என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • அய்யம்பாளையம் இந்த கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலையோரம் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • மின்மாற்றி தாழ்வாக அமைந்துள்ளதால் பல நேரங்களில் தரைப்பகுதியில் மின்சார தாக்கம் உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் நாமக்கல் அய்யம்பாளையத்தில்

    தாழ்வான மின்மாற்றியால் விபத்து அபாயம் அமைந்துள்ளது. இந்த கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலையோரம் மின்மாற்றி அமைக் கப்பட்டுள்ளது.

    இந்த மின் மாற்றி சாலை மட்டத்துக்கு அமைந்துள்ளது. சாலை உயரம் அதிக படுத்தும்போது மின்மாற்றியின் உயரம் குறைந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் மின்மாற்றி தாழ்வாக அமைந்துள்ளதால் பல நேரங்களில் தரைப்பகுதியில் மின்சார தாக்கம் உள்ளது. மின்மாற்றியால் விபத்து அபாயம் நிலவி வருவதால், மின்மாற்றியை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுப்பிரமணி (வயது 90). இவர் நேற்று அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள முனிய கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 90). இவர் நேற்று அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பரமத்திவேலூரில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கி அதிவேகமாக சென்ற கார், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சுப்பிரமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுப்பிரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சுப்பிரமணி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று தலைமறை வான கார் டிரைவரை தேடி வருகின்றனர். 

    • தமிழக முதல்வரால் காணொளி மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட 2 கோடி மதிப்பிலான உயர்மட்ட பாலம் கட்டுமான பணி கடந்த மார்ச் முதல் நடைபெற்று வந்தது.
    • தற்போது அனைத்து கட்ட பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தம்மண்ணன் சாலை, அப்பன் பங்களா பகுதியில் தமிழக முதல்வரால் காணொளி மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட 2 கோடி மதிப்பிலான உயர்மட்ட பாலம் கட்டுமான பணி கடந்த மார்ச் முதல் நடைபெற்று வந்தது. பல மாதங்களாக நடைபெற்ற நிலையில், கடும் மழையின் காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இந்த வழியில் விசைத்தறி கூடங்கள், ஸ்பின்னிங் மில்கள், கோவில்கள், தனியார் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்தன. பாலம் கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில், சுமார் 3 கி.மீ.தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

    பல கி.மீ.தூரம் சுற்றி சென்றுவருதால் காலவிரயம் ஏற்பட்டுவந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது அனைத்து கட்ட பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

    • ஒருமுறை பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ கேரி பைகள்‌, டீ கப்புகள்‌ மற்றும்‌ இதர பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ விற்பணை செய்யப்படுகிறதா?
    • ஆய்வின்‌ போது ரூ.10 ஆயிரம்‌ மதிப்பிலான பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நகர் பகுதியில் உள்ள கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பைகள், டீ கப்புகள் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்கள் விற்பணை செய்யப்படுகிறதா? என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன் மற்றும் நகராட்சி ஆணையர் கணேசன் ஆகியோர் தலைமையில் நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடாசலம்,

    தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரிய உதவி பொறியாளர்கள் சந்தான கிருஷ்ணன், உதயன் மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர்கள் கொண்ட குழுவினர் நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின் போது ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இனி வரும் காலங்களில் நகர் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் கண்டறியப்பட்டால் கடைகள் மூடி முத்திரையிடப்படு வதுடன் கடை உரிமையா ளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்ப டும் நகராட்சி ஆணையாளர் எச்சரித்துள்ளார்.

    • வெண்ணந்தூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட உடுப்பத்தான்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 30) பெயிண்டர். இவரது மனைவி நிவேதா (23).
    • விஜயனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட உடுப்பத்தான்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 30) பெயிண்டர். இவரது மனைவி நிவேதா (23).

    இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், கோகுல் (4) என்ற மகன் உள்ளான்.

    விஜயனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. விஜயன் வெளியே சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த நிவேதா சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தகவல் அறிந்து வந்த வெண்ணந்தூர் போலீசார், நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் ஆகி 5 வருடங்களே ஆவதால், நிவேதா இறப்பு குறித்து நாமக்கல் உதவி கலெக்டர் பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • காவல்துறை சார்பில் ஆயுதப்படை மண்டபத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட மனுக்கள், போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது இந்த குறைதீர் கூட்டத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை மண்டபத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த மனுக்களை வாங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட மனுக்கள், போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது இந்த குறைதீர் கூட்டத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

    நிகழ்ச்சியில் புகார்தாரர் மற்றும் எதிர்புகார்தாரர் ஆகிய இருவரையும் அழைத்து சமரசம் செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

    நேற்று நடைபெற்ற முகாமில் 220 மனுக்கள் விசாரிக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    காலையில் திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் மாலையில் நாமக்கல், ராசிபுரம் என 4 உட்கோட்டத்திற்கு உட்பட்ட மனுக்கள் விசாரிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். புகார் மனுக்கள் அனுப்பிய மனு தாரர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பல மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்ட நிலையில் சில மனுக்கள் தொடர் நடவடிக்கையில் இருப்பதால் அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

    • வகுரம்பட்டி பஞ்சாயத்திற்கு ரூ.24.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டி பஞ்சாயத்திற்கு ரூ.24.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து வகுரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.4.49 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.18 லட்சம் மதிப்பீட்டில் வகுரம்பட்டி 2-வது தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19.53 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது பணிகள் தரமாக உள்ளதா என சோதனை செய்து பார்த்தார்.

    தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.72 லட்சம் மதிப்பீட்டில் வகுரம்பட்டி சமத்துவ மயானத்தில் மயான மேடை, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், சிங்கிலிப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம், ரூ.5.72 லட்சம் மதிப்பீட்டில் சிங்கிலிபட்டியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால், ரூ.12.61 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    பின்னர் நேதாஜி நகரில் 15-வது நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.32 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.4.92 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது நாமக்கல் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.க்கள் ஜெயக்குமார், பாஸ்கர், பஞ்சாயத்து தலைவர் ராஜாரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முதியோர்களின் மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடியாததும் பராமரிப்பதற்குரிய ஆட்கள் இல்லாததும் கருணை கொலைக்கு காரணமாய் அமைகிறது.
    • படுத்த படுக்கையாக உள்ளவர்களை கவனிப்பது சிரமம் என்பதால் அவர்கள் குடும்பத்தினரே அவர்களை கருணை கொலை செய்யும் அளவுக்கு வந்து விடுகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் தற்காலிக உதவியாளராக வேலை செய்து வருபவர் மோகன்ராஜ் (வயது 50).

    இவர் வயது முதிர்ந்து படுத்த படுக்கையாய் உள்ளவர்களுக்கு பூச்சி மருந்து கொண்ட ஊசியை செலுத்தி கருணை கொலை செய்வதாகவும், இதற்காக அவர்களது உறவினர்களிடம் ரூ.5000 வரை பணம் பெறுவதாகவும், கடந்த 15 வருடமாக இது போல் 300 பேரை விஷ ஊசி போட்டு கருணை கொலை செய்ததாகவும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதை அறிந்த பள்ளிபாளையம் போலீசார், மோகன்ராஜை அழைத்து விசாரித்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் கூறுகையில், பணம் பெற்றுக்கொண்டு கருணை கொலை செய்வதாக பிணவறை தற்காலிக ஊழியர் மோகன்ராஜ் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வேறு யாரும் அவர் மீது புகார் கொடுக்கவில்லை. அவர் கருணை கொலை செய்தது உண்மை என விசாரணையில் தெரியவந்தால் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நேற்று முழுவதும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணைக்கு அவரை அழைத்துள்ளோம்.

    அவர் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஒரு பொருளை வைத்திருந்ததாக, தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் கூறுகையில், கிராமப் புறங்களில் வயது முதிர்ந்து படுத்த படுக்கையாய் உள்ளவர்களை கவனிக்க முடியாததால், அவர்களது குடும்பத்தினரே கருணை கொலை செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    முதியோர்களின் மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடியாததும் பராமரிப்பதற்குரிய ஆட்கள் இல்லாததும் இதற்கு காரணமாய் அமைகிறது. படுத்த படுக்கையாக உள்ளவர்களை கவனிப்பது சிரமம் என்பதால் அவர்கள் குடும்பத்தினரே அவர்களை கருணை கொலை செய்யும் அளவுக்கு வந்து விடுகிறார்கள். இதற்காக மோகன்ராஜ் போன்ற சிலரை பயன்படுத்தி சத்தம் இல்லாமல் கருணைக்கொலையை அரங்கேற்றி வருகிறார்கள்.

    இதேபோல போலி மருத்துவர்கள் சிலரும் பெரிய தொகையை பெற்றுக்கொண்டு கருணைக் கொலையை அரங்கேற்றி வருகிறார்கள். இது குறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிபாளையத்தில் பிணவறை ஊழியர் ஒருவரே 300-க்கும் மேற்பட்டோரை கருணை கொலை செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவதும், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதும் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • இந்திய நேரப்படி இன்று காலை 7.04 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது.
    • அதிகபட்சமாக 1 நிமிடம் 16 வினாடிகள் மட்டுமே முழு சூரிய கிரகணம் இருக்கும்.

    ஆஸ்திரேலியா:

    இயற்கை பேரதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் சூரிய கிரகணம் இன்று ஏற்படுகிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

    அதன்படி இன்று சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. இன்று நடக்கும் சூரிய கிரகணம் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் காணமுடியும்

    இந்திய நேரப்படி இன்று காலை 7.04 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது. இந்த கிரகணம் நண்பகல் 12.29 மணி வரை நீடிக்கிறது. 12.29 மணிக்கு முழு சூரிய கிரகணமாக ஏற்படும். ஆசியாவின் கிழக்கு கடல் ஓரம் அண்டார்டிகா, ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் சூரிய கிரகணத்தை தெளிவாக காண முடியும்.

    இந்த சூரிய கிரகணத்தை பகுதி அளவாகவோ, முழுமையாகவோ இந்தியாவின் எந்த பகுதியிலும் பார்க்க முடியாது. அதிகபட்சமாக 1 நிமிடம் 16 வினாடிகள் மட்டுமே முழு சூரிய கிரகணம் இருக்கும்.

    சூரிய கிரகணத்தை 'தென்கிழக்கு ஆசியா, கிழக்கிந்திய தீவுகள், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பகுதி அளவாக காண முடியும் எனவும்' என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    • முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 12-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.10 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெட் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது.

    இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது. அதன் பின்னர் முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 12-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.10 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    அதேசமயம் நெஸ்பேக் 40 பைசா மைனஸ் விலை அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 3.80 மட்டுமே கிடைக்கும்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:- சென்னை-415, பர்வாலா-340, பெங்களூரு-400, டெல்லி-375, ஹைதராபாத்-350, மும்பை-410, மைசூர்-408, விஜயவாடா-345, ஹொஸ்பேட்-360, கொல்கத்தா-400.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.105 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 77 ஆக நெஸ்பேக் நிர்ணயித்துள்ளது.

    • நாமக்கல் கடை வீதி அருகே குளக்கரைத் திடல் உள்ளது. கடைவீதி மற்றும் மெயின்ரோடு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் உள்ளன.
    • இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க மோட்டார்சைக்கிள் மற்றும் கார்களில் வரும் பொதுமக்கள், குளக்கரைத்திடலில் வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வாகனங்களை எடுத்துச் செல்வது வழக்கம்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களில் தேர்த்திருவிழா நடைபெறும். பங்குனி உத்திரத்திற்கு அடுத்த நாள் முப்பெரும் தேரோட்டம் நடைபெறும்.

    நாமக்கல் கடை வீதி அருகே குளக்கரைத் திடல் உள்ளது. கடைவீதி மற்றும் மெயின்ரோடு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க மோட்டார்சைக்கிள் மற்றும் கார்களில் வரும் பொதுமக்கள், குளக்கரைத்திடலில் வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வாகனங்களை எடுத்துச் செல்வது வழக்கம்.

    மேலும் மாலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் குளக்கரைத்திடலுக்கு வந்து நாமக்கல் மலை ஓரமாக அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்வது வழக்கம். நாமக்கல் நகருக்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வருகை தரும்போது இந்த குளக்கரைத்திடலில் தான் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

    ஏற்கனவே குளக்கரைத்திடல் குண்டும் குழியுமாக சேதமடைந்து கிடந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ பாஸ்கரின் முயற்சியால் குளக்கரைத்திடல் முழுவதும் சீரமைக்கப்பட்டு பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு உள்ளது. நாமக்கல்லில் இந்த ஆண்டு, முப்பெரும் தேர்த்திருவிழா கடந்த வாரம் நிறைவு பெற்றுவிட்டது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மெயின் ரோட்டில் உள்ள குளக்கரைத்திடலில், தற்காலிக தேர் கடைகள் அமைப்பதற்காக மற்றும் பந்தல் அமைப்பதற்காக பேவர் பிளாக் தளத்தில் குழிகள் தோண்டி பந்தல் கால் நடப்படுவதால் தரைத்தளம் சேதமடைகிறது. இதனால் பிற்காலத்தில் குளக்கரைத்திடல் மீண்டும் குண்டும் குழியுமாக மாறி, முழுமையாக சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது கடை அமைக்க ஒப்பந்தம் எடுத்துள்ளவர்கள் குளக்கரைத்திடலுக்குள் வாகனங்கள் வரக் கூடாது என்று தடை செய்துள்ளனர். இதனால் கடைவீதி மற்றும் மெயின் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தங்களின் டூ வீலர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த முடியால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலை ஒரு மாதம் வரை நீடித்தால் பொதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்களின் நலன் கருதி தேர் கடையை, குளக்கரை திடலில் அமைக்காமல், பார்க் ரோட்டில் உள்ள பூங்கா பகுதியில் மாற்றியமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பரமத்திவேலூர் செல்லும் சாலையில், அண்ணாநகர் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர், நடந்து சென்ற பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் - பரமத்திவேலூர் செல்லும் சாலையில், அண்ணாநகர் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர், நடந்து சென்ற பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த பெண், சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பெண்ணை உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வாகனம் மோதி இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டுனர் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×