என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 314 ஆக இருந்தது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் நாகை மாவட்ட கணக்கில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து தொற்று எண்ணிக்கை 306 ஆக கணக்கிடப்பட்டது. இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 325 ஆக உயர்ந்துள்ளது. 163 பேர் குணம் அடைந்துள்ளனர். 162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    நாகை மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி நாகை நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் தவமணி தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.

    100 நாள் வேலைத்திட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 4 மணி நேர வேலையும், முழு ஊதியமும் வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களிலும் மற்றவர்களை விட 25 சதவீதம் கூடுதல் அளவு நிவாரணம் சட்டப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் முனியாண்டி, தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மேலும் மாப்படுகை அண்ணா சிலை அருகே வட்டக்குழு உறுப்பினர் மணி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை பகுதியில் சோழம்பேட்டை, மறையூர் உள்பட 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சீர்காழியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நடராஜன், பாலு, மோகனா, குணசேகரன், தமிழ்ச்செல்வி, இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொறுப்பாளர்கள் நீலமேகம், நாகையா, நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில், கற்கோவில், எடக்குடி வடபாதி, சட்டநாதபுரம், திருப்புங்கூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வாய்மேடு அருகே உள்ள தாணிக்கோட்டகம் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க வேதாரண்யம் ஒன்றிய தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கோவை.சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். வேதாரண்யம் தாலுகாவில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கத்தினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    நாகூர் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    நாகூர்:

    நாகை மாவட்டம் மேலவாஞ்சூர் அருகே பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கின் பின் பகுதியில் கருவேல மரக்காடு உள்ளது. இங்கு ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், பிணமாக கிடந்தவர் மேலவாஞ்சூர் காமாகோடி நகரை சேர்ந்த பகுருதீன் மகன் அசாருதீன் (வயது 19) என்பதும், மர்ம நபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. கேரளாவில் ஓட்டலில் வேலை பார்த்து வந்த இவர், ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் விளையாட சென்ற அசாருதீன், இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கருவேல மரக்காட்டில் பிணமாக கிடந்தது பெற்றோர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த அசாருதீன் தாய் பாத்திமாபீவி, அசாருதீன் பிணமாக கிடந்த பகுதிக்கு சென்று உடலை பார்த்து கதறி அழுதார். அவரை உறவினர்கள் சமாதானம் செய்தனர்.

    இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசாருதீனை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    நாகூர் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகை மாவட்டத்தில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரவீன்நாயர் கூறி உள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரவீன்நாயர் கூறி உள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி தேசிய மாதிரி ஆய்வு திட்ட சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

    குடும்பத்தின் ஆண்டு செலவு, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அடிப்படை வசதி, சுகாதாரம், கல்வி போன்ற பல்வேறு தலைப்புகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள தேசிய மாதிரி ஆய்வு திட்டத்தின் 78-வது சுற்றில் மாவட்டத்தில் 12 கிராமப்புற மாதிரிகளிலும், 4 நகர்ப்புற மாதிரிகளிலும் கணக்கெடுப்பு பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

    மக்களுக்கு தேவையான திட்டங்களை தயாரிக்க உதவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள தங்கள் வீடுகளுக்கு வரும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை களப்பணியாளர்கள் கேட்கும் விவரங்களை பொதுமக்கள் தயங்காமல் தெரிவித்து கணக்கெடுப்பை துல்லியமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தங்களிடம் இருந்து பெறப்படும் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உரிய விலை கிடைக்காததால் பருத்தியை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், எருக்கூர், மாதானம், திருவெண்காடு, ஆச்சாள்புரம், கொண்டல், வள்ளுவர்குடி, அகணி, புங்கனூர், கதிராமங்கலம், எடக்குடி, வடபாதி, தென்னலக்குடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கோடை பயிராக பருத்தியை சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த பகுதிகளில் பருத்தி அறுவடை நடைபெற்று வருகிறது.

    அறுவடையான பருத்தியை விற்பதற்காக கடந்த வாரம் திங்கட்கிழமை சீர்காழி அருகே உள்ள எருக்கூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் கொண்டு சென்றனர். ஆனால் கடந்த வாரம் பருத்தி கொள்முதல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தனியார் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்து வருகிறார்கள். இது விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று எடக்குடி வடபாதி கிராமத்தில் சாலையில் பருத்தியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

    உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது
    சிக்கல்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தக்குடி கிராமம் திருப்பஞ்சனம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய வீட்டுக்கு அருகே புன்செய் நிலத்தில் குளம் வெட்டும் பணி நடந்தது. அப்போது நிலத்துக்கடியில் மண்பானையின் உடைந்த பாகங்கள் கிடைத்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தேவூர் வருவாய் ஆய்வாளர் கேசவன், கிராம நிர்வாக அதிகாரி செல்வேந்திரன் ஆகியோர் அங்கு சென்று மண் பானையின் உடைந்த பாகங்கள் கிடைத்த பகுதியை நேரில் பார்வையிட்டு, இதுதொடர்பாக கீழ்வேளூர் தாசில்தார் கார்த்திகேயனுக்கு அறிக்கை அனுப்பினர்.

    இதையடுத்து தாசில்தார் தொல்லியல் துறைக்கு கடிதம் அனுப்பி மண்பானைகள் குறித்து ஆய்வு நடத்தும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தாசில்தார் கார்த்திகேயன், மண்டல துணை தாசில்தார் ஜெயகுமார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பழங்கால பொருட்கள் புதைந்துள்ளதா? என்பதை கண்டறிவதற்காக நிலத்தை தோண்டினர்.

    இதில் அங்கு பழங்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. அதன் வாய் பகுதி சேதம் அடைந்து காணப்பட்டது. மேலும் அங்கு மண் கலயங்களும், மனித எலும்புக்கூட்டின் சிதைந்த பாகங்களும் கிடைத்தன. முதுமக்கள் தாழி சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. நிலத்துக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    கீழ்வேளூர் அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தக்குடி வெள்ளந்தெருவை சேர்ந்தவர் பாலதண்டாயுதம் (வயது40). கொத்தனார். இவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சம்பவத்தன்று இவர் வீட்டின் பின் பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்று புடவையால் தூக்குப்போட்டு கொண்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலதண்டாயுதம் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
    நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விவரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    மயிலாடுதுறை தொகுதி ராமலிங்கம் எம்.பி., மதிவாணன் எம்.எல்.ஏ., நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன், வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் உள்ளிட்ட தி.மு.க.வினர் நேற்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மாவட்ட வருவாய் அதிகாரி இந்துமதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதுகுறித்து நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் நிருபர்களிடம் கூறியதாவது:- நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் விவரம், கொரோனா வைரஸ் பணியில் ஈடுபடும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் விவரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும்.

    கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தொடர்பான விவரங்களை தினந்தோறும் சென்னையில் வெளியிடுவது போல் நாகை மாவட்டத்திலும் முழுமையாக தெரிவிக்க வேண்டும். வைரஸ் தொற்று உள்ளதா? என்று பரிசோதனை செய்ய செல்பவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்று முடிவு வந்தாலும் தனிமைப்படுத்தும் நிலை உள்ளது. இதை மாற்றம் செய்ய வேண்டும்.

    நாகை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் எங்கு உள்ளது? என்பது குறித்த முழு தகவல்களையும் வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது தி.மு.க. தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    மயிலாடுதுறை அருகே விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
    பாலையூர்:

    மயிலாடுதுறை அருகே பொரும்பூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெகதீபராம். இவரது மகன் ஜெகன்சாமி(வயது25). பெயிண்டர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் ஜெகன்சாமியை ஏதாவது வேலைக்கு செல்லுமாறு கூறினர். ஆனால் அவர் வேறு வேலை தெரியாது, பெயிண்டிங் வேலை தான் தெரியும் என கூறி வீட்டில் இருந்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பூச்சிமருந்தை(விஷம்) ஜெகன்சாமி குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்தார். இதுகுறித்து ஜெகன்சாமியின் தாய் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்று வரும் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மீன்பிடி துறைமுகத்தின் முகப்பு பகுதியில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிக்கான வரைபட மாதிரியை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் ஆகிய கிராமங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் நாகை மீன்பிடி துறைமுகத்தின் முகப்பு பகுதியில் வழிந்தோடி கடுவையாற்றில் கலக்கிறது. இந்த பகுதியில் உள்ள வடிகாலில் பள்ளமான பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே கழிவு நீரை முழுவதுமாக வெளியேற்றும் வகையில் வடிகாலை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கழிவுநீர் தேங்காமல் வழிந்தோடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக இந்த பகுதியில் சுகாதாரம் மேம்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் பிரசாந்த், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் கொள்ளிடம் அருகே எருக்கூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் கழகத்துக்கு சொந்தமான நவீன அரிசி ஆலையை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், ‘ஆலையில் இருந்து கரித்துகள்கள் வெளியே வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் எந்த ரசாயனமும் இல்லை. இருப்பினும் வடிகாலில் தேங்கிய கழிவுநீர் அகற்றப்படும்’ என்றார். அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி சுப்பையா, ஊராட்சி செயலாளர் குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜா, சின்னமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
    ஊரடங்கால், வெளியூரில் உள்ள பிள்ளைகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் தாயும், தந்தையும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    திருவெண்காடு:

    நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்சாமி (வயது 70). இவர், மீன் வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவி பாக்கியவதி(65). இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகி சென்னையிலும், மகள்களுக்கு திருமணமாகி வெளியூரிலும் வசித்து வருகின்றனர். அருள்சாமி தனது மனைவியுடன் பெருந்தோட்டம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இந்த தம்பதியினர், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தங்கள் மகன்கள், மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை நேரில் சென்று பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. இதேபோல் அவர்களும், பெற்றோரை பார்க்க பெருந்தோட்டம் கிராமத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தனிமையில் இருந்த தம்பதியினர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருள்சாமி-பாக்கியவதி தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை இறந்து கிடந்த தம்பதியினரை பார்த்த அக்கம், பக்கத்தினர் திருவெண்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் தென்பாதி, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புன்கூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
    ×