என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காரைநகர் பெரியாச்சி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் காமராஜ் (வயது30). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது உறவினர் குணசேகரனுடன் மோட்டார் சைக்கிளில் நாகையில் இருந்து காரை நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வேளாங்கண்ணி ஆர்ச் அருகே சென்றபோது அருந்தவம்புலத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்தில் குணசேகரன், காமராஜ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி காமராஜ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த குணசேகரன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
கொரோனா தொற்று பாதிப்பு குறையாத 11 மாட்டங்களில் மயிலாடுதுறை மாவட்டமும் ஒன்றாக உள்ளது. ஆகையால் மற்ற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் வகை 1ல் உள்ள நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எந்த வித தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே சீர்காழி பகுதியில் நகராட்சி ஆணையர் பெ.தமிழ்செல்வி தலைமையில் பொறியாளர் தமயந்தி, மேலாளர் காதர்கான், பணிதள மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வுமேற்கொண்டனர். அப்போது, நகரில் 3 திருமண மண்டபங்களில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி திருமணம் நடத்த அனுமதித்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த 3 திருமண மண்டபங்களுக்கும் தலா ரூ.5ஆயிரம் நகராட்சி ஆணையர் பெ.தமிழ்செல்வி அபராதம் விதித்தார். விதிமுறைகளை மீறி திருமணமண்டபங்களில் திருமணம் நடத்திட அனுமதித்தால் மண்டபங்களுக்கு பூட்டி சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியம்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.ஆண்டு ஒன்றுக்கு 6.5 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-வது இடம் வகிக்கிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பளங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தொடங்கும் உற்பத்தி அக்டோபர் வரை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கால தாமதமாக பிப்ரவரி மாத கடைசியில் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது. அவ்வப்போது மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ரூ.400-க்கு விற்ற ஒரு டன் உப்பு ரூ.1,200 வரை விற்பனையானது.
கடந்த வாரம் பெய்த மழையில் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் உப்பின் விலை உயர்ந்து டன் ரூ, 2,000 க்கு விற்பனையானது இந்த நிலையில் தூத்துக்குடியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்கு உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது இதனால் தூத்துக்குடி வியாபாரிகள் வேதாரண்யத்தில் வந்து முகாமிட்டு உப்பை வாங்க தொடங்கினர். இதனால் வரலாறு காணாத அளவில் உப்பு விலை உச்சம் தொட்டுள்ளது.
கடந்த 1980-ம் ஆண்டு பெய்த மழையில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் ரூ.2,000 வரை உப்பு விற்பனை ஆனது. அதன்பிறகு 40 ஆண்டுகள் கடந்து தற்போது ஒரு டன் தரமான வெள்ளை உப்பு அதிகபட்சமாக ரூ.2,200-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த உப்பு உற்பத்தியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக தொழிலாளர்கள் மூவம் தீவிரமாக உப்பு வாரும் பணியிலும், பாக்கெட் போடுதல் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தீவிரமாக நடைபெறுவதால் அதிக அளவில் தொழிலாளர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணியாற்றி வருகின்றனர். கடும் வெயிலில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்த தர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே வேளையில் மத்திய அரசின் அனுமதி பெற்று உப்பு உற்பத்தி செய்து வந்த உற்பத்தியாளர்களுக்கு சென்ற மார்ச் மாதத்துடன் உரிமம் முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் அதை மத்திய அரசு புதுப்பிக்க காலம் கடத்தி வருகிறது. எனவே உப்பு உற்பத்தியாளர்கள் நலன் கருதி உடனடியாக உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 900 சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களுக்கு உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கருவாடு காயவைக்கும் தளம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குடிசைகள் அமைத்து கருவாடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நெத்திலி, வாளை, கிழங்கா, ஓட்டாம்பாறை, பூக்கெண்டை, திருக்கை, சேதமடைந்த வஞ்சிரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களில் கருவாடு தயாரிக்கப்படுகிறது. இது தவிர கெளுத்தி உள்ளிட்ட மீன்களிலும் கோழி தீவனத்துக்காக கருவாடு தயாரிக்கப்படுகிறது.இங்கிருந்து திருவாரூர், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, சேலம், கரூர், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கும் கருவாடுகளுக்கு தனி மவுசு உண்டு.
அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் தினந்தோறும் 1 டன் முதல் அதிகபட்சமாக 10 டன் வரை கருவாடு தயாரிக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு கருவாடு வர்த்தகம் நடைபெறும். தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையிலும், கொரோனா ஊரடங்கு காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஒரு சில பைபர் படகு மீனவர்கள் மட்டுமே தொழிலுக்கு செல்வதால் கருவாடு தயாரிக்க தேவையான மீன்கள் கிடைக்கவில்லை.
கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் கருவாடுகள் விற்பனை செய்ய முடியாமல் வீணாகி வருகிறது. இதனால் வேறுவழியின்றி குறைந்த விலைக்கு கோழித் தீவனத்திற்கு அனுப்பி வைக்க கருவாடு தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
நல்ல நிலையில் இருக்கும் கருவாடு சாப்பாட்டுக்கும், மீதமுள்ள கருவாடுகள் கோழித் தீவனத்திற்கும் என தரம் பிரிக்கும் பணியில் கருவாடு தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கருவாடு தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:-
அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுக கருவாடு காயவைக்கும் தளத்தில் ஏராளமான மீன் வகைகளை கொண்டு கருவாடு தயாரித்து வந்தோம். எங்கள் குடிசையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கருவாடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தி, அயிலை, நெத்திலி, திருக்கை, சுறா, வஞ்சிரம் உள்ளிட்ட பல்வேறு வகையான கருவாடுகளை தயாரித்து வருகிறோம்.
மீன்கள் வரத்தை பொறுத்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு டன் வரையில் கருவாடு தயாரித்துள்ளோம். தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தும், கொரோனா ஊரடங்கு காரணமாக மீன் விற்பனையில் சுணக்கம் ஏற்படும் என்பதால் நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன் கிடைக்காததால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கருவாடு தயாரிக்கும் பணி முற்றிலும் முடங்கிப்போனது.
சேமித்து வைத்திருந்த கருவாடுகளை வாங்க வியாபாரிகள் வராததால், கருவாடுகள் சேதமடைய தொடங்கிவிட்டன.
அதனை குடிசையிலிருந்து வெளியே எடுத்து தரம் பிரித்து வருகிறோம். அதில் சாப்பாட்டுக்கு தேவையான நல்ல நிலையில் உள்ள கருவாடுகள் ஒரு புறமும், மீதமுள்ளவை கோழி தீவனத்துக்கும் என தரம் பிரித்து வைத்துள்ளோம். இதில் 75 சதவீதத்துக்கும் மேல் கருவாடுகள் சேதமடைந்துள்ளன.
இதேபோல ஒவ்வொரு குடிசையிலும் சேர்த்து மொத்தம் ரூ.5 கோடி மதிப்பிலான கருவாடுகள் தேக்கம் அடைந்து சேதமாகி வருகின்றன. இதனால் வேறுவழியின்றி கருவாடுகளை கோழி தீவனத்துக்காக அனுப்பி வைக்க உள்ளோம். உணவுக்காக ரூ.250 விற்பனை செய்த ஒரு கிலோ கானாங்கெளுத்தி கருவாடு தற்போது கோழித் தீவனத்திற்காக ரூ.40-க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட கிளிசை கருவாடு ரூ.35-க்கும், ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்ட குத்துவா கருவாடு ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மழை, வெயிலில் இருந்து கருவாடுகளை பாதுகாத்து வந்த எங்களின் உழைப்பு தற்போது வீணாகி உள்ளது. இதனால் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் யசோதா (வயது 65). தன் மருமகன் நாராயணனுடன் யசோதா மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சென்றபோது தோப்புத்துறை சாலையில் தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வவரும்போது இறந்தார். புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தகட்டூரை சேர்ந்தவர் சுந்தரவடிவேலு. இவரது மனைவி சிவஞானம் (வயது 55). சிவஞானம் கொல்லைப்புறம் உள்ள மோட்டாரை போட அதிகாலையில் சென்றபோது மர்ம நபர்கள் அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து கொண்டு ஓடிவிட்டனர்.
இதுகுறித்து அவரது கணவர் சுந்தரவடிவேல் வாய்மேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது செயினை பறித்து சென்றபோது தாலியும், 2 குண்டும் கீழே விழுந்து கிடந்ததை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் இதே பகுதியில் சூரியகாந்தி என்பவரது 8 பவுன் செயினை மிளகாய்ப்பொடி தூவி மர்மநபர்கள் பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மிளகாய் பொடி வீசி பெண்களிடம் தாலி செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்ட பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. ஆனால் நாகை அருகே உள்ள புதுச்சேரி மாநில பகுதியான காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூர் பகுதியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன.
அங்கிருந்து நாகை மாவட்ட பகுதிக்கு சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில் நாகூர் அருகே உள்ள மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காரைக்காலில் இருந்து மேலவாஞ்சூர் சோதனை சாவடி வழியாக நாகை நோக்கி 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் மதுகடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தலைஞாயிறு திருமாளம் தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது32), கீழ்வேளூர் சித்தாம்பூர் கீழத்தெருவை சேர்ந்த நாகூரான் (50), கார்த்தி (28), கீழ்வேளூர் மேலகாவலகுடியை சேர்ந்த துரைசாமி (55), திருவாரூர் விளமல் வடக்கு தெருவை சேர்ந்த கிரிகரன் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து 105 மதுபாட்டில்கள், அவற்றை கடத்துவதற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜ், நாகூரான், கார்த்தி, துரைசாமி, கிரிகரன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கீழ்வேளூர் அருகே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் கருணாவெளி - ஓர்குடி மெயின் சாலை, கீழ்வேளூர் கடைவீதி, கானூர் சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்த கீழ்வேளூர் கருணா வெளியை சேர்ந்த விஜயராகவன் (25), அவருடைய தம்பி கிருஷ்ணராஜ் (20), நீடாமங்கலம் புதுதேவன்குடியை சேர்ந்த விக்னேஷ் (29), அடியக்கமங்கலத்தை சேர்ந்த ஜோதிபாசு (45), மன்னார்குடியை சேர்ந்த தினேஷ் (23), எடையூரை சேர்ந்த ராம்கி (31), கானூரை சேர்ந்த தனபால் (28) கோட்டூர் புழுதிக்குடியை சேர்ந்த மாதவன் (32), கீழ்வேளூரை சேர்ந்த சிவனேசன் (33) ஆகிய 9 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 180 லிட்டர் சாராயம் மற்றும் 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.






