search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    முதுமலையில் பாகன் பொம்மன் பராமரித்த குட்டி யானை இறந்தது

    • குட்டி யானைக்கு திரவ உணவுகள் வழங்கி யானையை தங்கள் குழந்தை போல பொம்மனும், பெள்ளியும் கவனித்து வந்தனர்.
    • யானைக்குட்டிக்கு காயம் இருந்ததால், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஊட்டி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் தாயை பிரிந்து 5 மாத ஆண் குட்டி யானை தனியாக சுற்றி திரிந்தது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து, குட்டி யானையை கண்காணித்து அந்த யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் குட்டி யானை கிணற்றில் தவறி விழுந்ததில் காயம் அடைந்தது. இதனால் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இதைத்தொடர்ந்து, குட்டி யானையை முதுமலைக்கு அனுப்பி பராமரிக்க வனத்துறை முடிவு செய்தது. அந்த குட்டி யானையை அழைத்துச் செல்வதற்காக ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்திருந்த பாகன் பொம்மன் முதுமலையிலிருந்து வரவழைக்கப்பட்டார்.

    அவரது கண்காணிப்பில், லாரியில் ஏற்றப்பட்டு முதுமலைக்கு குட்டி யானை கொண்டு செல்லப்பட்டது. அங்கு வனத்துறையினர் குட்டி யானையை பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியிடம் ஒப்படைத்தனர்.

    குலதெய்வத்துக்கு பூஜை செய்து, ஆரத்தி எடுத்து குட்டி யானையை கரோல் எனப்படும் கூண்டில் அடைத்து வைத்து பராமரித்து வந்தார். கூண்டில் யானை படுப்பதற்காக பஞ்சு மெத்தையும் கொடுக்கப்பட்டிருந்தது.

    முதலில் அடம் பிடித்த யானை பின்னர், பொம்மனுடன் சேர்ந்து கொண்டு விளையாட தொடங்கியது. தொடர்ந்து குட்டி யானைக்கு திரவ உணவுகள் வழங்கி யானையை தங்கள் குழந்தை போல பொம்மனும், பெள்ளியும் கவனித்து வந்தனர்.

    யானைக்குட்டிக்கு காயம் இருந்ததால், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து மருத்துவ குழு ஆலோசனைப்படி குட்டி யானைக்கு மருந்துகளும், உணவுகளும் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் குட்டி யானைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    உடனடியாக கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து யானை குட்டிக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும், நள்ளிரவு 1 மணியளவில் குட்டி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

    குட்டி யானை இறந்த தகவலை அறிந்ததும் அந்த யானை குட்டியை பராமரித்து வந்த பொம்மன், பெள்ளி தம்பதியர் மற்றும் வனத்துறையினர் சோகம் அடைந்தனர்.

    இன்று காலை காலை கால்நடை டாக்டர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் குட்டியை உடற்கூராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    காயம் அடைந்த குட்டி யானையை மருத்துவர்கள் கண்காணிப்புடன், கூண்டில் அடைத்து பராமரித்து வந்தோம். யானை குட்டி நன்றாகவே இருந்தது.

    நேற்று திடீரென யானை குட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்களை அழைத்து சிகிச்சை அளித்தோம். இருப்பினும் இறந்து விட்டது. யானை குட்டி ஒவ்வாமை காரணமாக வயிற்று போக்கு ஏற்பட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளது.

    இருப்பினும் உடற்கூராய்வுக்கு பின்னரே யானை குட்டி இறந்ததற்கான காரணம் தெரியவரும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×