என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகையில் நேற்று மேலும் 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் நாகை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 254 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 263 ஆக உயர்ந்துள்ளது. இதில் 97 பேர் குணமடைந்துள்ளனர். 166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    காரைக்காலில் ஊரடங்கை மீறியதாக 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக காலை 6 மணி முதல் பகல் 2 மணிவரை மட்டுமே கடைகள் திறந்திருக்கவேண்டும். அனைத்து கடைகளும் சமூக இடைவெளி, முககவசத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மீறினால் அபராதம் மற்றும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காரைக்கால் பாரதியார் வீதியில் ஊரடங்கை மீறியதாக 2 கடைகளை காரைக்கால் நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் பணியாளர்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். அதேபோல் காரைக்கால் பாரதியார் வீதியில் ஊரடங்கை மீறியதாக 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
    நாகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரவேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கோவிந்தராசன், மாவட்ட துணைத்தலைவர் பாலகுரு, செயலாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

    ரூ.50 லட்சத்திற்கான மருத்துவ குழு காப்பீட்டுத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் மற்றொரு மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் கோபால் நன்றி கூறினார்.
    வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய 12 கிலோ கஞ்சாவை காயவைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பகுதிகளான கோடியக்கரை, மணியன் தீவு, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பகுதிகள் வழியாக படகில் இலங்கைக்கு அடிக்கடி கஞ்சா கடத்தப்படுகிறது. இலங்கையில் இருந்து இந்த பகுதி வழியாக தங்கம் கடத்தி வரப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது.

    உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும், தங்கமும் நாகை மாவட்ட கடல் பரப்பு வழியாக கடத்தி வரப்படுகிறது. கடத்தல்காரர்களை பிடிக்க கடலோர காவல் குழும போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையின் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரையில் சதுப்பு நில பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் கிடப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் கோடியக்கரையில் இருந்து படகில் சதுப்பு நில பகுதிக்கு சென்று அங்கு கிடந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.

    அப்போது 42 கஞ்சா பொட்டலங்கள் இருப்பதும், அவை 80 கிலோ எடை இருந்ததும் தெரிய வந்தது. இந்த கஞ்சா பொட்டலங்கள் கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தி செல்லும்போது கடலில் தவறி விழுந்து கரை ஒதுங்கியதா? அந்த கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல்காரர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயசுந்தரம் மற்றும் தனிப்படை போலீசார் ஆகியோருக்கு நேற்று கோடியக்கரை அருகே கஞ்சா பொட்டலங்கள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது கோடியக்கரை காட்டு பகுதியில் கஞ்சாவை காய வைத்து கொண்டிருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கோடியக்காட்டை சேர்ந்த செல்வம் (வயது 28), அய்யப்பன்(34), சிவானந்த் (37), கார்த்திக்(25) ஆகியோர் என்பதும், அவர்கள் கடந்த 18-ந்தேதி கோடியக்கரையில் கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்களில் 6 பொட்டலங்களை எடுத்து காயவைத்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு தீர்வாகாது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உடுமலை சங்கர் கொலை வழக்கில் திருப்பூர் செசன்சு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதில் 6 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. சிலருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் மேல்முறையீடு செய்த போது அந்த தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு மிகவும் கவலைக்குரிய, முகம் சுழிக்கக்கூடிய தீர்ப்பாகும். இது நாகை நீதிமன்றம் கீழவெண்மணி குற்றவாளிகளுக்கு வழங்கிய தீர்ப்பு, மேல்முறையீடு செய்த போது தண்டனை ரத்து செய்யப்பட்டது போல் உள்ளது. எனவே உடுமலை சங்கர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதிப்படுத்தவேண்டும்.

    சாத்தான்குளம் சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை சரியாக பதிவு செய்யப்படவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. எனவே தந்தை, மகன் கொலை செய்யப்பட்டதில் சம்பந்தபட்டவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால் உண்மையை மறைப்பதற்காக இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்வதாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். ஒரு சம்பவம் எவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை என்றால் தான் அந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு அனைத்தும் வெளிப்படையாக தெரியும் போது ஏன் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இது காலதாமதம் செய்யும் செயலாகும்.

    காவல்துறை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அல்லது தன்னிச்சையாக செயல்படுகிறதா? என்று தெரியவில்லை. கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு தீர்வாகாது. இதற்கு பதிலாக மருத்துவ பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போது தான் நோயை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ குழு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக முதல்-அமைச்சரோ கொரோனாவில் தன்னிச்சையாக செயல்படுகிறார். சிறப்பாக செயல்படுகிறோம் என தொடர்ந்து கூறிவருகிறார். சிறப்பாக செயல்பட்டால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். அரசியல் கட்சியினர் தெரிவித்த எந்த கருத்தையுமே அவர் கேட்கவில்லை. அவர் தன்னிச்சையாக செயல்பட்டதால் வைரஸ் தொற்று அதிகமாகிவிட்டது.

    கடந்த ஆண்டு வந்த தண்ணீர் தான் மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான தண்ணீர் இன்னும் வரவில்லை. பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை சென்று விட்டதாக முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால் தண்ணீர் கடைமடை வந்து சேரவில்லை என்று விவசாயிகள் கூறி போராட்டங்கள் நடத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது செல்வராசு எம்.பி., மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
    நாகூர், வேளாங்கண்ணியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை உதவி செயற்பொறியாளர் மலர்வண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை துணைமின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வங்காரமாவடி, நாகூர் தர்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை மின்வினியோகம் இருக்காது. இதேபோல் வேளாங்கண்ணி துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் வேளாங்கண்ணி நகர், செருதூர், பரவை ஆகிய பகுதிகளிலும், வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைகுளம் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வேதாரண்யம் அருகே திருமணமான 4 மாதங்களில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் நடுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தபாபு(வயது33). இவருக்கும் பட்டுக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் அபிநயா(29) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் அபிநயா வீட்டில் சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து சுப்பிரமணியன் கரியாப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிநயாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அபிநயாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் நாகை வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார் மேல் விசாரணை நடத்தி வருகிறார். 
    மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் கண்காணிப்பு அதிகாரி முனியநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான கண்காணிப்பு அதிகாரியும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளருமான சி.முனியநாதன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

    மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை மற்றும் ஆரம்ப கட்ட அறிகுறிகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதையும் பார்வையிட்டார்.

    கொரோனா வார்டில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், வழங்கப்படும் உணவு வகைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் டாக்டர்களை கேட்டறிந்தார். கொரோனா பரிசோதனைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மகேந்திரன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    மணல்மேடு அருகே டீக்கடை உரிமையாளரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மணல்மேடு:

    மணல்மேடு அருகே நாராயணமங்கலம் தெற்கு தெருவில் குணசேகரன் என்பவர் டீக்கடை வைத்து நடத்திக்கொண்டு வருகிறார். இவரது கடை முன்பு நாராயணமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த ஜீவா (வயது23) தினமும் வந்து நின்று கொண்டு போனில் தகாதவார்த்தைகளால் திட்டி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை குணசேகரன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவா, அவரது ஆதரவாளர் ஹரிஹரன் (30), தினகரன் (25), தினேஷ்குமார் (21) உள்பட 6 பேர் சேர்ந்து குணசேகரனை தாக்கினர். இதனை தடுக்க வந்த குணசேகரனின் மகள் ரேவதிக்கும்(35) கொலைமிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவா, ஹரிஹரன், தினகரன், தினேஷ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
    மணல்மேடு அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணல்மேடு:

    மணல்மேடு அருகே உள்ள வல்லம் கிராமம் முட்டம் பாலம் அருகே சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார், அங்கு சென்று கண்காணித்தபோது வல்லம் காலனி தெருவை சேர்ந்த பாலா (வயது55) என்பவர் சாராயம் விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருமருகல் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டச்சேரி:

    திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் வீரமணி(வயது 52). இவர் திருமருகல் துணை மின்நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இந்தநிலையில் வீரமணி நேற்று மானாம்பேட்டை-தென்பிடாகை சாலையில் உள்ள மின்மாற்றியில் பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீரமணியின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வீரமணிக்கு தங்கம் (45) என்ற மனைவியும், மனோஜ்(24), மனோபாலா(22) என்ற மகன்களும், மனோன்மணி(18) என்ற மகளும் உள்ளனர்.
    நாகை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. நாகை மாவட்டத்தில் 165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. இதில் 90 பேர் குணமடைந்துள்ளனர். 138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ×