search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் அருகே மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை அறிய கண்காணிப்பு கோபுரம் அமைப்பு
    X

    கூடலூர் அருகே மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை அறிய கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

    • கண்காணிப்பு கோபுரத்தில் குடிநீர், சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
    • காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து விரட்டும் பணியிலும் வன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

    ஊட்டி,

    தமிழக-கேரள எல்லையில் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் உள்ளது.

    இங்கு அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வன குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரளா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருந்து வருவதால், தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் எல்லையில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து கூடலூர் பகுதியில் மாவோயிஸ்டு அச்சுறுத்தல் உள்ள போலீஸ் நிலையங்களை சுற்றிலும் பாதுகாப்பு சுவர்கள் கட்டப்பட்டு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் தேவர் சோலை அருகே வாச்சிக்கொல்லி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் வனவிலங்கு வேட்டை கும்பல்கள் நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு வசதிகளுடன் கூடிய கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கண்காணிப்பு கோபுரத்தில் வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தங்கி பணியாற்றும் வகையில் குடிநீர், சமையலறை மற்றும் சூரிய மின்சக்தியில் செயல்படும் வகையில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து விரட்டும் பணியிலும் வன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கூடலூர் பகுதியில் பல மாதங்கள் தொடர்ந்து மழை பெய்வதால் வனப்பகுதியில் தங்கி இருந்து கண்காணிப்பு பணி மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

    இதனால் வாச்சிக்கொல்லி பகுதியில் கண்காணிப்பு கோபுரம் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. இதில் இரவு, பகலாக வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தங்கி கண்காணிப்பு பணி மேற்கொள்வார்கள் என்றனர்.

    Next Story
    ×