என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    பொறையாறு பகுதியில் 14-ந்தேதி மின்தடை செய்யப்படுவதாக மின் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    பொறையாறு:

    பொறையாறு துணை மின்நிலையத்தில் வருகிற 14-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்து துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பொறையாறு, தரங்கம்பாடி, சந்திரபாடி, திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், திருமெய்ஞானம், சங்கரன்பந்தல், குட்டியாண்டியூர், பெருமாள் பேட்டை, வெள்ளை கோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, என்.என்.சாவடி, கண்னப்பமூலை, அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, மாங்குடி, தில்லையாடி, திருவிடைக்கழி, எடுத்துக்கட்டிசாத்தனூர், கண்னங்குடி, கிள்ளியூர், டி.மணல்மேடு, மாத்தூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அதனை சார்ந்த கிராமங்களுக்கும் 14-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை செம்பனார்கோவில் மின் உதவி செயற்பொறியாளர் அப்துல்வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.
    சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி நாகையில் நடந்த போராட்டத்தின்போது மீனவர்கள் தீக்குளிக்க முயன்றனர். அப்போது மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
    நாகப்பட்டினம்:

    கடல் மீன் பிடிப்பு ஒழுங்கு முறை சட்டத்தின்படி மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் சுருக்குமடி, இரட்டைமடி உள்ளிட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதையொட்டி சுருக்குமடி வலையை பயன்படுத்தி கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் வாகனங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க நாகையை அடுத்த வாஞ்சூர், கானூர், மேலையூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.

    இது மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகை நம்பியார் மீனவ கிராமத்தினர் அங்குள்ள சமுதாய கூடத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது, சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும். மீனவர்கள் சிரமப்பட்டு பிடித்து வரும் மீன்களை பறிமுதல் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகளை கண்டித்தும் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் மீனவர்கள் முடிவு செய்து அறிவித்தனர்.

    அதன்படி நேற்று போராட்டம் நடந்தது. இதன் காரணமாக மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கடற்கரை பகுதியில் நிறுத்தி வைத்தனர். இதனால் நம்பியார் நகர் மீனவ கிராமத்திலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் 500-க்கும் மேற்பட்ட போலீ சார் குவிக்கப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்தும் 2 வஜ்ரா வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. போராட்டத்தையொட்டி நேற்று காலை 7 மணிக்கு நாகை நம்பியார் நகர் சமுதாய கூடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் மற்றும் மீனவர்கள் ஒன்று கூடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த வலையை பயன்படுத்தி பிடித்த மீன்களை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது அங்கு வந்த உதவி கலெக்டர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் தாசில்தார் ஆகியோரின் வாகனங்களை முற்றுகையிட்ட மீனவ பெண்கள் மண்எண்ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றனர். அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேலு மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணியாக புறப்பட்டனர். அவர்களை ஏழைப்பிள்ளையார் கோவில் அருகே பப்ளிக் ஆபீஸ் சாலையில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, கலெக்டர் அலுவலகம் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மீனவ பெண்கள் இரும்பு தடுப்புகளை ஆக்ரோஷமாக தூக்கி எறிந்து அதை தாண்டி செல்ல முற்பட்டனர்.

    இதையடுத்து மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் ஒலிபெருக்கி மூலம் மீனவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் மீனவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் மீனவ பஞ்சாயத்தார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மீனவ பஞ்சாயத்தார்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மீனவர்களின் போராட்டம் காரணமாக நாகையில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.

    அதேபோல சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி நேற்று பூம்புகார் பஸ் நிலையம் அருகே மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு ஆதரவாக பூம்புகார், தருமகுளம் ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் கடையடைப்பு செய்து இருந்தனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல், பழையார், கொட்டாயமேடு, மன்மதநகர், தாண்டவன்குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டத்தை தொடர்ந்து நாகை மீனவர்கள், அதிகாரிகள் இடையேயான கலெக்டர் அலுவலகத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில், நாகை நம்பியார் நகர் மீனவ பஞ்சாயத்தார் கூறுகையில், 15-ந் தேதிக்குள் நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் மீனவர்களை திரட்டி பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என்றனர்.
    நாகூர் அருகே வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகூர்:

    நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள மேலவாஞ்சூர் காமகோடி நகரை சேர்ந்த பதுருதீன் மகன் அசாருதீன்(வயது 19). இவர், கேரளாவில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கின் பின்புறம் உள்ள கருவேல மரக்காட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று அசாருதீன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் அசாருதீனை கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த மாதம்(ஜூன்) நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக அசாருதீனை சிலர் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

    இதுதொடர்பாக மேலவாஞ்சூர் சமத்துவபுரம் செண்பக தெருவை சேர்ந்த வடிவேல் மகன் விஜயகுமார்(33), பனங்குடி சன்னமங்கலம் காலனி தெருவை சேர்ந்த சண்முகம் மகன் அஜித்குமார்(23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்களிடம் நடந்த விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

    நாகூரை அடுத்த நரிமணம் விசாலாட்சியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்(42). இவர் மேலவாஞ்சூர் கிழக்கு கடற்கரை சாலையில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த மாதம் 23-ந் தேதி மோட்டார் சைக்கிளில் முட்டம் சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களை கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளை வழிமறித்து செந்திலை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றது.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த மேலவாஞ்சூரை சேர்ந்த அகஸ்தியர்(55), அவருடைய மகன் கலியபெருமாள்(25), செல்வம்(40), பனங்குடியை சேர்ந்த மணிகண்டன்(22) ஆகிய 4 பேர் கடந்த மாதம் 24-ந் தேதி தஞ்சை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    செந்தில் படுகொலை செய்யப்பட்டதற்கு அகஸ்தியர் மற்றும் அவருடைய மகனை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என செந்திலின் நண்பர்கள் திட்டம் தீட்டி வந்தனர். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இரவு பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கின் பின்புற பகுதியில் உள்ள கருவேல மரக்காடு பகுதிக்கு அசாருதீன் வந்தார். இவர், அகஸ்தியர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தவர்.

    இவருக்கும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த செந்திலின் நண்பர்கள் விஜயகுமார், அஜித்குமார் உள்ளிட்டோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விஜயகுமார், அஜித்குமார் உள்ளிட்டோர் அசாருதீனிடம், ‘நீ தான் செந்திலை கொலை செய்ய திட்டம் வகுத்து கொடுத்தாயா? என கேட்டு கத்தியால் அசாருதீனின் நெஞ்சு மற்றும் வயிறு பகுதியில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அசாருதீன் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐபிஎஸை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    மயிலாடுதுறை:

    தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். புதிதாக உருவான மயிலாடுதுறையும் சேர்த்து தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆனது.

    இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐபிஎஸை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளை உருவாக்க சிறப்பு அதிகாரியாக லலிதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    மணல்மேடு போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மணல்மேடு:

    மணல்மேடு அருகே நாராயணமங்கலத்தில் உள்ள ஒரு தெருவில் சம்பவத்தன்று செல்போனில் சத்தமாக பேசி சென்றது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக மணல்மேடு போலீஸ் நிலையத்தில் இரு பிரிவை சேர்ந்தவர்களும் புகார் கொடுத்தனர். இதில் ஒரு பிரிவை சேர்ந்தவர்களை மட்டும் கைது செய்த போலீசார் மற்றொரு பிரிவினர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 14 நாட்களுக்கு மேலாகியும் மற்றொரு பிரிவினரை கைது செய்யாததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மணல்மேடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி நேற்று மணல்மேட்டில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் ஈழவளவன் தலைமையில் 750-க்கும் மேற்பட்ட கட்சியினர் திரண்டனர். பின்னர் அவர்கள், மணல்மேடு பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, சாமிநாதன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பஞ்சாலை என்ற இடத்தில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்தவர்களை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் அந்த இடத்திலேயே அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது இந்த வழக்கில் போலீசார் மெத்தனம் காட்டுவது குறித்தும், ஒரு தரப்பினரை கைது செய்யாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள், 2 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் முற்றுகையிடப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மயிலாடுதுறை-கும்பகோணம்-சீர்காழி செல்லும் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்யக்கோரி பூம்புகாரில் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவெண்காடு:

    நாகை மாவட்டம் பூம்புகார் மீனவர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த வலைகளை கொண்டு மீன்பிடிக்க கூடாது என மத்திய, மாநில அரசுகள் தடைவிதித்துள்ளன. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி 40-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றன. தகவல் அறிந்த மீன்வளத்துறை மற்றும் போலீசார் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடித்த மீன்களை ஏற்றிச்சென்ற வாகனங்களை கருவிழந்தநாதபுரம் பகுதியில் பறிமுதல் செய்தனர்.

    இந்தநிலையில் நேற்று பூம்புகார் துறைமுகத்தில் திரளான மீனவ பெண்களும், ஆண்களும் கூடினர். அதனை தொடர்ந்து சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்ய அனுமதிக்க வேண்டி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் கைகளில் கருப்புக்கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் கருப்புக்கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பூம்புகார் துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் பொறையாறு நண்டலாறு சோதனைச்சாவடி அருகே சந்திரபாடி பகுதி மீனவர்கள் நேற்று கையில் கருப்புக்கொடி ஏந்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து மீனவர்கள், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இதில் மீனவ பஞ்சாயத்தார்கள், மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    செம்பனார்கோவில் அருகே மதுக்கடை பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொறையாறு:

    நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே குரங்குபுத்தூரில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு மேற்பார்வையாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் விற்பனையாளர் வேல்முருகன் ஆகியோர் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலை மதுக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் மற்றும் மேற்பார்வையாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கடைக்கு வந்து பார்த்தபோது ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை காணவில்லை. மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் மர்ம நபர்கள் கடையில் கண்காணிப்பு கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்த கணினி பாகங்களை அருகே உள்ள காவிரி ஆற்றில் வீசிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    மாற்றுத்திறனாளி மகள் திருமணத்திற்காக சிறுக, சிறுக சேமித்த 35 ஆயிரம் ரூபாய் செல்லாத நோட்டுகளை மண்ணில் புதைத்து வைத்த பெண், மாற்றித்தருமாறு சைகை மூலம் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதிரவேளூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை(வயது 58). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா(52). இவர்களது மகள் விமலா(17). உஷாவும், விமலாவும் வாய்பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

    உஷா, தனது சேமிப்பு பணத்தை அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து சுருட்டி, அதனுடன் ½ பவுன் தோட்டையும் வைத்து தனது வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டி புதைத்து வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த செய்தி குறித்து உஷாவுக்கு எந்த விவரமும் தெரியவில்லை. இந்த நிலையில் ராஜதுரை வீடு கட்டுவதற்காக, பின்புறம் பள்ளம் தோண்டினார்.

    அப்போது மண்ணுக்குள் இருந்து பிளாஸ்டிக் பை ஒன்று வெளியில் வந்தது. அதனை வெளியே எடுத்து பார்த்தபோது அந்த பையில் மத்திய அரசு செல்லாது என அறிவித்த பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 35 ஆயிரத்து 500 இருந்தது தெரிய வந்தது. அதை வாங்கிய உஷா, அந்த பணம் தனது மகள் திருமணத்திற்காக தான் பத்திரமாக சேர்த்து வைத்துள்ளதாக சைகை மூலம் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

    அதைக்கேட்ட தொழிலாளர்கள் இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு 4 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்து விட்டது என தெரிவித்ததும் உஷா அதிர்ச்சி அடைந்தார். எனது மகள் திருமணத்திற்காக சேமித்து வைத்த இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கண்ணீர் மல்க சைகை மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
    நாகை மீனவர் வலையில் 250 கிலோ எடையுள்ள ராட்சத மீன் சிக்கியது. இதனால் சக மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை செல்வம் என்பவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் சக மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

    பைபர் படகில் குறைந்த தூரம் மட்டுமே சென்று மீன்பிடிக்க முடியும் என்பதால் குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் கடலில் வலையை விரித்து மீன்களுக்காக அவர்கள் காத்திருந்தனர். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. இதையடுத்து சோகமடைந்த மீனவர்கள், அவசர அவசரமாக கரைக்கு திரும்ப முற்பட்டனர்.

    அப்போது அவர்கள், தாங்கள் கடலில் விரித்த வலையை இழுத்தனர். அப்போது அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. மீனவர்கள் வலையை இழுத்தபோது எதிர் திசையில் படகு இழுத்து செல்லப்பட்டது. இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர்கள் போராடி வலையை இழுத்தபோது ராட்சத மீன் அவர்கள் விரித்த வலையில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

    மிகுந்த போராட்டத்துக்கிடையே ஒருவழியாக மீனை படகுக்கு கொண்டு வந்தனர். அப்போதுதான் அந்த மீன் ஆழ்கடலில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஏற்றுமதி ரக மீன் என்பது தெரியவந்தது. 15 அடி நீளமும், 250 கிலோ எடை கொண்டதாகவும் அந்த மீன் இருந்தது.

    இதையடுத்து படகை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள், சக மீனவர்களின் உதவியுடன் அந்த மீனை படகில் இருந்து வெளியே எடுத்து வந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஏராளமானோர் நாகை கடற்கரைக்கு வந்து பிடிபட்ட ராட்சத மீனை பார்வையிட்டு சென்றனர்.

    இந்த மீன் ஏற்றுமதி செய்யப்பட்டால் கிலோ 300-க்கு விற்பனை செய்யப்படும் என்றும், தற்போது ஊரடங்கு காலத்தில் அது சாத்தியமில்லாததால், கிலோ ரூ.100-க்கு குறைவாகவே விற்பனையானது என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். விசைப்படகுகளிலேயே பெரும்பாலும் சிக்கக்கூடிய இந்த மீன் பைபர் படகில் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்து உள்ளதாக சக மீனவர்கள் தெரிவித்தனர்.

    கொரோனா நிவாரணமாக மத்திய, மாநில அரசுகள் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் உள்ள ரேசன் கடைகள் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரைக்கால்:

    மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இலவச அரிசியை ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வழங்க வேண்டும். கொரோனா நிவாரணமாக மத்திய, மாநில அரசுகள் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் உள்ள ரேசன் கடைகள் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் தமீம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்க வேண்டும். ரேசன் கடை ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
    மீன்பிடி படகுகளில் சீன என்ஜின்களை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம், மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    திருவெண்காடு:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மற்றும் கீழமூவர்கரை மீனவர்களிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்பிடிப்பது தொடர்பாக நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு கிராம மீனவர்களும் கத்தி, அரிவாள், சோடா பாட்டில் உள்ளிட்டவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதையடுத்து போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் 2 கிராம மீனவர்களையும் சமாதானம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தரங்கம்பாடி மீனவ கிராமத்தை தலைமையிடமாக கொண்ட 22 மீனவ கிராம பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் கீழமூவர்கரை கிராமத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேஷ், கடலோர போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஜீவானந்தம், மீன்வளத்துறை உதவி இயக்குனர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது அரசால் தடை செய்யபட்ட சுருக்குமடி வலைகளை கொண்டு மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்.

    அதிவேகம் கொண்ட சீன என்ஜின்களை மீன்பிடி படகுகளில் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். தாக்குதல் நடத்திய திருமுல்லைவாசல் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மீனவர்கள், அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அப்போது உரிய நடவடிக்கைகள் எடுக்கபடும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கபட்டது.
    சுருக்குமடி வலை வீசியதை தட்டிக்கேட்ட தரங்கம்பாடி மீனவர்கள் மீது காரைக்கால் மீனவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொறையாறு:

    தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலை மற்றும் அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலில் மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதியை சேர்ந்த 20 கிராம மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் சுதர்மேன் என்பவர் தனக்கு சொந்தமான சிறிய வகை பைபர் படகில் சக்திவேல், சுப்பிரமணியன், சின்னையன், அருண்குமார், ஆறுமுகம், திலீப் ஆகியோருடன் தரங்கம்பாடி அருகே 6 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு பெரிய விசைப்படகில் வந்த காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள், தரங்கம்பாடி மீனவர்கள் விரித்த வலையின் அருகிலேயே சுருக்குமடி வலையை வீசியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட தரங்கம்பாடி மீனவர்கள் 7 பேரையும், காரைக்கால் பகுதி மீனவர்கள் மரக்கட்டை, இரும்பு குழாய் கொண்டு தாக்கி, படகு மற்றும் என்ஜினை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதில் காயம் அடைந்த மீனவர்கள் 7 பேரும் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்களுக்கு கடலில் இருந்து தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மற்ற மீனவர்கள் உதவியுடன் 7 மீனவர்களும் மீட்கப்பட்டு தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி மீன்வளத்துறை உதவி இயக்குனர் நடராஜன், தரங்கம்பாடி தாசில்தார் சித்ரா, மண்டல துணை தாசில்தார் அருள் ஜோதி, வருவாய் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அங்கு சென்று தாக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

    இதுதொடர்பாக தரங்கம்பாடி கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நடுக்கடலில் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×