என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

103 வயது பாட்டியின் பிறந்தநாளை கொண்டாடிய கிராம மக்கள்
- 5 தலைமுறை உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
- தாளியம்மாள் பாட்டி நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம்” என்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கெச்சிகெட்டி படுகர் கிராமத்தில், கடந்த 1920-ம் ஆண்டு பிறந்தவர் தாளியம்மாள். தற்போது 103-வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் பி.பி. இருக்கா? சுகர் இருக்கா? கொலஸ்ட்ரால் இருக்கா? என கேட்பது மிக இயல்பாகி போய் விட்டது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் எத்தனை பேருக்கு அது சாத்தியம் என்று தெரியவில்லை . அவைகளுக்கெல்லாம் ஆச்சர்யமாக 103 வயதில் அடியெடுத்து வைத்துள்ள தாளியம்மாள் பாட்டி வாழ்ந்து வருகிறார்.
சாதாரண தேயிலை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிறு வயது முதலே கடுமையான தோட்டவேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். சாமை, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உணவு சாப்பிட்டு வந்த தாளியம்மாள், நூற்றாண்டைக் கடந்து தற்போது 103 வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 5 தலைமுறைகளைக் கண்ட தாளியம்மாளின் பிறந்தநாளை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திருவிழாவைப் போல கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில் தாளியம்மாளின் கணவர் சிறுவயதிலேயே இறந்து விட்டார். அதன்பிறகு அவரது 2 மகன்கள் மற்றும் ஒரு மகளை வளர்க்க தாளியம்மாள் கடுமையாக உழைத்து போராடியிருக்கிறார். எந்நேரமும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டு சுறுசுறுப்பாகவே இருப்பார். சிறுதானிய உணவுகள் தான் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என அடிக்கடி கூறுவார்.
சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த வயதிலும் தனக்கு வேண்டிய சிறுசிறு தேவைகளை அவரே செய்து வருகிறார். 5 தலைமுறை உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இன்னும் பல ஆண்டுகள் தாளியம்மாள் பாட்டி நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம்" என்றனர்.
இதுபற்றி அறிந்த பலரும் தாளியம்மாள் பாட்டியிடம் ஆசி பெற்று செல்கின்றனர்.






