என் மலர்
நீலகிரி
- மனோஜின் மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதி கொண்டன.
- மனோஜ் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன்.
இவரது மகன் மனோஜ் (வயது29). இவர் சுற்றுலா வாகன டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை மனோஜ் சேலாசில் உள்ள தனது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக குன்னூரில் இருந்து சேலாசுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அங்கு சென்று தனது உறவினரை சந்தித்து விட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளில் குன்னூருக்கு வந்தார்.
காட்டேரியை அடுத்த கரும்பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது.
அப்போது எதிர்பாராத விதமாக மனோஜின் மோட்டார் சைக்கிளும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த மனோஜ் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து குன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்த மனோஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம், தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடந்தது.
- கால்நடைகளை பராமரிக்க வசதியில்லாதால் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம், தலைவர் ஷீலா கேத்ரின் (திமுக) தலைமையில் நடந்தது. இதில் அனைத்து நகரமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது நகரமன்ற உறுப்பினர் சாந்தா சந்திரன் கூட்டத்தில் பேசும்போது, என் வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை, கழிப்பிட வசதி செய்து தரக்கோரி பல மாதங்களாக கோரிக்கை விடுத்து உள்ளேன். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார். இதற்கு ஆணையர் பதிலளிக்கையில், அந்த பகுதியில் துப்புரவு பணிகளை விரைவாக செயல்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
அடுத்தபடியாக நகராட்சி உறுப்பினர் சரவணன் பேசுகையில், என் வார்டு அடங்கிய பகுதியில் ஆடு-மாடு வதைக்கூடம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. அங்கு ஏற்கெனவே செத்த கால்நடைகளை இறைச்சிக்காக கொண்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார். இதற்கு ஆணையர் பதில்அளிக்கையில், அனைத்து பகுதிகளிலும் மாதம் 4 முறை மாஸ் கிளீனிங் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
காட்டேரி வார்டு உறுப்பினர் குமரேசன் பேசும்போது, என் வார்டில் யானை, கரடி உள்ளிட்ட விலங்குகள் இரவு நேரத்தில் நெடுஞ்சாலைக்கு வருகிறது. ஆனால் அந்த பகுதியில் போதிய மின்விளக்குகள் இல்லை. எனவே பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். என் வார்டில் அனைத்து பகுதிகளிலும் போதிய மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு தலைவர் மின்சார வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.
குன்னூர் நகராட்சி கூட்டத்தின்போது, அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களை நகராட்சி நிா்வாகம் கண்டுகொள்வதில்லை. ஆனால் சிறிய அளவில் வீடுகளை கட்டும்போது அதிகாரிகள் தொந்தரவு செய்வதாக நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா். மேலும், நகராட்சியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் நடக்கிறது. எனவே அவற்றை பிடித்து சென்று பராமரிக்கும் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினா். அதற்கு கால்நடைகளை பராமரிக்க வசதியில்லை, எனவே மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையா் உறுதியளித்தார்.
முன்னதாக, மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டு உள்ள குன்னூா் நகா்மன்ற உறுப்பினா் ராமசாமிக்கு நகா்மன்ற துணைத் தலைவா் வாசிம் ராஜா (திமுக), அதிமுக நகா்மன்ற உறுப்பினா் சரவணகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
- இதில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
- சித்த மருத்துவம் மூலமும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரவேணு,
கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இதில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.சிறப்பு முகாமுக்கு வந்தவர்களுக்கு அனைத்து வகை நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து-மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதுதவிர பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை நடத்தப்பட்டு, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதுதவிர சித்த மருத்துவம் மூலமும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கோத்தகிரி சிறப்பு மருத்துவ முகாமில் வட்டார பொது சுகாதார மருத்துவர் ராஜேஷ், மாவட்ட துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் மகேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் குமாரசுவாமி, பிரேம்குமார், அசோக்குமார், குமாரசாமி, சிவா, குமார், பிரசாத் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோத்தகிரி சிறப்பு முகாமை சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, துணைத் தலைவர் உமாநாத் போஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பர்லியாறு பகுதியில் 5 காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளன.
- சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயற்சிக்க கூடாது என எச்சரிக்கை.
ஊட்டி,
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, குடியிருப்புக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம், பர்லியாறு பகுதியில் 5 காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளன. அவை தற்போது குன்னூா் அடுத்த ரன்னிமேடு ெரயில் நிலையம் மற்றும் நஞ்சப்பசத்திரம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி உலா வந்து செல்கிறது.
குன்னூர் ரோட்டில் சுற்றி திரியும் காட்டு யானைகளின் நடமாட்டம், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதன்ஒருபகுதியாக காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் கூறுகையில், யானைகள் அவ்வப்போது சாலையில் உலாவுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயற்சிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- இதுகுறித்து உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
கோத்தகிரி,
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் ரோட்டில் டானிங்டன் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மர ஆலை உள்ளது.
இங்கு வீட்டு கட்டுமான பொருட்கள் மற்றும் மரவகைகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மரஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள மரவீட்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது.
எனவே ஊழியர்கள் திரண்டுவந்து பார்த்தனர். அதற்குள் மரவீடு தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்புசாமி, சிறப்பு நிலை அலுவலர் மாதன் தலைமையில் நித்தியானந்தன், மணி, விஜயகுமார், முத்துக்குமார், மணி, சரத் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.கோத்தகிரி மர வீட்டுக்குள் பரவிய தீயை தீயணைப்புத்துறை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த திடீர் தீ விபத்து காரணமாக, அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் கோத்தகிரி மர ஆலை குடியிருப்பு அருகே உள்ள மர வீட்டில் காவலாளி நேற்று இரவு விளக்கு ஏற்றி வைத்து விட்டு வேலைக்கு வந்ததும், அப்போது எதிர்பாராதவிதமாக விளக்கு கீழே விழுந்து, துணியின் மேல் பற்றி தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்காணிப்பு கோபுரத்தில் குடிநீர், சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
- காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து விரட்டும் பணியிலும் வன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
ஊட்டி,
தமிழக-கேரள எல்லையில் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் உள்ளது.
இங்கு அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வன குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருந்து வருவதால், தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் எல்லையில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கூடலூர் பகுதியில் மாவோயிஸ்டு அச்சுறுத்தல் உள்ள போலீஸ் நிலையங்களை சுற்றிலும் பாதுகாப்பு சுவர்கள் கட்டப்பட்டு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தேவர் சோலை அருகே வாச்சிக்கொல்லி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் வனவிலங்கு வேட்டை கும்பல்கள் நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு வசதிகளுடன் கூடிய கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்காணிப்பு கோபுரத்தில் வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தங்கி பணியாற்றும் வகையில் குடிநீர், சமையலறை மற்றும் சூரிய மின்சக்தியில் செயல்படும் வகையில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து விரட்டும் பணியிலும் வன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கூடலூர் பகுதியில் பல மாதங்கள் தொடர்ந்து மழை பெய்வதால் வனப்பகுதியில் தங்கி இருந்து கண்காணிப்பு பணி மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
இதனால் வாச்சிக்கொல்லி பகுதியில் கண்காணிப்பு கோபுரம் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. இதில் இரவு, பகலாக வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தங்கி கண்காணிப்பு பணி மேற்கொள்வார்கள் என்றனர்.
- காலை 7.35 மணிமுதல் சிறப்பு பூஜைகளுடன் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.
- பக்தர்கள் கோவிந்தா, வெங்கட்ரமனா என்று பக்தி கரகோஷம் எழுப்பினர்.
ஊட்டி,
ஊட்டி புது அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இது தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக காலை 7.35 மணிமுதல் சிறப்பு பூஜைகளுடன் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. அடுத்தபடியாக அக்னி மண்டல மகா கும்பாதிகள் விஜர்சனம், யாத்ரா தானம் செய்யப்பட்டு கடம் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது ஊட்டி மாரியம்மன் கோவில் பூசாரி விநாயகம் தலைமையில், வேணு கோபால சுவாமி கோவில் அர்ச்சகர் விஸ்வநாத் ஆனந்தன் முன்னிலையில் பட்டாச்சாரியர்கள் கலசம் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, வெங்கட்ரமனா என்று பக்தி கரகோஷம் எழுப்பினர்.
இதைதொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் மதியம் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 3.05 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை 5 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடத்தப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் ராஜேஸ் மணிகண்டன், ஆய்வாளர் ஹேமலதா மற்றும் கோவில் அர்ச்சகர்கள் லட்சுமி நாராயணன், பார்த்தசாரதி, ஹரி கிருஷ்ணன், சடகோபன் ஆகியோர் செய்து இருந்தனர்.
- அப்சன் பாரத் என்ற திட்டத்தின் கீழ் குன்னூர் ெரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- ஊட்டி ெரயில் நிலையம் ரூ.8 கோடி மதிப்பில், மேட்டுப்பாளையம் ெரயில் நிலையம் ரூ.7½ கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்
குன்னூர்,
நூற்றாண்டு பழமை மிக்க யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ெரயிலில் உள்நாடு மட்டுமின்றி வெளி நாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த மலை ெரயிலில் விரும்பி பயணம் செய்கின்றனர்.
குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய மலை ெரயில் பாதையில் அழகிய பசுமை மிக்க மலைகளும், வானுயர்ந்த மரங்களும், அழகிய பறவைகளும், கண் கவரும் நீரோடைகளும், வனவிலங்குகளும் அழகிய சமவெளி பகுதி காட்சிகளையும் காண முடியும்.
இதனை ரசிப்பதற்காக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இந்த மலை ெரயிலில் பயணம் செய்கின்றனர். தற்போது மத்திய அரசு அப்சன் பாரத் என்ற திட்டத்தின் கீழ் குன்னூர் ெரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை தென்னிந்திய ெரயில்வே பொது மேலாளர் ஆர். என்.சிங் ெரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குன்னூர் ெரயில் நிலையம் நூற்றாண்டு பழமை மிக்க யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றது. இந்த ெரயில் நிலையம் மத்திய அரசின் அப்சன் பாரத் என்ற திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.
சுற்றுலா பயணிகள் வசதிக்காக வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறை, கால்வாய்கள், வாகனங்கள் செல்லக்கூடிய சாலைகள், கட்டிடங்கள், பூங்காக்கள் புதுப்பொலிவு பெறச் செய்யப்பட உள்ளது. பணிகள் முழுமையாக ஆறு மாத காலத்தில் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் ஊட்டி ெரயில் நிலையம் ரூ.8 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும். அது போல் மேட்டுப்பாளையம் ெரயில் நிலையம் ரூ.7½ கோடி மதிப்பில் புனரமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
- தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.
- கலெக்டர் அம்ரித் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுரைகளை வழங்கினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் கல்லார் தூரிப்பாலம் சோதனைச்சாவடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசு ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்பு கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத் தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் குன்னூர் கல்லார் தூரி பாலம் சோதனை சாவடி பகுதிகளில், மாவட்ட கலெக்டர் அவர்கள் முன்னிலையில், வருவாய்த்துறை அலுவலர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்களில், கொண்டு வரப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்த போது, வாகனங்களில் கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனைதொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அம்ரித் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரி மாவட்டத்தில், பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுரைகளை வழங்கினார்.
ஆய்வின் போது, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. மோகன குமார் மங்கலம், உட்பட பலர் உடனிருந்தனர்.
- 5 தலைமுறை உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
- தாளியம்மாள் பாட்டி நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம்” என்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கெச்சிகெட்டி படுகர் கிராமத்தில், கடந்த 1920-ம் ஆண்டு பிறந்தவர் தாளியம்மாள். தற்போது 103-வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் பி.பி. இருக்கா? சுகர் இருக்கா? கொலஸ்ட்ரால் இருக்கா? என கேட்பது மிக இயல்பாகி போய் விட்டது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் எத்தனை பேருக்கு அது சாத்தியம் என்று தெரியவில்லை . அவைகளுக்கெல்லாம் ஆச்சர்யமாக 103 வயதில் அடியெடுத்து வைத்துள்ள தாளியம்மாள் பாட்டி வாழ்ந்து வருகிறார்.
சாதாரண தேயிலை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிறு வயது முதலே கடுமையான தோட்டவேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். சாமை, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உணவு சாப்பிட்டு வந்த தாளியம்மாள், நூற்றாண்டைக் கடந்து தற்போது 103 வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 5 தலைமுறைகளைக் கண்ட தாளியம்மாளின் பிறந்தநாளை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திருவிழாவைப் போல கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில் தாளியம்மாளின் கணவர் சிறுவயதிலேயே இறந்து விட்டார். அதன்பிறகு அவரது 2 மகன்கள் மற்றும் ஒரு மகளை வளர்க்க தாளியம்மாள் கடுமையாக உழைத்து போராடியிருக்கிறார். எந்நேரமும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டு சுறுசுறுப்பாகவே இருப்பார். சிறுதானிய உணவுகள் தான் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என அடிக்கடி கூறுவார்.
சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த வயதிலும் தனக்கு வேண்டிய சிறுசிறு தேவைகளை அவரே செய்து வருகிறார். 5 தலைமுறை உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இன்னும் பல ஆண்டுகள் தாளியம்மாள் பாட்டி நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம்" என்றனர்.
இதுபற்றி அறிந்த பலரும் தாளியம்மாள் பாட்டியிடம் ஆசி பெற்று செல்கின்றனர்.
- 1214 தன்னார்வலர்கள் மாவட்டம் முழுவதும் கல்விப்பணியாற்றி வருகின்றனர்.
- தன்னார்வலர்கள் மாணவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகளின் மூலம் பல திட்டங்களை அறிவித்து மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, எண்ணும் எழுத்தும் என பல்வேறு திட்டங்கள் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பு பகுதிக்கும் கலை நிகழ்ச்சி மற்றும் துண்டறிக்கைகள் மூலமாக விழிப்புணர்வு கொடுக்கப்பட்டதின் விளைவாக மாவட்டம் முழுவதும் 3737 தன்னார்வலர்கள் இணைய வழியில் இத்திட்டத்தில் பதிவு செய்திருந்தனர். இவர்களில் மொத்தம் 2108 தன்னார்வலர்கள் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு உளவியல், கணினி வழி தேர்வு மற்றும் குழு கலந்தாய்வு மூலம் இறுதியாக 1814 தன்னார்வலர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தால் வடிவமைக்கப்பட்ட பாடத்தை கையாள பயிற்சி பெற்ற வல்லுனர் குழுவால் முறையான பயிற்சி வழங்கப்பட்டு, அந்தந்த மையங்களில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் பணியமர்த்தப்பட்டு நாளது வரையில் 1214 தன்னார்வலர்கள் மாவட்டம் முழுவதும் கல்விப்பணியாற்றி வருகின்றனர்.
மேலும், மாணவர்கள் வகுப்பு அடிப்படையில் 1 -ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை தொடக்க நிலை தன்னார்வலர்களாலும், 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உயர் தொடக்க தன்னார்வலர்களாலும் மையம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், இத்திட்டத்தினை சிறப்பாக கள அளவில் செயல்படுத்த ஒவ்வொரு குடியிருப்பிலும் தன்னார்வலர்கள் மாணவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தினசரி ஒன்று முதல் இரண்டு மணி நேரம் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள நான்கு ஒன்றியங்களில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தொடக்க நிலையில் 7652 மாணவர்களும், உயர் தொடக்க நிலையில் 5013 மாணவர்களும் என மொத்தம் 12,665 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தினை செயல்படுத்தி வரும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஏற்படும் தற்காலிக காலிப்பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் தகுதி அடிப்படை யில் முன்னுரிமை அளிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியராகவும் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் தற்காலிக காலிப்பணியிடங்களிலும் வாய்ப்பு வழங்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி, குன்னூர் வட்டம் சில்வர் டேல் பகுதியிலுள்ள சி.எம்.எஸ் மையத்தை பார்வையிட்டு தன்னார்வலர் காளியம்மாளின் செயல்பாடுகளை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தன்னார்வலர்களுடன் முதல்-அமைச்சர் தொலை பேசியில் கலந்துரையாடி இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் செயல்பா டுகளை கேட்டறிந்தார்.நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் பொறுப்பு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களும், மாவட்டத்திற்கு மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளாரும் இணைந்து இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கான பிரத்யேக இல்லம் தேடி கல்வி திட்டத்தால் வடிவமைக்கப்பட்ட இணைய வழி செயலி மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இல்லம் தேடி கல்வி மையங்களை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், மாவட்ட மற்றும் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையிட்டு தங்களது செல்போன் செயலி வழியாக பதிவு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மகத்தான திட்ட மானது மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அனைத்து மாணவர்களும் அடிப்படை திறனை சிறப்பாக பெறும் வகையில் இக்கல்வியாண்டும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடரும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- திட்டக்குழு உறுப்பினருக்கான தோ்தல் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.
- தலைவா் பொன்தோஸ் தலைமையில் 7 உறுப்பினா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினருக்கான தோ்தல் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் தி.மு.க. சாா்பில் மாவட்ட துணை செயலாளா் ரவிகுமாா், நகர செயலாளா் ஜாா்ஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் முஸ்தபா, குன்னூா் நகர செயலாளா் ராமசாமி, டி.கே.எஸ்.பாபு, ராஜேந்திரன், விசாலாட்சி உள்ளிட்ட 7 போ் போட்டியிட்ட நிலையில் அனைவரும் வெற்றி பெற்றனா்.
நீலகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றிய நிலையில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு தலைவா் பொன்தோஸ் தலைமையில் 7 உறுப்பினா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா். இதையடுத்து திட்டக்குழு முதல் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ. கணேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மணிகண்டன், மாவட்ட ஊராட்சி செயலா் முத்துக்கருப்பன், ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன், ஊட்டி நகரமன்றத் தலைவா் வாணீஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.






