு குவியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அப்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கண்காட்சிகளும் நடத்தப்படும்.

    இந்த ஆண்டுக்கான கோடை விழா மே மாதம் 6-ந் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி மே 19-ந் தேதி தொடங்குகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு நடைபெறும் மலர்க்கண்காட்சி 125-வது மலர் கண்காட்சி ஆகும். மே 23-ந் தேதி வரை 5 நாட்கள் கண்காட்சி நடக்கிறது.

    மலர் கண்காட்சியை போல் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்டவைகளும் நடத்தப்பட உள்ளது. கோத்தகிரி நேரு பூங்காவில் மே 6, 7-ந் தேதிகளில் 12-வது காய்கறி கண்காட்சி, கூடலூரில் மே 12, 13, 14-ந் தேதிகளில் 10-வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 13, 14, 15-ந் தேதிகளில் 18-வது ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 27, 28-ந் தேதிகளில் 63-வது பழக்கண்காட்சி நடக்கிறது.

    இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார். மலர் கண்காட்சியில் பங்கேற்க கவர்னர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×